Wednesday, April 13, 2016

அபிகாயில்

அபிகாயில் - அழகும், அறிவும்

(1 சாமு 25:1-42, 2 சாமு 3:3)

'அபிகாயில்' என்றால் 'என் அப்பாவே மகிழ்ச்சி' என்பது பொருள்.

வண்டி ஓட இரண்டு சக்கரங்கள் வேண்டும் என்று சொல்லும் கண்ணதாசன், அந்தச் சக்கரங்களில் ஒன்று சிறியதாய் இருந்தால் எந்த வண்டி ஓடும் என்று கேள்வியும் கேட்கின்றார். அபிகாயில் என்ற பெரிய சக்கரம், நாபால் என்ற சிறிய சக்கரத்தோடு திருமணத்தில் இணைகிறது.

நாபாலுக்கு 40 வயது இருக்கும். 'நாபால்' என்றால் 'முட்டாள்' என்பது பொருள். அவன் தன் பெயருக்கேற்ப முட்டாளாகவும், கோபக்காரனாகவும் இருக்கின்றான்.

அவனின் மனைவி அபிகாயிலுக்கு 16 முதல் 20 வயது இருக்கும். இவள் அழகி. அறிவாளி. அழகும் அறிவும் வெகு சிலருக்கே இணைந்து கிடைக்கும். அந்த பாக்கியசாலிகளில் இவளும் ஒருத்தி.

நாபால் என்பவன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பவன். இது அக்காலத்தில் ஒரு முக்கியமான தொழில். இவனிடம் பணம் நிறைய இருந்தது. மேலும் அபிகாயிலின் சொத்துக்களும் இவனுக்கு வந்தது.

இந்நேரம் தாவீது சவுலுக்குத் தப்பி பாலைநிலங்களில் திரிகின்றார். அவர் லோக்கல் தாதாவாக உருவெடுக்கிறார். அவருக்குக் கீழ் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை அனுப்பி, 'நமக்கு ஏதாவது வாங்கி வாருங்கள் நாபாலிடம்' எனச் சொல்கின்றார்.

'யார் அது தாவீது? அவனுக்கு ஏன் நான் தரணும்?' என்று மறுமொழி சொல்லி அனுப்பி விடுகின்றான் நாபால்.

உடனே நம்ம ஹீரோவுக்கு கோபம் வந்துவிடுகிறது. இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவனைக் கொல்லப் புறப்படுகிறார்.

இதற்கிடையில் தன் வீட்டிற்கு தாவீதின் ஆட்கள் வந்ததையும், தன் கணவன் அவர்களிடம் முட்டாள்தனமாக நடந்து கொண்டதையும் கேள்விப்பட்ட அபிகாயில், மிக வேகமாக செயலாற்றி, அப்பம், தண்ணீர், பயறு, அடை என எடுத்துக்கொண்டு தாவீதைச் சந்திக்க ஓடுகிறாள். தாவீதை நடுவழியில் கண்டு அவர் காலில் விழுந்து தன் கணவன் சார்பாக மன்னிப்பு கேட்கின்றாள் அபிகாயில். தாவீதும், 'சமாதானத்துடன் போ! உனக்குச் செவிகொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்' என்கிறார்.

வீட்டுக்கு வந்த அபிகாயில் தன் கணவனிடம் நடந்ததைக் கூற அவன் கல் மாதிரி உறைந்து போகின்றான். கொஞ்ச நாட்களில் இறந்துவிடுகின்றான்.

கணவன் இறந்துவிட்டதைக் கேள்விப்பட்ட தாவீது, 'நீ எனக்கு மனைவியாக இரு!' என தூது அனுப்புகிறார்.

'இதோ வருகிறேன்!' என்று ஓடுகிறார். தாவீதின் மனைவியாகிறார்.

இவர் தாவீதுக்கு கிலயாபு என்ற மகனைப் பெற்றெடுக்கின்றார்.

ஒரு பிரச்சினை உருவெடுக்கிறது. அந்தப் பிரச்சினையை பதற்றமின்றி, சமயோசிதமாகக் கையாளுகிறாள் அபிகாயில்.

கணவனின் மூடத்தனத்தால் தன் குடும்பம் அழியும் சூழல் வந்தபோது, தன் புத்திசாலித்தனத்தால் தன் குடும்பம் காக்கின்றாள் அபிகாயில்.

1 comment:

  1. " ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே" என்ற சொல்லாடலைக் கேட்டிருப்போம்.தந்தையின் பதிவுகளில் வரும் அத்தனை பெண்மணிகளுமே இதில் ஏதோ ஒன்றுக்கு சம்பந்தப்பட்டவர்களே! எல்லா இடங்களிலும் முரண்பாடான இருவரையே இறைவன் இணைத்து வைக்கிறார் இந்தத் திருமணம் எனும் பந்தத்தின் வழியாக! இதில் சில பெண்கள் தீயில் வெந்து மாய்ந்து போவதும் இன்னும் சிலர் உடனிருப்பவன் எப்படி இருப்பினும் தன்னையும் ,அவனையும் சேர்த்தே உயரத்துக்கு எடுத்துச் செல்வதும் நம் கதாபாத்திரங்கள் நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் வாழ்க்கைப்பாடங்கள். இன்றைய நம் கதாநாயகி ' 'அபிகாயில்'இந்த இரண்டாம் இரகத்தைச் சேர்ந்தவளே! முரடணான, முட்டாள் கணவன் நாபாலுக்கு முல்லைப் பூவாக மணம் வீசுகிறாள்.நாபாலுடனான தன் வாழ்க்கை உலர்ந்து போன நிலையிலும் சோர்ந்து விடாமல் முரடன் தாவீதைக் கைப்பிடித்து அவன் வாழ்க்கையிலும் வசந்தம் வீசத் துணை செய்கிறாள்.பதட்டம் நிறைந்த வாழ்வில் தங்களையே பறிகொடுக்கும் பல பெண்கள் தம் கண்களை உயர்த்தி நிமிர்ந்து பார்க்க வேண்டிய 'கலங்கரைத் தூண்' இந்த ' 'அபிகாயில்'.அழகானதொரு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய தந்தைக்கு நன்றிகள! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete