Thursday, April 21, 2016

ஈசபேல்

'ஈசபேல்' என்றால் 'இளவரசன் யார்?' என்பது பொருள்.

ஏறக்குறைய கி.மு. 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஒரு இளவரசி. எத்பால் என்ற சீதோன் நாட்டு (பொனிசிய) அரசனின் மகள். வடக்கு இஸ்ரயேலை ஆட்சி செய்த ஆகாபை மணம் முடிக்கின்றார் இவர்.

ஆகாபு அரசன் யாவே இறைவன் மேல் தீராத பற்றுக் கொண்டவர். அப்படி பற்றுக்கொண்டிருந்த தன் கணவனின் மனத்தை மாற்றி, பாகால் மற்றும் அசேரா தெய்வத்தின் பக்கம் திருப்புகின்றார் இவர். மேலும், பாகால் கடவுளுக்கு எதிராக இருந்த எல்லா இறைவாக்கினர்களையும், தேசத்துரோகக் குற்றத்தில் கைது செய்யச் சொல்கின்றார். இவரிடம் இருந்து தப்பி ஓடுபவர்தான் நாம் இரண்டு நாட்களுக்கு முன் சாரிபாத்தில் சந்தித்த எலியா. 'எலியா' என்றால் 'என் கடவுள் யாவே' என்பது பொருள்.
இவரின் நாம் 1 மற்றும் 2 அரசர்கள் நூலில் சந்திக்கின்றோம் (காண். 1 அர 16:31).

'ஈசபேலும் எலியாவும்'

எலியா இறைவாக்கினர் பாகாலின் 400 இறைவாக்கினர்களை போலி என நிரூபித்து கார்மேல் மலையில் வெற்றி கொள்கின்றார். தனது 400 இறைவாக்கினர்களைக் கொன்ற எலியாவைப் பழி தீர்க்க நினைக்கின்ற ஈசபேல் அவரின் தலைக்கு விலை நிர்ணயம் செய்கின்றார். ஈசபேலிடமிருந்து தப்பி ஓடுகின்றார் எலியா.

'ஈசபேலும் நாபோத்தும்'

நாபோத்து என்பவன் ஒரு சாதாரண விவசாயி. அவனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. தன் கணவன் ஆகாபின் தோட்டத்தை விரிவுபடுத்த எண்ணும் ஈசபேல் நாபோத்தின் தோட்டத்தைக் கேட்கின்றார். தன் மூதாதையரின் தோட்டத்தைத் தர மறுக்கின்றார் நாபோத்து. அப்புறம் என்ன? தீர்த்துக்கட்டிவிட வேண்டியதுதான். நாபோத்தின் மேல் போலி குற்றச்சாட்டுகளைக் கட்டி, அவரைக் கல்லால் எறிந்து கொல்லச் செய்கின்றார். இதை எதிர்க்கும் எலியா, 'உன் இரத்தத்தை நாய்கள் நக்கும்' என்று ஈசபேலைச் சபிக்கின்றார்.

'இறப்பு'

மூன்று ஆண்டுகளில் கணவன் ஆகாபு இறக்கின்றார். 'அடுத்து யார் அரசன்?' என்ற கேள்வி வருகின்றது. அந்த கேள்வி போராட்டமாக வெடிக்கின்றது. இந்தப் போராட்டத்தில் வீ;ட்டின் மேல்மாடியிலிருந்து எறியப்பட்டு கோரமாகக் கொல்லப்படுகின்றார். அவரின் இரத்தத்தை தெருநாய்கள் வந்து நக்குகின்றன.

'மற்றவர்களை அடக்கி ஆள நினைக்கும் பெண்களை' இன்றும் 'ஈசபேல்' என அழைக்கிறது ஆங்கில சொலவடை.

'வினை விதைத்தவன்(ள்) வினை அறுப்பான்(ள்)' - ஈசபேல்.


2 comments:

  1. யாருமே...அதிலும் நிச்சயமாக ஒரு ' பெண்' செய்யக்கூடாத அனைத்துக் காரியங்களையும் செய்து சுற்றி இருப்போரின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகும் ஒரு எதிர் மறைக் கதாநாயகிதான் இன்றையப் பதிவின் 'ஈசபேல்.'தன் கணவன் ஆகாபு அரசனை யாவே இறைவனுக்கு எதிராகத் திருப்பிவிட்டதுமன்றி, பாகால் இறைவனுக்கு எதிரானவர்களைத் தேசதுரோக சட்டத்தில் கைது செய்த போதும்,'என் கடவுள் யாவே' என நின்ற எலியாவைப் பழி தீர்க்க அவர் தலைக்கு விலை நிர்ணயம் செய்த போதும், சாதாரண விவசாயி நாபோத்துத் தன் திராட்சைகத் தோட்டத்தைக் கொடுக்க மறுத்ததற்காக அவனைக் கல்லால் எறிந்து கொன்ற போதும் , தான் தன்னை நம்பியுள்ள மக்களுக்கு 'நல்லவற்றை' மட்டுமே செய்ய வேண்டிய இளவரசி என்பதை மறந்து விடுகிறார். விளைவு? ' 'நல்லவர்' எலியாவின் சாபத்திற்கு ஆளாகிறார்.போராட்டத்தில் கோரமாகக் கொல்லப்படும் இவளின் இரத்தத்தைத் தெரு நாய்கள் நக்குகின்றன. தந்தை ரொம்பத் தெளிவாக இருக்கிறார் " வினை விதைத்தவள் வினை அறுப்பாள்" எனும் விஷயத்தில்.சரிதான்.ஆனால் அதென்ன? 'ஈசபேல்' என்பது " மற்றவர்களை அடக்கி ஆள் நினைக்கும் பெண்களைக்" குறிக்கும் சொல் என்பது? அப்படியெனில் ஆண்களுக்கு என்ன பெயர்? சும்மா ஒரு பொது அறிவிற்காகத்தான்.'பி.கு 'இசபேல்' என்பது எனக்கு மிகவும் பிடித்த பெயர்.அந்தப் பெயருக்கு இப்படியொரு எதிர்மறைப் பொருள் இருப்பது குறித்து வருத்தமே! இருப்பினும் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்,தங்களின் நல்ல சிந்தனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete