Tuesday, April 19, 2016

ஏழு ஆண்டுகள் ஏழு பாடங்கள்

'அவரோடு' (மாற்கு 3:14) என்ற விருதுவாக்கோடு, நான் (என் உடன் அருட்பணியாளர்கள் 7 பேரோடு) அடியெடுத்து வைத்த அருள்பணிநிலைப் பயணத்தின் ஏழாவது மைல்கல்லை இன்று கடக்கின்றேன். 'அவரோடு,' 'இவரோடு' என பயணம் இனிதாகவே அமைந்தது.

இந்தப் பயணத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட ஏழு பாடங்களை இன்று உங்களோடு பகிர்கின்றேன்.

1. 'உன் வார்த்தையை நீ மதி!' (Honour your word!)

ஆறு வருடங்களுக்கு முன் நான் எல்லீஸ் நகர் பங்குத்தளத்தில் இருந்தபோது, ஒரு சகோதரி தன் மகளின் பிறந்தநாள் அன்று ஆலயத்திற்கு அவளைக் கொண்டு வந்திருந்தார். நான் என் அலைபேசியில் அவளை ஃபோட்டோ எடுத்தேன். 'எனக்கு இதை அனுப்பி வையுங்கள்' என்றாள் அந்த சகோதரி. நான் 'சரி' என்றேன். ஆனால், மறந்துவிட்டேன். பின் நிறைய அலைபேசிகள் மாற்றியாயிற்று. நான்கு மாதங்களுக்கு முன் நான் எல்லீஸ் நகர் சென்றபோது, 'ஃபோட்டோ எப்போ அனுப்புவீங்க?' எனக் கேட்டார் அந்த சகோதரி. இதுபோல, ஞானாவில் நான் சார்லஸின் அம்மாவிடம், 'அக்கா, உங்க வீட்டுக்கு வர்றேன்!' என்று சொன்னேன். ஆனால், இன்னும் போகவில்லை. அவர்களை எங்கே பார்த்தாலும் என் மனம் குறுகுறுக்கின்றது. சின்ன விஷயங்கள்தாம். ஆனால், சின்ன விஷயங்கள்தானே பெரியவற்றை தீர்மானிக்கின்றன. இறைவன்முன் நான் கொடுத்த வாக்குறுதி - கட்டளை செபம், இறைவார்த்தையின்படி ஒழுகுதல், மணத்துறவு, வழிபாடுகளை உகந்த முறையில் நிறைவேற்றுதல், கிறிஸ்துவை ஒத்திருத்தல், நான் எனக்கு நானே கொடுத்த வார்த்தைகள், நான் பிறருக்குக் கொடுத்த வார்த்தைகள் அனைத்தையும் நான் மதிக்க வேண்டும். அந்த வார்த்தையை வெறும் காற்றாக்கிவிடல் கூடாது.

2. 'நீ என்ன செய்தாய் என்பதற்காகவோ, என்ன திறமை உன்னிடம் இருந்தது என்பதற்காகவோ அல்ல. மாறாக, நீ என்னவாக இருந்தாய் என்பதற்காகத்தான் நினைக்கப்படுவாய்.' (You are remembered not for what you do or what you have, but for what you are)

இன்று ஒரு பணித்தளத்தில் நான் செய்யும் வீடு சந்திப்பு, அன்பிய சந்திப்பு, இளைஞர் இயக்கக் கூட்டம், நற்கருணை வழங்குதல் போன்றவற்றை, எனக்குப் பின் வரும் அருட்பணியாளர் என்னைவிடச் சிறப்பாகச் செய்வார். அல்லது என்னிடம் இருக்கும் பாடும் திறன், மறையுரைத் திறன், கணிணித் திறன், நிர்வாகத் திறன் எனக்குப் பின்வருபவரிடம் இன்னும் கூடுதலாக இருக்கும். இன்று கோஹ்லி 110 ரன் அடித்தால், நேற்று 100 ரன் அடித்த தோனியை நாம் மறந்துவிடுவது இல்லையா. அப்படித்தான். ஆனால், நான் என்னவாக - எளிமையாக, புன்னகையோடு, எல்லாரோடும் பழகுவராக போன்றவை - இருக்கிறேனோ, அதற்காகத்தான் என்னை மக்கள் நினைவுகூறுவார்கள். ஆக, என் செயல்களுக்கும், என் திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, நான் என் இருப்புக்கு, என் ஆளுமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

