Saturday, April 2, 2016

யாவேல்

'நான் உம்முடன் வருவேன். ஆயினும், நீர் செல்லும் வழி உமக்குப் பெருமை தராது. ஏனெனில், ஆண்டவர் ஒரு பெண்ணிடம் சீசராவை ஒப்படைப்பார்' (நீத 4:9) என்று தெபோரா பாராக்கிடம் சொல்கிறார்.

இந்த இடத்தில் பாராக்கும், வாசகரும் என்ன நினைப்பர்? இங்கே குறிப்பிடப்படும் பெண் தெபோரா என்று. ஆனால் இங்கே தெபோரா தன்னைப் பற்றிக் குறிப்பிடவில்லை. 'யாவேல்' என்ற பெண்ணைப் பற்றித்தான் குறிப்பிடுகின்றார்.

'பாராக்கு' என்றால் 'மின்னல்' என்று பொருள். பாராக்கு எதிரியின் படைத்தலைவனான சீசராவை மின்னல்போலத் துரத்திச் செல்கின்றார். தன் இரும்புத் தேர்கள், தன் மக்கள் எல்லாரும் அழிக்கப்பட தான் மட்டும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடுகின்றான் சீசரா.

அப்படி ஓடும் வழியில் ஒரு கூடாரம் தென்படுகிறது. இவன் ஓடி கூடாரத்தை நெருங்கும் அதே நேரம், கூடாரத்தை விட்டு வெளியே அவனை எதிர்கொண்டு வருகிறாள் யாவேல் (ஜேயல்). 'யாவேல்' என்றால் 'காட்டு மான்' அல்லது 'காட்டு ஆடு' என்பது பொருள். காடுகளிலும், பாலை நிலங்களிலும் கூடாரம் அமைத்து வாழும் 'கேனியர்' என்ற நாடோடி இனத்துப் பெண்ணுக்குப் பொருத்தமான பெயரே இது. யாவேல் கெபேரின் மனைவி (5:24). இவளுக்கு வயது கண்டிப்பாக 20க்குள் தான் இருக்க வேண்டும்.

சீசராவை எதிர்கொண்ட யாவேல், 'இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும். அஞ்ச வேண்டாம்' (4:16) என்கிறார்.

தப்பித்துச் செல்லும் எலி நேராக கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொள்வது போல, யாவேலின் கூடாரத்துக்குள் நுழைகிறான் சீசரா.

இந்த நேரத்தில் எதிரி தன்னை நோக்கி ஓடிவருவான் என்று யாவேலுக்கு எப்படி தெரிந்தது?

'இவன்தான் அவன்!' என அவள் எப்படி தன் உள்ளுணர்வால் அறிந்து கொண்டாள்?

அவனை எதிர்கொண்டு சரியாக எப்படி 'என் தலைவரே' என அவளால் அழைக்க முடிந்தது?

இங்கேதான் கடவுளின் கரம் இருக்கிறது. தெபோரா பாராக்குடன் நேருக்கு நேர் உரையாடி இறைத் திருவுளத்தை அவருக்கு வெளிப்படுத்துகிறார். ஆனால், தெபோராவுக்கும், யாவேலுக்கும் இடையே உள்ள உரையாடல் மானசீகமாக, ஆன்மாவும்-ஆன்மாவும் பரிமாறிக்கொள்வதாக இருக்கிறது.

கூடராத்துக்குள் நுழைந்த சீசராவை போர்வையால் மூடுகிறார் யாவேல்.

'எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு! தாகமாயிருக்கிறது!' என்கிறான் சீசரா.

'தண்ணீர் என்ன! பாலே தருகிறேன்' என்று சொல்லி பால் வைக்கும் தோற்பையைத் திறந்து குடிக்கக் கொடுக்கின்றாள் யாவேல்.

இங்கே மற்றொரு அதிசயம். பாலைநிலத்தில் தண்ணீர் கிடைப்பதே அரிது. பால் கிடைப்பது சில நேரங்களில் எளிதாயினும், அதை மொட்டை வெயிலில் பாதுகாப்பது மிகவும் சிரமம். வெப்பமான இடத்தில் பால் சீக்கிரம் கெட்டுவிடும். ஆனால், இங்கே பால் பாதுகாப்பாவும், தயாராகவும் இருக்கிறது.

பால் கொடுத்துவிட்டு மீண்டும் அவனை மூடுகிறாள் யாவேல்.

