Tuesday, April 26, 2016

அன்பார்ந்த மருத்துவர்

'திருத்தூதர் பணிகள்' நூலை எழுதியவர் லூக்கா.

'அன்பார்ந்த மருத்துவர் லூக்கா' (கொலோ 4:14) - இப்படித்தான் லூக்காவை அறிமுகம் செய்கின்றார் பவுல்.

லூக்கா - புறவினத்துக் கிறிஸ்தவர். மாற்குவிற்கு நெருக்கமானவர். பவுலின் உடன்பணியாளர்.

இவரைப் பற்றிய குறிப்பை நாம் பிலமோன் 24 மற்றும் 2 திமோ 4:11ல் பார்க்கின்றோம். மேலும், திருத்தூதர்கள் பணிகள் நூலில், 'நாங்கள்' என்று குறிப்பிடும் பகுதிகளிலும் இவர் மறைந்திருக்கிறார் (காண். 16:10-17, 20:5-21:17, 27:1-28:16).

இவரின் சொந்த ஊர் சிரியாவில் உள்ள அந்தியோக்கு (காண். திப 11:19-30, 13:1-4).

இவரின் நூற்களில் இருந்து நாம் இவரின் ஏழு நற்குணங்களை அறிந்து கொள்கிறோம்:

1. 'மாண்புமிகு தெயோபில் அவர்களே' (லூக் 1:1, திப 1:1). இப்படித்தான் அவர் தன் இரு நூல்களையும் தொடங்குகின்றார். 'தெயோபில்' என்பவர் யாராவது ஒருவருடைய பெயராக இருந்திருக்கலாம். ஆனால், அதற்கு மற்றொரு பொருளும் உண்டு. இந்த வார்த்தை, 'தெயோஸ்' (கடவுள்) மற்றும் 'ஃபிலியா' (அன்பு) என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பாகும். ஆக, 'தெயோபில்' என்றால் 'கடவுளால் அன்பு செய்யப்படுபவர்' அல்லது 'கடவுளின் அன்புக்குரியவர்' என்பது பொருளாகும். தன் நூல்களை எல்லாரையும் நோக்கி எழுதும் லூக்கா, எல்லாரையும் 'கடவுளின் அன்புக்குரியவர்' என அழைக்கிறார். இது இவரின் நேர்முக பார்வையைக் காட்டுகிறது. இவ்வுலகில் உள்ள எல்லாருமே கடவுளின் அன்புக்குரியவர்கள். நம்மை நம் அருகில் இருப்பவர்கள் அன்பு செய்யாவிட்டாலும், நம்மை அன்பு செய்ய கடவுள் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்பியவர் லூக்கா. மேலும், இந்த அன்புக்குரிய அனைவரையும், 'மாண்புமிகு' என்று மதிப்புடன் அழைக்கின்றார்.

2. தாழ்ச்சி. தன் இரண்டு நூல்களிலும் 'நான் தான் இதை எழுதினேன்' என்று அவர் கையெழுத்து இடவில்லை. 'என்னைப்போல யாரும் எழுத முடியாது!' என்ற எண்ணத்தில்தான் அவர் இப்படி செய்திருக்க வேண்டும். என் எழுத்துக்களே என் கையெழுத்து என்று மறைமுகமாகச் சொல்கிறார் லூக்கா.

3. மருத்துவர் பணி (கொலோ 4:14). இவர் படித்தவர். அக்காலத்தில் மருத்துவம் படிப்பது என்பது மிகப்பெரிய ஒன்று. மருத்துவர் பணிக்கு மூளையின் இரண்டு பக்கங்களும் செயல்பட வேண்டும். மனித உடலும் தெரிய வேண்டும்.மனித உள்ளமும் தெரிய வேண்டும். இதில் கைதேர்ந்தவர் லூக்கா.

4. திருத்தூது ஆர்வம். திருத்தூதர் பவுலோடு இணைந்து பணி செய்கின்றார்.

5. விளிம்புநிலை மக்கள்மேல் உள்ள அக்கறை. இவரின் இரு நூல்களிலும் பெண்கள், நோயுற்றவர்கள், வறுமையுற்றோர் என்னும் விளிம்புநிலை மக்கள்தாம் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். யார் ஒருவர் வார்த்தை இல்லாத மக்களுக்கு வார்த்தையாக இருக்கிறாரோ, அவரே இனியவர்.

