Sunday, September 7, 2014

அவர்கள் நடுவே அவர் இருக்கிறார்!

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். (மத்தேயு 18:19-20)

அடிக்கடி நாம் கேட்ட ஒரு இறைவாக்கு. பல அருட்பணியாளர்கள் தாங்கள் சொல்லும் செபத்திலும் இதைப் பயன்படுத்தக் கேட்டிருக்கலாம். ஏன், நாமே பயன்படுத்தியிருக்கலாம்.

இதை இன்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்:

'ஏனெனில்
இரண்டு அல்லது மூன்று பேர்
என் பெயரின் பொருட்டு
எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ
அங்கே அவர்களிடையே
நான் இருக்கிறேன்...!'

'ஏனெனில்' என்பது இதற்கு முந்தைய இறைவாக்கின் 'மனமொத்து' என்ற வார்த்தையைக் குறிக்கிறது. இரண்டு இறைவாக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

அ. 'ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ!'

இன்று எங்கு பார்த்தாலும் கூட்டம். துணிக்கடை, நகைக் கடை. காய்கறிக் கடை, வங்கி என வியாபார இடங்களிலும், அரசியல், கட்சி, திரையரங்கம் என சமூக வாழ்விலும், கோவில், கும்பாபிஷேகம் என ஆன்மீகத் தளங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றனர். மற்றொரு பக்கம் 'வெர்ச்சுவல்' கூட்டம்: இணையதளம், செல்போன், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர் என்னும் சமூக இணைப்புத் தளங்களிலும் கூட்டம். எல்லாக் கூட்டத்திலும் கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருப்பதன் முதல் கிரைடிரியா: 'மனமொத்திருக்க வேண்டும்!'. மனமொத்திருக்கும் இடத்தில் தான் கடவுள் இருக்கின்றார். வியாபார தளங்களிலும் அது சார்ந்த கூட்டங்களிலும் வாங்குபவரும், விற்பவரும் மனமொத்து இருக்கின்றனரா? இல்லை! சமூகக் கூட்டங்களில் - அங்கும் இல்லை. வெர்ச்சுவல் தளங்களில் - அங்கும் இல்லை! ஆன்மீகத் தளங்களில்? அங்கு மனமொத்து இருப்பது போல தெரிந்தாலும் உள்ளுர மனமொத்திருப்பதில்லை. உதாரணத்திற்கு, வேளாங்கண்ணியில் இந்த நாட்களில் கூடும் கூட்டத்தை எடுத்துக் கொள்வோம். திருப்பலி நேரத்தில் ஒருவேளை மக்கள் மனமொத்திருக்கலாம். அல்லது உள்ளார்ந்த விதமாக அன்னை மரியாளின் நினைவால் மனமொத்திருக்கலாம். இருந்தாலும் அங்கே உண்மையான மனமொத்திருத்தல் இருப்பதில்லைதான். கடவுளின் பிரசன்னத்திற்கான அடுத்தான கிரைட்டிரியா என்ன? 'என் பெயரால்'.

ஆ. 'என் பெயரால்'

இங்கே அடுத்த பிரச்சினை வருகின்றது. 'என் பெயரால்' என இயேசு தன் பெயரால் கூடச் சொல்கின்றார். இதை அப்படியே எடுத்துக் கொள்ளும் சிலர் மூவொரு இறைவனை மறுதலித்து, 'இயேசுவின் பெயரால்' கூடி வருகின்றனர், சபைகளைக் கூட்டுகின்றனர், செபம் செய்கின்றனர். கத்தோலிக்கத் திருஅவை காலங்காலமாக 'தந்தை-மகன்-தூய ஆவி' பெயரால் கூடி வருகிறது. இன்று இயேசுவின் பெயரால் கூடும் கூட்டத்திலும் விந்தைகள் இருக்கின்றன. இயேசுவின் பெயரால் ஒரு கத்தோலிக்க ஆலயத்தில் ஞாயிறன்று கூடும் கூட்டத்திற்கும், அரசரடி மைதானத்திலோ, மதுரா கோட்ஸ் கல்லூரி மைதானத்திலோ மோகன் சி. லாசரஸ் அல்லது பெர்க்மான்ஸ் அவர்கள் நடத்தும் குணமளிக்கும் அல்லது இயேசு விடுவிக்கிறார் கூட்டத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதே. இந்த இரண்டிலும் மக்கள் யார் பெயரால் கூடுகின்றனர்? கத்தோலிக்க அருட்தந்தையின் பெயராலா? அல்லது மோகன் சி. லாசரஸின் பெயராலா? அல்லது பெர்க்மான்ஸின் பெயராலா? அல்லது இயேசுவின் பெயராலா? எந்த இடத்தில் இயேசுவின் பிரசன்னம் இருக்கிறது என்பது குறித்து இன்று நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன. 'அவர் எங்களிடம் தான் இருக்கிறார்!' என்று ஆளாளுக்குப் பங்கு போடத் துணிந்து விட்டனர் சிலர். 'அவர் எங்க இருந்தா எங்களுக்கு என்ன?' என்ற தொனியில் ஓய்ந்து விட்டனர் பலர்.

