Thursday, May 14, 2015

பரிசுச் சீட்டு

நீங்க என்னைக்காவது பரிசுச் சீட்டு வாங்கியிருக்கீங்களா?

அல்லது உங்களுக்கு லாட்டரி அல்லது குலுக்கல் பரிசு விழுந்திருக்கா?

நேற்று மாலை எங்கள் பங்கின் 'நண்பர்கள் இயக்கம்' (70 வயதைத் தாண்டிய இருபாலருக்கான நட்பு இயக்கம்) இணைந்து இரவு உணவிற்கு வெளியே சென்றோம். கடந்த வாரம் அவர்களுக்குள் நடைபெற்ற பரிசுக் குலக்கல் பற்றி பேச்சு வந்தது. 90 சீட்டுகள் விற்றதில் மொத்தம் 3 பரிசுகள். 3 பரிசுகளுமே இந்த இயக்கத்தோடு தொடர்பு இல்லாதவர்களுக்கே விழுந்தன.

எங்க ஊர்த் திருவிழாவிலும் பரிசுக் குலுக்கல் இருந்ததுண்டு. 20000 சீட்டுகள் விற்பனையாகி பரிசுக் குலுக்கல் நடக்கும் இடத்தில் ஒற்றைப் பரிசுச் சீட்டை வாங்கிக்கொண்டு நானும் என் தங்கச்சியும் இரவு சாப்பிடாமல் கூட குலுக்கல் விழாவில் போய் காத்துக்கிடந்ததுண்டு.

இலவம் காய் பழுக்கும் என்று நினைத்துக்கொண்டு காவல் காக்கும் கிளி அது வெடித்து பஞ்சாய் பறக்கத்தான் செய்யும், பழுக்காது என்று பார்த்து, பரிதவித்து வேறு பக்கம் பறந்து செல்வது போல,
நெடுநேரம் கழித்து வெறுங்கையராய் வீடு திரும்புவோம் அன்று.

நம்ம ஊர்களில் லாட்டரி வந்த நேரம், 'விழுந்தால் வீட்டுக்கு! விழாவிட்டால் நாட்டுக்கு!' என்று அறிமுகம் செய்தார் அப்போதைய முதல்வர் அண்ணாதுரை.

'லாட்டரி ஒரு சூதாட்டம்' என்று நம் அரசு சொன்னாலும், இன்றும் சின்னச் சின்ன அளவில் அது நடந்து கொண்டேதான் இருக்கின்றது. இந்த லாட்டரியை வைத்து நிறைய ஊழலும் நடந்திருக்கின்றது. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் மதுரை காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டான்ட் சென்றால் எங்கு பார்த்தாலும் 'கே.ஏ.எஸ்' என்று எழுதப்பட்டிருக்கும். பூடான், நேபாள் என்று லாட்டரி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தவர் இந்த கே.ஏ.எஸ். ஆனால், பெரிய ஊழல் செய்து மாட்டிக்கொண்டார்.

இந்த லாட்டரியில என்னன்னா, நம்ம முதலீடு மிகவும் குறைவு. ஆனால் பலன் அதிகம். 10 ரூபாய் முதலீடு செய்தால் 10 கோடி பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தப் பத்துக்கோடியில் கோடிப்பேரின் 10 ரூபாய் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
லாட்டரி என்று சொல்லும்போது 'லக்' அல்லது 'அதிர்ஷ்டம்' என்று ஒன்று சேர்ந்து வருகின்றது. இந்த 'லக்' குட் லக் என்றும், பேட் லக் என்றும் கூட சொல்லப்படுகின்றது.

நமக்கு அருகில் இருப்பவருக்கு லாட்டரி விழுந்து நமக்கு விழாமல் இருக்கும்போது நம் மனம் எவ்வளவு பாடுபடுகின்றது? 'எனக்கென்ன குறை!' 'ஏன் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை!' என்று கூட நாம் குறைபட்டுக்கொள்கின்றோம்.