'கூடாரத்தின் வாயிலில் நின்று கொள். எவனாவது வந்து, 'இங்கு ஒர் ஆள் இருக்கின்றானா?' என்று உன்னைக் கேட்டால், நீ 'இல்லை' என்று சொல்!' என்று சீசரா யாவேலுக்குக் கட்டளையிடுகின்றான்.

சொல்லி முடித்தவுடன் அயர்ந்து தூங்கி விடுகிறான்.

'சரி!' என்று சொல்லும் நம் இளவல், அவன் தூங்கிய சில நிமிடங்களில், கூடார முளை ஒன்றையும் சுத்தியல் ஒன்றையும் தம் கையில் எடுத்துக்கொண்டு ஓசைப்படாமல் அவனிடம் வந்து அவன் நெற்றிப் பொட்டில் முளை தரையில் இறங்கும்வரை அடிக்க, அவன் மடிகின்றான்.

தாவீது கோலியாத்தை நெற்றிப் பொட்டில் அடித்துக் கொன்ற நிகழ்வுதான் இங்கே நினைவிற்கு வருகிறது.

கூடார முளை மிகவும் திடமாக இருக்கும். ஏனெனில் அதுதான் கூடாரத்தை பாலைநிலத்துக் காற்றிலிருந்து காப்பாற்றும். அந்தத் திடமான முளையை அடித்து இறக்கும் சுத்தியலும் கனமாக இருக்கும். ஒருவர் பிடித்துக்கொள்ள மற்றவர்தான் சுத்தியல் கொண்டு அடிக்க முடியும். ஆனால், இங்கே யாவேல் தானே முளையையும் பிடித்துக்கொண்டு, மற்ற கையால் சுத்தியல் கொண்டு அடிக்கின்றாள். மிக வேகமாக அவள் சுத்தியலால் அடிக்க வேண்டும். மேலும் மிக கவனுமாகவும் அடிக்க வேண்டும். முளை நெற்றிப்பொட்டிலிருந்து விலகினாலோ, அல்லது சுத்தியல் முளையில் விழாவிட்டாலோ எதிரி பிழைத்துக் கொள்வான். யாவேலின் மூளையும், அவளின் உடலும் மிக அசாத்தியமாக ஒருங்கிணைந்து வேகமாகவும், விவேகமாகவும் இந்த வேலையைச் செய்து முடிக்கின்றன. நெற்றிப்பொட்டில் இறங்கும் முளை தரை வரை இறங்குகிறது. சீசரா தன் இரும்புத் தேர்மேல் பெருமிதம் கொண்டான். இங்கே அந்த இரும்பே அவனின் தலையில் இறங்குகிறது.

'இல்லை' என்று சொன்ன சீசரா இப்போது இல்லை என்றே ஆகிவிட்டான்.

அந்த நேரத்தில் பாராக்கு சீசராவைத் தேடி வருகின்றான். அவன் யார், யாரைத் தேடுகிறான் என்று தெரியாமலேயே, யாவேல் நேரடியாக அவனிடம் சென்று, 'வாரும் நீர் தேடும் ஆளை நான் உமக்குக் காட்டுகிறேன்!' என்கிறாள் யாவேல்.

அவரும் உள்ளே செல்ல, இதோ! சீசரா இறந்து கிடந்தான். கூடார முளை அவன் நெற்றிப் பொட்டில் அடிக்கப்பட்டு இருந்தது.

ஒருவேளை, பாராக்கு முதலில் வந்து, சீசரா இரண்டாவது வந்தால் என்ன நடந்திருக்கும்? பாராக்கின் நெற்றிப்பொட்டல்லவா ஆணி அடிக்கப்பட்டிருக்கும்!

பாலைநில உலகில் யாரையும் யாருக்கும் அடையாளம் தெரியாது. அப்படியிருக்க, எதிரி யார், நல்லவன் யார் என்று யாவேல் உணர்ந்தது எப்படி? தண்ணீர் கேட்க பால் தயாராக இருந்தது எப்படி? கூடார முளையை ஒரு கையிலும், சுத்தியலை மறு கையிலும் தாங்கும் வலிமை அவளுக்கு வந்தது எப்படி? அந்நேரம் யாரும் கூடாரத்திற்கு அருகில் வராதது எப்படி?

யாவேல் - ஒரு காட்டு மான்!

(பெண்கள் தனியாக இருக்கும் வீட்டில் போய், 'நான் கொஞ்ச நேரம் இங்கே தூங்கிக்கிறேன்! யாராவது வந்து கேட்டால், 'நான் இல்லை' என்று சொல்!' என்று சொல்லிடாதீங்க பாஸ். கூடாரத்து முளை, சுத்தியல் எல்லாம் கண்முன் வந்து போகும்போது, தூக்கம் எப்படி பாஸ் வரும்!)



3 comments:

  1. கடந்த சில பதிவுகளில் " ஆண்டவரின் திருக்கரம்" அவரை நம்புபவர்களுக்கு செயல்படுவதைப் பார்க்க முடிகிறது.அப்படிப்பட்டதொரு செய்தியைத் தான் தந்தை இன்றையப் பதிவிலும் தருகிறார்.பாராக்குவின் தாக்குதலுக்குத் தப்பித்து வந்த சீசரா ' யாவேலின்' கூடாரத்திற்குள் நுழைய அவனுடைய தேவைகளை நிறைவேற்றுகிறாள் யாவேல்.அவன் அயர்ந்து தூங்கிய நேரம் அவனது நெற்றிப்பொட்டில் கூடார முளையை வைத்துச் சுத்தியலால் தரையில் இறங்கும் வரை அடிக்க அவன் மடிந்து போகிறான்.இங்கே தந்தை சில கேள்விகளை முன் வைக்கிறார்.1. தனக்கு முன் பின் தெரியாத சீசரா கொல்லப்பட வேண்டிய ஒருவன் தான் என்று யாவேலுக்குத் தெரிந்தது எப்படி? 2. தண்ணீரை எதிர்பார்த்து வந்த சீசராவுக்குப் பால் தயாராயிருந்தது எப்படி? 3. யாருடைய இடையூறும் இல்லாதவாறு கூடார முளையை ஒரு கையிலும்,சுத்தியலை மறு கையிலும் தாங்கும் அளவுக்கு யாவேலுக்கு வலிமை எங்கிருந்து வந்தது? தந்தையே தருகிறார் அதற்கான விடையை.....இறைவனின் அருட்கரம் செயல்படும் விதத்தை.ஆம் அவரை நம்பிக் காத்திருப்பவர்களுக்கு ,அவரை நோக்கிக் கூக்குரலிடுவோருக்கு அவர் அபயம் தர வருகிறார்...வனாந்தரத்தில் பசியினால் வாடிய எலியாவைப் போஷிக்க வந்த காகமாக,.பலிப்பொருள் எங்கே எனத் தன் தந்தை அபிரகாமிடம் கேள்விகேட்ட ஈசாக்கின் கேள்விக்குப் பதில் தரும் ஆடாக, இயேசுபாலன் பிறந்த இடம் தேடி அலைந்த மூவரசர்களுக்கு வழி காட்டிய விண் மீனாக நம் வாழ்விலும்,பாதையிலும் வருவார்; நமக்காகச் செயல்படுவார். அவரை நம்பி,அவரிடம் கேட்பது மட்டுமே நம் கடமை.ஒரு சலனமற்ற நதியின் ஓட்டம் போன்று அவருக்கே உரித்தானதொரு நடையில் பதிவைப் படைத்த தந்தைக்கு நன்றிகள்! அனைவருக்கும் ஞாயிறு வணக்கங்கள்!!!

    ReplyDelete
  2. The naaration of how Yavel kills sesara is terrifying. But in all these when we see the hand of God... it brings sense of protection.

    ReplyDelete
  3. இன்று இறை இரக்கத்தின் பெருவிழா! இன்று இறைவன் தம் பிள்ளைகளாகிய நம்மீது பொழிந்து வரும் ஈடு இணையற்ற இரக்கத்திற்காக நன்றி கூறும் அதே வேளையில் நாமும் நாம் அவரிடமிருந்து பெறும் இரக்கத்தைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் வாய்க்கால்களாக இருக்கும் வரம் கேட்போம். இந்த மாபெரும் இரக்கத்தின் தூதுவனாக இருக்கும் நம் திருத்தந்தைக்காகவும்,நம்மைத் தம் பதிவுகள் மூலம் இறைவழி கூட்டிச்செல்லும் தந்தைக்காகவும்,நம்மைத் தாங்கி நிற்கும் அனைவருக்காகவும் செபிப்போம்.அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete