Friday, April 15, 2016

சேபா நாட்டு அரசி

தாவீதுக்குப் பின் அவருடைய மகன் சாலமோன் அரியணை ஏறுகின்றார்.

'உனக்கு என்ன வேண்டும்? நீண்ட ஆயுளா? செல்வமா? எதிரிகளின் அழிவா?' என்று ஆண்டவர் சாலமோனிடம் கேட்க, 'உன் மக்களுக்கு நீதி வழங்க ஞானம் வேண்டும்' என்கிறார் பவ்யமாக.
'ஞானம் கேட்டதால் நீ எல்லாவற்றையும் பெற்றாய்!' என உச்சி முகர்கின்றார் ஆண்டவர்.

'ஞானம்' என்றால் 'அறிவோடு கூடிய செயல்' அல்லது 'புத்திக்கூர்மை' அல்லது 'நன்மை தீமை ஆய்ந்து அறிந்து அதன்படி நடப்பது.'

சாலமோனின் ஞானம் மற்றும் புகழ் பக்கத்து நாடுகளுக்கும் பரவுகிறது.

இவரின் ஞானம் பற்றிக் கேள்வியுற்ற சேபா நாட்டு அரசி இவரைக் கேள்விகளால் சோதிக்க வருகிறார். இவரின் வருகை பற்றி இயேசுவும் தன் போதனையில் குறிப்பிடுகின்றார் (காண். மத் 12:42, லூக் 11:31).

வந்த அரசி அப்படி மெய்மறந்து போகின்றார்.

சாலமோனின் ஞானம் அவர் கட்டியிருந்த அரண்மனை, அவர் உண்டு வந்த உணவு வகைகள், அவருடைய அலுவலரின் வரிசைகள், பணியாளர்களின் சுறுசுறுப்பு, அவர்களுடைய சீருடை, பானம் பரிமாறுவோரின் திறமை, ஆண்டவர் இல்லத்தில் அவர் செலுத்திய எரிபலிகள் என அனைத்திலும் துலங்குகிறது.

அ. சேபா நாட்டில் பெண்தான் முதலிடத்தில் இருக்கின்றார்.

ஆ. பெண்ணும் ஞானம் பெற்றவராக இருக்கிறார்

இ. பெண் நெடுந்தூரம் பயணம் செய்து அந்நிய நாட்டிற்குள் நுழையும் தைரியம் பெற்றிருக்கிறார்

சேபா நாட்டு இளவரசியிடம் எனக்குப் பிடித்தது அவரின் பாராட்டும் குணம். வாய்விட்டுப் பாராட்டுகின்றார் சாலமோனை:

'உம்முடைய ஞானம் பற்றி என் நாட்டில் கேள்வியுற்றேன். ஆனால் இங்கு காண்பதில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை' என்கிறார்.

மேலும், நிறைய பரிசுப்பொருள்களையும் கொடுக்கின்றார். அத்துனை பொருள்கள் அரசர் சாலமோனுக்கு அதன் பிறகு வந்ததே இல்லை என வியக்கிறார் நூலாசிரியர்.

இந்தப் பாராட்டும், பரிசளிக்கும் குணத்தை இவரிடம் நான் கற்க விழைகிறேன்.

2 comments:

  1. தாவீதுக்குப் பின் அரியணை ஏறும் அவரது மகன் சாலமோனிடம் ஆண்டவர் என்ன வேண்டுமெனக் கேட்க அவர் ஆயுள்,செல்வம்,எதிரிகளின் அழிவு இத்தனையையும் உள்ளடக்கிய ' ஞானத்தைக்' ஒரேவார்த்தையில் கேட்பதிலேயே வெளிப்படுகிறது அவரின் ஞானம்.இந்த ஞானக் களஞ்சியத்தையும் விஞ்சி நிற்கிறார் அவரின் ஞானம் பற்றிக் கேள்வியுற்று அவரைக்காண வந்த சேபா நாட்டு அரசி.அவரின் பாராட்டு " உம்முடைய ஞானம் பற்றி என் நாட்டில் கேள்வியுற்றேன்.ஆனால் இங்கு காண்பதில் பாதியைக்கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லை." இப்படி மனம் திறந்து அடுத்தவரிடம் வார்த்தைகளை வீச ஒருவருக்குப் பெரிய மனது வேண்டும்.அது ஒரு பெண்ணாகிய சேபா நாட்டு அரசியிடம் நிறையவே இருந்துள்ளது என்பது பெண்ணிணத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம். அது மட்டுமின்றி அவர் பரிசுப்பொருட்களை சாலமோனுக்கு அள்ளி இறைத்திருப்பதன் மூலம் இன்னொன்றையும் நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.ஆம்... "நம்மிடமுள்ள பொருட்கள் அதன் பெருமையை அடைவது நம்மிடமிருந்து துருப்பிடிக்கும் போதல்ல; அது பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படும் போது மட்டுமே." தந்தை கற்க விழையும் நற்குணங்கள் அவரவர் பின்புலத்திற்கேற்ப அனைவருமே பின்பற்றக் கூடியவைதான். நாமும் அள்ளிக்கொடுக்க வேண்டிய இடத்தில் கிள்ளியாவது கொடுப்போம்.நல்லதொரு செய்திப் பகிர்தலுக்காகத் தந்தைக்குப் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Congrats Dear Father for your golden words.

    ReplyDelete