Monday, September 8, 2014

மௌனமும் வார்த்தையே!


நாளை அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஅவை மூவரின் பிறந்தநாளை மட்டுமே கொண்டாடுகின்றது: இயேசுவுக்கு முன்னோடியாம் திருமுழுக்கு யோவான், இயேசுவின் அன்னையாம் மரியா மற்றும் இயேசு.

'ஆலம் விழுதுகளாய் ஆயிரம் உறவுகள் இருந்தென்ன பயன்?
அம்மா வேரென நீ இருந்தாய்.
அதில் வீழ்ந்திடாது நான் இருந்தேன்'
என்று அன்னையைப் பற்றிப் பாடுகின்றான் புதுக்கவிஞன்.

ஒரு அன்னை இந்த மண்ணில் அவதரித்த நாளே இந்நாள்.

இந்த நாளில் என்னை யாராவது மறையுரை வைக்கச் சொன்னால் என்ன வைப்பேன் என்று இன்று மாலை செபத்தின் போது சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சிந்தனை ஓட்டமே இன்றைய பதிவு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொத்தக்காலன்விளை என்ற ஊரில் உள்ள திருக்கல்யாண மாதா ஆலயத்தில் 'அன்னை மரியாளின் ஏழு வார்த்தைகள்' என்ற தலைப்பில் மறையுரையாற்றியது நினைவிற்கு வந்தது. இன்று கொஞ்சம் வித்தியாசமாக 'அன்னை மரியாளின் ஏழு மௌனங்கள்' என்று யோசிக்கலாமா என்று விவிலியத்தைப் புரட்டினேன். அன்னை மரியாளின் வார்த்தைகளைப் போலவே அவரின் மௌனங்களும் ஏழு என்று கண்டேன்.

ஒளியும், இருளும் கலந்ததே நாள். வண்ணமும், வெற்றிடமும் கலந்ததே ஓவியம். சப்தமும், அமைதியும் கலந்ததே இசை. வார்த்தையும், மௌனமும் கலந்ததே உரையாடல்.

ஒரு மனிதரின் வார்த்தைகள் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு அவரின் மௌனமும் முக்கியமே.

அன்னை மரியாள் தன் வாழ்வில் மௌனமாய் இருந்த ஏழு பொழுதுகள் எவை? அவை இன்று நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

1. 'சத்திரத்தில் உங்களுக்கு இடமில்லை!'
வானதூதர் கபிரியேல் வந்து மங்கள வார்த்தை சொன்னார். 'அருள் மிகப் பெற்றவர்!', 'ஆண்டவர் உம்மோடு!', 'கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும்!' 'அஞ்சாதே' என்றார். எலிசபெத்தும் தன் பங்கிற்கு 'பெண்களுக்குள் பேறுபெற்றவர்' என்றும் 'ஆண்டவரின் தாய்' என்றும் வாய்நிறைய வாழ்த்தினார். எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு என்று நினைக்கும் போது என்ன இது முதல் தடங்கல். 'சத்திரத்தில் இடமில்லையா?' மரியாளுக்கு வந்த முதல் ஏமாற்றம். தன் பேறுகால வலியைவிட இந்த வலி அவருக்கு அதிகமாக இருந்திருக்கும். 'என்னிடமும், என் கணவரிடமும் வந்த வானதூதர் சத்திரக்காரனிடமும் வந்திருக்கலாமே?' 'தாவீதின் ஊரிலே கடவுளின் மகன் ஏற்பாடு செய்திருக்கலாமே!' என்று நினைத்திருக்கலாம். வலி அதிகம் இருக்கும் போது நமக்கு கோபம் அதிகம் வரும். அன்னை மரியாளின் முதல் மௌனத்தில் கோபம் இல்லை. 'இதுதான் இறைச்சித்தம் போல!' என்று ஏற்கின்றார். நம் வாழ்வில் வலியும், ஏமாற்றமும் வரும்போது நமக்கு உடன்வருவது எரிச்சலும், கோபமும். எரிச்சலுக்கும், கோபத்திற்கும் பதிலாக கொஞ்சம் மௌனமாய் இருந்து பார்க்கலாமே!

