Monday, May 18, 2020

கண்ணியம்

இன்றைய (19 மே 2020) முதல் வாசகம் (திப 16:22-34)

கண்ணியம்

அறிஞர் அண்ணாவின் சமாதியில், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று சொல்லி, 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்று எழுதியிருப்பார்கள்.

கண்ணியம் ('integrity') என்றால் என்ன என்பதற்கு நிறைய நாள் பொருள் தேடினேன்.

'தவறு செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் தவறு செய்யாமல் இருப்பதே கண்ணியம்' என்று ஒரு தமிழ் அகராதியில் சொல்லப்பட்டிருந்தது.

அதாவது, 10 லட்சம் ரூபாயைக் கையிலேயே வைத்திராத ஒருவன் அதை ஒரு போதும் திருடினான் என்று சொல்ல முடியாது. அவன் தன் வாழ்க்கையில் அவ்வளவு பணத்தைப் பார்த்ததே இல்லை. ஆக, அவன் அதைத் திருட வாய்ப்பே இல்லை.

ஆனால், 10 லட்சம் ரூபாயைக் கையில் வைத்திருக்கும் ஒருவன் அதை திருடாமல் இருந்தால் அது கண்ணியம். ஏனெனில், திருடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதைச் செய்ய மறுக்கிறான்.
பெரியகுளத்திற்குள் நுழையுமுன் இடது பக்கத்தில் 'எஸ்ஸார்;' நிறுவனத்தின் பெட்ரோல் நிரப்பும் இடம் இருக்கிறது. அங்கே ஒருமுறை பெட்ரோல் போட்டுவிட்டு, சக்கரங்களில் நைட்ரஜன் நிரப்பினேன். சதீஷ் என்ற இளவல் நிரப்பினார். பெட்ரோல் போட்டால் நைட்ரஜன் இலவசம். இருந்தாலும், அவனிடம் மற்ற நேரங்களில் வசூலிக்கப்படும் 20 ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அவர், 'வேண்டாம் சார்!' என்றார். ஒருவேளை சிசிடிவி கேமரா இருப்பதால், அல்லது யாரும் பார்த்துவிடுவார்களோ என்று அஞ்சுகிறாரோ எனச் சுற்றிலும் பார்த்தேன். அப்படி ஒன்றும் அங்கே இல்லை. மேலும், அது இரவு. அவர் உறுதியாக, 'வேண்டாம் சார்! பத்திரமாகப் போங்க!' என்று மட்டும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சதீஷ் செய்த செயலுக்குக் காரணம் அவரிடமிருந்த கண்ணியம். தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் - அது தவறு அல்ல - அவர் தவறு செய்யவில்லை.

இது என் அருள்பணி வாழ்வைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. இதே கண்ணியத்தை நான் என் பணி வாழ்வில், தனி மனித வாழ்வில் செயல்படுத்த முடிகிறதா? என்று என்னையே கேட்க வைத்தது.

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் மற்றும் சீலாவின் கண்ணியத்தைப் பற்றி நாம் வாசிக்கின்றோம்.

அதாவது, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பாடிய புகழ்ச்சிப் பாடலில், நிலம் அதிர்ந்து, சிறைக் கதவுகள் திறக்கின்றன. கை மற்றும் கால் விலங்குகள் உடைகின்றன. ஆனால், அவர்கள் தப்பி ஓடவில்லை. தப்பி ஓடுவதற்கான வாய்ப்பு கிடைத்தும் அவர்கள் அத்தவற்றைச் செய்யவில்லை.

அவர்களின் இந்தக் கண்ணியம் சிறைக்காவலர் தன் குடும்பத்தாரோடு மீட்படைய உதவுகிறது.

காவலர் கைதிகளைப் பார்த்து, 'பெரியோரே!' என அழைக்கின்றார். இந்த நிலைக்கு அவர்களை உயர்த்தியது அவர்களுடைய கண்ணியம்.

மேலும், 'மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடம், தனக்கு விடுதலை தருமாறு கேட்கின்றார் காவலர். என்ன ஆச்சர்யம்!

அவர் பவுலையும் சீலாவையும் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றார். காயங்களைக் கழுவுகின்றார். உணவு பரிமாறுகின்றார். வீட்டார் அனைவரும் பேருவகை அடைகின்றனர்.

ஆக, இருவரின் கண்ணியம் இன்னொரு குடும்பத்தின் பேருவகைக்கு வழிவகுக்கின்றது.

கண்ணியமற்ற செயல் எல்லாருடைய மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாகி விடுகிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி, இறுதியில் கொலையும் செய்யத் துணிகின்றார் தாவீது. அவரின் செயல், அவருடைய மகிழ்ச்சியின்மையின், பெத்செபாவின் மகிழ்ச்சியின்மையின், உரியாவின் மகிழ்ச்சியின்மையின், நாத்தானின் மகிழ்ச்சியின்மையின், இறுதியில் ஆண்டவரின் மகிழ்ச்சியின்மையின் காரணமாக மாறுகிறது. தாவீதின் வீ;ட்டில் அன்றிலிருந்து ஒரு கத்தி அவரின் தலைக்கு மேல் தொங்கத் தொடங்குகிறது. பாவம் அவர்!

நற்செயல்: தவறுவதற்கான வாய்ப்புக்களை நான் எப்படி கையாளுகிறேன்?

2 comments:

  1. கண்ணியமான மற்றும் கண்ணியமற்ற செயல்..இவை இரண்டிற்குமிடையே உள்ள வேற்றுமைகளை வாழ்ந்துகாட்டியவர்களை உதாரணமாக வைத்து சொல்லியிருக்கும் விதம் நல்ல புரிதலைத்தருகிறது.அகால நேரத்தில் தன்னை யாரும் கவனியாத போதும் தந்தைக்குப் பெட்ரோல் போட உதவிய சதீஷாகட்டும்...சிறையிலிருந்து தப்பியோட வழியிருத்தும் அதைச்செய்யாமல் விட்ட பவுல் மற்றும் சீலாவாகட்டும் கண்ணியம் ஒருவரை எத்தனை உயரத்திற்குக்கொண்டு சேர்க்குமென்பதை நமக்குச்சொல்கிறார்கள்.ஆனால் தாவீதின் கண்ணியமற்ற செயலோ பலரது மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாவதோடு அவரது மனசாட்சியின் கேள்விகளுக்கு முன்னே ஒரு கைதியாக நிற்கிறார்.......கல்லறை வரை அண்ணாவுக்குத் துணை சென்ற “ கண்ணியம்” நம் வாழ்விலும் பிரதிபலித்தால் நாமும் பலரது மகிழ்ச்சிக்குக் காரணிகளாவோம். அன்றாடம, வாழ்வில் நாம் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டியதொரு நற்செயல்.தந்தைக்குப்பாராட்டுக்கள்!

    அடுத்தமுறை என்னில் கண்ணியம் குறையும்படியானதொரு விஷயம் நடக்கையில் சதீஷ்,பவுல்,சீலா மட்டுமல்ல...தாவீதையும் சேர்த்தே நினைத்துக்கொள்வேன்.அன்புடன்....

    ReplyDelete
  2. கண்ணியம் பிறரின் பேருவகைக்கு வழி வகுக்கிறது. கண்ணியமற்ற செயல் எல்லாருடைய மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகிவிடுகிறது விளக்கம் நன்று.

    ReplyDelete