Monday, May 11, 2015

அம்மா நீங்க நல்லவங்க!

18 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு 3 நிமிடங்களில் முடிந்துவிட்டது. ஜெயா நிரபராதி என்றும் அவருடைய சொத்துக்கள் எல்லாம் நெற்றி வியர்வை நிலத்தில் விழ அவரே சம்பாதித்தது என்றும், அவர்மேல் எழுந்த குற்றச்சாட்டு மற்றவர்களின் பொறாமையின் விளைவு என்றும் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி. ஆமாங்க ஐயா! குமாரசாமி! நீங்க சொல்றதெல்லாம் நாங்க நம்பிட்டோம்!

கடந்த வாரம் குடிபோதையில் வாகனம் ஏற்றி ஒருவரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றாலும் சல்மான்கான் சிறைக்குச் செல்லாமலேயே 30ஆயிரம் ரூபாய் கட்டி ஜாமீன் எடுத்துவிட்டார்.
வாழ்க நீதிமன்றங்கள்!

நிறைய காசும், நிறைய அதிகாரமும் இருந்தால் சட்ட தேவதையின் கண்களை இன்னும் இறுக்கிக் கட்டிவிடலாம்.

'ஜெயா மீண்டும் முதல்வராக ஆவார்!' என்பதில் ஒரே சந்தோஷம் என்னன்னா, இந்த பாழாய்ப்போன பன்னீரிடமிருந்து நமக்கு விடுதலை. ஒன்னுமே செய்யாம ஒருத்தர் உட்கார்ந்து வெறும் துதி பாடிக்கொண்டும், காவடி தூக்கிக்கொண்டும் இருந்தால் மக்களுக்கு சோறு கிடைக்குமா?

இந்தக் காவடி ஆட்டங்களும், பால் குடங்களும்தான் ஜெயாவை விடுதலையாக்கின என்று கோஷம் வேறு. காக்கா உட்கார்ந்து பனம்பழம் விழுந்த கதையா இருக்கு இது.

இந்தத் தீர்ப்பு வெளியானபின் என் நண்பர்கள் சிலர் ரொம்ப கோபமா எரிச்சலோடு சத்தம் போட்டார்கள். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. ஜெயா சிறையில் இருப்பதினாலோ, அவர் வெளியில் இருப்பதினாலோ நமக்கு ஒன்றும் ஆவதில்லை. நாம் வேலை செய்தால்தான் நமக்கு சாப்பாடு.

நம்ம ஊர்ல எப்படி இருந்தால் இனி வாழலாம் தெரியுமா?

ஒரு சின்ன தோட்டம். அந்தத் தோட்டத்தின் மையத்தில் ஒரு கிணறு. அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளாத கீரை. ஒரு சிறிய கோழிப்பண்ணை. ஒரு பால் மாடு. இவைகள் தரும் உணவு நம் வாழ்வாதாரமாக இருக்க வேண்டும். நம்ம தோட்டத்தை விட்டு வேறெங்கும் போகக் கூடாது. ஒரு சின்ன டிவி. பொழுது போக்க. ஆனா, அதுகூட வேண்டாம். வெளியில் உள்ள செய்திகள் தெரிந்தால் நமக்கு எரிச்சல் அல்லது கோபம் வந்து ரத்த அழுத்தம்தான் கூடும். ஒரு சைக்கிள். பக்கத்து ஊருக்குப் போய்வர. நம் உறவினர்களோடு இனிமையான பேச்சு. நம்ம ஊர் திருவழா. வானத்தில் தெரியும் சூரியன். அவ்வளவுதான். இப்படி இருந்தால் நமக்கு ஜெயாவும் தேவையில்லை. கலைஞரும் தேவையில்லை.

குமாரசாமியின் இந்தத் தீர்ப்பு மறைமுகமாக என்னவெல்லாம் செய்யும்?

அ. இந்து-கிறிஸ்தவர் பிரிவினைக்கு வித்திடும். தண்டனை விதித்த குன்ஹா நீதிபதியாகப் பார்க்கப்படாமல் ஒரு கிறிஸ்தவராக மட்டுமே பார்க்கப்படுவார். அவரைப் பழிவாங்குவதற்காக அதிமுக மடையர்கள் கிறிஸ்தவர்களைப் பழிவாங்க முயல்வர்.

ஆ. ஊழல் செய்தது ஊருக்தே தெரிந்தாலும், நிரூபிக்க முடியவில்லையென்றால் அது ஊழல் அல்ல. ஆக, நான் உயிரோடு இருந்தாலும், எனக்கு இறப்பு சான்றிதழ் இருக்கின்றது என்றால் நான் இறந்துவிட்டேன் என்றுதான் பொருள். மாட்டிக்கொள்ளாதவரை குற்றம் குற்றமே அல்ல. தப்பு செய். ஆனா, மாட்டிக்காத என்பதுதான் புதிய ஆத்திசூடியாக இருக்கும்.

இ. யாரும் ஊழல் செய்யலாம். தலைமையிலிருந்து, கீழே வேலை செய்யும் ப்யூன் வரை. அவரவருக்கு ஏற்ற நிலையில் சொத்துக்களை சேர்த்துக்கொள்ளலாம். ஊழல் செய்வதும் ஒருவகை உழைப்பு என்று கருதப்படும். விபச்சாரத்தை 'செக்ஸ் தொழில்' என்று சொல்வது போல, ஊழலை இனி 'அரசியல் தொழில்' என்று சொல்லலாம்.

ஜெயா அம்மா, நீங்க கெட்டவங்க என்று மக்கள் சொன்னாலும்,
எதிர்க்கட்சிகள் சொன்னாலும்,
ஏன் உங்க மனச்சாட்சியே சொன்னாலும்
நம்பாதீங்க...
ஏன்னா...
நீங்க நல்லவங்கனு...
நம்ம சட்டம் சொல்லிடுச்சே!

வாழ்க அரசியலமைப்புச் சட்டம்!

1 comment:

  1. இன்றைய வலைப்பதிவு முழுக்க கேலியும்,கிண்டலுமாக இருந்தாலும் நம் இயலாமையைப் படம் பிடித்துக் காட்டியிருப்பது போல் இருந்தது.இந்த ஜனநாயக நாட்டில் நாம் பெருமைப்பட்டுக்கொண்டிருந்த நீதித்துறையையும் மாசு படுத்தி ஓட்டைவிழச்செய்துவிட்டனர்.கண்டிப்பாக....யார் எங்கிருந்தாலும் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.'நம் கையே நமக்கு உதவி; நாம் வேலை செய்தால்தான் நமக்கு சாப்பாடு' நம் ஊரில் நாம் வாழ வழிசொல்லியிருக்கும் யுத்தி நடைமுறைப்படுத்த முடியுமானால் அழகுதான்.பாரதியின் 'காணி நிலம் வேண்டும்'...ஞாபகத்துக்கு வந்தது. நம் தாய் மண்ணில் இப்பொழுது அரங்கேறி இருப்பது 'அரசியல் என்பது ஒரு சாக்கடைதான்' என்பதை மீண்டும் நமக்கு உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு.அவ்வளவுதான்.....

    ReplyDelete