Wednesday, May 6, 2015

கனவுல மோடி

நேத்து நைட் கனவுல மோடி வந்தார். அவர் ஏன் கனவுல வரணும்? சிம்பிள் ரீசன் தான். நேற்று மோடி பற்றி நிறைய வாசித்தேன். கண்ணோடு காண்பது கனவில் வரும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

'ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் இருக்கும், ஒவ்வொரு பாவிக்கும் ஒரு எதிர்காலம் இருக்கும்' ("Every saint has a past and every sinner has a future") என்பார் அகுஸ்தினார்.

மோடி ஒரு புனிதனா அல்லது பாவியா என்பது நம் கேள்வி அல்ல.

ஆனால், மோடிக்கு ஒரு இறந்தகாலம் இருக்கு. இந்த மோடி கையில நம்ம எதிர்காலம் இருக்கு.

இந்திராகாந்தியைப் பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், 'தொட்டிலை ஆட்டிய கை நாட்டை ஆள்கிறது!' ("A hand that rocks the cradle rules the nation!") என்று குறிப்பிட்டார்கள்.

இன்று மோடியைப் பற்றி எழுதினால், 'டீ ஆற்றிய கை நாட்டை ஆள்கிறது!' என்று சொல்லலாம். 'ஆட்டிய', 'ஆற்றிய' என்ன ஒரு ஒற்றுமை...கவிதை...கவிதை...!

டீ ஆத்துனாதான் அரசியில் தலைமைக்கு வர முடியும் போல. பெரியகுளம் டீக்கடை பன்னீர்தான் இன்று நம் 'தமிழக' முதல்வர். வாட்நகர் ரயில் நிலையத்தில் தன் அண்ணனுடன் டீ விற்ற மோடிதான் இன்று நம் இந்திய பிரதமர்.

டீ ஆற்றுவது பெரிய கலைதான். என் அப்பாவின் ஒரே தம்பி திரு. கிருஷ்ணசாமியும் டீ ஆற்றினார். நான் சத்திரப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் 6 முதல் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒவ்வொரு மதியமும் தவறாமல் அவர் வேலை பார்த்த கடைக்குச் செல்வேன். வியர்க்க விறுவிறுக்க பாய்லரின் அருகில் நின்றுகொண்டிருப்பார்.

சரியான விகிதத்தில் சர்க்கரை. சரியான சூடு. சரியான பால் அளவு. சுத்தமான கிளாஸ். மேலெழும்பி நிற்கும் நுரை. நுரையின் மேல் சற்று விடப்படும் 'டிகாக்சன்'. இப்படி இருந்தால் தான் அது டீக்கடை டீ. டீக்கடைக்காரரின் முழு உடலும் ஒத்துழைத்தால்தான் குடிப்பவரின் கைக்கு டீ கிடைக்கும். அவரின் காதுகள் சர்வரின் ஆர்டரைக் கேட்க வேண்டும் - ஒரு டீ சுகர் கம்மியா, ரெண்டு டீ சர்க்கரை தூக்கலா, ரெண்டு டீ ஒன் பை ஃபோர், ஒரு டீ பால் கூட என ஆர்டர் குவிந்து கொண்டே இருக்கும். கண்கள் பொங்கி வரும் பாலையும், சுடும் நீரின் பாய்லரையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். கைகள் கீ கொடுத்த மாதிரி கிளாஸ், சீனி டப்பா, பாய்லர், பால் கரண்டி என மாறிக்கொண்டே இருக்க வேண்டும். எல்லாவற்றையும் கிளாஸில் எடுத்தாலும் அதை மற்றொரு கிளாசில் ஓங்கி ஆற்ற வேண்டும். ஓங்கி ஆற்றும் போது இரண்டு கைகளுக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தாலும், ஒருநாளும் ஒரு சொட்டு கீழே சிந்தியதில்லை. இந்த ஓங்கி ஆற்றுதல் நுரையைத் தரும். சூட்டை மிதமாக்கும். சீனி, பால் என எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கும்.

ஒரு டீ ஆற்றுதல் கூட நமக்க நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்க முடியும். இன்று டீயை வெறும் டீ பேக்குக்குள் அடக்கி விட்டோம். நாம் அருந்தும் இந்த நிமிட டீயில் டீக்கடை சுவை வருவதில்லைதான். க்ரீன் டீ, ப்ளாக் டீ. சிறிலங்கா டீ, சீனா டீ, லெமன் டீ என்று எத்தனை டீக்கள் வந்தாலும் இன்றும் டீக்கடைகள் நிரம்பி வழியவே செய்கின்றன.

டீக்கடை வெறும் தேனீர் பருகும் இடம் மட்டுமல்ல. அது ஒரு அரசியல் மேடை. அங்கே அனைத்தும் விவாதிக்கப்படும். அனைத்தும் பகிர்ந்து கொள்ளப்படும்.

ஆனா நம்ம மோடி கொஞ்சம் நேரம் ஒதுக்கி நம்ம ஊர்களையும் சுத்திப் பார்க்கலாம். பெயர் போட்ட சட்டையைப் போட்டு ஃபேஷன் ஷோ நடத்துவதை விட்டு அரையாடைக்கும் வழியில்லாத அரைவாசி சனங்களைப் பற்றி யோசிக்கலாம்.

நல்லா ஆத்துங்க மோ...டீ!


1 comment:

  1. இதுக்குப் பேர்தான் அரசியல் ' சடையர்' என்பதா?டீ ஆற்றியவரெல்லாம் தலைமைப்பீடத்தை அலங்கரிப்பதால் 'உழைப்பின் மேன்மை' பற்றி சொல்லவருகிறீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் நீங்கள் ஒரு 'நல்ல' டீ நம் கையில் கிடைக்க அதைத் தயாரிப்பவர் என்ன வித்தையெல்லாம் செய்ய வேண்டியுள்ளது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். ஒரு நல்ல டீ குடித்த ஃபீல்! அதெப்படி ஃபாதர்! தாங்கள் எதைப்பற்றி எழுதினாலும் அந்த இடத்தின்,செயலின் கதாநாயகனாகவே மாறி விடுகிறீர்கள்? இதற்குப் பெயர்தான் 'களவையும் கற்று மற' என்பது போலும்!!!

    ReplyDelete