Saturday, April 16, 2016

இரண்டு விலைமாதர்கள்

அப்பொழுது அரசர், 'என்ன இது? ஒருத்தி, உயிரோடு இருக்கிற இவன் என் மகன். செத்துவிட்டவன் உன் மகன்' என்கிறாள். மற்றவளோ, 'இல்லை! செத்துவிட்டவன் உன் மகன். உயிரோடு இருக்கிறவன் என் மகன்' என்கிறாள்' என்றார். பின்னர் அரசர், 'ஒரு வாளைக் கொண்டு வாருங்கள்' என்றார். (காண். 1 அர 3:16-28)

இன்று காலை டீ குடிக்க ஒரு கடைக்குச் சென்றிருந்தபோது, எங்கள் ஆலயத்தின் வெளியே நின்று உதவி கேட்கும் ருமேனியப் பெண் ஒருத்தி தன் கைக்குழந்தையுடன் கடைக்கு வந்தாள். தான் காலையில் பெற்ற நாணயங்களை அப்படியே பரப்பி எண்ணினாள். 90 சென்ட் வந்தது. அதை அப்படியே கொடுத்து ஒரு 'கொர்னெத்தோ' வாங்கித் தன் கைக்குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு, 'கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்!' என்று குழாய்த்தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, அடுத்த திருப்பலிக்கு மக்கள் வருவதற்குமுன் சென்றுவிடவேண்டும் என்று ஆலயத்தை நோக்கி நடந்தாள்.

தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் தன் குழந்தைக்குக் கொடுத்துவிட்டு, தான் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வயிற்றை நிறைத்துக் கொண்ட, அந்த அனாமிகாவின் தாய்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

சாலமோன் அரசர் ஞானம் பெற்றவுடன், அந்த ஞானம் எப்படிப்பட்டது என்பதை வாசகர்களுக்குக் காட்ட ஒரு நிகழ்வை பதிவு செய்கின்றார் ஆசிரியர். சின்ன வயதில் பார்த்த பள்ளி நாடகம் இது.

இரண்டு பெண்கள். ஒரு குழந்தை.

இரண்டு பேரும் விலைமாதர்கள் என்று சொல்கின்றார் ஆசிரியர். இங்கேதான் ஆசிரியரின் உச்சகட்ட கற்பனை இருக்கிறது. அதாவது, தான் ஒரு விலைமாதாக இருந்து, 'யாருக்கோ' பெற்றெடுத்த பிள்ளை என்றாலும், தாய்க்கு தன் பிள்ளை தன் பிள்ளைதான். தன் பிள்ளையின் நதி மூலம், ரிசி மூலத்தை தாய் ஆராய்வதில்லை.

இந்த இரண்டு பெண்களுக்கும் இரண்டு பெயர்கள் கொடுத்து கதையை இலகுவாக்கியிருக்கலாம் ஆசிரியர். ஆனால், கதையே ஒரு டெஸ்ட் என்பதால், பெயர்களையும் விட்டுவிடுகின்றார். எபிரேயத்தில் இதை வாசித்தால், யார் குழந்தையின் தாய் என்பதைக் கண்டுபிடிப்பது இன்னும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

முதலாமவள் - இரண்டாமவள் என்னும் இரண்டுபேர்.

முதலாமவள்தான் உண்மையான தாய்.

இருவரும் மூன்று நாட்கள் இடைவெளியில் குழந்தை பெற்றெடுக்கின்றனர். இரண்டாமவள் தூக்கத்தில் தன் குழந்தையின்மேல் புரண்டு படுக்க அது இறந்துவிடுகிறது. கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா என்றால் இங்கே குழந்தை செத்தேவிட்டது. விடிந்து பார்க்கிறாள். தன் குழந்தை இறந்துவிட்டது. தூங்கிக்கொண்டிருந்தவளின் குழந்தையைத் தான் எடுத்து வைத்துக்கொண்டு, 'இது என் குழந்தை' என்கிறாள்.

உண்மையான தாய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

வழியெங்கும் நிறைய வாதாடியிருப்பாள். ஆனால் பாவம் அந்த வாதம் ஜெயிக்கவில்லை.

வாதம் அரசனின் அரண்மனைக்கு வருகிறது. இந்தச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அரசனுக்கு எப்படி நேரம் இருந்தது என்றும் தெரியவில்லை.

'இது என் குழந்தை' என இரண்டாமவளும்,

'இது என் குழந்தை' என முதலாமவளும் வாதிடுகின்றன.

'என்னடா இது நமக்கு வந்த சோதனை! ஒரு வாளைக் கொண்டு வாங்க! ஆளுக்குப் பாதி வெட்டிக் கொடுத்துவிடுவோம்!' என்கிறார் சாலமோன்.

'இதுதான் ஞானமா?' 'இதுதான் அறிவா?' என்று வாசகர் இங்கே வியக்கும்நேரம்தான் அந்த டுவிஸ்ட் வருகிறது.

தன் குழந்தை தன் கண்முன் அறுக்கப்படுவதைக் காணச் சகியாத முதலாமவள், 'குழந்தையை அவளிடமே கொடுத்துவிடுங்கள்' என்று அழுது வேண்டுகிறாள். மற்றவளோ, 'பாதிப்பாதி கொடுங்கள்' என்கிறாள். 'எனக்கும் வேண்டாம் உனக்கும் வேண்டாம்' என இருக்கிறாள் இரண்டாமவள்.

'முதல் பெண்ணிடம் குழந்தையைக் கொடுங்கள்! அவள்தான் குழந்தையின் தாய்!' என தீர்ப்பு வழங்குகின்றார் ராசா.

தான் இழக்க வேண்டிய நிலை வந்தாலும், அந்தக் குழந்தை உயிரை இழக்கக் கூடாது என்று குழந்தைக்காக விட்டுக்கொடுக்கும் இந்த முதலாமவள் நம் தாய்மார்களை நமக்கு நினைவூட்டுகிறாள்.


1 comment:

  1. நாம் பள்ளிப்பருவத்தில் நாடகமாகப் பார்த்ததை,ஆலயத்தில் மறையுரையாகக் கேட்டதை,புத்தகங்களில் கதையாக வாசித்த ஒரு சம்பவத்தைத் தந்தை தனக்கே உரித்தான சுவாரஸ்யத்தோடு இங்கே கொடுத்துள்ளார்.இங்கே போற்றப்பட வேண்டியது சாலமோனின் ஞானமா இல்லைத் தாய்மையின் வலியா என்று குழம்பும் அளவுக்கு நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.சம்பந்தப்பட்ட இரு பெண்களும் விலைமாதர்களாக இருப்பினும்கூட அவர்கள் கைகளில் ஏந்திக்கொண்டிருக்கும் சிசுக்கள் அவர்கள் உதரத்திலிருந்து வந்தவர்கள் என்பது உறுதியானபிறகு அவர்கள் நதிமூலம் பார்க்க வேண்டிய அவசியமில்லை தான்.ஆனால் இங்கு இரண்டாமவளின் குழந்தை இறந்துபோக அவளின் மனசாட்சியும் சேர்ந்தே மடிந்து விடுகிறது.சாலமோனின் 'ஞானம்' கைகொடுப்பது முதலாமவளுக்கு.தான் இழக்கவேண்டிய நிலை வரினும் தன் குழந்தை உயிரை இழக்கக்கூடாது என்றெண்ணும் முதலாமவளும்,தனக்குக் கிடைக்காதது அடுத்தவளுக்கும் கிடைக்கக்கூடாது என எண்ணும் இரண்டாமவளும்.....இருவருமே பெண்கள் தான்.ஆனால் முந்தையவள் சட்டியிலிருக்கும் இறுதிப் பருக்கையையும் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு வெறும் தண்ணீரால் தன் வயிற்றைக்கழுவும் 'தாய்மை'யின் இலக்கணமாகத் தெரிகிறாள்.இந்த பூமி இன்னும் இயங்கிக்கொண்டிருப்பது இப்பேர்ப்பட்டவர்களால் தான்.இப்படிப்பட்ட ' புனிதை'கள் நம் தாய்மார்களையும் நினைவூட்டுவது நமக்குப்பெருமைதரும் விஷயமே! சாலமோனின் 'ஞானத்திற்கும்,நம் பெண்களின் தாய்மை உணர்ச்சிக்கும், தந்தையின் ஒரு அழகான படைப்பிற்கும் சேர்த்தே ஒரு 'சல்யூட்!'.

    ReplyDelete