Saturday, May 16, 2015

தொட்டும், தொடாமல்

நேற்றைய தினம் ஒரு ஆன்லைன் செய்தித்தாளில் விமானத்தில் மனிதன் போன காலம் போய், மனிதனே விமானமாக மாறும் காலம் விரைவில் வருகிறது என்ற ஒரு கட்டுரை வாசித்தேன். கடந்த ஆண்டு துபாயில் நடந்த எக்ஸ்போவின் போது இரண்டு பேர் தங்கள் உடலில் ஜெட் பொருத்திக் கொண்டு துபாய் பாலைவனத்தையே கடந்து சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை பிற்காலத்தில் நம் மனுக்குலத்தின் புதிய மைல்கல்லாக அமையும் என எழுதியிருந்தார் ஆசிரியர்.

மனிதன் முதன் முதலாக விண்வெளியில் காலடி எடுத்து வைத்தபோது, அப்போதையு அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அவர்கள் சொன்னதை நீங்கள் நிறைய இடங்களில் வாசித்திருக்கலாம்:

"That's one step for man, but a giant leap for mankind!"

இது நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னது என்றும் சொல்கிறார்கள். நிலாவிற்கு அமெரிக்க ஆட்களை அனுப்பிய நிகழ்வே நாசாவின் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட வீடியோதான் என்ற கருத்தும் நிலவுகிறது.

நிலாவைத் தொட்ட மனிதர்கள், என்ஜினை இறக்கையாகப் பயன்படுத்தி பறந்த மனிதர்கள் வரிசையில் வருவது விண்ணேற்றம் அடைந்த இயேசு. ஆனால் இவர்கள் எல்லாம் ஒன்றா?

இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இது பல இடங்களில் மக்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் விண்ணேற்றம் அவருக்கு அவசியமோ இல்லையோ சீடர்களுக்கு அவசியமாக இருந்தது. எருசலேமில் இயேசு விண்ணேற்றம் அடைந்த இடம் என்று மூன்று இடங்கள் உள்ளன. எங்கிருந்து, எப்படிப் போனார் என்பது நம் எண்ண ஓட்டத்திற்கு அப்பாற்பட்டது.
கீழே வந்தவர் மேலே ஏறிச் செல்ல வேண்டும் - இதுதான் லாஜிக்.

பறப்பது என்பது ஒரு சுதந்திரம். விமானத்தில் பயணம் செய்யும்போது நம்மை ஒருவிதம் ஆச்சர்யம் தொற்றிக்கொள்ளக் காரணமும் இதுதான். சில மணி நேரங்கள் நமக்கும், பூமிக்கும் உள்ள தொடுதல் துண்டிக்கப்படுகிறது. இந்த சுதந்திரம் நமக்கு த்ரில்லாக இருக்கிறது.
ஆக, ஒட்டிக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியம் துண்டிக்கப்படுவதும்தான்.

'இது என் குழந்தை' என்று ஒரு தாய் சொல்லிக் கொண்டு அதனோடு உள்ள தொப்புள்கொடியை அறுக்காமல் இருந்தால், அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாகிவிடாதா? ஆக, துண்டிக்கப்படுதல் இங்கே இருவரின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது. மற்றொரு பக்கம், தொட்டுக்கொண்டிருக்கிற நிலையில் உள்ள தொடர்பு அறுந்துவிட்டாலும், தொட்டுப்பார்க்க முடியாத உணர்வு நிலையில் ஒரு தாய் தன் குழந்தையோடு இணைந்தேதான் இருக்கிறார்.

இதுபோலவே, விண்ணேற்றத்தில் இயேசுவுக்கும், சீடர்களுக்குமான தொப்புள் கொடி உறவு அறுக்கப்படுகிறது. இனி சீடர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும். தொட முடியாத உணர்வாக தூய ஆவியானவர் வருவார்.

தொட்டும், தொடாமல் உறவு தொடரும். தொடர வேண்டும்.

அனைவருக்கும் விண்ணேற்ற பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!


1 comment:

  1. அழகான பதிவு.விண்ணகத்திற்கு இயேசு எடுத்துக்கொள்ளப்படுவதை தாயின் தொப்புள் கொடி அறுத்துக் குழந்தை வெளிவருவதோடு ஒப்பிட்டிருப்பது யோசிக்க வைக்கிறது.உடல்வழித்தொடர்பு அறுந்து போயினும் உண்ர்வு நிலையில் குழந்தை தாயோடு ஒட்டியே இருப்பதை, சீடர்களுக்குத் தொடமுடியாத தூரத்தில் 'தூய ஆவியானவர்' உணர்வாக வருவதோடு சமநிலைப்படுத்தியிருப்பது ஹைலைட். விண்ணேற்றப்பெருநாள் நம் எண்ணங்களையும் விண்ணை நோக்கி எடுத்துச்செல்லட்டும்....

    ReplyDelete