Sunday, May 10, 2015

இருநொடி கல்யாணம்

நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரையான 24 மணிநேரத்தில் 20 மணிநேரம் நான் ரோம் நகரத் தெருக்களில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். பேருந்து, மெட்ரோ, ட்ராம் என ஏறி இறங்கி பயணங்கள். இரண்டரை ஆண்டுகள் நான் காணாத நிறைய காட்சிகளை ரோம் இந்த 20 மணிநேரத்தில் காட்டியது.

இப்போது வெந்நீர் குளியல் போட்டுவிட்டு, கால்வலி தாங்க முடியாமல் கட்டிலின் மேல் கால்களைப் போட்டு, கைகளில் மடிக்கணிணியை வைத்திருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் நிற்கும் ஒரே ஒரு நிகழ்வு ஒரு கல்யாணம்.

ஆம். ரோம் நகரின் மையத்தில் இருக்கும் பாந்தயோன் என்ற கிரேக்க-ரோமை ஆலயத்தில் நடைபெற்ற 'உடனடி' திருமணம். பாந்தயோனில் உள்ள ரஃபேல் கல்லறையைப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென கைதட்டல். இந்த பாந்தயோனில் ஒருவருக்கொருவர் பேசுவதே தடை செய்யப்பட்டிருக்க, கைதட்டல் ஆச்சர்யமாக இருந்தது. திரும்பிப் பார்த்தால் பாந்தயோனின் நடுவில் சூரிய பகவான் மின்னிக்கொண்டிருக்க மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர் ஒரு ஆணும் ஒரு பெண்ணும். கைகளில் மோதிரத்தை மாற்றிவிட்டு, இதழோடு இதழ் பதித்து தங்கள் வாழ்நாள் ஒப்பந்தந்திற்கு 'சீல்' வைத்தனர். அவர்களைச் சுற்றிக் கூடிய கூட்டம் வாழ்த்து சொன்னது. ஒரு பெண் தன் கையிலிருந்த ரோஜா மலர் ஒன்றைப் பரிசளித்தாள். அடுத்த நொடியில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்துவிட்டனர். கூடியிருந்தவர்களும் கலைந்து விட்டனர். வேகமாக நிறைவேறியது ஒரு திருமணம். பையனுக்கு 35 வயதிருக்கும். பெண்ணுக்கு 25 வயதிருக்கும். ஆடம்பரமான ஆடைகள் இல்லை. மின்னும் வீடியோ வெளிச்சம் இல்லை. சொந்தபந்தம் இல்லை. மேளதாளம் இல்லை. அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றாலும் அவர்களுக்கு அது திருமணம்.

இந்த 20 மணிநேரங்கள் ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கை என்பது நத்தை வரைந்து செல்லும் ஒரு சின்னக் கோடு போலத்தான். ஒரு புள்ளியில் தொடங்கி மறு புள்ளியில் முடித்துக்கொள்கிறோம். இந்தச் சின்னக் கோட்டுப் பயணத்தில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம். எத்தனையோ கருத்தியல்களைக் கேட்கிறோம். ஒருசிலர் நாம் நினைப்பது போல இருக்கின்றனர். ஒருசிலரோடு நம்மால் ஒட்டவே முடிவதில்லை.

இன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது யெகோவோ விட்னஸ் க்ரூப் ஒன்று தங்களின் பைகளை சுமந்து கொண்டு வீடு திரும்பியது. இந்தப்பக்கம் ஒரு ஆலயத்தில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. மாலையில் சில பெண்கள் தங்களோடு பொழுதைக் கழிக்க ஆட்களை அழைத்துக்கொண்டிருந்தனர். மறுபக்கம் 'கற்பு' என்ற வார்த்தைப்பாடுதான் உண்மை என்று அருட்பணியாளர்கள் கூட்டம் ஒன்று. சிலர் பீட்சா விரும்பினர். சிலர் ஐஸ்கிரீம் சாப்பிட்டனர். சிலர் புகை பிடித்தனர். சிலர் அந்தப் புகை பிடிக்காமல் ஒதுங்கிச் சென்றனர். சிலர் பிச்சை எடுத்தனர். சிலர் பிஎம்டபிள்யு காரில் சென்றனர். சிலர் ரோமிற்கு வந்தனர். சிலர் ரோமை விட்டுச் சென்றனர். இந்த இரவில் சிலர் இறந்தனர். சிலர் பிறந்தனர். வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கின்றது. நான் உலகம் என நினைப்பதை எனக்கு அடுத்திருப்பவர் தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. எனக்கு அடுத்திருப்பவரின் உலகம் எனக்குப் புரிவதேயில்லை.

ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். வாழ்க்கை நம்மை பெற்றெடுத்திருப்பது போல நாம் வாழ்க்கையைப் பெற்றெடுக்கின்றோம். அந்த வாழ்க்கையை கொஞ்சுகின்றோம். அதோடு சிரிக்கின்றோம். ஒருகட்டம் வர அதை விட்டுவிட்டு ஓடுகின்றோம்.

இதில் கோபம் ஏன்?

எரிச்சல் ஏன்?

எதிர்பார்ப்பு ஏன்?

வாழ்க்கையை குழந்தையாகப் பெற்றெடுக்கும் அனைவருக்கும்

அன்னையர்தின வாழ்த்துகள்!


1 comment:

  1. 'அன்னையர் தினத்திற்கு' ஒரு வித்தியாசமான விளக்கம்.இதுவும் கூட நன்றாகத்தான் இருக்கிறது. பெற்றெடுக்கும் அனைவருமே அன்னையருக்குச் சம்ம்
    தானே!ஒரு பழுத்த ஞானியின் முதிர்ச்சி தெரிகிறது தந்தையின் எழுத்தில்.உண்மைதான்....ஒருமுறை மட்டுமே வாழப்போகும் இந்த வாழ்க்கையைக் கோபம்,எரிச்சல் போன்ற குணாதிசயங்கள் நரகமாக்கிவிடுகின்றன. அப்படியானால் அதை சொர்க்கமாக்கும் வழிதான் என்ன? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்!

    ReplyDelete