2. 'நாங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தோம்!'
இயேசு பெத்லகேமில் மாடடைக் குடிலில் பிறந்தவுடன் அந்த செய்தி வானதூதர்களால் இடையர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. அவர்களும் உடனடியாகப் புறப்பட்டு குழந்தையைப் பார்க்க வருகின்றனர். வந்தவர்கள் தங்களுக்கு வானதூதர்கள் குழந்தையைப் பற்றிச் சொன்னதை மரியாவிடம் அறிவிக்கிறார்கள். மரியா மௌனம் காக்கின்றார். 'இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்!' நிறைகுடம் நீர் தளும்பவில்லை. அதிக மகிழ்ச்சி வரும் போதும் நம்மால் பேச முடிவதில்லை. மகிழ்ச்சியான செய்தி கேட்டு வாயடைத்துப் போன நிகழ்வுகள் நம் வாழ்விலும் நடந்திருக்கும். மகிழ்ச்சி நம் வாழ்வில் வந்தவுடன் உடனடியாக நமக்கு வருவது ஒப்பீடு. ஆகா! அவனைவிட எனக்கு கிடைத்துவிட்டது! அவள் தோற்றுவிட்டாள்! நான் வெற்றிபெற்றுவிட்டேன்! மகிழ்ச்சி வரும் போது நாம் நமக்கு வெளியே பார்த்தால் இந்த ஆபத்துதான். அன்னை மரியாளின் மௌனம் சொல்லும் பாடம் மகிழ்ச்சி அதிகம் வந்தால் தன் உள்ளே பார்க்க வேண்டும். மகிழ்ச்சியை மூளைக்கு அனுப்பினால் ஆணவம் வந்துவிடும். அதையே உள்ளத்திற்கு அனுப்பினால் அமைதி பிறக்கும்.

3. 'நாங்கள் நட்சத்திரத்தைக் கண்டோம்!'
குழந்தை இயேசுவைக் காண அடுத்த குழுவினர் வருகிறார்கள்: கீழ்த்திசை ஞானியர். தன் மகன் யூதர்களுக்கு மட்டும் அரசன் என்று நினைத்துக் கொண்டிருந்த மரியாவுக்கு கீழ்த்திசை ஞானியரின் வருகை பெருமிதத்தை அளித்திருக்க வேண்டும். 'என் மகன் உலகத்திற்கே அரசன்' என்று உச்சிமுகர்ந்திருப்பார். 'அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்' என்றே மத்தேயு எழுதுகிறார். பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையும் பார்த்தவுடன் தன் மகன் அரசனாகவும், இறைவனாகவும், மனிதனாகவும் இருக்கின்றார் என்று அடையாளப்படுத்தப்பட்டதை உணர்கின்றார். ஆனால் மௌனம் காக்கின்றார். இந்த மௌனத்தின் எதிர்மறை 'கூரியாசிட்டி!' - அது எப்ப நடந்துச்சு? விண்மீன் எப்ப வந்துச்சு? எந்த வழியா வந்தீங்க? ஏரோதுட்ட ஏன் போனீங்க? என்று எதுவுமே கேட்கவில்லை. நம் வாழ்வில் அமைதி பறிபோகக் காரணம் இந்த கூரியாசிட்டிதான். நாம் ஒவ்வொரு முறை நம் செல்ஃபோனை எடுத்து ஃபோன் வந்திருக்கா என்றும் மெசஜ் வந்திருக்கா என்று பார்ப்பதற்குக் காரணம் இந்த கூரியாசிட்டிதான். நம்ம ஸ்டேடசுக்கு யார் கமெண்ட் போட்டிருக்கா? நம்ம ஃபோட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கு? அந்த வீட்டுக்குள்ள இப்ப யாரு போனா? அந்தக் காருக்குள்ள இருந்து எட்டிப் பார்த்தது யாரு? - இவையெல்லாம் நம்மில் இருக்கும் ஒருசில கூரியாசிட்டீஸ். பல நேரங்களில் இவைகள் நமக்கு ஏமாற்றத்தையும், விரக்தியையும் தருகின்றன. அன்னையின் இந்த மௌனம் நமக்குச் சொல்வது 'கூரியாசிட்டி வேண்டாமே!'

