Wednesday, May 27, 2015

நாமும் கடவுளே!

'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெறமாட்டாய்.
'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது.
நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்.
உன் நாடு 'பெயூலா' என்று பெயர் பெறும்.
ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்.
(எசாயா 62:4)

இன்றைய (வாரம் 4, புதன்) காலை செபத்தின் இரண்டாம் பாடலாக இருக்கிறது இந்த இறைவாக்குப் பகுதி.

திருமணம் என்ற நிகழ்வு வழியாக அல்லது திருமணத்தை உருவகமாக வைத்து இஸ்ரயேலைப் பார்த்துப் பேசுகின்றார் யாவே இறைவன்.

யூத மரபில் இன்றும் மணத்துறவு என்பது கிடையாது. மணமுடித்தலும், மணமுடித்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளுதலும் வாழ்வின் உச்சகட்ட வெற்றியாக கருதப்பட்டது. இந்தப் பின்புலத்தில் பார்த்தால்தான் மேற்காணும் இறைவாக்குப் பகுதியின் சொல் விளையாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நான்கு எபிரேய வினைச்சொற்கள் இங்கே பயன்படுத்தப்படுகின்றன - 'அசாவ்' (கைவிடுதல்), 'ஷமாம்' (காய்ந்து போதல்), 'ஹஃபாட்ஸ்' (மகிழ்ந்திருந்தல்) மற்றும் 'பஆல்' (மணமுடித்தல்). கைவிடுதல் மற்றும் காய்ந்து போதல் வழக்கமாக நிலத்தைப் பற்றிப் பேசுவதற்கான வினைச்சொற்கள். ஆக, பெண் என்பவளை நிலம் என்று உருவகப்படுத்துகிறார் ஆசிரியர். எசாயா 62 முழுவதும் இஸ்ரயேல் நாடு அல்லது நிலம் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பற்றித்தான் பேசுகின்றது.

ஆக, கைவிடப்பட்டு, காய்ந்து போய்க்கிடக்கும் நிலத்தை ஆண்டவர் தன் உரிமைச்சொத்தாக்கிக் கொள்ள விழைகின்றார்.

நம் மனம் என்னும் நிலம் அடிக்கடி இப்படி கைவிடப்பட்டு, காய்ந்து போவதுண்டு.

நம்மைத் தேடி இறைவன் வருவார் என்று நான் சொல்லவில்லை. இப்படி கைவிடப்பட்டு, காய்ந்து போன மனம் என்னும் நிலங்களை நாம் தேடிச்சென்றால், நாமும் கடவுளே!


1 comment:

  1. பொதுவாக நாம்ஏசாயாவின் இறைவாக்குப் பகுதிகளை வாசிக்கையில் பல இடங்களில் அவை நம்மை மிரட்டுவது போலிருப்பினும் நம் உள்ளத்தை ஊடுருவிப்பாய்ந்து நம்மை ஆட்கொள்ளும் பகுதிகளும் அதை விட மேலாக இருக்கின்றன.இன்றையப் பகுதியும் அப்படிப்பட்ட ஒன்றுதான்." நம் மனம் என்னும் நிலம் கைவிடப்பட்டுக் காய்ந்து போகும்போது நம்மைத்தேடி இறைவன் வருவார் என்று சொல்லவில்லை; மாறாக இப்படிப்பட்ட கைவிடப்பட்ட, காய்ந்துபோன நிலங்களை நாம் தேடிச் சென்றால் நாமும் கடவுளே!"....... கொன்னுட்டீங்க ஃ்பாதர்! இப்படி எதையுமே வித்தியாசமாக பார்ப்பதும் தங்கள் வெற்றிக்கு ஒரு காரணம்.... வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete