Wednesday, September 3, 2014

தச்சனுக்கு தெரியுமா தண்ணீரின் ஆழம்?

இயேசு பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, 'ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்' என்றார். சீமோன் மறுமொழியாக, 'ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என்றார். (லூக்கா 4:4-5)

இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நடந்த மீன்களின் பெருக்கு நிகழ்வு, முதல் திருத்தூதர்களின் அழைப்பு என இரண்டு பகுதிகளாக இருந்த எழுத்துப் பிரதிகளை ஒன்றாகச் சேர்த்து எழுதிவிட்டார் என்பது விவிலிய ஆசிரியர்களின் கருத்து. 'ஆண்டவரே! நான் பாவி என்னைவிட்டு அகலும்' என்ற சீமோனின் வார்த்தைகள் இயேசுவின் பாடுகளின் போது அவரை மறுதலித்ததை சீமோன் நினைவுகூர்ந்து சொல்வதாக இருக்கிறது. ஆகையால் மீன்பிடி நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் தான் நிகழ்ந்திருக்க முடியும்.

இதில் மற்றொரு சிக்கல் இருக்கிறது. உயிர்ப்பிற்குப் பின் நடந்த நிகழ்வு என்று சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அங்கே சீமோனின் முதல் தயக்கம் பொருந்தாமல் இருக்கின்றது. இயேசுவின் வாழ்வு முழுவதும் சீமோன் பல அற்புதங்களைப் பார்த்ததால் இயேசு சொன்னவுடன் வலையை வீசியிருப்பார். 'இரவு முழுவதும் நாங்கள் உழைத்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை' என்று தயக்கம் காட்டியிருக்க மாட்டார்.

உயிர்ப்பிற்கு முன் உள்ள பகுதியும், உயிர்ப்பிற்குப் பின் உள்ள பகுதியும் கலந்த நிகழ்வே இது.

சீமோனின் வார்த்தைகளை மட்டும் இன்றும் சிந்திப்போம்.

அ. தயக்கம். தச்சனுக்கு மீன்களின் போக்கு எப்படித் தெரியும்? - இதுதான் சீமோனின் முதல் தயக்கம். இரண்டு தொழில் நிபுணர்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். ஒருவர் தச்சர். மற்றவர் மீனவர். 'இந்த மரத்தின் மேல் கோடரி போடுங்கள்' என்று இயேசு சொல்லியிருந்தால் சீமோன் தயக்கம் காட்டியிருக்கவே மாட்டார். 'தச்சனுக்கு மரம் பற்றித் தெரியும்' என்று உடனே கோடரி போட்டிருப்பார். கடவுள் நம் வாழ்வில் செயலாற்ற முதலில் தடையாக இருப்பது நாம் கொண்டிருக்கும் தயக்கம். 'கடவுள் எப்படி குணமாக்க முடியும்?' 'செபம் செய்தால் கடவுள் எப்படி பதில் தருவார்?' 'மெழுகுதிரி ஏற்றி கடவுளை வேண்டினால் எல்லாம் சரியாகிவிடுமா?' - இந்தக் கேள்விகள் தாம் நம்மிடம் இருக்கும் குட்டி சீமோன்கள். தயக்கம் தணிந்தால் மட்டுமே துணிவு பிறக்கும். இது நம் உறவுநிலைகளுக்கும் பொருந்தும். நம் நண்பர்கள் நம்மிடம் ஏதாவது ஆலோசனை சொல்லும் போது உடனே நாம் சொல்வதும் இதுதான்: 'உனக்கு என்ன தெரியும்?' 'என் நிலை புரியாமல் பேசாதே!' 'தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்' என்று நம் உரையாடல் தயக்கத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் வெறுப்போடும் இருக்கின்றது சில நேரங்ககளில்.

ஆ. துணிச்சல். 'இருந்தாலும்...' என்று துணிகின்றார் சீமோன். 'நீர் தச்சர் தான்! நான் மீனவன் தான்! எனக்குத் தெரிந்த அளவு உமக்குத் தெரியாதுதான். இருந்தாலும்...உம் சொற்படியே வலையைப் போடுகிறேன்' என்று வலைபோடுகின்றார் சீமோன். இது கடவுள் நம் வாழ்வில் செயல்படுதலின் இரண்டாம் கட்டம். 'எனக்கு நம்பிக்கை இல்லைதான், இருந்தாலும் கோவிலுக்கு வருகிறேன்!' 'ஒன்னும் நடக்காதுதான், இருந்தாலும் மெழுகுதிரி ஏற்றுகிறேன்' என்ற பாணியில் நம் செயல்பாடு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இதிலும் கொஞ்சம் தயக்கம் ஒளிந்திருக்கத் தான் செய்கின்றது. ஆனாலும், துணிச்சலே மேலோங்கி நிற்கிறது.

இ. வலுவின்மை. மீன்பாட்டைக் கண்;டவுடன் தன் தவற்றை உணர்ந்து கொள்கிறார் சீமோன். தான் காட்டிய தயக்கமே பெரிய பாவம் என்பதை உணர்கிறார். கடவுளின் வல்லமை முன் தன் வலுவின்மையைக் காண்கின்றார். இயேசுவை அவருடைய வாழ்வில் மூன்றுபேர் அவரை வேண்டாம் எனச் சொல்கின்றனர்:

க. இயேசு இருப்பது தனக்கு ஆபத்து என்று நினைத்து குழந்தையாக இருக்கும் போது அவரை அழித்து விட நினைக்கும் ஏரோது.

ங. தங்கள் பன்றிக்கூட்டம் கடலில் விழுந்து அழிந்து விட்டதே என்ற விரக்தியில, இழப்பில் தங்கள் நகரை விட்டு அகலுமாறு அவரை வேண்டும் கெனசரெத் மக்கள்.

ச. மீன்பாட்டைக் கண்டவுடன் தன் பாவநிலை நினைவு கூறும் சீமோன்.

கடவுள் நம் பாவநிலையை ஒருபோதும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. 'நீ பாவி! என் கூட வராதே!' என்றும் சொல்லவில்லை. 'அஞ்சாதே! இதைவிட நீ பெரிய வேலை செய்ய வேண்டும்! என் பின்னே வா!' என அழைக்கின்றார். கடவுள் நம் வாழ்விற்குள் வருகிறார் என்றால் நாம் உடனே பெரியதொரு பணிக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

'இல்லை ஆண்டவரே! இதுவே போதும்! இந்த மீன்களை நாம் இன்று விற்போம்! தினமும் நீர் வாரும்! உம்மை வைத்து தினமும் மீன்களை அதிகம் பிடித்து லாபம் பார்ப்போம்' என்று சீமோன் வியாபாரம் செய்யத் துணியவில்லை. 'மீன்பாட்டை விட' பெரியது ஒன்று இருக்கிறது என்று புறப்படுகிறார்.

நமக்கு நோய் நீங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறோம் என வைத்துக்கொள்வோம். நோயும் நீங்கிவிட்டது. நீங்கிவிட்டதென்றால் என்ன அர்த்தம்? நாம் இன்னும் பெரிய வேலைக்குத் தயாராக வேண்டும் என்பதே!



3 comments:

  1. பாமரனையும் கவரக்கூடிய அழகான பதிவு.நாம் செபம் செய்யும்போது நாம் கேட்பது கிடைத்துவிட்டது எனும் நம்பிக்கையுடன் செபிக்க வேண்டுமென சொல்கிறது விவிலியம் 'உன் சந்ததியை ஆற்றின் மணலைப்போலவும்,வானத்து விண்மீன்களைப்போலவும் பெருக்குவேன்' என்று சொன்ன இறைவன் தன் ஒரே பிள்ளையைப் கேட்கும்போது இதைவிடப் பெரிய காரியங்களைத் தான் காணக்கூடும் என்று நம்பி செயல்பட்டார்.பல நேரங்களில் நம்மனச்சோர்வையும்.உடல் சோர்வையும் போக்குவது இம்மாதிரி 'குருட்டு' நம்பிக்கையன்றி நம் மூளையோ,நம் பெயருக்குப்பின்னால் உள்ள பட்டங்களோ அல்ல.ஆகவே ஆண்டவனை அணுகும் எவருக்கும் தேவை உரிமையுடன் கேட்கக்கூடிய 'துணிச்சல்' மட்டுமே. கண்டிப்பாக நம்உடல்,உள்ள சோர்வு நீங்கும்போது அடுத்த,இதைவிடப் பெரிய வேலைக்கு நாம் தயாராகவேண்டும் என்பது மிகச்சரியே! தந்தையே! இன்றையப்பகுதியின் 'எளிமை' எனக்கு மிகவும் பிடித்திருந்தது..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Thank you father, wonderful post

    ReplyDelete
  3. Dear Ranish, Thanks for the warm wishes and comments. How are you? Recovered completely? God bless us.

    ReplyDelete