Monday, May 4, 2020

இன்னும் எவ்வளவு காலம்?

இன்றைய (5 மே 2020) நற்செய்தி (யோவா 10:22-30)

இன்னும் எவ்வளவு காலம்?

'2 நிமிட காணொளியைக் கூட நாம் வேகமாக ஓட்டிவிட்டே பார்க்கிறோம்' என்று சில வாரங்களுக்கு முன் டுவிட்டரில் கீச்சு ஒன்று பார்த்தேன்.

ஏன் நாம் காணொளிகளை ஓட விட்டுப் பார்க்கிறோம்? திரைப்படங்கள் பார்க்கும்போது ஏன் பாடல்களை ஓடவிட்டுப் பார்க்கிறோம்? சில நேரங்களில் சிலர் பேசும்போது, அதையும் ஓடவிட்டு, 'கடைசியில் நீ என்னதான் சொல்ல வர்ற?' என்று கேட்கும் ஓர் ஆப்ஷன் இருக்காதா? என நினைக்கிறோம்.

ஏன்?

மூன்று காரணங்கள் என நினைக்கிறேன்:

(அ) இறுதி அல்லது முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம். அல்லது இப்படித்தான் முடியும் என நாம் ஒன்றை நம் மனதில் முடிவெடுத்துக்கொள்கிறோம். அந்த முடிவு காணொளியின் முடிவோடு பொருந்துகிறதா என்று பார்க்க ஆவர்மாக இருக்கிறோம்.

(ஆ) நாம் பார்ப்பதற்கு இன்னும் நிறைய காணொளிகள் இருக்கின்றன. அல்லது நமக்கு நேரம் குறைவாக இருக்கிறது. அல்லது எல்லா காணொளிகளையும் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.

(இ) பொறுமை இல்லை.

இன்லென்ட் லெட்டரில் கடிதம் எழுதிக் காத்திருந்து பதில் பெற்ற நாம் சில வருடங்களில் மின்னஞ்சலுக்கும், கட்செவி (வாட்ஸ்ஆப்) குறுஞ்செய்திக்கும் பரிணாம வளர்ச்சி அடைந்ததில் நாம் இழந்த மிக அரிய நற்குணம் 'பொறுமை.'

இத்தாலியன் மொழியில் 'சான்ந்தா பட்ஸியென்ஸா' ('புனிதமான பொறுமை') என்பார்கள்.

பொறுமை இருந்தால் எல்லாவற்றையும் வென்று விடலாம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை நாம் எருசலேமில் பார்க்கிறோம்.

'கள்ளிக்காட்டு இதிகாசம்' எழுதி முடித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய பண்ணை வீட்டின் வராந்தாவில் தன்னுடைய கைகளைப் பின்னால் கட்டி ஒய்யாரமாக நடந்துகொண்டிருந்ததுபோல, இயேசு கோவிலின் சாலமோன் மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறார்.

அங்கே நின்ற அல்லது அங்கே வருகின்ற யூதர்கள் சிலர், அவரைச் சூழ்ந்து கொண்டு, 'இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்' என்று கேட்கிறார்கள்.

இயேசு நினைத்திருப்பார்: 'ஏன்டா! இப்பதான் டைட்டிலே போட்டிருக்கு! அதுக்குள்ளயும் க்ளைமேக்ஸ் என்னன்னு கேக்குறீங்களேடா?'

யூதர்களின் உரையாடலில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன:

அ. அவர்களுக்குப் பொறுமை இல்லை.

ஆ. மெசியா என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிடு என்கிறார்கள். இது நமக்கு சிரிப்பை வரவைக்கிறது. கோவிலுக்குப் போய் உள்ள உட்கார்ந்துகொண்டு, 'நீ சாமின்னா உடனே சொல்லிடு!' என்று கடவுளைப் பார்த்து நாம் சொல்வது போல இருக்கிறது. இந்த நேரத்தில், கடவுள், 'ஆம்' என்றும் சொல்ல முடியாது. 'இல்லை' என்றும் சொல்ல முடியாது. 'ஆம்' என்று சொன்னால், நமக்குச் சிரிப்பு வரும். 'இல்லை' என்று சொன்னால் கோபம் அல்லது ஏமாற்றம் வரும். ஒருவேளை இயேசு தன்னை மெசியா என்று சொன்னால், கண்டிப்பாக அவர்கள் நம்பியிருக்க மாட்டார்கள். இல்லை என்று சொன்னாலும், 'அப்புறம் ஏன் அதைச் செய்ற? இதைச் செய்ற?' எனக் கேட்டிருப்பார்கள்.

இவர்களின் இரண்டு பிரச்சினைகளுக்கும் ஆதாரமான ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், அவர்கள் அனைத்திலும் 'உறுதித்தன்மையை' நாடுகின்றனர். வாழ்வில் உறுதித்தன்மை கணிதத்தில் மட்டும்தான் உண்டு. இரண்டும் இரண்டும் நான்கு என்பது கணிதத்தில் மட்டும்தான் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் உறுதியாக இருக்க முடியும். மனித வாழ்வில், உறவு நிலைகளில், ஆன்மீகத்தில் இந்த உறுதித்தன்மையை நாம் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கக் கூடாது. சில நேரங்களில் இங்கே இரண்டும் இரண்டும் என்பது நான்காக இருக்கும், சில நேரங்களில் பத்தாக இருக்கும், சில நேரங்களில் ஒன்று என இருக்கும். அழகு என்பது உறுதியற்ற நிலையில்தான் இருக்கின்றது.

'என் காதலி என்னோடு எப்பவும் இருப்பாள்' என்ற உறுதித்தன்மை வந்துவிட்டால், அந்தக் காதல் அப்படியே உறைந்துவிடும். 'அவள் இருப்பாளா? இருக்க மாட்டாளா?' என்ற உறுதியற்ற தன்மைதான் காதலைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும்.

'கடவுள் என்றும் என்னோடு இருக்கிறார்' என்ற உறுதித்தன்மை வந்துவிட்டால், நான் அடுத்து கடவுளை பொம்மையாக்கி விடுவேன். 'அவர் இருக்கிறாரா? இல்லையா? இப்படி நடக்குமா? நடக்காதா?' என்ற உறுதியற்ற நிலையில்தான் ஆன்மீகம் வளர முடியும்.
ஆக, உறுதித்தன்மை என்பது பொருள்களின் தன்மை. உறுதியற்ற தன்மையே மனிதத் தன்மை.

வருவதை அப்படியே எடுத்துக்கொண்டு வாழ்வதும், நடப்பது அனைத்திலும் பொறுமை காப்பதுமே வாழ்வை இனிமையாக்கும்.

நற்செயல்: இறைவன் பற்றிய என்னுடைய கருதுகோள் எது? இன்று நான் பொறுமையிழக்கும் தருணங்கள் எவை?

2 comments:

  1. "பொறுமை"-👌
    Great-🤝🙏

    ReplyDelete
  2. அருமை! அருமை! வாழ்க்கையோடு இழைந்தோடும் வாழ்வியல் உண்மைகளை ஏந்தி வரும் ஒரு பதிவு. அங்கங்கே கொஞ்சம் நக்கலும்,சோகமும் கைகோர்த்துச் செல்கின்றன.ஒரு ஐந்து நிமிடம் இதயத்தின் தனிமையில் அமர்ந்து நம் வாழ்வைப் பின்னோக்கி ஓடவிட்டால் இழந்தவற்றைக் கணக்கிட விரல்கள் போதாதென்றும்,அதில் முதலில் வருவது ‘ பொறுமை’ எனவும் நம் மனம் சொல்லும்.அன்று அத்தனை நாள் காத்திருப்பிற்குப்பின் அந்த இன்லன்ட் கொடுத்த மகிழ்ச்சியை நம் காணொளிகள் தருகிறதாவெனில் அதுவுமில்லை. பின் ஏன் இந்த அவசரவேகம்?
    “என்காதலி என்னோடு இருப்பாளா மாட்டாளா?” என்ற உறுதியற்ற தன்மைதான் என் காதலைத் தக்க வைக்க முடியும்” மற்றும் “:உறுதியற்ற நிலையில் தான் ஆன்மீகம் வளர முடியும்” போன்ற வரிகள் தந்தையின் எழுத்து நடையையே உச்சத்திற்குக் கொண்டுசெல்கின்றன. ஆம்! அழகாகவும்,அர்த்தமுடனும் சொல்லியுள்ள அந்த இறுதி வரிகள்....” வருவதை அப்படியே எடுத்துக்கொண்டு வாழ்வதும்,நடப்பது அனைத்திலும் பொறுமை காப்பதுமே வாழ்வை இனிமையாக்கும்” அக்மார்க் உண்மை!

    இன்று நான் பொறுமையிழக்கும் தருணங்கள் எது? ஒன்றா...இரண்டா? இருப்பினும் ஒரு செயலுக்கு முன்னே நான் பொறுமையுடன் செலவழிக்கும் ஒரு நிமிடம் எனக்குப்பல மகிழ்ச்சியின் தருணங்களை சாத்தியமாக்கும்.

    சிறிது பொறுமையுடன் வரிக்கு வரி நேரமெடுத்துப்படிக்கத் தூண்டியதொரு பதிவு! தந்தைக்கு நன்றியும்! வாழ்த்தும்!!!

    ReplyDelete