Monday, April 18, 2016

மறுசந்திப்பு

அந்தப் பெண் எலியாவிடம், 'நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்' என்றார். (1 அர 17:24)

தன்னிடம் இருந்த ஒரு கையளவு மாவையும், சிறிதளவு எண்ணெயையும் வைத்து அப்பம் சுட்ட சாரிபாத்தின் வீட்டில் மாவுக்கும், எண்ணெய்க்கும் பஞ்சமே வரவில்லை.

ஆனால், இந்தக் கைம்பெண்ணுக்கு அடுத்த துன்பம் ஒன்று வருகின்றது. அவரது ஒரே மகன் இறந்துவிடுகிறான். தன் மகனைப் பறிகொடுத்த அவள் எலியாவிடம் அழுது புலம்புகிறாள். எலியா பையனைத் தூக்கிக்கொண்டு மாடி அறைக்குச் செல்கின்றார். 3000 வருடங்களுக்கு முன் கட்டிடங்கள் உள்ள வீடுகளில் மாடியறைகள் இருப்பது சாத்தியமா? ஒருவேளை இந்தக் கைம்பெண் மிக உயர்ந்த குடியைச் சார்ந்தவராக அல்லது பெரும் பணக்காரராக இருந்திருக்கலாம். அல்லது அந்த ஊரில் நிலவிய பஞ்சம் காரணமாக பணக்காரார்கள் அந்த ஊரை விட்டு வேறு நகருக்கு இடம்பெயர, இந்தப் பெண் அவர்களின் வீட்டை ஆக்கிரமித்திருக்கலாம். எது எப்படியோ, வீட்டில் ஒரு மாடி அறை இருக்கின்றது.

'மாடிக்கு ஏறிச்செல்லுதலை' ஒரு உருவகமாகவும் பார்க்கலாம். மலைக்கு ஏறிச் செல்வது என்பது இறை அனுபவமாக விவிலியத்திலும், சைவ மரபிலும் பார்க்கப்படுகிறது. பத்துக் கட்டளைகளைக் பெறுவதற்கும், உடன்படிக்கை செய்வதற்கும் மோசே மலைக்கு ஏறிச் செல்கின்றார். போதிப்பதற்கும், உருமாறுவதற்கும் இயேசு மலை மேல் ஏறிச் செல்கின்றார். இன்றும் நம் இந்து சகோதரர்கள் பழனி மலை, திருப்பரங்குன்றம் மலை, அழகர்கோயில் மலை என ஏறிச்சென்று முருகனை வழிபடுகின்றனர். மலை ஆன்மீக அனுபவத்தில் முக்கியமாக இருக்க ஒரே காரணம் இதுதான்: 'அதன் மேல் ஏறிச்சென்றால் நமக்கு எல்லாம் சிறியதாகத் தெரிகிறது.' நாம் கீழிருந்து பார்த்தபோது இரசித்து வியக்கும் பிரமாண்டமான கட்டிடங்கள், வாகனங்கள், கோபுரங்கள், நபர்கள் எல்லாம் வெறும் எறும்பு போல சின்னதாகத் தெரிகின்றனர். நாம் சம்பாதித்துக் கட்டிய பெரிய வீடு கூடு சிறிய புள்ளியாகத் தெரியும். மேலும், உலகம் இன்னும் அகலாகவும், பெரியதாகவும் இருப்பதாக நமக்குக் காட்டுவது மலைகள்தாம்.

மாடி அறைக்குப் பையனைத் தூக்கிச் செல்லுதல், எலியாவுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்பிக்கின்றது. இறப்பின் வலி உணர்கின்றார் அவர். தனக்கு உயிர் கொடுத்த பெண்ணின் மகனுக்கு தன்னால் உயிர் கொடுக்க முடியவில்லையே என்ற கையறுநிலையில் இறைவனிடம் முறையிட, இறைவனும் அந்தப் பையனை உயிர்ப்பிக்கின்றார்.

'நம் வாழ்க்கையில் துன்பம் வரும்போதெல்லாம், 'இது எதற்காக?' 'எனக்கு மட்டும் ஏன் துன்பம்?' என அழுது புலம்புகின்றோம். ஆனால் அந்தத் துன்பம் மறைந்தபின்தான் அந்தத் துன்பத்தின் பொருள் நமக்குப் புரிகிறது' என்கிறார் பவுலோ கோயலோ.

தன் மகனை இழந்த துன்பம் அந்தப் பெண்ணுக்கு உண்மையான கடவுளை அடையாளம் காட்டுகிறது. உண்மையான கடவுளை அவர் அடையாளம் காண்பதற்காகத்தான் அந்தத் துன்பத்தை அவர் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

எலியா - சாரிபாத்து கைம்பெண் கதையை 'ஐந்தாம் மலை' என்ற தன் நாவலில் மிக அழகாகப் பதிவு செய்கிறார் பவுலோ கோயலோ. சாரிபாத்து என்ற நகரை அக்பர் என்று சொல்லும் அவர், பாகால் வழிபாட்டைப் பற்றி எதுவும் சொல்லாமல், அசீரியர்களின் அச்சுறுத்தல் மற்றும் போரைப் பின்புலமாக வைக்கின்றார்.

அந்த நாவலில் ஒரு நிகழ்வு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நாம் பிறந்தவுடன் நமக்குப் பெற்றோர்கள் பெயர் கொடுக்கிறார்கள். மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்யவும், அடையாளப்படுத்தவும் இந்தப் பெயரைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நமக்கு நாமே ஒரு பெயரைக் கொடுத்துக்கொண்டு அதன்படி வாழ வேண்டும் என்கிறார் கோயலோ. புதிய பெயரை நாம் கொடுப்பது புதிய வாழ்க்கையைத் தொடர உதவும். இந்தப் பெயரிடுதல் பற்றிய நிகழ்வை இங்கே தமிழில் மொழிபெயர்க்கிறேன்:

'துன்பங்கள் நடக்கும். நமக்கு வரும். நாம் அவற்றுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். அல்லது அவற்றுக்குக் காரணம் அடுத்தவர்கள்தாம் என்று சொல்வோம். அல்லது துன்பங்கள் இல்லாம் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்வோம். ஆனால் இவை முக்கியமல்ல. துன்பங்கள் வந்துவிட்டன. அவ்வளவுதான். அவைகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் நம்முள் எழுப்பிய பய உணர்வை ஓருங்கட்டிவிட்டு, புதிதாக நம் வாழ்க்கையைக் கட்டத் தொடங்க வேண்டும்.

'நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒரு புதிய பெயரைக் கொடுத்துக் கொள்ளுங்கள். இப்போதிருந்தே கொடுங்கள். நீங்கள் இதுவரை நினைத்ததையும், கண்ட கனவுகளையும், மேற்கொள்ளும் போரட்டங்களையும் பிரதிபலிக்கும் தூய பெயராக அது இருக்க வேண்டும். என் பெயர் 'விடுதலை.'

அந்த நகரம் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தது. எலியாவைத் தன் வீட்டில் வரவேற்ற அந்தக் கைம்பெண் எழுந்தாள். 'என் பெயர் மறுசந்திப்பு' என்றாள்.

'என் பெயர் ஞானம்' என்றார் ஒரு வயதானவர்.

'என் பெயர் ஆல்ஃபாபெட்' என்று குதித்தான் கைம்பெண்ணின் மகன்.

சுற்றியிருந்தவர்கள் சிரித்தார்கள். 'ஆல்ஃபாபெட் என்று யாராவது பெயர் வைப்பார்களா?' என்று கூட்டத்திலிருந்து கத்தினான் ஒரு சிறுவன்.

எலியா ஒன்றும் சொல்லவில்லை. அந்த மகன் எப்படி தன்னையே தற்காத்துக்கொள்ள கற்றுக்கொள்கிறான் என்று பார்க்க மௌனமாக இருந்தார்.

'என் அம்மா கற்றுக்கொடுத்தவை தான் ஆல்ஃபாபெட். எழுதப்பட்ட எந்த எழுத்துக்களைக் கண்டாலும் நான் அவளை நினைவு கொள்வேன்' என்றான் மகன்.

2 comments:

