Sunday, April 3, 2016

ஒரு பெண்

அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான். அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான். அப்பொழுது ஒரு பெண் ஓர் அரைக்கும் கல்லை அபிமெலக்கின் தலைமீது போட்டு அவன் மண்டையைப் பிளந்தாள். உடனே அவன் அவனுடைய படைக்கலம் தாங்கியிருந்த பணியாளனை அழைத்து அவனிடம், 'உன் வாளை உருவு. ஒரு பெண் அவனைக் கொன்றாள்! என்று என்னைப் பற்றிச் சொல்லாதபடி என்னைக் கொன்றுவிடு' என்றான். அந்தப் பணியாளன் அவனை ஊடுருவக் குத்தவே அவனும் மடிந்தான். (நீத 9:53-55)

தன் அரசனின் மேல் கல்லைப் போட்டுக் கொன்ற இந்த 'அனாமிகா' (பெயரில்லாதவள்) பற்றி இன்று நாம் பார்ப்போம்.

'பெண்ணின் கையால் கொல்லப்படுவதை' தாழ்வாகக் கருதிய இந்த அரசனின் பெயர் அபிமெலக்கு.

'அபிமெலக்கு' என்றால் 'என் அப்பா ஓர் அரசன்' என்று பொருள். அபிமெலக்கைப் பற்றி தெரிந்து கொள்ள அவனது அப்பா கிதியோன் பற்றி தெரிந்து கொள்வதும் அவசியம். 'கிதியோன்' என்றால் 'கல் உடைப்பவன்' அல்லது 'குடைபவன்,' அல்லது 'அழிப்பவன்' என்பது பொருள். மிதியானியார்களின் கை ஓங்கி இருந்தபோது, அவர்களை அழித்து இஸ்ரயேலுக்கு நீதி வழங்க இவரை அழைக்கிறார் ஆண்டவர். தன் குடும்பத்தில் புழக்கத்தில் இருந்த பாகால் மற்றும் அசேரா வழிபாட்டை அழித்ததால், இவரின் ஊர்க்க்காரர்கள் இவருக்கு 'எருபாகால்' ('பாகாலோடு போரிடுபவன்') எனப் பெயரிடுகின்றனர். ஆண்டவரின் அருட்கரத்தின் துணை கொண்டு மிதியானியர்களை வெல்கின்றார் கிதியோன். ஆனால், வெற்றி கிடைத்தவுடன் அவரின் மனம் ஆண்டவரிடமிருந்து விலகி மீண்டும் பாகால்-அசேரா நோக்கித் திரும்புகிறது.

இவருக்குப் பல மனைவியர் இருக்கின்றனர். இந்தப் பல மனைவியர் வழியாக இவருக்கு எழுபது குழந்தைகள். செக்கேமிலிருந்து இவரின் வேலைக்காரி, இவரின் வைப்பாட்டியாகவும் இருக்கிறாள். அவள் வழியாகப் பிறந்தவனே அபிமெலக்கு. தான் உயிருடன் இருக்க வேண்டும், தன் தந்தைக்குப் பின் அரசாள வேண்டும் என நினைக்கும் இவன், தன் உடன்பிறந்த 70 பேரையும் கொன்று விடுகின்றான். ஆனால், அவர்களில் ஒருவன், கடைக்குட்டி, யோத்தாம் தப்பி விடுகின்றான். தப்பியோடிய கடைக்குட்டியையும் பயமுறுத்தி விரட்டிவிடுகிறான் அபிமெலக்கு.

அப்புறம் என்ன? 'நானே ராஜா! நானே மந்திரி!' என தனக்கென்று ஒரு கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தன் ஊர் மக்களை ஆளத் தொடங்குகின்றான். தன் ஊர் மக்கள் தன்மேல் அதிருப்தி அடைவதைக் கண்டு, தன் ஊர் மொத்தத்தையும் அழித்துவிடத் தீர்மானிக்கிறான்.

மனதில் தோன்றும் வன்மத்தின் குணம் இதுவே. சின்னத் தவறிலிருந்து பெரிய தவறு நோக்கி அது மனத்தை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஊர் மக்களை எப்படி எளிதாக அழிப்பது என்று யோசிக்கின்ற மனம் சின்ன வழியையும் கண்டுபிடிக்கிறது. அதாவது, மக்கள் இரண்டே வகை. ஒன்று ஊருக்குள் இருப்பவர்கள். இரண்டு, ஊரை விட்டு வெளியே வயலில் வேலை செய்பவர்கள். வேலை செய்பவர்கள் ஊருக்குள் வரும்போது வழி மறித்து அவர்களைக் கொன்றுவிட வேண்டும். ஊருக்குள் இருப்பவர்களை அப்படியே ஊரோடு எரித்துவிட வேண்டும். ஊருக்குள் வெளியே இருப்பவர்களை ஒருவழியாகக் கொன்றுவிடுகிறான். ஊருக்குள் இருக்கும் மக்களை அழிப்பதுதான் கடினமாக இருக்கிறது. ஊரின் நடுவில் இருந்து ஒரு கோட்டையின்மேல் எல்லாரும் ஏறிக்கொள்கின்றனர். 'கோட்டைக்கே தீ வைத்துவிடலாம்' என எண்ணி கோட்டையைச் சுற்றி விறகுகளை அடுக்குகின்றான் நம்ம அபி. அடுக்கி வைத்த விறகுகளுக்கு தீயிட அதை நெருங்கும்போதுதான் அந்த விபரீதம் நடக்கின்றது. கோட்டையின் மேலிருந்து ஓர் இளவல் மாவரைக்கும் கல்லை அவன்மேல் தூக்கிப் போட்டு அவன் மண்டையைப் பிளக்கின்றாள்.