4. 'எகிப்திற்கு ஓடிப் போங்க!'
ஏரோது குழந்தையைக் கொல்லத் தேடுகிறான் என்று யோசேப்பு கனவில் எச்சரிக்கப்பட, உடனடியாக கணவனும், மனைவியும், குழந்தையுமென புறப்படுகின்றனர் எகிப்திற்கு. பெத்லகேமிலிருந்து எகிப்து ஒரு நீண்ட பயணம். நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்து வந்த பாதை. மரியா பச்சை உடம்புக்காரி. குழந்தை பெற்று சில நாட்களே ஆகின்றன. இயேசுவோ பச்சிளம் குழந்தை. வெயில், தூசி, அலைச்சல் - குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகிவிடுமே. வழியில் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? மாற்றுத் துணிக்கு என்ன செய்வது? இந்தப் பாவிப் பசங்க ஞானியர் ஏரோதிடம் போயா வழி கேட்பாங்க? - என்று எண்ண ஓட்டங்கள் அவரில் இருந்திருக்கலாம். ஆனால் ஒன்றும் பேசவில்லை. 'வேற ஆல்டர்னேடிவ் இருக்கான்னு யோசிங்களேன்' என்று தன் கணவனிடம் சொல்லவில்லை. 'திருமுழுக்கு யோவான் என்ன செய்வார்? நாம் எலிசபெத்து வீட்டுக்கு ஓடிவிடலாமே!' என்று குறுக்கு வழி யோசிக்கவில்லை. அன்னையின் மௌனம் அவரின் துணிச்சலின் வெளிப்பாடு. சத்திரத்தில் இடமில்லையென்றாலும், மாடடைக் குடிலில் இடம் தந்த கடவுள் எப்படியும் தன்னை வழிநடத்துவார் என்று புறப்படுகின்றார். நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் சின்ன பிரச்சினையைக் கூட பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கிறோம். கொஞ்சம் உடம்பு வெதுவெதுப்பாய் இருந்தால் கேன்சர் வந்துவிட்டதுபோல பதறுகிறோம். அன்னை சொல்வது 'கூல்!' - அவர் போகச் சொன்னா போ! இருக்கச் சொன்னா இரு! நோ ஆல்டர்னேடிவ்! நோ ஷார்ட்கட்!

5. 'உம் உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!'
இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது அங்கே திருக்குடும்பம் சந்திக்கும் இருவர் தாம் சிமியோனும், அன்னாவும். குழந்தையைத் தன் கையில் ஏந்திக் கொண்டு இவர் அப்படியிருப்பார்! இப்படியிருப்பார்! என அடுக்கிக் கொண்டே போகும் சிமியோன் பெரிய குண்டைத் தூக்கிப் போடுகின்றார்: 'உம் உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' உடலை வாள் ஊடுருவிப் பாய்ந்தால் அங்கே மரணம் நிச்சயம். உள்ளத்தை வாள் ஊடுருவிப் பாய்ந்தால் அங்கே மறுபிறப்பு நிச்சயம். மரியாள் இப்போது புதிதாய்ப் பிறக்க வேண்டும். இதுவரை வெறும் மனுசியாக இருந்த மரியாள் இயேசுவின் இறையரசுப் பணியில் புதிதாய்ப் பிறக்க வேண்டும். மரியாளின் பயணமும் இயேசுவோடு தொடர வேண்டும். வானதூதர் சொன்னார், இயேசு பிறந்தார், கோவிலில் அர்ப்பணம் செய்தோம், கடமை முடிந்தது என மரியா ஓய்ந்திருக்க முடியாது. மரியாளைப் பார்த்துச் சொன்ன சிமியோன் யோசேப்பைப் பார்த்துச் சொல்லியிருக்கலாமே! அன்னையின் மௌனம் அவரைப் புதிதாய்ப் பிறக்க வைக்கிறது. நம் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும், நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளிலும் நாம் புதிதாய்ப் பிறக்கிறோம். மௌனம் என்ற கருவறையே மனிதரின் புதிய பிறப்பை சாத்தியமாக்குகிறது.

6. 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்?'
தன் பன்னிரண்டாம் வயதில் எருசலேம் ஆலயத்தில் திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன இயேசு தன் பெற்றோர் தன்னைத் தேடி அலைந்தபோது கேட்ட கேள்வியே இது. 'என்ன கொழுப்பு உனக்கு? உன்னைத் தேடி நாங்கள் ஓடி வந்தால் நீ 'ஏன் வந்தீங்கன்னு கேட்குற?' - என்று மரியா எதிர்கேள்வி கேட்கவில்லை. மௌனம் காக்கிறார். நிகழ்வுகளை தன் உள்ளத்தில் பதிக்கிறார். 'குழந்தை மனிதனின் தந்தை' என்பார்கள். நமக்குத் தெரிவதை விட குழந்தைக்கு அதிகம் தெரியும் என்று பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மிகவும் அவசியம். குழந்தைகள் நம் வழியாக வந்தாலும், அவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பிரபஞ்சத்திற்குரியவர்கள் என்பார் கலீல் ஜிப்ரான். 'நமக்குத் தெரியாத இறைவனின் திருவுளம் இந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறதே!' என்று குழந்தையைத் தழுவிக் கொள்கின்றார் மரியா. வலுவற்றவர்கள் முன் நம் வல்லமையை மண்டியிடச் செய்ய அன்னையின் மௌனம் அழைப்பு விடுக்கின்றது. நமக்குதான் எல்லாம் தெரியும் என்று நினைத்து இறுமாப்பு அடைவதை விட, 'அடடே! நீ சொல்வது வித்தியாசமாக இருக்கே!' என்று கொஞ்சம் குணிந்து அடுத்தவர்களின் வாயருகே நம் காதை வைக்கலாமே!

7. 'அம்மா! இவரே உம் மகன்!'
யோவான் நற்செய்திப்படி இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கமான கானாவூரிலும், இறுதியான கல்வாரியிலும் தன் மகனோடு உடனிருக்கிறார் மரியா. இந்த இரண்டு இடத்திலும் 'அம்மா' என மரியாவை அழைக்கிறார் இயேசு. இங்கே 'அம்மா' என்பது தாய்மையைக் குறிக்கும் சொல் அல்ல. சாதாரணமாக பெண்களை மரியாதையாக அழைக்கும் சொல்தான். 'இவரே உம் மகன்' என்று இயேசு சொல்வது மரியாவை உலகினர் அனைவரின் தாயாக முன்வைக்கிறது. ஒரு மகனுக்கே இந்தப் பாடு! ஒரு மகனுக்கே என் உள்ளத்தில் வாள் ஊடுருவியது! உலகினர் அனைவரும் என் மக்கள் என்றால் என்னாவது? என்று பின் வாங்கவில்லை மரியா. தாவீதின் அரியணையில் அமர வேண்டிய மகன் சிலுவை அரியணையில் இருக்கிறானே என அங்கலாய்க்கவில்லை. அமைதி காக்கின்றார். மரியாளின் உடனிருப்பு பெந்தகோஸ்தே நிகழ்விலும் திருத்தூதர்களோடு உடனிருப்பாகத் தொடர்கிறது. இறப்பும், இழப்பும் நம் வாழ்வை நிறுத்திவிடக் கூடாது என்பதே அன்னையின் இறுதி மௌனம் சொல்லும் பாடம். சிலுவைக்குப் பின்னும் உயிர்ப்பு உண்டு என்று உறுதியாய் நம்பினார் அவர். சலனமற்ற மனமே நம்பிக்கையின் நாற்றங்கால்.

இயேசுவின் வாழ்வின் ஏழு முக்கிய நிகழ்வுகளிலும் மௌனம் காக்கும் மரியாள் தன் கணவர் யோசேப்போடும் இறுதி வரை மௌனம் காக்கின்றார். இந்த மௌனத்தின் அர்த்தம் இதுதான்: 'மௌனமும் வார்த்தையே!'



1 comment:

  1. " மௌனமும் வார்த்தையே" ...அழகான பதிவு. பல சமயங்களில் உடனடித் தீர்வு நாடி நீண்ட உரையாடலில் ஈடுபடும்போது அது நமக்கே வினையாகிப் போவது நம் அனுபவம்.எம்மாதிரிப் பிரச்சனைகளுக்கும் நம் மௌனத்தால் விடைதேட முடியும் என்று கூறும் தாய்க்கு ஒரு 'சலூய்ட்'." வலுவற்றவர்கள் முன் நம் வல்லமையை மண்டியிடச்செய்ய அன்னையின் மௌனம் அழைப்பு விடுக்கிறது" போன்ற வரிகளின் மூலம் நம் உள்ளத்தை சலவை செய்யத் தூண்டியுள்ள தந்தைக்கு இன்னொரு 'சலூய்ட்'.அனைவருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகட்டும்...

    ReplyDelete