Friday, September 12, 2014

எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்!

வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன். (1 கொரிந்தியர் 9:22)

தூய பவுலடியார் கொரிந்து நகரில் உள்ள திருச்சபையில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளுக்கு அறிவுரை கூறிக் கொண்டே வரும் போது அவருக்குத் தான் ஆற்றிய பணி நினைவிற்கு வருகிறது. 'எப்படியெல்லாம் நற்செய்தியை அறிவித்தேன்' - ஆனால் இப்படி இவர்கள் மறந்துவிட்டார்களே என்று தன்னையே நொந்து கொள்கிறார்.

'நீ யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே' என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பவுலடியாரைப் பாருங்களேன். 'நான் எல்லாருக்காகவும் என்னை மாற்றிக் கொண்டேன்' என்று பெருமைப் படுகிறார். அதன் பின் நிற்பது அவரின் அன்பே. கிறித்துவின் மேல் கொண்டுள்ள அன்பு.

இன்று 'மூன்றாம் பிறை' (1982) திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விபத்தில் உள்ளம் 7ஆம் வயதில் உறைந்து விட்ட விஜியைப் பார்த்துக் கொள்ளும் சீனு அவருக்காக எல்லாமாக மாறுகி;ன்றார். 'ஆடுறா ராமா! ஆடுறா ராமா!' என குரங்குச் சேட்டையும் செய்கின்றார். ஆனால் அவர் நலம் பெற்றவுடன் அவரின் பெற்றோரும், அவரும் ஒரு நிமிடம் இருந்து தன் குழந்தையைப் பார்த்துக் கொண்டவர் யார் என்று பார்க்க மறந்து விடுகின்றனர். அதுதான் திரைப்படத்தின் அழகு போல. 'நினைவு திரும்புகிறது! ஆனால் காதல் மறந்து விடுகிறது!' - நல்ல கதைவரி.

இறையரசுப் பணியிலும் மக்கள் மறந்தாலும், தன் பணி மறக்கப்படும் எனத் தெரிந்தாலும் எல்லாருக்கும் எல்லாமாய் மாறத் துணிகிறார் தூய பவுல்.

இறையரசுப் பணியில் நாம் சந்திக்கும் அனைவரும் நம் 'கண்ணே! கலைமானே!' தான். ஒவ்வொருவருரையும் குழந்தைபோல பாவித்து அன்பு செய்யத் துணியலாமே!

1 comment:

  1. ' எல்லாருக்கும் எல்லாமாய் மாறக்கூடியவர்களுக்கு நம் சமூகம் தரும் பட்டம் 'கிறுக்கன்', 'பிழைக்கத்தெரியாதவன்' போன்றவை.ஆனால் அதையும் துச்சமென நினைத்துத் தாம் செல்லும் வழியில் நிலைத்திருப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர்.அவர்களுக்கு ஒரு 'சபாஷ்'. விவிலியம் வேறு,வாழ்க்கை வேறு, சினிமா வேறு,பொழுதுபோக்கு வேறு என்றில்லாமல் அனைத்தும் பின்னிப்பிணைந்ததுதான் வாழ்க்கை என்பதைத் தனக்கே உரித்தான பாணியில் சுவைபடக்கூறியிருக்கும் தந்தைக்கும் ஒரு 'சபாஷ்'.

    ReplyDelete