Monday, May 11, 2015

ஜன்னல்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரோஸிப்பாட்டிக்கு நன்மை கொண்டு செல்வேன். ரோஸிப்பாட்டி என் ரசிகை. நான் அவரது ரசிகன். அவருக்கு வயது 87. தன் 35வது வயதில் கணவரை இழந்தவர். மூன்று குழந்தைகளின் தாய். கணக்கு ஆசிரியை.

இன்று பித்தாகரஸ் தியரம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு தாத்தாவை கேரம் போர்ட் விளையாண்டு உயிர் கொடுக்கும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போல, கணிதம் பற்றிக் கேட்டால் உடனே எழுந்து உட்கார்ந்துவிடுவார். அழகாகச் சொல்லிக் கொடுத்தார் தியரம்.

முடித்துவிட்டு நம்ம வாழ்க்கைக்கு தியரம் இல்லை.

வாழ்க்கை ஒரு ஜன்னல் என்று அவரது பாட்டி சொல்வாராம்.

அதாவது, ஜன்னல் வழி பார்க்கும்போது நமக்குக் கொஞ்சம்தான் தெரியும். வாழ்வில் நமக்குத் தெரிவது இவ்வளவுதான். ஆனால், நாம் பார்ப்பதுதான் எல்லாம் என்றும், நாம் பார்ப்பதைத்தான் எல்லாரும் பார்க்கிறார்கள் அல்லது பார்க்க வேண்டும் எனவும் நினைக்கின்றோம்.

ஜன்னலிலிருந்து விழுவது போலத்தான் இறப்பு. மேல்மாடியிலிருந்து கீழ்மாடி வரைக்கும் தான் நம் வாழ்க்கை. ஆனால், மேல்மாடிக்கு மேலும், கீழ்மாடிக்குக் கீழும் இன்னும் தூரம் இருக்கின்றது. இறப்பு நம்மை இந்த தூரத்தோடு நம்மை இணைத்துவிடுகிறது.

இப்படிச் சொல்லிவிட்டு லேசாக கண்ணீர் வடித்தார்.

ஒவ்வொரு வாரமும் நாம் சந்திப்பது இதுவே இறுதி முறையாகக்கூட இருக்கலாம். ஆனால் நீ இங்கே வருவதைத் தவிர்த்துவிட வேண்டாம் என்று சொல்லி அனுப்புவார்.

இன்று அவரது வீட்டிலிருந்து என் அறைக்குத் திரும்பும்போதும் என் கண்களும் ஏனோ கசிந்தன.



1 comment:

  1. என்னாச்சு ஃபாதர்? ரொம்ப சீரியஸாயிட்டிங்க?இன்றையப்பதிவின் ரோஸிப்பாட்டி என் கண்களையும் கசிய வைத்துவிட்டார்.இறப்பைப்பற்றிய எத்துணை பெரிய த்த்துவத்தை போகிற போக்கில் உணர்த்தியுள்ளார்.உண்மைதான்....நம்மில் பலர் நிகழ்காலத்துக்கு மட்டுமே நியாயம் செய்கிறோம்.பிறப்பிற்கு முன் எங்கிருந்து வந்தோம்; இறப்பிற்குப்பின் எங்கே போகப்போகிறோம் என்கிற நினைவும் நம் கூடவே பயணித்தால் வாழ்க்கை நமக்கு இன்னும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாகத் தெரியலாம்.ஏனெனில் வயதை வைத்து வருவதில்லை ஒருவருக்கு முடிவு.ரோஸிப்பாட்டிக்கும்,தங்களுக்கும் என் அன்பும், வணக்கமும்.இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!

    ReplyDelete