இ. 'அவர்களிடையே நான் இருக்கிறேன்'

'கடவுள் நம்மோடு' என்ற இயேசுவின் வாக்குறுதி இங்கே நிகழ்கால வினைச்சொல் வழியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கடவுள் என்றும் இருக்கின்றார். கடவுள் நம் நடுவில் இருக்கிறார். கடவுளின் பிரசன்னம் 'இடம் சார்ந்த' ஒன்றாக இருப்பதற்குப் பதிலாக, 'ஆள் சார்ந்த' ஒன்றாக மாறுகிறது. கடவுளை எந்தக் கட்டிடமும் தன்னகத்துள் பொதிந்து வைக்க இயலாது. இந்த ஊரில் தான் இருக்கிறார், இந்த நகரத்தில் தான் இருக்கிறார், வத்திக்கானில் தான் இருக்கிறார், வேளாங்கண்ணியில் தான் இருக்கிறார், ஜெபத்தோட்டத்தில் தான் இருக்கிறார் என்று யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது. 'பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண ஆனந்தமே' என்று நம் தமிழ்ப்புலவர் பாடியது இன்று இயேசுவுக்கும் பொருந்தும். மேலும் இயேசு தன் வாழ்வில் தன்னைக் கடவுளாக ஒரு போதும் முன்வைத்ததே கிடையாது. தன்னை வழிபட வேண்டும் என்றும் அவர் யாரிடமும் சொல்லவில்லை. மனித வரலாற்றில் மிகச் சாதாரணமாக இருந்தாலும் தன் சகோதரர்களை அன்றைய உரோமை மற்றும் ஆன்மீக அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்கும் கடவுளின் கருவியாகவே அவர் தன்னைப் பார்த்தார். அவரைக் கடவுளாக்கி, நாம் பக்தர்களாகி இன்று ஒருவர் மற்றவருக்கிடையே ஒரு பாதுகாப்பான தூரத்தையும் வைத்துவிட்டோம். தனக்குப் பின் சீடர்களை வைத்திருந்தாரே தவிர அவர் ஒருபோதும் பக்தர்களை வைத்திருக்கவில்லை.

எங்கெல்லாம் உறவுகள் மதிக்கப்பட்டு, அங்கே நிலவும் காயங்கள் ஆற்றப்பட்டு, மனம் ஒருமைப்பட்டு, ஒருமனத்தவர்களாய் தனிமனித விடுதலைக்குப் பாடுபடும் இனியவர்கள் இருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவே அவர் இருக்கிறார்! அவர் அவர்தாம்! அவர் இயேசுவாக இருக்கலாம்! அல்லாவாக இருக்கலாம்! சிவனாக இருக்கலாம்! பெருமாளாக இருக்கலாம்! ஏன் அவளாகக் கூட இருக்கலாம்!


3 comments:

  1. கண்டிப்பாக இயேசுவின் பெயரால் 2 அ 3 பேர் கூடி இருக்கும்போது அஅங்கே அவர்கள் நடுவில் அவர் இருக்கிறார் என்பது விவாத்த்துக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு விஷயம்.'இயேசு' எனும் பெயர் தந்தையையும்,ஆவியையும் உள்ளடக்கியிருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.செபம் என்பது ஆலயத்தில்தான் நடக்க வேண்டுமென்றில்லை.நாம் தனித்தோ அல்லது பிறருடன் சேர்ந்தோ 'எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்' என்று நினைப்பது கூட செபமே! இப்படி நாம் ஒருமித்து நினைக்கும் ஒரு நல்ல விஷயம் பிரபஞ்சத்தில் 'நேர்மறை அலைகளை' ஏற்படுத்தி நிறைய எதிர்விளைவுகளை( accidents) குறைத்திருப்பதாக்க் கூறுகிறது விஞ்ஞானம்.இதற்குத்தான் 'வாழ்க வளமுடன்' எனும் பெயர்கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்புத்துகின்றனர்.மற்றபடி மக்களின் அறியாமையை மூலதனமாக்காமல் , இறைவனைப்பற்றி மட்டுமல்ல..மனித மாண்பையும் எடுத்துக்கூறும் எந்த மனிதனும் இருக்குமிடத்தில் இறைவனும் இருக்கிறார்.அனைவருக்கும் ஞாயிறு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கத்தோலிக்கர்கள் , கத்தோலிக்கரல்லாதவர்கள் இவர்கள் இயேசுவின் நாமத்தில் தான் ஒன்று கூடுகிறார்கள் ! ஆகவே இவர்கள் மத்தியில் இயேசு நிச்சயம் வாசம் பண்ணுவார்.

    ReplyDelete
  3. கத்தோலிக்கர்கள் , கத்தோலிக்கரல்லாதவர்கள் இவர்கள் இயேசுவின் நாமத்தில் தான் ஒன்று கூடுகிறார்கள் ! ஆகவே இவர்கள் மத்தியில் இயேசு நிச்சயம் வாசம் பண்ணுவார்.

    ReplyDelete