மாவரைக்கும் கல்லை கோட்டையின் மேல் கொண்டு சென்றிருக்கிறாள் அந்தப் பெண். அப்படியெனில் இது ஒரு திட்டமிட்ட செயல். கீழிருக்கும் கல்லை மேலே தூக்கிக் கொண்டு போயிருக்கிறாள். 'என்னடாமா கல்லைத் தூக்கிக் கொண்டு வர்றீங்க?' என்ற நிறையப் பேர் அவளிடம் கேட்டிருப்பார்கள். அபிமெலேக்கு எந்தப் பக்கம் வருவான் என்று அவள் கண்ணமிட்டுக் காத்திருக்கிறாள். சரியாக தலைமேல் போடுகின்றாள்.

கோட்டை உயரமானது. கல் எடை கொண்டது. எடையும், உயரமும் கல்லின் வேகத்தைக் கூட்ட அது அபிமெலக்கை நிலைகுலையச் செய்கிறது.

ஆனால், அந்த நிலையிலும் தன் படைக்கலம் தாங்குவோனோடு பேசும் திடம் பெற்றிருக்கிறான் அபிமெலக்கு. இறக்கும்போது கூட ஒரு இறுமாப்பு. ஒரு வளைக்கரம் தன்னைக் கொன்றுவிட்டது என்று யாரும் சொல்லக்கூடாது என்பதில் அக்கறையாயிருக்கிறான்.

ஆக, இனி வரும் நீதித்தலைவர்கள் நூலில் பெண் எப்படி சித்தரிக்கப்படுவாள் என்பதை இந்நிகழ்வு முன்னோட்டமாகக் காட்டுகிறது. பெண் வலுவின்மையின் அடையாளமாக, அவமானத்தின் அடையாளமாக, எடுப்பார் கைப்பிள்ளையாகவே இனி இருப்பாள் இந்த நூலில்.

ஆனாலும், இந்தப் பெண்ணின் துணிச்சலும், வீரமும் பாராட்டப்பட வேண்டியதே.

அடுத்தவர் தலைமேல் கல்லைப் போட்டு அழித்த அபிமெலக்கின் தலைமீதும் கல் விழுகின்றது.

'உன் தலையில கல்லு வந்து விழ!' என்று யாரோ அபிமெலக்கை சபித்திருப்பார்கள் போலும்!


1 comment:

  1. என் பள்ளிப்பருவத்தில் எனக்குப் பிடிக்காத பாடம் 'சரித்திரம்'...அதில் வரும் தேதிகளையும்,பெயர்களையும் ஞாபகம் வைக்க முடியாத காரணத்தால். இந்த நீதித் தலைவர்கள் நூலில் வரும் பெயர்களும்,சம்பவங்களும் அதைவிட மோசமானவையாக உள்ளன.ஏதோ அதில் வரும் பெண்கள் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல்.சரி, விஷயத்திற்கு வருவோம்.ஆண்டவருக்கும்,பாகால்- அசேராவிற்குமிடையே ஊசலாடும் மனத்தையுடைய கிதியோனின் மகன் அபிமெலக்கு தன் சகோதரர் 70 பேரைக் கொன்றதன் புகழைப்பாடாத நீதித் தலைவர்கள் நூல் அவன் ஒரு பெண்ணின் கையால் கொல்லப்படவிருந்ததை சரித்திரமாக்கியுள்ளது. இந்தப்பெண்ணின் துணிச்சலும்,வீரமும் பாராட்டப்பட வேண்டியதே என ஒரு புறம் கூறும் தந்தை இனிவரும் நீதித்தலைவர்கள் நூலில் "பெண் என்பவள் வலுவின்மையின்,அவமானத்தின் அடையாளமாக எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பாள்" என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இறக்கும் நிலையிலும் தான் ஒரு வளைக்கரத்தால் கொல்லப்பட்டோம் என்ற பேச்சுக்கு இடம் தரக்கூடாது எனும் இறுமாப்புடன் இருக்கும் அபிமெலக்கை " உன் தலையில கல்லு வந்து விழ!" என்று ஒருவர் அல்ல, ஓராயிரம் பேர் சபித்திருப்பார்கள்.பெண்ணின் பெருமை காக்கும் விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதற்காகத் தந்தையைப் பாராட்டலாம்!!!

    ReplyDelete