இந்த லாட்டரியைப் பற்றி எழுத இன்று என்ன தேவை என்று கேட்கிறீர்களா?

இன்று தூய மத்தியாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

திருத்தூதர் பணிகள் 1:24-25ல் வாசிக்கின்றோம் இவரைப்பற்றி. இயேசுவின் சீடர் யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தற்கொலை செய்து கொண்டு இறந்தும் விட்டதால் அவருடைய இடத்தை நிரப்ப ஒரு ஆளை எடுக்க வேண்டும். இப்போ ரெண்டு பேரை ரெண்டு க்ரூப் முன்வைக்கின்றார்கள். எப்படி ஒரு ஆளை எடுத்து மற்றவரை விடுவது? சீட்டுக் குலுக்கிப் போடுகின்றனர். சீட்டு மத்தியா பேருக்கு விழுகின்றது. திருத்தூதரில் ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்.

இன்றும் பூ போட்டுப் பார்க்கும் பழக்கம் சில இந்து சிற்றாலயங்களில் இருக்கின்றது.

லாட்டரியில ஒரு ஆபத்தும் இருக்கிறது.

உதாரணத்திற்கு வீட்டுல ஒரு டிரான்சிஸ்டர் இருக்குணு வச்சிக்குவோம். விளையாடிக்கொண்டிருக்கும் நம்ம குழந்தையின் கை பட்டு கீழே விழுந்து டிரான்சிஸ்டர் உடைஞ்சிடுச்சு. ஒருவேளை அதை நாம் காசு போட்டு வாங்கியிருந்தா ரொம்ப வருத்தப்படுவோம். அல்லது குழந்தையை அடிப்போம். ஆனா, அந்த டிரான்சிஸ்டர் நமக்கு பரிசு குலுக்கலில் கிடைத்தது என்றால் என்ன செய்வோம்? 'அது குலுக்கல்ல விழுந்ததுதான! போனா போய்ட்டு போகுது!' என்று விட்டு விடுவோம்.

திருத்தூதர் மத்தியாவிற்கு இப்போது பெரிய சவால். நல்லா பணி செய்யலனா என்ன சொல்வாங்க? 'இந்தப் பய லாட்டரியில வந்தவன்தான!' அப்படின்னு ரொம்ப ஈஸியா சொல்லிடுவாங்க.
இவர் நன்றாகப் பணி செய்ததாகவே தொடக்கத்திருச்சபை நூல்கள் சொல்கின்றன.

இன்றும் கேசினோ, லாஸ் வேகாஸ், மொபைல் ஃபோன், ஐடியூன்ஸ் என எல்லா தளங்களிலும் லாட்டரியும், பரிசும் இருக்கவே செய்கின்றது.

பரிசு குலுக்கல், லாட்டரி எல்லாம் நம் நம்பிக்கையின் குட்டிகள்!

1 comment:

  1. இன்றையப் பதிவைப் படிக்கையில் என் மனம் துள்ளிக்குதிப்பதை உணர்ந்தேன்.காரணம் நான் கூட லாஸ் வேகாஸின் காஸினோக்களில் சூதாடி(??!!) கை நிறையக் காசை அள்ளியிருக்கிறேன்.அப்பொழுது அது பாவமா, புண்ணியமா என்ற நினைப்பை விட 'நான் ஜெயிக்கிறேன்'என்ற நினைப்பு தான் மேலோங்கி நின்றது. ஆனால் இது சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை 'மத்தியாஸின்' தேர்ந்தெடுத்தலோடு ஒப்பிட்டிருப்பது வினோதமாக இருந்தது.ஒன்று மட்டும் உறுதி.....நுழைந்த வாயில் எப்படிப்பட்டதாயிருப்பினும் தான் தேர்ந்தெடுக்க்ப்பட்ட வேலைக்கு வஞ்சகம் செய்திருக்க மாட்டார் இந்தத் திருத்தூதர்......

    ReplyDelete