Friday, April 22, 2016

சூனேம் நாட்டுப் பெண்

அவர் தம் கணவனை நோக்கி, 'நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல்தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்குக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார் படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும்' என்றார். (2 அர 4:9-10)

முன் பதிவில் ஏழைக் கைம்பெண் ஒருவர் எலிசாவைச் சந்திக்கிறார்.

இன்று சூனேம் நாட்டுப் பெண் ஒருவர் அவரைச் சந்திக்கின்றார். இவர் பணம் படைத்தவர் (2 அர 4:8). 'என்னோடு உணவு உண்ணும்!' என வற்புறுத்துகின்றார். எலிசாவும் அவரோடு சென்று உணவருந்துகின்றார். அவர் உணவருந்திப் போன பின் அவரின் கணவனுக்கும் அவருக்கும் நடந்த உரையாடலைத்தான் மேலே வாசிக்கின்றோம்.

இவருக்கு எல்லாம் இருந்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாத குறை ஒன்று இருக்க, அந்தக் குறையும் நீங்கும் என வாக்குறுதி தருகிறார் எலிசா. அப்படியே குழந்தையும் பிறக்கிறது. குழந்தை வளர்ந்து சிறுவனானபோது வெயில் தாக்கி இறந்துவிடுகிறது. இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுக்கின்றார் எலிசா.

இந்தப் பெண்ணிடம் நான் வியக்கும் பண்புகள் மூன்று:

அ. அவரின் விருந்தோம்பலும், தாராள உள்ளமும். இந்த ஊருக்கு வந்திருப்பவர் யாரோ? என்று ஒதுங்கிவிடாமல், அல்லது கண்டுகொள்ளாமல் இல்லாமல், தன் வீட்டிற்கு உணவருந்த அழைக்கிறார். இயேசுவின் பணியின்போதும், நிறைய நேரங்களில் பெண்கள்தாம் அவரின் தேவைகளைக் கவனித்துக் கொண்டதாக லூக்கா நற்செய்தியாளர் எழுதுகிறார்.

ஆ. புத்திசாலித்தனம். 'இவர் புனிதர்போலத் தெரிகிறது!' என்கிறார் பெண். ஒரு ஆளைக் கண்டவுடன் அவரை மதிப்பிடக் கூடியவர்கள் பெண்கள். இதுதான் அவர்களின் 'ஏழாம் அறிவு.'

இ. நல்ல மனைவி. தான் விரும்பியதைச் செய்ய தன் கணவனின் அனுமதி கேட்கின்றாள். தனக்குப் பிடித்தது தன் கணவனுக்கும் பிடிக்க வேண்டும் என விரும்புகிறாள். மேலும், 'படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு' என இறைவாக்கினரின் தேவைகள் அனைத்தையும் தானே முன்கூட்டி அறிந்து அவற்றை நிறைவேற்ற விழைகின்றார்.


1 comment:

  1. " நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய" நம்மைப்பணிக்கிறது திருச்சபை.நம் பணித்தளங்களுக்கு வரும் அருட்பணியாளர்களை மட்டுமின்றி,இறைவனின் அடியார்கள் யாராக இருப்பினும், அவர்கள் தேவையில் இருக்கையில் நாம் அவர்களுக்குச் செய்வது ' உதவி ' அல்ல; நம் 'கடமை'அவர்கள்நம்மிடமிருந்து சென்றுவிட்டவர்கள் எனினும் நம்மிடையே வாழ்பவர்கள்; நமக்காக வாழ்பவர்கள். இந்த உண்மை ஒருபுறமிருப்பினும்,இன்றைய நம் பங்குகளில் உள்ள பிரச்சனைகள் பல நேரங்களில் நம்மை ஒதுங்கி வாழச் சொல்வதும் இன்றைய நடைமுறையில் நடப்பதுதான்.ஆனாலும் இப்படிப்பட்ட நேரங்கள் எப்பவோ சில சமயங்கள் வருபவை தான்.இன்றைய சூனேம் நாட்டுப்பெண்ணிடம் தந்தை கண்டு வியப்பதாகக் கூறும் விருந்தோம்பல்,தாராள உள்ளம்,புத்திசாலித்தனம்,கணவனிடம் பகிர்தல் .....இவை எந்தப் பெண்ணுக்குமே தேவைதான்.நம் குலப் பெண்கள் பல பேரிடம் காணப்படுபவைதான் என எண்ணும்போது நமக்கும் பெருமைதான்.பெண்ணின் மேட்டிமைக்கு ' சல்யூட்' அடித்திருக்கும் தந்தைக்கு என் ' சல்யூட்'டும் கூட!!!

    ReplyDelete