Saturday, April 30, 2016

நான்கு குணங்கள்

'அவர்கள் திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' (திப 2:42)

திருத்தூதர்கள் எல்லாரையும் தழுவுவதற்கு நான்கு குணங்கள் இருந்தன.

அ. கீழ்ப்படிதல்
ஆ. நட்புறவு
இ. அப்பம் பிடுதல்
ஈ. இறைவேண்டல்

அ. கீழ்ப்படிதல்
எதற்கு அல்லது யாருக்கு கீழ்ப்படிந்தார்கள்? 'திருத்தூதர்களுக்கும், அவர்கள் கற்பித்தவற்றிற்கும்!' 'கீழ்ப்படிதல்' என்பதை ஒரு உருவகமாகச் சொல்ல வேண்டுமென்றால், 'கடல்நீரில் ஆற்று நீர் கலப்பது போன்றது.' கடல்நீர் உப்பு நிறைந்தது. ஆற்று நீர் இனிமையானது. ஆனால், ஆற்றுநீர் கடலைத் தழுவிவிட்டால் அதன் இனிமை குன்றிவிடும். 'தன் இனிமை குன்றிவிடும்' என்பதற்காக ஆறு ஒருவேளை கடலில் கலக்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? நீர் தேங்கிவிடும். தேங்கிய நீர் நாற்றமெடுக்கும். திருத்தூதர்களின் போதனை சில நேரங்களில் இறைமக்களுக்கு உப்பாகவோ, அல்லது கசப்பாகவோ இருந்திருக்கலாம். ஆனால், தங்கள் இனிமை போனாலும் பரவாயில்லை என்று முழுமையாக அவர்களோடு கலந்துவிடுகிறார்கள்.

ஆ. நட்புறவு
'சகோதர உறவு' அல்ல. 'நட்புறவு.' என்னை அடிக்கடி திட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு பேராசிரியர் ஒருநாள் என்னை காஃபி பாரில் பார்த்தார். 'நண்பரே, எப்படி இருக்கிறீர்?' என்று கேட்டார். நான் சொன்னேன். 'நாம் நண்பர்கள் அல்ல. சகோதரர்கள். ஏனெனில் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம். சகோதரர்கள்தான் நம்மேல் திணிக்கப்படுபவர்கள்' என்றேன். 'யார்கிட்ட?' 'எங்ககிட்டேவா?' சகோதர உறவை விட நட்புறவில் ஒருவர் தானே விரும்பி நுழைகிறார். ஆனால், சகோதர உறவைவிட, நட்புறவு நிலைக்கத்தான் நிறைய முயற்சிகள் வேண்டும். ஒவ்வொரு முறையும் தன் அர்ப்பணத்தைப் புதுப்பித்து அடுத்தவரை முழுமையாக அன்பு செய்பவர்தான் நட்புறவு கொள்ள முடியும்.

இ. அப்பம் பிடுதல்
இன்று நாம் வழிபாட்டில் பயன்படுத்தும் அப்பத்தை வத்திக்கானின் வழிபாட்டு ஆணையம்தான் தீர்மானிக்கிறது. 'இவ்வளவு தடிமனில், இவ்வளவு சுற்றுவட்டத்தில், இவ்வளவு கோதுமை, இவ்வளவு எண்ணெய்' எனக் கலந்து 'இவ்வளவு வெப்ப நிலையில் சுடப்பட்டு,' நடுவே 'சிலுவை,' அல்லது 'ஆல்ஃபா ஒமேகா, அல்லது 'ஆட்டுக்குட்டி' என வரையபட்டால்தான் இயேசு பிரசன்னமாவார் என்று நினைக்கிறது இந்த ஆணையம். அதனால்தான், அப்பம் சிறிது உடைந்தாலோ, கீறி இருந்தாலோ அருட்பணியாளர் கோபமாகிவிடுகிறார். திராட்சை ரசத்திற்கும் அதே போலத்தான்.வத்திக்கானின் இந்த நெறிமுறை இயேசுவை நம்மிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது. இயேசுவை மட்டுமல்ல, நம் ஒருவர் மற்றவரையும் அந்நியமாக்கவிட்டாது. ஆங்கில வார்த்தை 'company' அல்லது 'companionship' என்பது 'cum' ('உடன்') மற்றும் 'panis' ('அப்பம்') என்ற இரண்டு லத்தீன் வார்த்தைகளிலிருந்து வருகின்றன. ஆக, நாம் யாருடன் அப்பம் பிடுகின்றோமோ, அல்லது பகிர்கின்றோமோ, அவருடன் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஒற்றுமை என்பது சண்டை போடாமல் இருப்பது அல்ல. மாறாக, எல்லாம் எல்லாவற்றையும் பெறுவது. நான் நன்றாக உண்டு, உடுத்த, என் சகோதரன் உண்ணாமல், உடுத்தாமல் இருந்தால் அது ஒற்றுமையா? இல்லை. தொடக்க கிறிஸ்தவர்கள் 'அப்பம் பிடுதலை' ஒரு சமூக ஒருமைப்பாட்டு நிகழ்வாகச் செய்தனர். 'அதில் இயேசு இருக்கிறார்' என்ற இறையியலும், 'விவாகரத்து பெற்றவர் உண்ணலாமா கூடாதா' என்ற கட்டப்பஞ்சாயத்துக்களும் அங்கே இல்லை. அப்படியே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஈ. இறைவேண்டல்
இறைவேண்டல் வழியாக தூய ஆவியானவருக்கு தங்களையே திறந்தனர். அவர் என்ன சொல்கிறார் என்பதை ஆய்ந்தறிந்தனர். 'இந்த செபம் சொல்வோம், அந்த செபம் சொல்வோம்' என்று செப புத்தகங்களும், இந்த செபத்தை சொல்லும்போது 'சிறிது குனியவும்' என்ற சிகப்பு எழுத்து நெறிமுறைகளும் இல்லை.

இந்த நான்கு பண்புகளும் இருந்ததால்தான் அவர்களால் வேகமாக எல்லாரையும் தழுவ முடிந்தது.

இந்த நான்கும் இன்று இல்லாததால்தான் நம்மிடையே இவ்வளவு பிளவுகள், வேற்றுமைகள், ஏற்றத்தாழ்வுகள். ஒரே மாதிரி அப்பம் சாப்பிடும் ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூது திருஅவையில்கூட ஒற்றுமை இல்லை. நாம் வெளிநாட்டிலிருந்து அப்படியே இறக்குமதி செய்து நம் சக்ரிஸ்டியில் வைத்துக்கொண்டதில் அப்பமும், ரசமும் உள்ளடக்கம்.

இந்த நான்கையும் தொடக்க நம்பிக்கையாளர்கள் 'ஒருநாள்' அல்லது 'இருநாள்' கடைப்பிடித்தார்களா? இல்லை. இதுவே, அவர்களின் பழக்கமாக இருந்தது. ஆகையால்தான் லூக்கா இங்கே, 'உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' என எழுதுகிறார்.


1 comment:

  1. ஆதித்திருச்சபையின் அங்கத்தினர்கள் கொண்டிருந்த கீழ்ப்படிதல்,அப்பம் பிடுதல்,நட்புறவு,இறைவேண்டல்...போன்ற குணாதிசயங்களின் எளிமையையும்,அதில் தெரிந்த உண்மைப்பாட்டையும் அங்கீகரிக்கும் தந்தை அவை பல தலைமுறைகளைக் கடந்து வரும்போது அவற்றில் படிந்துள்ள மாசு(?!) பற்றியும் ஆதங்கப்படுகிறார்.ஆதி கிறித்துவர்கள் இவற்றையே பழக்கமாகக் கொண்டிருந்ததால் அவர்கள் "உறுதியாய் நிலைத்திருந்ததாகவும்" கூறுகிறார்."மாற்றம் ஒன்றே மாறாதது" ...நமக்குத் தெரிந்ததே! அப்படி சில பழக்க வழக்கங்கள் மாற்றத்திற்கு உட்படுத்தப்படும்போது கண்டிப்பாக அதில் சில தூசுகளும் ஒட்டத்தான் செய்யும்.அவற்றையும் ஏற்றுக்கொண்டு அவற்றைப் களையும் வழியறிதல் தான் நமக்கு மேன்மை.கால ஓட்டத்தில் நமக்குத் 'தேவையானவை' நிலைக்கும் என்பதும்,' தேவையற்றவை' மறைந்து போகும் என்பதும் கூட இயற்கையின் நியதி.யார் கண்டது? நாளைத் தந்தையைப் போன்றவர்களிடம் பொறுப்புக்கள் திணிக்கப்படும் போது அவைத் தாங்கள் விரும்பும் மாற்றத்திற்கும் ஆளாகலாம்.என்னைப் பொறுத்தவரை நம் கையை மீறிய விஷயங்களைக் கண்டு மறுகுவதை விடுத்து " நம் இறைவேண்டல் வழியாகத் தூய ஆவியாருக்கு நம்மையே திறப்பது தான்" விவேகம் எனப்படுகிறது.ஏனெனில் என் 'விசுவாசம்' மட்டுமே என்னை நெறிப்படுத்தும் என நினைப்பவள் நான்.ஒரு விழிப்புணர்வைத் தந்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete