Friday, April 1, 2016

தெபோரா

'தெபோரா' என்றால் 'தேனீ' என்பது பொருள். இவர் ஒரு பெண் இறைவாக்கினர். முதல் ஏற்பாட்டில் இவரைத் தவிர்த்து நான்கு பெண் இறைவாக்கினர்கள் உள்ளனர் - மிரியம் (மீக் 6:4), குல்தா (2 அரச 14:22), நொவாதியா (நெகே 6:14), மற்றும் எசாயாவின் மனைவி (எசா 8:3).

இவரை 'இஸ்ரயேலின் இறைவாக்கினர்,' 'லப்பிதோத்தின் மனைவி,' மற்றும் 'நீதித்தலைவி' என அறிமுகம் செய்கிறது நீத 4:4. 'லப்பிதோத்து' என்றால் 'தீப்பந்தங்கள்' என்று பொருள்.

நீதித்தலைவர்கள் வழக்கமாக எதிரிகளைப் போரிட்டு அழிக்கக் கூடியவராக இருக்கின்றனர். ஆனால் தெபோரா ஒருவர் மட்டும்தான் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே எதிரிகளை அழிக்கின்றார்.

'எப்ராயிம் மலைநாட்டில் இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் 'தெபோராப் பேரீச்சை' என்ற மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். தீர்ப்பு பெறுவதற்காக இஸ்ரயேலர் அவரிடம் செல்வர்.'

கல் மற்றும் மரங்களை வைத்துத்தான் இடங்கள் அறியப்பட்டன. தெபோரா உட்கார்ந்திருந்ததால் அந்த இடத்திற்கு அவரின் பெயரே வழங்கலாயிற்று. 'போதி மரம்' போல. 'போதி' மரம் என்று ஒன்றும் கிடையாது. அந்த மரத்தின் கீழ் சித்தார்த்தர் அமர்ந்து 'புத்த' நிலை அல்லது 'போதி'நிலை அடைந்ததால் அந்த மரம் 'போதி மரம்' என அழைக்கப்படுகின்றது.

தெபோரா குறிசொல்பவராகவும், வழக்குகளைத் தீர்த்து வைக்கும் ஞானம் பெற்றவராகவும் இருக்கிறார்.

மேலும், யாபினின் படைத்தலைவன் சீசரா இஸ்ரயேலுக்கு அச்சுறுத்தலாய் இருந்தபோது, அவனை அழிப்பதற்காக 'பாராக்கு' என்ற இளைஞனைத் தேடி அனுப்புகிறார் தெபோரா.

'நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன்.
நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்.' என தயக்கம் காட்டுகிறார் பாராக்கு.

'நான் உம்மிடம் வருவேன்' என்று சொல்லி தானும் உடன் செல்கின்றார்.

ஆண்களால் ஒரு வேலை செய்யப்பட முடியாதபோதுதான், அந்த வேலையை பெண்களுக்குத் தருகிறார் முதல் ஏற்பாட்டுக் கடவுள்.

பாராக்கு படைவீரன்போலத் தோன்றினாலும், அவர் செய்ததெல்லாம் ஆட்களை விரட்டிக் கொண்டு ஓடியது மட்டுமே. வேறு ஒன்றும் அவருக்குத் தெரியாது.

அந்த நேரத்தில் உடனிருப்பாக இருக்கின்றார் தெபோரா.

தெபோரா - உடனிருப்பு.

1 comment:

  1. நேற்று 'அக்சா'; இன்று ' தெபோரா'. பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் முதல் ஏற்பாட்டுக் காரிகைகளை ஒவ்வொருவராகக் களமிறக்குகிறார் தந்தை.தேனீயின் சுறுசுறுப்பைக் கொண்ட இன்றைய இறை வாக்கினர் தேபோரா சகலத்திலும் ஆண்களுக்கும் மேலாக வல்லமை பெற்றவர் எனவும்,உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே எதிரிகளை அழிக்கவல்ல சக்தி படைத்தவர் எனவும் சொல்கிறது " நீதித் தலைவர்கள்" நூல். தன் எதிரியான சீசரா என்னும் படைத்தலைவனை அழிக்க பராக்கு எனும் இளைஞனை அனுப்புகையில் " நீர் என்னுடன் வந்தால் மட்டுமே நான் செல்வேன்" என்று கூற அவரும் இணங்கி அந்த இளைஞனோடு செல்கிறாள்......அவருக்கு உடனிருப்பாக! நம் வாழ்க்கையிலும் நம் உடனிருப்பை எதிர்பார்த்துக் காத்திருப்போருக்கு அதைத் தருகிறோமா இல்லை மறுக்கிறோமா....சிந்திப்போம்.நம்முடைய நல்லது,கெட்டது அனைத்திலும் நம் உடன் வருபவர்களை ....நம் ' உடனிருப்புக்களை'்நாம் இனம் கண்டு
    கொள்கிறோமா? அவர்களுக்காக இன்று இறைவனிடம் ' நன்றி' எனும் ஒரு வார்த்தை சொல்வோம்." ஆண்களால் ஒரு வேலையைச் செய்ய முடியாத போதுதான், அந்த வேலையைப் பெண்களுக்குத் தருகிறார் முதல் ஏற்பாட்டுக் கடவுள்"... ஆணுக்குப் பெண் இணை என்பதையும் தாண்டி ஆணையும் பல சமயங்களில் பெண் மிஞ்சி நிற்கிறாள் என்று சொல்லாமல் சொல்லும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete