Friday, May 15, 2015

அவளின் கையுறையாக...

இரண்டு நாட்களுக்கு முன் ‘Kebab Connection’ (2005) என்ற ஜெர்மன் மொழித்திரைப்படம் பார்த்தேன். 90 நிமிடங்கள் ஓடுகின்ற திரைப்படம். முழுக்க முழுக்க காமெடி படம். ஆங்கில சப்டைட்டிலும் இருப்பதால் மிக நன்றாகவே கதை ஓட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்ராகிம் அல்லது இபோ (21 வயது) ஒரு துருக்கிய இளைஞன். விளம்பரப் படங்கள் இயக்குபவன். தன் மாமா வைத்திருக்கும் ‘கிங் ஆஃப் கெபாப்’ என்ற கெபாப் கடைக்கு அவன் செய்யும் விளம்பரம் மிகவும் பிரபலமாகி மாமாவின் வியாபாரம் சக்கை போடு போடுகின்றது. அவனுக்கு ப்ரூஸ் லி என்றால் ரொம்ப பிடிக்கும். ஜெர்மன் மொழியில் முதல் குங்-ஃபு படம் எடுக்க வேண்டும் என்பது இவனது கனவாக இருக்கிறது.

கதாநாயகி டுட்சல் அல்லது டிட்சி (18 வயது). மிக அழகான ஜெர்மன் பொண்ணு. இவளைப் பார்த்தவுடன் ஜெர்மனிக்கு நான் சென்ற பயணம்தான் நினைவிற்கு வந்தது. இவளுக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை.

இபோவின் நண்பி டிட்சி. டிட்சி ஒருநாள் தான் கர்ப்பமாகியிருப்பதாக இபோவிடம் சொல்கிறாள். இபோ தன் துருக்கிய தந்தையிடம் சொல்ல தந்தை அவனைத் தன் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். டுட்சி இதை தன் ஜெர்மன் தாயிடம் சொல்ல அவள் சிரிக்கிறாள்.

இதற்கிடையில் இபோ ரொம்ப ‘பாயிஷ்’ என்று சொல்லி டுட்சி அவனிடம் கோபித்துக்கொள்கிறாள்.
விளம்பரப் படம் செய்வதா, குங்ஃபு திரைப்படக் கனவு நிறைவேறுமா, இபோவை அவனது தந்தை ஏற்றுக்கொள்வாரா, டிட்சி சொந்தக்காலில் எப்படி நிற்கிறாள் என்று வேகமாக நகர்கிறது திரைப்படம்.

ஜெர்மனிக்குச் சென்றால் அங்கே நாம் நிறைய துருக்கிய இன மக்களைப் பார்க்கலாம். ஆக, ஒரு கலாச்சாரத்தின் முன் மற்றொரு கலாச்சாரம் நிற்க வேண்டிய நிலை வரும்போது, இரண்டு கலாச்சாரங்களும் எப்படி கொடுத்து, வாங்குகின்றன என்பதை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஆயிரம் புத்தகங்கள் சொல்ல வேண்டியதை ஒரு படம் சொல்லிவிடுகிறது என்பது உண்மைதான்.

படம் முழுவதும் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ-ஜூலியட்’ நாடக வசனங்கள் அடிக்கடி வரும்.

டிட்சிக்கு குழந்தை பிறந்து அதை இபோ பார்க்க வரும்போது குழந்தையைப் பார்த்து இபோ சொல்லும் வார்த்தைகள் மிக அருமை.

அந்தக் குழந்தை தன் பிஞ்சுக்கையால் தன் கன்னத்தைத் தடவும்போது இபோ இப்படிச் சொல்வான். இதே வார்த்தைகளைத்தான் பால்கனியில் நிற்கும் ஜூலியட்டைப் பார்த்து ரோமியோவும் சொல்வான் நாடகத்தில். அந்த வார்த்தைகளின் என் தமிழ் மொழிபெயர்ப்பு:

“வானின் நட்சத்திரங்கள் இரண்டு தங்கள் வேலையினிமித்தம் வெளியே செல்லவேண்டியிருந்தது.
செல்வதற்கு முன் அவைகள் இவளின் இரண்டு கண்களைப் பார்த்து சொன்னது:
‘நாங்கள் திரும்பி வரும் வரை எங்களுக்கு பதிலாக நீங்கள் மின்னிக்கொண்டிருங்கள்!
நாங்கள் சீக்கிரம் வந்துவிடுவோம்!;
இவளின் கண்கள் அந்த வானத்திலும்,
அந்த வானத்தின் நட்சத்திரங்கள் இவளின் தலையிலும் இருந்தால் எப்படி இருக்கும்?
இவளின் கன்னத்தின் பளபளப்பு நட்சத்திரங்களின் வெளிச்சத்தையும் மிஞ்சிவிடும் -
கதிரவனின் ஒளி நட்சத்திரத்தின் ஒளியை மிஞ்சிவிடும்தானே!
இவளின் கண்கள் இரவில் வானத்தில் இருந்தால்
இரவும் பகலாகிவிடும்…
‘பகல் வந்துவிட்டது’ என்று பறவைகளும் பாடத் தொடங்கிவிடும்.
பாருங்கள்…!
தன் கையை எவ்வளவு அழகாக தன் கன்னத்தில் அவள் வைத்திருக்கிறாள்.
ஓ…அவளின் கையிலிருக்கும் கையுறையாக நான் இருந்தால் எப்படி இருக்கும்?
அவளின் கன்னத்தை நான் தொட்டுக்கொண்டிருப்பேனே!”

‘Kebab Connection’ திரைப்படத்தைக் காண இங்கே சொடுக்கவும்:

Kebab Connection



1 comment:

  1. பல நேரங்களில் புரிந்தும் புரியாமல், தெரிந்தும் தெரியாமல், பல பொய்களோடு சில மெய்களையும் சேர்த்து ஆண்களால் பெண்களிடம் பேசப்படும் வசனங்களைக் கேட்டுப் பழக்கப்பட்ட நமக்கு 'இபோ' தன் குழந்தையைப்பார்த்துக் கூறுவதாகச் சொல்லப்படும் அழகான, ஆழமான வசனங்கள் ஒரு வித்தியாசம். இரு கலாச்சாரங்கள் மட்டுமன்று...இரு நாடுகள்,இரு வீடுகள், இரு மனங்கள், இரு மலர்கள்....இப்படி எந்த இரண்டு சேர்ந்திடினும் அவற்றுக்குள்ளே ' கொடுக்கல்- வாங்கல்' சுமுகமாக இருப்பின் அதுவே ஒரு அழகுதான்!!!!

    ReplyDelete