Thursday, May 21, 2015

வாளியில் இருக்கும் நீர்த்துளி!

'இதோ வேற்றினத்தார்,
வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும்,
தராசில் ஒட்டிய தூசாகவும்
அவரால் கருதப்படுகின்றனர்...'
(காண்க. எசாயா 40:10-17)

இன்று காலை செபத்தில் இரண்டாவதாக இருந்த பாடலின் மேற்சொன்ன வரிகள் எனக்குப் பிடித்தன.

விவிலியத்தில் நாம் பல்வேறு உருவகங்களைக் காண்கிறோம்.

உதாரணத்திற்கு, ஆண்டவர் என் ஆயன் (திபா 23:1) என்று சொல்லும்போது அங்கே 'ஆயன்' என்பது உருவகம்.

உருவகம் என்பது மனித வாழ்வின் எதார்த்தத்தில் உதிப்பது. உருவகங்களைப் பற்றிய ஆய்வு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். உருவகங்களைப் புரிந்து கொள்வது என்பது ஒரு கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது. ஆடுகளையும், அவைகளை மேய்ப்பதையும் பற்றி அறியாத ஒரு சமூகத்துக்கு 'ஆயன்' என்பது பொருள்தருமா? இல்லை!

வாளியில் இருக்கும் நீர்த்துளி!
தராசில் இருக்கும் தூசி!

நம்ம வீட்டுக்கு வெளியில் குரோட்டன்ஸ் வைத்திருக்கிறோம் என நினைத்துக்கொள்வோம். வீட்டிற்குள்ளிருந்து தினமும் தண்ணீர் முகந்து கொண்டு சென்று அவைகளுக்கு ஊற்ற வேண்டும். ஊற்றி முடித்துவிட்டு அந்த வாளியை வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்கின்றோம். அந்த வாளியில் எப்படியும் சில தண்ணீர்த்துளிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். புதிதாய் வாங்கிப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் வாளியில் ஒருவேளை தண்ணீர் ஒட்டாமல் இருக்கலாம். ஆனால், வழக்கமாக சில தண்ணீர்த் துளிகள் ஒட்டி நிற்கும். இந்தத் தண்ணீர்த் துளிகளை நாம் ஒருபொருட்டாகக் கருதுவதில்லை. அவைகளை நாம் பார்ப்பதுகூட கிடையாது.

தராசில் இருக்கும் தூசி. இந்தத் தூசியினால் தராசின் நிறையில் பெரிய மாற்றம் வந்துவிடப்போவதுமில்லை.

வாளியில் இருக்கும் நீர்த்துளியும், தராசில் இருக்கும் தூசியும் மற்றவர்களால் பெரிய விடயமாகக் கருதப்படுவதில்லை. அவைகளால் மற்றவைகளுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை.

அதாவது, மொத்தத்தில் அவைகள் இருந்தாலும் ஒன்றுதான். இல்லையென்றாலும் ஒன்றுதூன்.

எதிரிகளை நாம் அழிக்க முடியவில்லை. அல்லது அவர்கள் நமக்குத் தொடர்ந்து இடறலாய் இருக்கிறார்கள் என்றாலும், நாம் இந்த உருவகத்தைப் பயன்படுத்தலாம். அவர்களை வாளியில் ஒட்டிய தண்ணீர்த்துளி போல அல்லது தராசில் ஒட்டிய தூசி போல நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு நம் வேலையைப் பார்க்கலாமே!


1 comment:

  1. பொதுவாக நமக்கு இடறலாயிருப்பவர்களை ' அவள் என் கண்ணில் விழுந்த துரும்பு' எனத்தமிழிலும், 'she is a pain in my neck' என ஆங்கிலத்திலும் வர்ணிக்கக் கேட்டிருப்போம்.இவை சற்று எதிர்மறையான கூற்றுகள் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை.ஆனால் இன்றைய வலைப்பதிவில் வரும் ' வாளியின் நீர்த்துளியும், தராசின் தூசும் சிறிது மாறுபட்ட கருத்தைச் சொல்கின்றன.ஆம், அவர்களை நினைத்து நம் மன அமைதியை நாம் ஏன் இழக்க வேண்டும்? அவர்களுக்கு மரியாதை வாளியின் நீர்த்துளிக்கும்,தராசின் தூசுக்கும் உள்ள அளவே என நினைத்து நம் வேலையைப் பார்க்கலாம் தான்! மாறுபட்ட, ஒரு நேர்மறையான கருத்தைக் கூறிய தந்தைக்கு நன்றி!!!

    ReplyDelete