3. 'உறுதித்தன்மையை விட்டுவிடு!' (Let go off certainty)

மூன்றும், இரண்டும் ஐந்து என்பது போலவும், இரு மடங்கு ஹைட்ரஜனும், ஒரு மடங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் என்பது போல வாழ்க்கை எப்போதும் உறுதித்தன்மையோடு அறுதியிடக்கூடியது அல்ல. 'உறுதித்தன்மைக்கு' (certainty) எதிர்ப்பதம் 'உறுதியற்ற தன்மையல்ல' (uncertainty). மாறாக, ஆச்சர்யங்களுக்கு திறந்த மனத்தோடு இருத்தல். புனே பாப்பிறை பாசறையில் இறையியல் பயின்றபோது, இரண்டாம் ஆண்டு தொடங்கி, நான்காம் ஆண்டு முடிய, என் நண்பன் ஃபாத்திமாவும், நானும் தினமும் நூலகம், இணையம் என்று திரிந்து, மறையுரைக் கருத்துக்கள், நிறைய கருத்துரைகள், விவிலிய விளக்கங்கள், மென்பொருள்கள், குறுந்தகடுகள், காணொளிகள் என ஏறக்குறைய இரண்டு பெட்டிகளுக்குச் சேகரித்தோம். 'நல்ல அருள்பணியாளராக நாளை இருக்க வேண்டும்!' என்ற எண்ணத்தில் அப்படித் தயாரித்தோம். தூக்கம் மறந்தோம். உணவு மறந்தோம். சுற்றுலா மறந்தோம். 'நாளை என்ன செய்வது?' என்ற கவலைதான் இருந்தது. ஆனால், அருள்பொழிவு செய்யப்பட்ட பிறகு, அவன் ஆசிரியராக பள்ளியிலும், நான் உதவி அருட்பணியாளராக எல்லீஸ் நகரிலும் நியமிக்கப்பட்டோம். நாங்கள் தேடிச் சேகரித்த அந்த இரண்டு பெட்டிகளின் தரவுகளை நாங்கள் இன்றுவரை திறந்து பார்க்கவே இல்லை. இப்போது திரும்பிப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. பொருள், நேரம், ஆற்றல் விரயம் ஒரு பக்கம். இதைவிட மோசம், நாங்கள் எங்களின் 'நாளைக்காக' தேடிக்கொண்டிருந்ததால், எங்களின் 'இன்றை' அனுபவிக்க மறந்துவிட்டோம். எங்கள் வகுப்புத் தோழர்களுக்கு நாங்கள் அந்நியமானோம். இறையியலையும் ஏனோதானோவென்று படித்தோம். ஆக, இது படித்தால் நான் அதைச் செய்யலாம், இன்று இப்படி இருந்தால் நாளை அப்படி இருக்கலாம் என்ற எனக்கு நானே உறுதித்தன்மை கொடுப்பதை விட வேண்டும். நாளை கொண்டுவரும் ஆச்சர்யத்திற்கு மனம் திறந்து காத்திருக்க வேண்டும்.

4. 'உன் வாழ்வின் புதிய தமதிருத்தவம்: குடும்பம், உடன்பணியாளர்கள், இறையரசு உறவுகள்.' (Your New Trinity: Family, Fellow Priests, and Friends)

நீ குருமடத்திற்குச் செல்லும் வரை உன் உடன் வந்தது உன் இரத்த உறவு. அதாவது, உன் குடும்பம். அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள். குருமடம் நுழைந்த முதல் நாள் அன்று இன்று வரை உடன் வருவது உன் உடன் அருட்பணியாளர்கள். குருமட பயிற்சி மற்றும் அருள்பணி வாழ்வில் நாம் சந்திக்கும் மற்ற எல்லா உறவுகளும் இறையரசு உறவுகள். இந்த மூன்றையும், அதாவது 'இரத்த உறவு,' 'உடனிருப்பு உறவு,' 'இறையரசு' உறவு, நான் தமதிருத்துவமாகப் பார்க்க வேண்டும்.  முதலாம் உறவில் சில நேரங்கில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும். இரண்டாம் உறவில் சில நேரங்களில் போட்டி, பொறாமை, மனத்தாங்கல், ஏமாற்றம் இருக்கும். மூன்றாவது உறவில் எதிர்ப்பார்ப்புக்களும், ஏமாற்றங்களும் இருந்தாலும், அவர்கள் வழியாகவே கடவுளின் அருட்கரம் அதிகம் வெளிப்படும். இந்த மூன்றையும் நான் மனப்பக்குவத்தோடு ஒருங்கிணைக்க வேண்டும். என் அருள்பணி வாழ்வில் என் அம்மாவுக்கு எந்த அளவிற்கு பங்கிருக்கிறதோ, அதே அளவு பங்களிப்பு என் நண்பர்கள், மற்றும் என் இறைரசு உறவுகள் வழியாகவும் இருக்கிறது. இவற்றில் ஒருவர் பங்கு பெரிது, மற்றவர் பங்கு சிறிது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், நான் அதிகமாக ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடும்போதுதான். இந்த மூன்றும் எனக்குக் கொடுக்கப்பட்டவை. கொடுக்கப்பட்ட கொடைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதில் மகிழ்ச்சி காண்பதே சால்பு.

5. 'இன்று எது உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது.' (What's yours today is someone else's tomorrow).

கீதையின் சாரம் இது என்றாலும், இதுவும் ஒரு வாழ்க்கைப்பாடமே. இன்று நான் இருக்கும் அறையில் நாளை வேறொருவர் இருப்பார். இன்று நான் திருப்பலி வைக்கும் பீடத்தில் நாளை வேறொருவர் வைப்பார். இன்று நான் பேசி மகிழ்வுறும் ஒரு நபரோடு, நாளை மற்றவர் பேசி மகிழ்வார். மூன்று ஆண்டுகள் மதுரையில் இருந்துவிட்டு, மேற்படிப்புக்காக உரோமைக்கு வந்தபோது, நான் நிறையவற்றை இழக்க வேண்டியிருந்தது. நான் வைத்திருந்த டிவி, புத்தகங்கள், கணிணி, அலைபேசி, மேசை, நாற்காலி, ஃப்ளாஸ்க் என எல்லாவற்றையும் நான் அடுத்தவருக்கு விட்டு வந்தேன். இதை நான் இழந்துவிட்டேன் என்ற வருத்தம் எனக்கு இல்லை. நாளை நான் மதுரைக்கு திரும்புகிறேன் என்றால், இங்கு பயன்படுத்தும் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் புறப்பட வேண்டும். இதுதான் எதார்த்தம். இது பொருள்களுக்கு மட்டுமல்ல. நான் செய்யும் வேலைகளுக்கும், நான் சம்பாதித்த உறவுகளுக்கும் பொருந்தும். இதைச் செய்ய நிறைய துணிச்சல் வேண்டும். 'நேற்று என்னுடன் பேசிய ஒரு நபர் இன்று எனக்கு அடுத்திருக்கும் பணியாளரோடு பேசுகிறார்' என்றோ, 'நேற்று நான் வெள்ளையடித்த ஒரு அறைக்கு இன்று அடுத்தவர் கலர் அடிக்கிறார்' என்றோ, 'நேற்று நான் நடந்து போன இடத்திற்கு இன்று அடுத்தவர் பைக்கில் போகிறார்' என்று கேள்விப்படும்போதும் மனதில் பொறாமை உணர்வும், சின்னக் கோபமும் தோன்றி மறையும். ஆனால், இந்தப் பொறாமையால், கோபத்தால் நான் என் மகிழ்ச்சியைத்தான் இழக்கிறேன். ஆக, நபரோ, பொருளோ, இடமோ, வேலையோ - இன்று எது என்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது.  இந்த பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லைதான். ஆனால், உரோமில் தனிமையில், பசியில், நண்பர்களுக்கு ஃபோன் அடிச்சு அவர்கள் எடுக்க முடியாத நிலையில், படிப்பு போரடித்து, இடங்கள் போரடித்து, செபமும் வெறுமையாகி, எல்லாம் இருளாகி இருக்கும் அந்த மாலை நேரங்களை நான் அனுபவித்த வெறுமை உணர்வு, என் வெற்றிடத்தை இறைவன் மட்டுமன்றி, வேறு எந்த நபரும், பொருளும், இடமும் நிரப்ப முடியாது எனக் கற்றுத்தந்தது.

6. 'உன் எல்லையை மீறாதே!' (Do not trespass!)

உன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணமோ, பொருளோ, அல்லது உனக்கு மேலிருக்கும் அருள்பணியாளரின் கட்டளையோ, உன் நண்பர்களிடம் நெருக்கமோ - எதுவானாலும், உன் எல்லையை மீறாதே.  இந்த எல்லைகளை மீறியதால் நான் நிறைய இழந்திருக்கிறேன். 'எனக்கு என் பாஸ் சாப்பாடு சரியாக போடுவதில்லை' என்று கோபத்தில் சில நேரங்களில் நான் என்னிடம் கொடுக்கப்படும் பணத்தை - 50அல்லது 100 ரூபாயை - நானே எனக்காகப் பயன்படுத்தியிருக்கிறேன். இந்தக் கோபத்தில் என் மனம் எனக்கு சப்பை கட்டுக் கட்டும். 'உனக்கு சோறு போடாமல் அவர் இருக்கிறார் அல்லவா! நீ இதை வைத்துச் சாப்பிட்டுக்கொள்!' என்று. ஆனால், இரண்டு மூன்று நாட்கள் கழித்து யோசித்தால் நான் செய்தது தவறு என்று தோன்றும். 'அவர் எனக்கு சோறு போடவில்லை என்பதற்காக நான் 100 ரூபாய் திருடுகிறேன் என்றால், அவர் எனக்கு விருந்து வைத்தால் நான் 100 ரூபாய் அவருக்கு கொடுக்கணும்தானே!' ஆனால் நான் அதைச் செய்வதில்லையே. அடுத்ததாக, பங்குப் பணிகளில் எல்லை மீறுதல். என்னுடன் இருக்கும் பணியாளரைவிட என்னால் நன்றாகச் செய்ய முடியும் என்பதற்காக, நானே அவருடைய இடத்தைப் பிடிக்க ஆர்வம் காட்டக்கூடாது. இது இன்னும் ஆழமாக, என் நட்பின் நெருக்கத்தில் நான் கடைப்பிடிக்க வேண்டும். என் பங்குத்தளத்தில் ஒரு அருள்சகோதரியோ, ஒரு இளவலோ என்னிடம் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் நெருக்கத்திற்குக் காரணம் என் அருள்பணிநிலைதானே தவிர, என் அழகோ, என் அறிவோ, என் படிப்போ, என் திறமையோ அல்ல. இவற்றால் அவர்கள் ஈர்க்கப்பெறலாம். ஆனால், இந்த உறவின் அடித்தளம் என் அருள்பணி நிலையே. நான் ஒரு மீட்டிங் என்று அழைத்தவுடன் தங்களின் மகளை ஒரு அம்மா அனுப்பி வைக்கிறார் என்றால், அவர் என் அருள்பணி நிலையை முன்னிட்டே அனுப்பி வைக்கிறார். ஆக, இந்த உறவுகளில் நான் முதலில் மட்டுமல்ல, எப்போதும் அருள்பணியாளர் என்றுதான் இருக்க வேண்டும். எல்லை மீறுதல் அறவே கூடாது. எல்லை மீறல்களும், பிறழ்வுகளும் கொஞ்ச நேர இன்பத்தைத் தரலாம். ஆனால், அவை ஏற்படுத்தும் கீறல்கள் காலத்தில் அழியாதவை.

7. 'உன் அழைத்தலில் தடுமாற்றம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது உன் முதலிரவை!' (When you have a crisis in your vocation, think of your first night)

முதலிரவா - ஆம். குருமடத்தில் சேர்ந்த முதலிரவு. 1994ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி நான் ஞானாவில் உள்ள ஆயத்தநிலை குருமடத்தில் சேர்ந்தேன். எல்லாமே புதிதாக இருந்தது. அழைத்தல் பற்றிய புரிதலே இல்லை. நாங்கள் 14 பேர். புதிய ஊர்கள். புதிய முகங்கள். அந்த இரவு எந்த நம்பிக்கையில் நான் தூங்கினேன்? எங்கள் 14 பேரையும் அன்று ஒன்றாக உண்ணவும், உறங்கவும் வைத்தது நாங்கள் ஒட்டுமொத்தமாகக் கண்ட அருள்பணி என்னும் கனவு. அந்தக் கனவு அருள்பணி நிலையை அடைந்தவுடன் முடிவது அல்ல. அது என்றும் தொடர்வது. அருள்பணி நிலை திருப்தியாக இல்லையா? அழைத்தலில் தடுமாற்றம் வருகிறதா? - உடனே நீ என்ன செய்ய வேண்டும்? 'செபம் செய்ய ஆலயத்திற்கு ஓடாதே!' 'ஆன்மீகக் குருவை நோக்கி ஓடாதே - அவருக்கு இதைவிட பெரிய வேலை ஏதாவது இருக்கலாம்!' 'உன் நண்பர்களுக்கு ஃபோன் செய்யாதே - அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம்!' 'உன் உடன் பணியாளர்களைத் தொடர்பு கொள்ளாதே - அவர்கள் அன்பிய மீட்டிங்கில் அல்லது அவசரமான நோயிற்பூசுதல் கொடுத்தலில் இருக்கலாம்.' 'அப்படியே உறைந்து போயிரு!' 'அமைதியாக இரு!' 'நீ முதல் நாள் கண்ட கனவை திரும்பக் காண்!' 'அன்று நீ அணிந்த அரைக்கால்சட்டை, தூசி படிந்த காலணிகள், ஒரு பட்டன் இல்லாத சட்டை, உன் அம்மா விட்டுச் சென்ற யோசனை' என எல்லாவற்றையும் நினைவுகூறு. உன் ஆயர் அல்லது உன் உடன்பணியாளர் அல்லது உன் பணித்தள மக்கள் மேல் நீ கொண்டிருக்கும் கோபமல்ல. அந்தக் கனவே உன்னை உன்னை அழைத்தலில் நிற்க வைக்கும். நீ இவர்களுக்காக வரவில்லை. உனக்காகவும், அவருக்காகவுமே வந்தாய்.

'அவரோடு' என் பயணம் தொடர எனக்காக செபியுங்கள். என்னை ஆசீர்வதியுங்கள்.

3 comments:

  1. இன்று தன் "குருத்துவ அருட்பொழிவின்" ஏழாம் ஆண்டை நினைவு கூறிய தந்தை தான் இத்தனை காலம் கடந்து வந்த அந்தப் பயணத்தை/ பாதையைத் திரும்பிப் பார்த்து அந்தப் பயணம் தனக்குக் கற்றுக் கொடுத்த ஏழு பாடங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.ஒரு வகையில் பார்த்தால் இது உலகிற்கு அவர் உரக்கச் சொல்லும் ஒரு 'ஆத்தும சோதனை.' இது யாருக்குமே அத்துணை எளிதல்ல; ஒரு அருட்பணியாளருக்கு இன்னுமே கடினம் தான்.ஆயினும் அவரது செயல் அவர் மனத்தின் எளிமையைக் காட்டுகிறது.அவர் பகிர்ந்து கொள்ளும் பல விஷயங்களில் என்னை வெகுவாக பாதித்தவை மூன்று....1.." நீ என்ன செய்தாய் என்பதற்காகவோ,என்ன திறமை உன்னிடம் இருந்தது என்பதற்காகவோ அல்ல,மாறாக நீ என்னவாக இருந்தாய் என்பதற்காகத்தான் நினைக்கப் படுவாய்" ஆம்.... ஒரு பொது நிலையினரின் நிலையிலிருந்து சொல்கிறேன்....சில அருட்பணியாளர்கள் பங்குதளத்திலிருந்து சென்று வருடங்கள் ஓடிவிடினும் அவர் திரும்ப வரமாட்டாரா என்று எண்ணுவதும்,இன்னொருவரை இவர் இங்கிருந்து என்று மாற்றப்படுவார் என மக்கள் நினைப்பதும் வாடிக்கையாகி விட்ட விஷயம்.2. "இன்று எது என்னுடையதோ,அது நாளைக்கு வேறொருவருடையது". உரோமை வாழ்க்கையின் தனிமையில் தந்தை அனுபவித்த சங்கடங்களைப் பட்டியலிட்டு எல்லாமே இருளாகி,வெறுமையாகிப்போய் இறுதியில் அவர் கற்றுக்கொண்ட பாடம்.." என் வெற்றிடத்தை இறைவன் மட்டுமின்றி வேறு எந்தப் பொருளும்,நபரும்,இடமும் நிரப்ப முடியாது." வார்த்தைகளில் சோகம் அப்பி இருப்பினும் தந்தை கற்றுக்கொண்ட பாடம் ரொம்பக் காஸ்ட்லியானது.3.உன் அழைத்தலில் தடுமாற்றம் வரும் போது நீ நினைவு கொள்ள வேண்டியது".... 'ஒரு அருட்பணியாளரின் அழைத்தல் ஆட்டம் காணும் போது யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நீ முதல் நாள் கண்ட கனவை அதன் எதார்த்தத்தோடு நினைவு கூறு.அந்தக் கனவு மட்டுமே ஒருவரை அழைத்தலில் நிற்க வைக்கும்.' உண்மைதான்!ஒருவர் பட்டு அனுபவித்து தெரிந்து கொண்ட விஷயங்கள் என்பதால் இவை கேள்விக்கு அப்பாற்பட்டவை என்றே தோன்றுகிறது.கண்டிப்பாக இது ஒருவரினால் குரல் எனினும்,இங்கு சொல்லப்பட்ட விஷயங்கள குருத்துவ வாழ்வில் தாங்கள் வேரூன்றி நிற்கப் போராடும் எந்த அருட்பணியாளருக்கும் பொருந்தக்கூடியதே! தந்தையே! கடந்து வந்த பயணத்திற்காகத் தங்களை வாழ்த்தும் அதே வேளையில் மீதமுள்ள பயணமும் ' 'அவரோடு' தொடர எங்களின் ஆசீரையும் , செபங்களையும் தங்களுக்கு மட்டுமின்றி,தங்களோடு பயணிக்கும் அனைத்து அருட்பணியாளர்களுக்கும் உரித்தாக்குகிறோம்..வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்!!!

    ReplyDelete
  2. அன்புள்ள தந்தை அவர்களுக்கு
    அன்பின் மடல் சார்பிலும், என் சார்பிலும் எம் இதயம் கனிந்த வாழ்த்துக்களும், செபங்களும் என்றும்...
    இன்று நீங்கள் எழுதிய இந்த மடல் எங்களையும் சற்று திரும்பி எங்கள் வாழ்க்கையையும் உற்று நோக்க செய்கிறது. ஆம் எல்லோருக்கும் ஏற்ற பாடங்களுக்காக அமைந்துள்ளளது.
    நன்றி எங்களுக்கும் தந்தமைக்கு....
    அன்புடன்
    நவராஜன்
    அன்பின் மடல்

    ReplyDelete
  3. Praise the Lord Father !!
    Wish you a very happy anniversary
    We thank the Lord for you...and His gifts of breaking the Word of God...that He has bestowed upon you....

    ReplyDelete