Monday, May 25, 2015

இன்னைக்கு என்ன கிழமை?

நேற்று நாப்போலி நகர் தமிழ்க் குழுமத்திற்கான முழு இரவு செபத்திற்குச் சென்றிருந்தேன். நேற்று முன்தினம் புதிய இடத்தில் தூக்கம் வராததாலும், புதிய கட்டிலின் அலர்ஜியால் உடலெல்லாம் அரித்துக்கொண்டிருந்ததாலும் அரை செட்ரிசின் எடுத்துவிட்டு நன்றாகத் தூங்கினேன். செட்ரிசின் போட்டால் ஒரு வாரத்திற்குத் தூக்கம் வரும் என்பது செட்ரிசின் போடுபவர்களுக்குத் தெரியும். நேற்று பகல் முழுவதும் தூங்கினேன்.

நேற்று இரவு 9 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை (9 மணி நேரங்கள் செப வழிபாடு). ஏறக்குறைய 80 பேர் இருந்தார்கள்.

முழு இரவு செபம் நடத்துவது எனக்கு முதன்முறை. முதலில் நான் விழித்திருக்க வேண்டும். இரண்டாவது, 80 பேரையும் விழித்திருக்க வைத்திருக்க வேண்டும்.

நம்ம ஊருல ஆட்களை விழிக்க வைத்திருப்பது எளிது. இரவின் புழுக்கம் மற்றும் கொசுத் தொந்தரவு இருந்தால் போதும். ஆட்களை விழித்திருக்க வைத்துவிடலாம். ஆனால் இங்கே இந்த இரண்டும் இல்லை. வெளியில் மழைச்சாரல் வேறு. ஆக, விழித்திருப்பதும், விழித்திருக்க வைப்பதும் பெரிய சவாலாக இருக்கும் என நினைத்தேன்.

இரவு முழுவதும் செபித்த அனுபவம் மற்றும் செபத்தை வழிநடத்திய அனுபவம் இனிமையாக இருந்தது. இடையில் இரண்டு பிரேக். பிரேக்கில் வடை, காஃபி, பிஸ்கட் என்று கொடுத்ததால், பிரேக்கிற்குப் பின் தூக்கம் சிலரின் கண்களைத் தழுவவே செய்தது. இருந்தாலும் தூங்கவில்லை அவர்கள்.

சிலருக்கு இந்த செப அனுபவம் புதிய அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்கள்.

'நாலு பேருக்கு நல்லதுன்னா...' ஓகேதான்...

இன்று காலை 6:30 மணிக்கு ட்ரெயின் ஏறி மீண்டும் ரோம் வந்து சேர்ந்தேன். இங்கும் இன்று தொடர்ந்து திருப்பலிகள். இன்று எங்கள் பங்கில் சேல்ஸ் டே வேறு. வேலை நாக்குத் தள்ளிவிட்டது.

இன்று காலை ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தபோது இடைப்பட்ட நிறுத்தத்தில் ஆப்பிரிக்க இளைஞன் ஒருவன் ஏறினான். இடித்துப் பிடித்து என் அருகில் உட்கார்ந்தான். அங்கேயே உடை மாற்றினான். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்தில் டிக்கெட்-செக்கிங் ஆஃபிசர் வந்தார். என் டிக்கெட்டைக் காட்டினேன். அவனிடம் டிக்கெட் இல்லை. 'டிக்கெட் எடுக்கிறாயா?' அல்லது 'ஃபைன் கட்டுகிறாயா?' என்று கேட்டார். இரண்டுக்கும் அவனிடம் பணமில்லை. அவன் சுற்றியிருக்கும் எல்லாரையும் பார்த்தான். சட்டென்று எல்லாரும் மறுபக்கம் திரும்பிக்கொண்டார்கள். என்னைப் பார்த்தான். 'நான் எடுக்கவா?' என்று கேட்க வேண்டும்போல இருந்தது. ஆனால் நானும் மற்றவர்களைப் போல திரும்பிக் கொண்டேன். அவனை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிடுவதற்காக அழைத்துச் சென்றார் ஆஃபிசர். அவன் போனவுடன் ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசினார்கள்: 'இந்த ஆப்பிரிக்கர்கள் எல்லாம் இப்படித்தான்!' என்றாள் ஒரு பெண். 'ஆமாம்!' என வேகமாக ஆமோதித்தார் ஒரு கோர்ட் போட்ட ஆண். 'இவர்கள் திருடவும் செய்வார்கள்!' என்றாள் மற்றொருத்தி. 'ஏன் நீங்க திருடுனதெல்லாம் தெரியாதா!' என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அவன் போனபிற்பாடு சில நிமிடங்கள் மனது எதிலும் லயிக்கவில்லை.

'அவன் யார்?' 'அவன் பெற்றோர் யார்?' 'அவனுக்கு கூட பிறந்தவர்கள் யாருமில்லையா?' 'அவன் இப்படி பிறந்தது அவன் செய்த குற்றமா?' 'அவனுக்காக யாரும் பரிதாபப்பட மாட்டார்களா?'
'அவன் எனது இடத்திலும், நான் அவனது இடத்திலும் இருந்தால் எப்படி இதை எதிர்கொண்டிருப்பேன்' என நிறைய கேள்விகள்.

'நேற்று இரவு தூய ஆவியானவர் வரவில்லை!' என்றே எனக்குத் தோன்றியது.

ரோமில் இறங்கிக்கொண்டிருந்தபோது என்னுடன் இறங்கிக் கொண்டிருந்த இருவர் பேசிக்கொள்கின்றனர். இருவருமே கிறிஸ்தவப் பெயர் கொண்டவர்கள்.

'இன்னைக்கு என்ன கிழமை?'

'ஞாயிற்றுக்கிழமை!'

விடிய விடிய தூய ஆவியானவரே வாரும் என்று குரலெழுப்பி செபித்து, தூங்காமல் சிவந்த கண்களோடும், வறண்ட மேனியோடும், கதகதப்பான உடலோடும் அடுத்த மெட்ரோவை நோக்கி நடந்த எனக்கு இப்படித் தோன்றியது:

'விடிய விடிய பெந்தேகோஸ்தே பெருவிழா கொண்டாடினாலும், எனக்கு அருகில் இருப்பவருக்கு இன்று எந்த கிழமை என்று கூட தெரியவில்லை. எனக்கு உலகம் எனத் தெரிவது எனக்கு அடுத்திருப்பவருக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லையே!'

அந்த ஆப்பிரிக்க இளைஞன் இரவு எங்கே சாப்பிடுவான்?


1 comment:

  1. நம்மைச்சுற்றியுள்ளவர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் ஒருவன் டிக்கெட் எடுக்காமல் பிரயாணம் செய்கிறான் என்பதும்,மற்றொருவருக்கு கிழமை என்ன என்று தெரியவில்லை என்பதும் நாம் குரலெழுப்பிக் கூப்பிடும் போது தூய ஆவி நம்மிடம் வருவதை எப்படித் தடை செய்ய முடியும் என்று தெரியவில்லை.மிஞ்சிப் போனால் உங்களால் அந்த இளைஞனுக்கு ஒரு டிக்கெட் எடுத்திருக்க முடியும்.அதைச் செய்ய முடியாதபோது தூய ஆவி என்ன செய்வார் பாவம்.....புரிகிறது....தந்தையின் தூக்கமின்மை ரொம்பவே தங்களைப் பாதித்திருக்கிறது......

    ReplyDelete