Sunday, April 17, 2016

சாரிபாத்து கைம்பெண்

கைம்பெண் எலியாவிடம், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை. பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்' என்றார். (1 அர 17:13)

சாலமோன் அரசருக்குப் பின் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாடு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என இரண்டாகப் பிரிகின்றது.

வடக்கு இஸ்ரயேலை ஓம்ரியின் மகன் ஆகாபு ஆள்கின்றார். ஆகாபு ரொம்பவும் கிரிமினல். யாவே இறைவனை மறந்துவிட்டு, வேற்று தெய்வமான அசேராவுக்கு கம்பம் ஒன்றை நடுகின்றார். இந்த வழிபாட்டிற்காக பாகால் இறைவாக்கினர்களை நியமிக்கின்றார். மேலும் மனிதப்பலியும் செலுத்துகின்றார். இதனால் கோபித்துக்கொள்ளும் ஆண்டவர் இஸ்ரயேல் மேல் மழைபொழியா வண்ணம் மேகங்களைக் கலைக்கின்றார். நாட்டில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது.

இந்தப் பஞ்சம் எலியா இறைவாக்கினரால் ஆகாபு அரசனிடம் அறிவிக்கப்படுகின்றது.

காகங்கள் வழியாக உணவு தந்த தன் இறைவாக்கினர் எலியாவைக் காப்பாற்றிய ஆண்டவர், அவரை சாரிபாத்து என்ற ஊரில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடம் அனுப்புகின்றார்.

எலியா அந்த ஊருக்குள் வரும் நேரம் இந்தக் கைம்பெண் சுள்ளிகள் பொறுக்கிக்கொண்டிருக்கின்றார். விறகுகள் கூட இல்லை. சுள்ளிகள் என்பதை தூசிக்கும், விறகுக்கும் இடைப்பட்டவை. இவற்றை வைத்து அடுப்பெரிக்க வேண்டுமானால் நிறைய பொறுக்க வேண்டும்.

ஆக, சுள்ளிகள் பொறுக்கிக் கொண்டிருந்தவர் ரொம்பவே களைத்துப் போயிருப்பார். இந்த நேரத்தில் அங்கு வரும் எலியா, 'எனக்கு உணவு கொடு!' என்கிறார்.

'கையளவு மாவும், சிறிதளவு எண்ணெயுமே இருக்கிறது. சாப்பிட்டு விட்டு நானும் என் மகனும் உயிர் துறப்போம்' என்கிறார் கைம்பெண்.

அவருக்கு ஒரு மகன் இருப்பது இங்கேதான் வாசகருக்குத் தெரிகிறது.

'நீ போம்மா...அப்பம் சுடு!' என்கிறார் எலியா.

போகிறார். சுடுகிறார்.

கலயத்தில் மாவும், சாடியில் எண்ணெயும் குறையவில்லை.

இங்கே இரண்டு விடயங்களைக் கவனிக்க வேண்டும்:

1. எளிய மக்களின் ஆன்மீகம். நம்ம ஊர்களில் இன்றும் பார்க்கலாம் இந்த மக்களை. 'கடவுள் ஒருவரா அல்லது மூவரா அல்லது மூன்றாகி ஒன்றாக இருப்பவரா', 'விவாகரத்து பெற்றவர் நற்கருணை உட்கொள்ளலாமா', 'இது என் உடல், இது என் இரத்தம் என்று சொல்லும்போது அருள்பணியாளர் குனிந்து நிற்க வேண்டுமா அல்லது நேராக நிற்க வேண்டுமா' என்று எதுவும் இவர்களுக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள். 'அழுதுகிட்டே இருந்தாலும் உழுதுகிட்டே இருக்கணும்!' என்று தங்கள் கைகளை மட்டும் நம்பியிருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருக்கும் இவர்களுக்கு. ஆனால் கடவுளிடம் எதையும் கேட்க மாட்டார்கள். 'கையில வேலை, வாயில தோசை' அவ்வளவுதான். நாம வேலை செஞ்சா நமக்குச் சோறு என்ற அடிப்படையில்தான் இருப்பார்கள். இவர்களுக்கு கடவுளைத் தெரியாது. ஆனால் மனித முகங்களை உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். எலியாவைப் பார்த்து இந்தப் பெண், 'வாழும் உம் கடவுளாகிய' என்று 'உம்முடைய' என்று கடவுளை அந்நியப்படுத்துகின்றார். ஆனால், எலியாவை நெருக்கமாக்கிக் கொள்கின்றார்.

2. இந்த நிகழ்வைப் படிக்கும்போது கடவுள் மேல் கோபம் வருகிறது. ஆகாபு அரசன் தவறு செய்தால் கடவுள் அவனை அல்லவா தண்டிக்க வேண்டும். இந்தப் பாவப்பட்ட கைம்பெண் என்ன தவறு செய்தாள்? ஏற்கனவே கணவனை இழந்த துக்கம்? இப்போது பசி வேறு. ஒரு அரசனின் தவறு சாதாரண மக்களை ஏன் பாதிக்க வேண்டும்?

3. கைம்பெண்ணின் தியாகம். தனக்கும், தன் மகனுக்கும் உணவில்லை என்றாலும், வந்திருக்கும் மனிதருக்கு உணவு கொடுப்போம் என முடிவெடுக்கின்றார் கைம்பெண். தங்களிடம் உள்ளதை அப்படியே அள்ளிக் கொடுக்கும் இவ்வகைக் கைம்பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் அருள்பணி நிலையில், வழிபாடு அல்லது நன்கொடை என மக்களிடம் வாங்கும் பணம் குறித்து மிகவும் கவனமாகவும், நாணயமாகவும் இருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து கொடுப்பது ஒருவேளை அவருக்கும், அவருடைய மகனுக்குமான உயிர்ப்பிணையாகக் கூட இருக்கலாம். அது வெறும் பணம் அல்ல. அது அவர்களின் உயிர். அப்படியிருக்க, நான் அந்தப் பணத்தைக் குறித்து மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.

நாளையும் பார்ப்போம்.

1 comment:

  1. " அன்று எலியாவைப் போஷித்தவர் இன்று உன் பசி ஆற்றிடாரோ!".... இந்தப் பாடலை நான் கேட்டது முதல் இப்பாடலின் இந்த வரிகளுக்காகவும், அதன் வெகு இயல்பான இராகத்திற்காகவும் இந்தப்பாடலையும் அதன் பின்னனியில் வரும் நிகழ்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்நிகழ்வின் பின்புலத்தில் உள்ள தந்தையின் கோபம் ஒரு வகையில் நியாயமாகவே படுகிறது.ஆனால் இப்படி ஒரு விஷயம் நடக்கவில்லையெனில் இந்தக் கைம்பெண்ணுக்கு விவிலியத்தில் எப்படி இடம் கிடைத்திருக்கும்? யோசிக்க வேண்டிய விஷயமல்லவா? ஆனாலும் கூட இன்றையப் பதிவின் பல கருத்துக்கள் ..."எளிய ஆன்மீகம்" என்ற பெயரில் தந்தை கூறும் பல கருத்துக்கள் எனக்கு மிக நெருக்கமாகப் படுகின்றன.இன்றையக் கைம்பெண்ணின் நிலையிலிருக்கும் நம் பெண்கள் கடவுளையோ இல்லை அவரின் சாயலாக சொல்லப்படும் அருட்பணியாளர்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.நாட்டில் நடக்கும் பல நன்மை,தீமைகள் அவர்களைப் பாதிப்பதில்லை.அவர்கள் நினைவில் நிற்பதெல்லாம் "தங்களின் உணவைத்தங்களின் உழைப்பால் பெற வேண்டும் என்பது மட்டுமே; இவர்கள் கடவுளை தூரத்தில் வைத்திருப்பினும் அவரின் படைப்புக்களிடம் நெருக்கம் காட்டுகின்றனர்." நான் ஒரு மனிதன்/ மனுஷி என்று என்னை அடையாளம் காட்ட இதற்கு மேல் என்ன தகுதி வேண்டும்? எந்நிகழ்வாக இருப்பினும் அதன் பொருளை அப்படியே தராமல் அதைப் பல கோணத்தில் அக்குவேறு,ஆணி வேறாக அலசி தனக்கு சரி எனப்பட்டதை அள்ளித்தரும் தந்தையின் பாங்கு அவருக்கு இன்று நன்றாகவே கைகொடுத்துள்ளது.என் மனதுக்கு நெருக்கமானதொரு பதிவைத் தந்த தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete