Thursday, May 21, 2020

மகிழ்ச்சி

இன்றைய (22 மே 2020) நற்செய்தி (யோவா 16:20-23)

மகிழ்ச்சி

'இப்படியாக நான் மிலானின் ஒரு தெருவைக் கடந்தபோது வறுமையான பிச்சைக்காரன் ஒருவனைக் கண்டேன். ஏற்கனயே நிறையக் குடித்து போதையில் இருந்த அவன், வேடிக்கையாகப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வழிநடந்தான். நம்முடைய மடமையால் நமக்கு நிறைய துன்பங்கள் வருகின்றன என்று நான் என்னுடன் வந்த நண்பர்களுடன் புலம்பிக்கொண்டும் பேசிக்கொண்டும் சென்றேன். மேற்சொன்ன முயற்சிகளைப் போன்ற சில முன்னெடுப்புக்கள் எனக்கு கவலையைத் தந்தாலும், என்னுடைய உயரவா மற்றும் பேராவல் என்னும் குத்துக்கோல் என்னை மிகவே அழுத்தி மகிழ்ச்சியற்ற நிலையை நான் எந்நேரமும் சுமந்துகொண்டே இருக்குமாறு செய்தது. ஆனாலும், கவலையற்ற மனமகிழ்ச்சியே எங்களுடைய இலக்காக இருந்தது. அந்தப் பிச்சைக்காரன் எங்களுக்கு முன்னாலேயே அந்த நிலையை அடைந்துவிட்டான். அல்லது அந்த நிலையை எங்களால் அடையவே முடியாது. பிச்சையெடுத்துப் பெற்ற சில நாணயங்களால் அடைந்த மகிழ்ச்சியை நான் வளைந்து நெளிந்த பாதைகள் வழியாக அடைய விரும்பினேன். உண்மையான மகிழ்ச்சி அவனிடம் இல்லை. ஆனால், என்னுடைய பேரார்வங்களை நிறைவேற்றிக்கொள்ளும் என்னுடைய தேடல் அவனுடைய மகிழ்ச்சியைவிடப் பொய்யானது. அவன் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதிலும் நான் கவலையால் அலைக்கழிக்கப்பட்டேன் என்பதிலும் எந்த ஐயமுமில்லை. அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் பரபரப்பாக இருந்தேன். யாராவது என்னிடம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறாயா அல்லது அச்சத்தால் அலைக்கழிக்கப்பட விரும்புகிறாயா எனக் கேட்டால், மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன் என்றே சொல்லியிருப்பேன். ஆனால், நான் அந்த மனிதனைப் போல பிச்சைக்காரனாக இருக்க விரும்புகிறேனா அல்லது நான் இருப்பதுபோல இருக்க விரும்புகிறேனா என்று கேட்டால், அச்சமும் கலக்கமும் கொண்டு, நானாகவே இருக்க விரும்புகிறேன் எனச் சொல்லியிருப்பேன். என்ன ஒரு அபத்தமான தெரிவு? நிச்சயமாக இது சரியான தெரிவு அல்ல. ஏனெனில், நான் அவனைவிட அதிகம் படித்தவன் என்ற நிலையில் - என்னுடைய படிப்பை நினைத்து நான் எப்போதும் இன்புற்றிருக்கிறேன் - அவனைவிட மேலானவனாக என்னை நினைத்துக்கொள்ள முடியாது. என்னுடைய படிப்பு மனிதர்களைத் திருப்திப்படுத்துவதைவே நாடச் செய்தது. அவர்களுக்கு கற்பிக்கும் எண்ணத்துடன் அல்ல, மாறாக. வெறும் இன்பத்தைச் சேகரித்துக் கொடுப்பதாக இருந்தது. அந்தக் காரணத்திற்காக, ஒழுக்கம் என்னும் தடியால் 'என் எலும்புகளை நொறுக்கினீர்' (திபா 51:8).

'இன்பத்தின் ஊற்றில் வித்தியாசம் இருக்கிறது. பிச்சைக்காரன் தன்னுடைய இன்பத்தை குடிப்பதில் கண்டான். நீ உன்னுடைய இன்பத்தை புகழில் கண்டாய்' என்று சொல்பவர்கள் என் ஆன்மாவிடமிருந்து தூரமாகிப் போகட்டும். ஆனால் ஆண்டவரே உம்மில் இல்லாத புகழ் எது? அவனுடைய மகிழ்ச்சி எப்படி உண்மை இல்லையோ, அது போலவே என்னுடைய புகழும் உண்மை இல்லை. அது என் தலையை இன்னும் திருப்பியது. அந்த இரவு பிச்சைக்காரன் தூங்கி எழும்போது அவனுடைய போதை இறங்கியிருக்கும். ஆனால், நான் தூங்கி எழுந்தேன். அது என்னுடனே எழுந்தது. இப்படியாக நான் அதனோடு பல நாள்கள் தூங்கி எழுந்தேன். மனிதனின் இன்பத்தின் ஊற்றில் வித்தியாசம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நம்பிக்கையான எதிர்நோக்கு வீணான ஒன்றிலிருந்து மேலானது. இருந்தாலும், அவனுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி இருந்தது. அவன் என்னைவிட அதிக மகிழ்ச்சியாக இருந்தான்.'

(ஒப்புகைகள், புத்தகம் 6, பிரிவு 6)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள புனித அகுஸ்தினாரின் வார்த்தைகள், மகிழ்ச்சி பற்றிய அவருடைய அறிவுரையை நாம் அறிந்துகொள்ள உதவுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மகிழ்ச்சி பற்றிய ஒரு புதிய புரிதலைப் பார்க்கின்றோம்:

'ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது.
அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்' (காண். யோவா 16:23)

மகிழ்ச்சி என்ற உணர்வு எப்போதும் நீட்சியாகிக் கொண்டே இருக்கின்ற உணர்வு அல்ல. உணவு மகிழ்ச்சி தருகிறது என உண்கிறோம். ஆனால், அதன் மகிழ்ச்சி பசிக்கும் வரைதான். புத்தகம் மகிழ்ச்சி தருகிறது என வாசிக்கின்றோம். ஆனால், சிறிது நேரத்தில் மூளை சோர்ந்துவிடுகிறது. வாசிப்பு சுமையாகிறது. நம் அன்பிற்குரியவரைச் சந்திப்பது அல்லது அவரோடு தொலைபேசியில் பேசுவது மகிழ்ச்சி எனத் தொடங்குகின்றோம். ஆனால், சிறிது நேரத்தில் அந்த நபர் புறப்பட வேண்டும் அல்லது தொலைபேசியைத் துண்டிக்க வேண்டும்.

ஆனால், இயேசு தருகின்ற ஆன்மீக அல்லது உள்ளம்சார் மகிழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. அதை யாரும், எதுவும் எப்போதும் நீக்கிவிட முடியாது. தொடர்ந்து அது அப்படியே இருந்துகொண்டே இருக்கும். 

இதை எப்படி நாம் பெறுவது?

'மீண்டும் காணும்போது'

அது என்ன இயேசு நம்மை மீண்டும் காணும்போது?

பிறப்பைப் பற்றிச் சொல்லும்போது சொல்வார்கள்: 'நாம் இரண்டு முறை பிறக்கிறோம். ஒன்று, நாம் இந்த உலகில் பிறந்த நாளன்று. இரண்டு, நாம் எதற்காகப் பிறந்தோம் என்ற அறிந்த நாளன்று.'

இயேசு நம்மை மீண்டும் காணுதல் என்றால், நாம் அவருடைய அனுபவம் பெறுவது. இது செபத்தினாலும், நோன்புனாலும்தான் சாத்தியமாகும். நம் மனத்தின் எண்ணங்கள், புலன்களின் செயல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படும்போது, நம் உள்ளம் எந்தவிதக் கீறலுமின்றி இருக்கும்போது.

இதை எப்படி உணர்ந்துகொள்வது?

நம் சுண்டுவிரல் நலமாய் இருக்கிறது என எப்போது சொல்கிறோம்? அதைப் பற்றியே நாம் நினையாமல் இருக்கும்போதுதான். வலிக்கும்போதுதான் சுண்டுவிரலை நினைக்கிறோம். அது போலவே, எதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் மனம் அமைதி நிலை அடைவதுதான் இயேசுவை மீண்டும் காண்பது. அல்லது இயேசு நம்மை மீண்டும் காண்பது.

இந்த நிலையில், நம் மகிழ்ச்சியை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது.

மேலும், அந்த மகிழ்ச்சி வந்துவிட்டால் நமக்கு தேவை என்றும், ஆசை என்றும் எதுவும் இருக்காது.  அதையே இயேசு, 'அந்நாளில் நீங்கள் என்னிடம் எதையும் கேட்கமாட்டீர்கள்' என்கிறார். 

நற்செயல்: சற்று நேரம் அமைதியாக இருந்து நம் எண்ண ஓட்டங்களை ஆய்ந்து அறிவது.

3 comments:

  1. மனத்தின் எண்ணங்களும்,புலன்களின் செயல்களும் ஒன்றுபட்டு நம் உள்ளம் எவ்விதக் கீறலுமின்றி இருக்கும் நேரமே இயேசுவை மீண்டும் காணும் நேரமென்றும், எந்த எண்ணமும் இன்றி மனம் அமைதி நிலை அடையும்போதுதான் நாம் அதை உணரும் நேரமென்றும் நமக்கு உணர்த்துகிறது விவிலியம்.இதுவே யாரும் நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள முடியா மகிழ்ச்சி மட்டுமல்ல... வேறு எந்த பொருளுக்கும் ஆசைகொள்ளா மகிழ்ச்சியும் கூட என்கிறார் தந்தை. உடல்...உள்ள சத்தங்களை மறந்து நம் ஐம்புலன்களையும் ஒன்றிணைத்து அந்த மகிழ்ச்சியை நமதாக்கிக் கொள்ள முயல்வோமே!
    “ மகிழ்ச்சி” பற்றிய புனித அகுஸ்தினாரின் தேடலை....கண்டுபிடிப்பை தன் “ஒப்புகைகள்” நூலிலிருந்து கொடுத்த தந்தைக்கு ஒரு சபாஷ்! ஒரு சல்யூட்!

    கண்டிப்பாக ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் அமைதிகாத்து என் எண்ண ஓட்டங்களின் தன்மையை ஆராய முயல்வேன்.நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிட முடியாது. ஆம். அமைதியாக இருந்து எண்ண ஒட்டங்களை ஆய்வு செய்ய தூண்டுகின்ற பதிவிற்காக தந்தைக்கு பாராட்டு.

    ReplyDelete
  3. "ஊடாடும் கற்பித்தல் முறை" பற்றி " இனி கற்றல் சுகமே என்ற வலைப்பூவில் அளித்திருக்கும் கருத்துக்கள் சிறப்பு. ஆசிரியர்கள் சார்பாக நன்றி. வாழ்க

    ReplyDelete