Friday, May 1, 2015

மனிதன் ஒரு தொழிலாளி

இன்று மே தினம்.

திருச்சபை இதை தூய வளனார், தொழிலாளர்களின் பாதுகாவலர் பெருநாள் இன்று அழைக்கின்றது.

'மனிதன் ஒரு தொழிலாளி' என வரையறை செய்தார் காரல் மார்க்ஸ்.

கடவுளின் படைப்பு செயலோடு நம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு உழைப்பு ஒரு வழிமுறை.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் வேலை செய்துகொண்டே இருக்கின்றோம். நாம் இரவில் தூங்கும் தூக்கம் கூட அடுத்தநாள் உழைப்புக்காக நம்மையே மனதளவிலும், உடலளவிலும் தயாரித்துக்கொள்ளவே துணை செய்கிறது.

ஆண்கள் செய்யும் உழைப்புக்கு ஒரு கூலி, பெண்கள் செய்யும் வேலைக்கு ஒரு கூலி என்ற நடைமுறை சில இடங்களில் இருக்கின்றது. உழைப்பு என்றால் மனித வர்க்கத்திற்குப் பொதுவானது என்ற நிலை மாறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

மேலும், நம் ஊரில் நம் தாய்மார்கள் தங்கள் வீடுகளில் செய்யும் வேலை உழைப்பாகவே கருதப்படுவதில்லை. 'அவர்கள் கடமை இது!' என்று நாம் சொல்லவும் தொடங்கிவிட்டோம்.

சில நேரங்களில் உழைப்பு சுரண்டப்படுகிறது.
சில நேரங்களில் உழைப்பு ஏமாற்றப்படுகிறது.
சில நேரங்களில் உழைப்பு பாராட்டப்படுகிறது.

இன்னொரு பக்கம் 'வொர்க் லைஃப் பேலன்ஸ்' என்றும் அடிக்கடி காதில் விழுகின்றது. வேலையை எட்டு மணிநேரத்திற்குள்ளோ, அல்லது அலுவலகத்திற்குள்ளோ நிறுத்திவிட்டால் வாழ்க்கை அதுவாக பேலன்ஸ் ஆகிவிடாதா என்ன? இன்று ஒரு சிலர் வேலை பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சாப்பிடும்போது, டிவி பார்க்கும்போதுகூட கம்ப்யூட்டர் கையுமாகவே இருக்கின்றனர். பிள்ளைகள் அவரின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் தங்கள் கம்ப்யூட்டரில் வை-ஃபை சிக்னல் கம்மியாக இருக்கிறது பதறிக்கொண்டிருப்பார்கள்! என்ன விநோதமான உழைப்பு இது!

மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தவுடன் வளனார் அவருக்கு உணவு சூடாக்கும் ஓவியம் ஒன்றைப் பார்த்தேன். ஆக, அடுத்தவரின் நலம் பேணுதலே உழைப்பு.

உழைப்பு வெறும் கூலி பெறும் சமாச்சாரமாகிவிடாமல் பிறர்நலன் பேணினால் நலம்.

உழைப்பு தின வாழ்த்துகள்!


படம் ஆதாரம்: http://www.jesus-story.net/painting_birth_christ.htm



1 comment:

  1. சில நேரங்களில் உழைப்பு சுரண்டப்படுவதும், ஏமாற்றப்படுவதும், பாராட்டப்படுவதும்...அனைத்திலுமே பகடைக்காயாக்கப்படுவது பெண்களே! ஒருவேளை 'உழைப்பாளரின் பாதுகாவலர்' ஒரு ஆணாய் இருப்பதால்தான் இந்த அவலமோ!!??ஆம்...பல சமயங்களில் நம் தாய்மார்கள் 'சம்பளம் வாங்காத உழைப்பாளிகளாகத்தான்' கருதப்படுகிறார்கள்.'அடுத்தவரின் நலம் பேணுதலே உழைப்பு'....இதை மனத்திலிருத்தினால் யாருடைய உழைப்புமே விரயமாகாது.வளனார் மாதாவுக்கு உணவு சூடாக்கும் ஓவியம்....காணக்கிடைக்காத ஒன்று. உழைப்பைப் போற்றுவோம்; பெண்களையும் போற்றுவோம்......

    ReplyDelete