  1. சாரிபாத் கைம்பெண்- எலியா நிகழ்வு இன்றும் தொடர்கிறது.தனக்கு உயிர் கொடுத்த பெண்ணின் மகனுக்குத் தன்னால் உதவ முடியவில்லையே எனும் எலியாவின் புலம்பல் நம்மைச்சுற்றி இருப்பவரின் வலியை நமதாகப் பார்க்கும் பொழுது இறைவனும் நமக்கு இரங்குகிறார் என்பதைக் காட்டுகிறது.மாடி,மலை இவைகளுக்கு நாம் ஏறிச்செல்கையில் நாம் பிரமாண்டமென நினைத்தவை வெறும் புள்ளிகளே என உணரும்போது இந்தப் பொருட்களின் ' அநித்தியம்' மட்டுமே நம் கண்களுக்குப் புலப்படுகிறது.மற்றும் தந்தை பவுலோ கோயலோ அவர்களின் 'ஐந்தாம் நிலை' நாவல் பற்றிக் குறிப்பிடுகையில் நாம் நம் பெற்றோரிடமிருந்து பெற்ற மரபணுக்களின் மூலம் பெற்ற முகவரியைத் தாண்டி 'இதுதான் நான்' என்று நமக்கு நாமே ஒரு முகவரியைத் தேடிக்கொள்ள வேண்டும் எனும் குறிப்பு அழகு என்றால் " என் அம்மா கற்றுக்கொடுத்தவைதான் ஆல்ஃப்பெட்.எழுதப்பட்ட எந்த எழுத்துக்களைக் கண்டாலும் நான் அவளை நினைவு கொள்வேன்" எனக்கூறும் கைம்பெண்ணின் மகன் தன் தாயின் முகவரிதான் தனதும் கூட என்று கூறாமல் கூறுமிடம் அதைவிட அழகு. நல்ல பல தாக்கங்களை ஏற்படுத்தும் செய்திகளைக் கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!!!
    ..........................................
    நாளை தன் "குருத்துவ அருட்பொழிவின்" ஏழாம் ஆண்டை நினைவு கூறவிருக்கும் அன்புத்தந்தைக்கும்,அவரின் நண்பர்கள் அருட்பணியாளர்கள் இஞ்ஞாசி,ப்ரின்ஸ்,வரன்,லாரன்ஸ்,மதன்பாபு,திருத்துவராஜ் மற்றும் எனக்கு அறிமுகமில்லாத,பெயர் தெரியாத மற்ற அருட்பணியாளர்களுக்கும் இந்தப்பதிவால் பயனுறும் அனைத்து வாசகர்களுடன் சேர்ந்து என் வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன். உங்களை இந்த மேலான நிலைக்கு அழைத்து வந்த இறைவன் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கரம் பிடித்து வழி நடத்தியதுபோல்,வரப்போகும் நாட்களிலும் வழிநடத்தவும்,தாங்கள் அனைவரும் உலகிற்கு ஒளியாகவும்,உப்பாகவும்,உதவும் கரங்களாகவும்,தங்களின் மந்தைகளின் ஆடுகளை ஏற்றிவிடும் ஏணியாகவும் இருந்து செயல்பட இறைவன் துணை நிற்க வேண்டுமெனவும் இறைஞ்சுகிறேன்.தங்களுக்குத் தேவையான உடல்,உள்ள சுகம் தந்து இறைவன் தங்களை நலன்களாலும்,வளங்களாலும் நிரப்ப வேண்டுகிறேன். அன்புடன்......ஆசீருடன்...

    ReplyDelete
  2. GITA - NEW YORK.

    Dear Fr Y K:

    Thanks for your sumptuous supply of tasteful "manna" daily along these columns.

    I understand that 19th of April is your 7th Anniversary of priestly ordination.

    Mary joins me in wishing you an abundant bouquet of God's blessings.

    I am not competent to write in a manner another writer of response here masterfully crafts her appreciation for you.

    Presuming her generous permission, I am going to borrow her words to send you my greetings:

    "நாளை தன் "குருத்துவ அருட்பொழிவின்" ஏழாம் ஆண்டை நினைவு கூறவிருக்கும் அன்புத்தந்தைக்கும்,அவரின் நண்பர்கள் அருட்பணியாளர்கள் இஞ்ஞாசி,ப்ரின்ஸ்,வரன்,லாரன்ஸ்,மதன்பாபு,திருத்துவராஜ் மற்றும் எனக்கு அறிமுகமில்லாத,பெயர் தெரியாத மற்ற அருட்பணியாளர்களுக்கும் இந்தப்பதிவால் பயனுறும் அனைத்து வாசகர்களுடன் சேர்ந்து என் வாழ்த்துக்களையும்,வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன். உங்களை இந்த மேலான நிலைக்கு அழைத்து வந்த இறைவன் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கரம் பிடித்து வழி நடத்தியதுபோல்,வரப்போகும் நாட்களிலும் வழிநடத்தவும்,தாங்கள் அனைவரும் உலகிற்கு ஒளியாகவும்,உப்பாகவும்,உதவும் கரங்களாகவும்,தங்களின் மந்தைகளின் ஆடுகளை ஏற்றிவிடும் ஏணியாகவும் இருந்து செயல்பட இறைவன் துணை நிற்க வேண்டுமெனவும் இறைஞ்சுகிறேன்.தங்களுக்குத் தேவையான உடல்,உள்ள சுகம் தந்து இறைவன் தங்களை நலன்களாலும்,வளங்களாலும் நிரப்ப வேண்டுகிறேன். அன்புடன்......ஆசீருடன்...

    ReplyDelete