6. செபமும் இறைபுகழும். இவரின் நூல்களில் நாம் சந்திக்கும் இயேசுவும், திருத்தூதர்களும், திரு அவையின் உறுப்பினர்களும் எப்போதும் செபிக்கிறவர்களாகக் காட்டப்படுகின்றனர். இவர் செப மனிதராக இருந்ததால்தான் இவரால் இப்படி எல்லாரையும் செபிக்கும் மனிதர்களாகச் சித்தரிக்க முடிகிறது. இவரை செப மனிதராக மாற்றியது இவரில் இருந்த தூய ஆவி. 'தூய ஆவி' என்ற வார்த்தை மத்தேயுவில் 5 முறையும், மாற்குவில் 4 முறையும், லூக்கா-திபணியில் 53 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

7. அர்ப்பணம். எழுத்துப் பணி என்பது இன்று நாம் செய்வது போல மிகவும் எளிதானது அல்ல. தன் தொடுதிரையில் தட்டச்சு செய்து, மேகத்தின் மெமரியில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் அன்று இல்லை. விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட தோல்களும், பப்பைரஸ் நெகிழிகளும்தான் அன்று பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மேல் எழுதவும், இவற்றைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு இடத்திற்கும் தூக்கிச் செல்லவும் நிறைய மெனக்கெட வேண்டும். தான் தொடங்கிய வேலையை அர்ப்பணத்தோடு முடிக்க நினைத்த லூக்காவின் அர்ப்பணம் வியக்கத்தக்கதாக இருக்கிறது. மேலும், இவரால் எல்லா மனிதர்களோடும் இயல்பாக பழக முடிகிறது. அரசவையில் இருப்போரும் இவருக்கு நண்பர்கள். அடிமைகளும் இவருக்கு நண்பர்கள். இவர் எந்தச் சூழலிலும் வாழும் பக்குவம் பெற்றவராகவும் இருக்கிறார்.


2 comments:

  1. " லூக்கா".. இவர் ஒரு நற்செய்தியாளர்,மருத்துவர் என்பது மட்டுமே பலருக்கு லூக்காவைப் பற்றித் தெரிந்திருக்கும்."திருத்தூதர் பணிகள்" நூலை எழுதியவர் லூக்கா என்பது கூட எனக்குப் புது அறிதலாகப் படுகிறது. இவருடைய பல பண்புகளை இங்கே எடுத்து வைக்கிறார் தந்தை.தன்னுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரியாதை கொடுத்ததுமட்டுமின்றி , எல்லோரும் கடவுளின் அன்புக்குரியவர்கள் என்ற பார்வை இருந்ததால், எல்லோருமே ஒருவர் மற்றொருவரின் அன்புக்குட்பட்டவர்களென சொல்லாமல் சொல்கிறார்." இறைவனில் நாம் சமம்" என்ற நினைப்பு ஒன்று போதும் நாம் யாரையும் ஏன் நம்மை வெறுப்பவரையும் கூட அன்பு செய்ய.எத்துணையோ பெரிய படிப்பாளியாய் இருந்தும் இவர் தன் வாழ்வின் வரிச்சட்டமாய்க் கொண்டிருந்த தாழ்ச்சி,திருத்தூது ஆர்வம்,பெண்கள்,நோயுற்றோர்,வறுமையுற்றோர் போன்ற 'விளிம்பு நிலை' மக்கள் மேல் அவர் காட்டிய அக்கறை, தூய ஆவியின் உந்துதலால் இவரிடம் இருந்த செபமும்,இறைபுகழும் சேர்ந்த வாழ்க்கை,இந்த அத்தனை நற் குணங்களின் மொத்தக்கலவையான ' அர்ப்பண வாழ்வு' ....இவை துறவற நிலையில் உள்ளவர்கள் மட்டுமின்றி நாம் அனைவருமே நம் வாழ்வில் வாழ்ந்து காட்டக்கூடியவை மட்டுமின்றி, வாழ்ந்துகாட்ட வேண்டியவையும் கூட. இத்தனை நாள் 'நுனிப்புல்' மட்டுமே மேய்ந்து கொண்டிருந்த என் போன்றவர்களுக்கு " லூக்கா"வை இத்தனை அருகிருந்து பார்ப்பது போன்ற விதத்தில் அறிமுகப்படுத்திய தந்தைக்கு நன்றிகள்! சமுதாயத்தின் அடித்தட்டு மக்களைக் குறிப்பிடும் அந்த ' விளிம்பு நிலை' மக்கள் எனும் புதிய,அழகானதொரு வார்த்தைக்காகத் தந்தைக்குப் பாராட்டும் கூட!!!

    ReplyDelete
  2. Dear Fr. YESU:

    Thank you for a great 7-point summary of Luke's focus in the Acts.

    While all 7 themes are splendidly vital, 2 of them captured my attention.

    a. Luke's concern for the people on the peripheries.
    Yes, at times the contemporary "apostles" and "evangelists" seem to keep exclusive company
    with those at the center and on the pews, while ignoring the peripheral people or deputing the disenfranchised "catechists" to look after the multitudes on the floor.

    b. Commitment to study-write-educate.
    Well, a Faith that is grounded on Christ, the Incarnate WORD, requires committed and contemplated study [theology as the knelt falling-in-love on the Lord] that precedes, predicates and enriches personal prayer, community's liturgy, charitable action etc.

    Study-less pieties tend to be cheap, sentimental and productive of monthly cash flow.
    Study-less actions too tend to be substance-less philanthropies; Luke ## 7 may not be inspire them.

    GITANJALI A BERNARD, New York

    ReplyDelete