Friday, May 29, 2015

இன்றும் என்றும் இருப்பர்!

'முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்.
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவும் இல்லை!'
(சபை உரையாளர் 1:9)

இன்று எங்களுக்குக் கல்வி ஆண்டின் இறுதி நாள்.

எங்களின் எபிரேய ஆசிரியர் க்ரோசனோஸ்கி. போலந்துக்காரர். வயது 40 இருக்கும். ரொம்ப கூலாக சொல்லிக் கொடுப்பார். இவர் சொல்லிக் கொடுக்கும் விதம் பல மாணவர்களுக்குப் பிடிப்பதில்லை. 'அவர் எங்களுக்கு வேண்டாம்!' என்று புகாரும் கொடுத்துவிட்டனர். ஆனால் அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

அவர் முதன்முதலாக வைத்த தேர்வில் எனக்கு மதிப்பெண் தர மறந்துவிட்டார். அன்று புதிய வகுப்புகள் தொடங்கும் நேரம். மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டும்தான் உள்ளே நுழைய முடியும். எல்லாரும் போய்விட்டார்கள். நான் மட்டும் வெளியே நின்றேன். 'என்ன வெளியே நிற்கிறாய்?' என்றார். 'என் மதிப்பெண் இன்னும் வரவில்லை!' என்றேன். அப்போதுதான் அவர் தான் செய்த தவறை நினைவுகூர்ந்தார். என் பேப்பரை திருத்தாமலே வைத்துவிட்டாராம். 'உன் பேப்பரை வைத்துதான் எல்லா பேப்பரையும் திருத்தினேன். ஆனால், உன் பேப்பரை திருத்த மறந்துவிட்டேன்!' என்றார். 'மன்னித்துக்கொள்!' என்று தோளில் கைபோட்டவர் என்னை வகுப்பறைக்குள் அழைத்துச்சென்றார்.

இந்த இறுதி நாளில் நான் நன்றியோடு நினைவுகூறும் பலரில் இவரும் ஒருவர்.

வகுப்பிற்கு யாராவது வரமுடியவில்லை என்று இவரிடம் அனுமதி கேட்டால் இவர் சொல்வது இதுதான்:

'There is Nothing New Under the Sun' (Eccl. 1:9)

நான் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. எல்லாம் உனக்குத் தெரிந்ததுதான்! என்று அவர் சொல்லும்போது ஒரே நேரத்தில் தனக்கு எல்லாம் தெரியாது என்ற அவரின் தாழ்ச்சியும், மாணவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்று ஏற்றுக்கொள்ளும் தாராள மனமும் தெரியும்.

வாழ்வில் எதுவும் புதிதில்லை! என்பது எதிர்மறையான சொல்லாடலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சபை உரையாளரின் இந்த வார்த்தைகள் சொல்வது என்னவென்றால், எதுவும் புதிதல்ல என்பதால் எதன்மேலும் அதீத ஆசையும், பற்றும். கொள்ள வேண்டாம் என்பதுதான்.
மேலும் இன்று ஒரு சோகமான நாள். என் பங்கில் எனக்குப் பிடித்தமான பாட்டி திருமதி. மரூசா அவர்கள் நேற்று இரவு இறந்துவிட்டார்கள். இன்று காலை அவரின் அடக்கத்திருப்பலி. வகுப்புகள் இருப்பதால் அடக்கத்திற்குச் செல்ல முடியவில்லை.

என்ன ஒரு ஒற்றுமை! இவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளும் இவைதான்:

'முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்.
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவும் இல்லை!'

அந்தப் பேராசிரியரும், இந்த மரூசாவும், இன்றும் என்றும் இருப்பர்!

1 comment:

  1. சபை உரையாளரின் வார்த்தைகளை வாழ்வாக்கிய தங்களின் போலந்து விரிவுரையாளருக்கு என் சலூய்ட்! தங்களின் பாசத்துக்குரிய மரூசா பாட்டி அவர்களுக்கு சலூய்ட்டுடன் கூடிய ஒரு அஞ்சலியும் கூட.உண்மைதான்....ஆதியாகமத்தின் ஆறு நாட்களிலேயே அனைத்து அண்டசராசரங்களையும் படைத்துவிட்ட ஆண்டவனுக்கு முன்னால் 'புதியது' என்று எது நிற்க முடியும்??? தந்தையே! தங்களது சோகத்தில் எங்களுக்கும் பங்குண்டு.கவலை வேண்டாம்.....

    ReplyDelete