Tuesday, September 2, 2014

காதற்ற ஊசியும் வாராது!

இரண்டு நாட்களுக்கு முன்பாக 'பட்டினத்தார்' (1954) திரைப்படம் பார்த்தேன். இந்தப் பட்டினத்தார் யார்? பட்டினத்தார் நம் தமிழ் மண்ணில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவம் தந்த சிவச் செல்வர். கடலோடி பொருள் தேடும் வைசிய குலத்தில் அவதரித்த அவர் வாழ்வின் செல்வச் செறுக்கையும், போகங்களையும் வெறுத்து இறைவன் திருவருளை நாடி கட்டிய கோவணமும், நாவில் தவழ்ந்திடும் சிவநாமமும் உடன் வர கால் போன போக்கில் நடக்கலானார்.

'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' - என்ற இந்த மந்திரம் சிவபெருமானால் இவருக்கு அருளப்படுகின்றது.

இந்தத் திரைப்படத்தில் ஒரு டூவலிட்டி: கதாநாயகன் (பட்டினத்தார் - நடிகர் பெயர் தெரியவில்லை) - வில்லன் (எம்.ஆர்.ராதா). கடவுளே கதி என இருக்கும் ஒருவரும், பணமே கதி என இருக்கும் மற்றொருவரும் என திரைப்படம் நகர்கின்றது. இடையிடையே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களின் கலாச்சாரம், நம் நாட்டின் வணிகம், தமிழகத்தின் பண்பாடு, மத நம்பிக்கை என வந்து போகின்றது.

இந்தத் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்தவை மூன்று:

அ. பல நாட்டு வணிகர்கள் பட்டினத்தாரை (அவர் துறவியாக மாறுவதற்கு முன்) தேடிவருவர். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறை என்பதால் அரபு நாட்டவர் நறுமணத்தைலம் கொண்டு வந்து இலவங்கம் பெற்றுச் செல்வார். சீன நாட்டவர் சில்க் கொண்டு வந்து பருத்தி பெற்றுச் செல்வார். யவன நாட்டவர் (அக்கால உரோமை) என்ன கொண்டு வந்தார் என்று பட்டினத்தார் கேட்டபோது, 'நங்கையரை அடிமைப் பெண்களாய்க் கொண்டு வந்தோம். இந்நாட்டின் வாசனை திரவியங்கள் வேண்டும்' என்பார். பட்டினத்தார் அழகாகச் சொல்வார்: 'பெண்கள் எம் தாய்மார்கள். தாய்க்குலத்தை நாங்கள் அடிமை வேலை செய்யும் கூலிகளாகவும், போகப் பொருளாகவும் நாங்கள் பார்ப்பதில்லை. ஆகவே, வாசனை திரவியங்களை எம் வெகுமதியாகப் பெற்றுச் செல்லும்'. 10ஆம் நூற்றாண்டில் நம் தமிழகம் பெண்களைப் போற்றிய விதத்தையே இது எடுத்துக் காட்டுகிறது.

ஆ. 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' - இந்த ஒரு வரிதான் பட்டினத்தாரின் மனமாற்றத்திற்குக் காரணம். எந்த அளவிற்கு மனம் மாறுகிறார் என்றால் தான் முன் வைத்த காலை ஒருபோதும் பின்வைக்கவே இல்லை. இந்த வரியின் பொருள் என்ன? தைக்கின்ற ஊசியின் பயன்பாடு அதன் காதில் தான் இருக்கின்றது. காது இல்லாத ஊசி பயனற்றது. அந்தப் பயனற்ற ஊசியை சந்தையில் யாரும் விற்பதுமில்லை. வாங்குவதுமில்லை. ஒன்றுக்கும் பயன்படாத ஊசி கூட இறுதியில் உன் வழி வரப்போவதில்லை. அதாவது இறக்கும் போது உடன்வரப்போவதில்லை. பயனற்றது என்று மற்றவர் உதறித்தள்ளியது கூட நமக்குப் பயன்தரப்போவதில்லை.

இ. தினமும் சோற்றுக் கவலையே பெருங்கவலை. அதுதான் ஒரே கவலை. அது இல்லையென்றால் தங்கம் வாங்க வேண்டுமென்கிற கவலை. அது முடிவில்லா கவலை. அழகிய பெண்களைக் கவர வேண்டுமே என்கிற கவலை. பல நாளும் இந்தக் கவலை. இவை தவிர இந்தப் பாவிக்கு என்ன கவலை வைத்தாய் இறைவா!
மனித வாழ்வின் எல்லாக் கவலைகளை சோறு, பொன், பெண் என மூன்றுக்குள் அடக்கிவிடுகிறார் பட்டினத்தார். நம் அன்றாட வாழ்க்கைப் போராட்டமும், ஏக்கமும் இந்த மூன்றில் ஒன்றுக்காகத் தான் இருக்கின்றது.

மொத்தத்தில் பட்டினத்தார் என்றால்
அ. உலக மறுப்பு
ஆ. உறவு மறுப்பு
இ. உடல் மறுப்பு

சின்ன ஒரு டைவர்சன். பட்டினத்தாரின் வார்த்தைகளையொத்தே நம் விவிலியத்தின் 'சபைஉரையாளர் நூலும்' இருக்கிறது. அடிப்படையில் சில வித்தியாசங்கள் இருந்தாலும் மேற்காணும் மூன்று மறுப்புக்களும் இந்நூலிலும் உண்டு.

பட்டினத்தாரையும் என் துறவு வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் படித்தும், பயிற்சி செய்தும் துறவு என்பது இன்னும் எனக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. 'எதுவும் சதமல்ல' என்று தெரிந்தும் 'எல்லாம் சதம்' என்று பற்றிக்கொண்டிருக்கவே மனம் தோன்றுகிறது. ஆனால் பட்டினத்தார் எந்தவொரு துறவுப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. ஒரே நாள். ஒரே வரி. எல்லாவற்றையும் துறக்கத் துணிகின்றார். இன்றைய கால கட்டத்திற்கு எல்லாம் தேவை என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தத் தேவைகளை வைத்துக் கொண்டு துறவு மேற்கொள்ளாமலே இருக்கலாமே.

இதன் பின்னணியில் யோசிக்கும் போது பிரம்மச்சாரியா, கிரகஸ்தா, சன்னியாசா, வனப்பிரஸ்தா என்று நம் இந்திய மண்ணின் முன்னோர்கள் எண்ணிய துறவு முறைதான் சரி என நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் பக்கமும் சேராமல், அந்தப் பக்கமும் சேராமல் அலைக்கழிக்கப்படும் என் துறவு வாழ்வை நினைக்கும் போதெல்லாம் எம்.ஆர். ராதாவின் வார்த்தைகள் தாம் நினைவிற்கு வருகின்றன: 'ரொம்ப பிஞ்சு சாமி போல...!'


13 comments:

  1. ' பட்டிணத்தார்' படம் தங்களை நன்றாகவே பாதித்திருக்கிறது.கோவணம் கட்டித் திரிவதுதான் ' துறவறத்துக்கு' அளவுகோலா என்ன? தாங்கள் கூறும் 'எதுவும் சதமல்ல' எனும் மந்திரம் துறவிகளுக்கு மட்டுமல்ல.மானிடர் அனைவருக்குமே பொருந்தக் கூடியதுதான்.அனைத்து சுகபோகங்களுக்கு நடுவே வாழும் துறவிகளும் உண்டு; துறவிகள் எனச் சொல்லிக்கொண்டு எல்லா சுகபோகங்களை அனுபவிப்பாரும் உண்டு.இன்றையக் கால்க் கட்டத்துக்கு அவரவர் மனத்தளவில் தங்களுக்குத்தாங்களே விதித்துக்கொள்ளும் மனத்துறவு தான் உண்மையான துறவு.விநாடிக்கு விநாடி மனித மனமும் அவன் கொள்கைகளும் மாறிவரும் இவ்வுலகில் 'இதுதான் துறவு' என்று யார் வரையறுக்க முடியும்?இன்று நீங்களே உங்களை 'பிஞ்சு சாமி' என்றுரைத்தாலும் உங்களுக்கு வரவேண்டிய அந்த 'ஒரு நாளும்', ' ஒருவரியும்' வந்து சேரும்.அதுவரை காத்திருங்கள்.எல்லாவற்றுக்குமே ஒரு 'விலை' கொடுக்க வேண்டும் தந்தையே! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்தப் பக்கமும் சேராமல், அந்தப் பக்கமும் சேராமல் அலைக்கழிக்கப்படும் என் துறவு வாழ்வை நினைக்கும் போதெல்லாம் எம்.ஆர். ராதாவின் வார்த்தைகள் தாம் நினைவிற்கு வருகின்றன: 'ரொம்ப பிஞ்சு சாமி போல...!'
    இப்படி ஒரு வார்த்தையை நீங்க சொல்லலாமா தந்தையே. நீங்கதான் இன்றைய நவீன துறவிக்கு ஒரு எடுத்துக்காட்டு மேதகு ஆயர் இயேசு அவர்களே.

    ReplyDelete
  3. https://www.facebook.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-1796247627365812/

    ReplyDelete
  4. ரொம்ப பிஞ்சு சாமி போல...!'////*******
    உள்ளத்தால் பொய்யாது ஒழுகுபவர் ---- துறவரத்தின் அடித்தளம்
    உங்கள் அடித்தளம் சிறப்பு

    ReplyDelete
  5. அன்பு தோழமையே பட்டினத்தார் படத்தில் நடித்தவர் T. M. soundarajan....

    ReplyDelete
  6. உலகின் மனிதன் வாழ்கை நீர்குமிழி
    நேரம் தான் இருக்கும். இந்த நிலையில் அவன் செய்யும் பாவபுண்னியம் தான் ஆத்மா கூட வரும்...

    ReplyDelete
  7. மணிபிரியா8/30/2017

    உலகின் மனிதன் வாழ்கை நீர்குமிழி
    நேரம் தான் இருக்கும். இந்த நிலையில் அவன் செய்யும் பாவபுண்னியம் தான் ஆத்மா கூட வரும்...

    ReplyDelete
  8. பட்டிணத்தார் வேடத்தில் வருபவர் "டி.எம்.சௌந்திரராஜன்"

    ReplyDelete
  9. ஓம் நமசிவாய!
    அன்று எழுதுனத அழிச்சு எழுத முடியாது- னு எம் பொஞ்சாதி சொன்னது உண்மை... உண்மை.. உம்மை (சிவபெருமான்).
    அடைவதே எம் இலக்கு.
    வாழ்க வளமுடன் நேர்மையாக!

    திருவொற்றியூர், சென்னையிலிருந்து... அடியேன்.

    ReplyDelete
  10. Ellam irrunthum avattrai anubavithum allsthu avattrai vendam ena verrtthu othukki velivaruthal thurravunili alla.ondrum illamal athavathu anubavakka ethum illamal merkollum thuravum thuravalla ellam irunthumA avatrai anubavithum athanal varum suga thukkangalaium anubavithu piragu avattrai baguthu unmainilai arinthu pirarkkum bagirthu unmayei unarthuvathe thuravuvagum.
    .

    ReplyDelete
  11. பட்டினத்தார் பற்றி எழுத ஒரு தகுதி வேணும்..அவருக்கு சிவன் சொன்னது தான் காதருந்த ஊசி..
    அவர் அதை கேட்டு திருந்தினார்..
    நீங்கள் விவிலியத்தில் சொன்னதை கேட்டாவது திருந்துங்கள்..
    சிவன் உங்களுக்கு வழி காட்டுவார்..
    போகும்போது இந்த க்ரோதங்கள் கூட வராது..
    அன்பு தான் வரும்..
    பண்பு தான் வரும்
    புண்ணியம் தான் வரும்..

    ReplyDelete