Thursday, April 28, 2016

நூல் பெயர் விளக்கம்

கி.பி. 80 முதல் 90க்குள் லூக்காவால் எழுதப்பட்ட நற்செய்தி-திருத்தூதர் பணிகள் என்ற ஒற்றை நூல்தான் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, லூக்கா நற்செய்தி எனவும், திருத்தூதர் பணிகள் எனவும் இரண்டு நூல்களாக ஆகிவிட்டன என்பது அறிந்தோர் கருத்து. இந்த இரண்டு நூல்களும் இணைந்து 27.5 சதவிகித இடத்தை இரண்டாம் ஏற்பாட்டில் பிடித்துவிட்டன.

இரண்டாம் ஏற்பாட்டின் ஐந்தாவது நூலாக இருக்கும் இந்நூலுக்கு, 'திருத்தூதர் பணிகள்' என பெயரிட்டவர் ஐரேனியு (இரண்டாம் நூற்றாண்டு). லூக்காவின் பெயரும், திருத்தூதர் பணிகள் என்ற பெயரும் இந்நூலில் இல்லை.

அலிகார்னாசுஸ் ஊரைச் சார்ந்த டயனிசியு 'உரோமை வரலாற்றையும்,' யோசேப்புஸ் 'யூதர்களின் வரலாற்றையும்' எழுத, அவர்களின் நூல்கள் மிகவும் பிரபலமாகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் 'கிறிஸ்தவத்தின் வரலாற்றை' எழுத முனைகின்றார் லூக்கா.

இதை ஒத்த வேறு நூல்கள் இல்லை.

'திருத்தூதர் பணிகள்' என்னும் பெயர் இந்நூலுக்கு பொருத்தமானதா?

இந்நூலைப் பொறுத்தவரையில் திருத்தூதர்கள் 13 பேர். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் 11 பேர். யூதா இஸ்காரியோத்துக்குப் பதிலாக தெரிவு செய்யப்பட்ட மத்தியா மற்றும் புறவினத்தாரின் திருத்தூதரான பவுல்.

இந்த 13 பேரில், வெறும் ஐந்து பேரைப் பற்றித்தான் இந்த நூல் பேசுகிறது.

பவுலைப் பற்றி அதிகமாகவும், பேதுரு மற்றும் யோவான் பற்றி கொஞ்சம் குறைவாகவும், யாக்கோபு மற்றும் பிலிப்பு பற்றி இன்னும் குறைவாகவும் இங்கே நாம் வாசிக்கின்றோம்.

மற்ற திருத்தூதர்கள் எங்கே சென்றார்கள், என்ன பணி செய்தார்கள் என்பதைப் பற்றி இந்நூலில் எவ்விதத் தரவும் இல்லை.

மேலும், இந்நூலில் சொல்லப்படும் தரவுகளும், பவுலின் மடல்களில் காணப்படும் தரவுகளும் கூட மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு, தமஸ்கு நகருக்கு செல்லும் வழியில் பவுல் மனமாற்றம் அடைந்ததாக லூக்கா எழுதுகிறார். ஆனால், பவுல் கலாத்தியருக்கு எழுதும் தன் திருமடலில் தான் அராபியா சென்று மனமாற்றம் அடைந்ததாக எழுதுகின்றார்.

எது எப்படி இருந்தாலும், திருத்தூதர்களை ஒரு இணைப்புக்கோடு என்று சொல்லலாம். இயேசுவுக்கும் நமக்கும் இடையே நிற்பவர்கள் இவர்கள். இவர்கள் வழியாகவே நாம் இயேசுவையும், அவர் கனவு கண்ட இறையரசையும் அறிந்து கொண்டோம்.

1 comment:

  1. " திருத்தூதர் பணிகள்" உதயத்தின் பின்புலத்தைக் கூறுகிறது இன்றையப் பதிவு. முதல் ஏற்பாட்டு,இரண்டாம் ஏற்பாட்டு ஆசிரியர்கள் இந்நூல்களை எழுத எத்துணை சிரமப்பட்டிருப்பார்களோ, அதே சிரமம் அவற்றின் சாராம்சத்தை ஒரு சிறிய குப்பிக்குள் நமக்கு அடைத்துத் தருவதில் தந்தைக்கும் இருக்கும் என்பது தெளிவாகப் புரிகிறது.ஆனால் இறைவார்த்தையை எடுத்தியம்போருக்கு இறைவன் தரும் ஆசீர்வாதங்களை நினைக்கையில் இது ஒரு பொருட்டல்ல என்பதைத் தந்தைக் கண்டிப்பாக அறிவார் என்பதையும் உணரமுடிகிறது. இறைவன் தங்களைத்,தங்களின் பணியை மென்மேலும் ஆசீர்வதிக்கவும், தூய ஆவி தன் கொடைகளைத் தங்கள் மேல் அபரிமிதமாகப் பொழியவும் வேண்டுகிறேன். தொடரட்டும் தங்களின் பணி!!! அன்புடன்.....

    ReplyDelete