Sunday, April 24, 2016

குல்தா

யோசியா அரசன் காலத்தில் வாழ்ந்த பெண் இறைவாக்கினர் இவர். 'குல்தா' என்றால் எபிரேயத்தில் 'உலகம்' என்பது பொருள். ஆனால், தற்போதைய எபிரேயத்தில் 'எலி' என்றும் பொருள்.

இதன் கிரேக்கப் பதமே 'கில்டா' அல்லது 'ஹில்டா' என்பது.

யூதா நாட்டு அரசர்களில் மிக முக்கியமானவர் யோசியா. இவரின் காலத்தில் தான் எருசலேம் ஆலயத்தில் 'இணைச்சட்ட நூல்' கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த நூலில் உள்ளதுபோல யூத சமயத்தையும், சமூகத்தையும் சீர்திருத்த விழைகிறார் யோசியா.

இவர் காலத்தில் மிக முக்கியமாக இருந்த பிரச்சினை சிலை வழிபாடு.

தன் சீர்திருத்த முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன், தான் செய்வது சரியா என்று பார்க்க இறைவாக்கினரிடம் தன் அலுவலர்களையும், அமைச்சர்களையும், குருக்களையும் அனுப்புகிறார்.

அந்த நாட்களில் இறைவாக்கினர்தான் ஒரு சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்கினார். அவர் வழியாகவே கடவுளின் திருவுளம் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. இன்று இறைவாக்கினர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

யோசியாவின் காலத்தில் எரேமியா இறைவாக்குரைக்கத் தொடங்கியிருந்தாலும், எரேமியாவிடம் செல்லாமல், குல்தாவிடம் செல்கின்றார் யோசியா. ஒருவேளை எரேமியா வயதில் சிறியவராக இருந்திருக்கலாம். அல்லது குல்தா அனைவராலும் அறியப்பட்டவராக இருந்திருக்கலாம்.

யூதா நாட்டின் மேல் வரவிருக்கும் ஆண்டவரின் கோபத்தை முன்னுரைக்கின்றார் குல்தா.

அரசர் மற்றும் அமைச்சர்கள் முன் பயப்படாமல், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக உண்மையை மறைக்க நினைக்காமல், உள்ளதை உள்ளவாறு சொல்கின்றார் குல்தா.

பெண்கள், பெண் இறைவாக்கினர்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே சொல்லும் உரிமை பெற்றிருந்தனர் யோசியாவின் காலத்தில்.

3 comments:

  1. " குல்தா" பெயர்களின் அர்த்தங்கள் கூட காலத்துக்கு ஏற்றபடி மாறுவது சிறிது விந்தையாகத்தான் இருக்கிறது.யோசியா அரசன் காலத்தில் பெண் இறைவாக்கினர்கள் தாங்கள் நினைப்பதை அப்படியே சொல்லும் உரிமை பெற்றிருந்ததாகச் சொல்லுகிறது இன்றையப் பதிவு.இன்றும் கூட ' இறை வாக்கினர்' எனும் பட்டம் இல்லாமலேயே எத்தனையோ பெண்கள் குடும்பங்களில்.சமூகத்தில், பணித்தளங்களில், அரசியலில் இருக்கத்தான் இருக்கத்தான் செய்கிறார்கள். .....வருவதை முன்னுரைக்கும் தீர்க்கத்தரிசுகளாகவும், தங்களைச் சார்ந்தவர்கள் பாதை பிறழ்ந்து போகும் போது அவர்களுக்குச் சரியான வழிசொல்லும் கைகாட்டிகளாகவும்.ஆனால் பலசமயங்களில் அவர்களின் சொற்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகி விடுகிறது.' இவள் பெண் தானே!' எனும் அலட்சியம் வேறு. எந்த ஒரு சமூகத்தில் பெண் மதிக்கப்படுகிறாளோ அது தான் ' வளர்ந்த சமூகம்' என்பது நம் ஆண்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பெண்களின் நிலை மாறட்டும்; அவர்களது குரல் எத்திசையிலும் ஒலிக்கட்டும்! பெண்ணின் பெருமை சொல்லும் பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டு.அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Father,Very excellent about Kultha.

    ReplyDelete
  3. Super explanation thank you so much

    ReplyDelete