Sunday, May 17, 2015

அழைப்புக்கு ஏற்ப

'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.
முழு மனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும்
ஒருவரையொருவர் அன்புடன் தங்கி,
அமைதியுடன் இணைந்து வாழ்ந்து,
தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.'
(எபேசியர் 4:1-3)

இன்று காலை திருப்பலி முடிந்தவுடன் ஒருவர் என்னிடம் வந்து கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று சொன்னார். காலை உணவுகூட சாப்பிடவில்லையென்றாலும், சரி கொஞ்ச நேரம்தானே என்று அமர்ந்தால் சரியாக 49 நிமிடங்கள் பேசினார்.

குடும்பத்தில் உள்ள ஒரு உறவுப் பிரச்சினை.

அவரே பிரச்சினையையும் சொல்லிவிட்டு அவரே அதற்கான விடையையும் சொன்னார். ஆக, விடை சொல்லும் வேலை எனக்கு இல்லை.

உறவு என்பது ஐபேட் அல்லது டேப்ளட் மாதிரி என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் அவரே தொடர்ந்தார்.

இன்றைக்கு நாம ஒரு டேப்ளட் வாங்குறோம். கண்களுக்கு பார்க்க பளபளப்பாக இருக்கிறது. சார்ஜரில் போடுறோம். இந்த டேப்ளட்டை நன்றாகப் பயன்படுத்தி நிறைய கற்றுக்கொள்ளணும். ஃபோட்டோ எடுக்கணும். காலண்டர் பயன்படுத்தணும். அலார்ம் வைக்கணும். எல்லார் கூடயும் கான்டக்ட் வைக்கணும் என்று நிறைய எண்ணங்கள் அந்த இரவு முழுவதும் நம் மனதில் ஓடுகின்றன. விடிகிறது. காலையில் ஆசையாக எடுத்து அதை 'ஆன்' செய்கிறோம். 'சாம்சங்' என மின்னுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் அதன்மேல் நாம் கொள்ளும் மோகம் குறைகிறது. ஒரு வாரம் கழித்து அது 'ஆன்' ஆக மறுக்கிறது. சார்ஜ் வேகமாக இறங்குகிறது. இரண்டு வாரம் கழித்து செய்தித்தாள் பார்க்கிறோம். நாம் வாங்கிய மாடலுக்கு அடுத்த மாடல் டேப்ளட் நாம் வாங்கியதை விட குறைந்த விலையில் இருக்கக் கண்டு, 'ச்சே இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாமே!' என்கிறோம்.

நம்ம உறவுநிலையும் அப்படித்தான். இன்னைக்கு வாங்குன டேப்ளட் நாளைக்கு ஒர்க் ஆகலனு சொன்னவுடன், தூக்கிபோட்டுவிடுவது மாதிரி ஆட்களைப் போட்டுவிட முடியுமா என்ன?...என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியாரும் ஏறக்குறைய இதே கருத்தைத்தான் சொல்கின்றார்.

'நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்!'
அழைப்பு என்பது திருமணம் அல்லது குருத்துவம் மட்டுமல்ல. மாறாக, காலையில் எழுவது, சாப்பிடுவது, வேலை பார்ப்பது, படிப்பது, வீடு சுத்தம் செய்வது. துணி துவைப்பது, சமைப்பது என எல்லாம் அழைப்புதான்.

காலையில் எழுந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை மறந்துவிட்டு, 'ஐயோ! கல்யாணம் முடிச்சிருக்கலாமே!' 'ஐயோ! அந்த வேலைக்குப் போயிருக்கலாமே!' 'ஐயோ! அவனை மாதிரி இருந்திருக்கலாமே!' 'ஐயோ! இவன மாதிரி இருந்திருக்கலாமே!' என்று நினைச்சா
நம் அமைதியும் கெட்டு நாம் பிறரின் அமைதியையும் குலைத்துவிடுகிறோம்.


1 comment:

  1. இறைவன் எனும் தோட்டக்காரன் நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு பாத்திகட்டி அதில் நம்மை விதைத்து, நட்டுப் பயிர்செய்கிறார். ஆனால் மனித மனத்துக்கோ எப்பவுமே ' இக்கரைக்கு அக்கரை பச்சை தான்.' நிறைய ifs & buts வந்து நம்மைக் குழப்புவதும் நம் அமைதி கெடுவதற்கு ஒரு காரணம்தான்.அம்மாதிரி நேரங்களில் நமக்கு நாமே சொல்ல வேண்டியது..... "Bloom where you are planted." "எங்கு நடப்பட்டிருக்கிறாயோ அங்கு மலர்ந்து மணம் வீசு"... என்பதே. வாரத்தின் முதல்நாளில் நல்ல விதையை விதைத்த தந்தைக்கு நன்றி.

    ReplyDelete