Sunday, September 21, 2014

காயின் உருவாவது கடவுளாலே!

நேற்று நாம் பார்த்த 'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்' (காண். மத்தேயு 20:1-16) உவமை இறைவாக்குப் பகுதியையே இன்றும் எடுத்துக்கொள்வோம்.

அதை கொஞ்சம் கோணல், மாணலாக யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று இன்று பார்ப்போம்.

அ. நிதி நிர்வாகம்
இந்த உவமையில் ஐந்து குழுக்கள் ஐந்து மணிப்பொழுதுகளில் வேலைக்கு வருகின்றனர். முதல் குழுவினர் விடியற்காலையில் வருகின்றனர். காலை 6 மணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில் இயேசுவின் காலத்தில் நிலவிய கால அளவைப்படி விடியற்காலை என்பது நம் 6 மணி. இரண்டாம் குழுவினர் 9 மணிக்கு வருகின்றனர். மூன்றாம் குழுவினர் மதியம் 12 மணிக்கும், நான்காம் குழுவினர் பிற்பகல் 3 மணிக்கும், ஐந்தாம் குழுவினர் மாலை 5 மணிக்கும் வருகின்றனர். மாலை 6 மணிக்கு வேலை நிறைவு பெறுகிறது. முதல் குழுவினர் 12 மணி நேரம் தலைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருந்திருக்கின்றனர். 12 மணி நேரமும் வேலை செய்திருக்க வாய்ப்பில்லை. இப்போதுள்ள எட்டு மணி நேர வேலை நிர்ணயமும் அப்போது கிடையாது. அவர்கள் தோட்டத்தில் இருந்த நேரத்தை அப்படியே எடுத்துக்கொள்வோம். இரண்டாம் குழுவினர் 9 மணி நேரமும், மூன்றாம் குழுவினர் 6 மணி நேரமும், நான்காம் குழுவினர் 3 மணி நேரமும், ஐந்தாம் குழுவினர் 1 மணி நேரமும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதும், திராட்சைத் தோட்டத்தில் என்ன மாதிரியான வேலை என்பதும், திராட்சைத் தோட்டம் எவ்வளவு பெரியதும், எவ்வளவு வெயில் அடித்தது என்றும் உவமையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதல் குழுவினரோடு பேசப்பட்ட சம்பளம் 'ஒரு தெனாரியம்'. ஒரு தெனாரியத்தின் மதிப்பு 120 ரூபாய் என வைத்துக்கொண்டால் முதல் குழுவினர் பெற வேண்டிய சம்பளம் 120. இரண்டாம் குழுவினர் 90, மூன்றாம் குழுவினர் 60, நான்காம் குழுவினர் 30 மற்றும் ஐந்தாம் குழுவினர் 10 ரூபாய் பெற வேண்டும். 10 ரூபாய்க்கான வேலையைத் தான் இறுதியாக வந்தவர் செய்கின்றார். ஆனால் அவரே முதலில் ஊதியம் பெறுகிறார். அவரே முழுமையாகவும் பெறுகிறார். இது ஒரு தவறான நிதி நிர்வாகம். இப்படிச் செய்வதால் அவருக்கு எவ்வளவு வருவாய் இழப்பு நேரிடும்?

ஆ. உறவு நிர்வாகம்
நம் வாழ்க்கையில் உள்ள உறவுகளுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். திராட்சைத் தோட்டம் என்பது நம் வாழ்க்கை. இதில் விடியற்காலையில் வேலைக்கு வருபவர்கள் நம் பெற்றோர். நம்மோடு நம் வாழ்வில் அதிக ஆண்டுகள் இருப்பவர்கள் இவர்கள் தாம். இரண்டாம் குழுவைப் போல 9 மணிக்கு வருபவர்கள் நம் உடன்பிறந்தவர்கள். நமக்கு அடுத்தடுத்து வந்தவர்கள் இவர்கள். மூன்றாம் குழுவைப் போல 12 மணிக்கு வந்தவர்கள் நம் மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி போன்ற உறவினர்கள். நான்காம் குழுவைப் போல 3 மணிக்கு வருபவர்கள் நம் நண்பர்கள். இவர்கள் நம்மோடு கொஞ்ச காலம் தான் இருப்பார்கள். மேலும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் மாறிக்கொண்டும் இருப்பார்கள் - பள்ளியில், கல்லூரியில், பணியிடத்தில், கிளப்பில், சர்ச்சில் என மாறி மாறி வருவார்கள். இறுதியாக ஐந்து மணிக்கு வருபவர்கள் போல வருபவர்கள் தாம் 'மனைவி' அல்லது 'கணவன்'. இவர்கள் இறுதியில் வந்தார்கள் என்பதற்காக இவர்களை ஒரு மணி நேரம் மட்டும், கூடவே இருக்கிறார்கள் என்பதற்காக பெற்றோர்களை 12 மணிநேரமும் அன்பு செய்ய முடியுமா? அது நீதியாகுமா? மேலும் சில குடும்பங்களில் மாமியார்-மருமகள் பிரச்சனை வருவதற்குக் காரணம்; இதுதான். மாப்பிள்ளையின் தாயார் தன் மகனைப் பார்த்து, 'நேற்று வந்த ஒருத்திக்காக கூடவே இருக்கும் என்னை உதாசீனப்படுத்துகிறாயா?' என்று கேட்கும் போது அங்கே அந்த மகன் என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? 'அம்மா! உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' நீங்க இப்படிச் சொல்லி உங்க அம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டா அதற்கு கம்பெனி பொறுப்பாகாது! ஆனால் இதுவும் உண்மை!

இ. ஆன்மீக நிர்வாகம்
மோட்சம் இருக்கோ. இல்லையோ, ஆனா நம்ம எல்லாருக்குமே மோட்சத்துக்குப் போகனும்னு ஆசை இருக்கு! மோட்சத்துக்குப் போக எப்பவுமே நல்லவங்களா இருக்கனுமா அல்லது எப்பவாச்சும் நல்லவங்களா இருக்கனுமா? 12 மணி நேரம் நல்லவரா இருந்தாலும், 1 மணி நேரம் நல்லவரா இருந்தாலும் ஒன்னுதானேன்னு தோனுது இந்த உவமையைப் பார்த்தா. இதற்கு உதாரணம் இயேசுவோட வாழ்க்கையிலே இருக்கு தெரியுமா? இயேசு இறக்கும் தருவாயில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, நல்ல கள்வன் சொன்னது நினைவிருக்கிறதா, 'நீர் அரசுரிமை பெற்று வரும் போது என்னை நினைவுகூறும்!' அதற்கு இயேசுவின் பதில் என்ன? 'நீர் இன்றே என்னோடு வான்வீட்டில் இருப்பீர்!' தன் வாழ்நாள் முழுவதும் தீமையே செய்துவிட்டு, கடைசி ஒரு நிமிடம் இயேசுவிடம் செபிக்கிறான். மோட்சத்துக்குச் சென்றுவிடுகிறான். இறைவனின் தோட்டத்தில் இவன் ஒரு நிமிடம் தானே வேலை செய்கிறான். இயேசு இப்படிச் சொல்லியிருக்கலாமே! 'அப்படியாப்பா! உன்னை நினைவுகூறனுமா? நீ நல்லவன் இல்லையே பா! இங்க கீழ பாரு! எங்கம்மா! என் அன்புச் சீடர்! எனக்குப் பணிவிடை செய்தவர்கள்! இவங்கள்லாம் முதலில் வான்வீட்டிற்கு வரட்டும்;. ஏன்னா அவங்க வாழ்க்கை பூரா நல்லவங்களாவே இருந்துட்டாங்க! நீ கொஞ்சம் வெயிட் பண்ணு!' ஆனால் இயேசுவின் சீனியாரிட்டி லிஸ்ட் வித்தியாசமா இருக்கிறது. ஆகையினால் நாம சாகும்போது நல்லவங்களா இருந்தாலே போதும்! நாம எப்போ இறப்போம்னு தெரியாது! ஆகையினால எப்பவுமே நல்லவங்களா இருப்போம்! சரியா?

ஈ. உளவியல் நிர்வாகம்
இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் உள் மன உணர்வுகள் மிகத் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோர்வு, திருப்தி, கோபம், பொறாமை, முணுமுணுப்பு இவையெல்லாம் இங்கே சொல்லப்பட்டுள்ள உணர்வுகள். ஒரு தெனாரியத்திற்கு ஒத்துக் கொண்டாலும் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உணர்வும் இருந்தது. எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் ஏமாற்றமும் பாய் விரித்துப்படுத்துக்கொள்கிறது. தாங்கள் பேசிய கூலியை வாங்குவதில் ஏன் முதல் குழுவினருக்கு மகிழ்ச்சி இல்லை. தங்கள் கையிலிருப்பதை மட்டும் பார்த்திருந்தால் அவர்களின் மகிழ்ச்சி பறிபோயிருக்காது. ஆனால் அடுத்தவரின் கையையும் பார்க்கின்றனர். நமக்கு வெளியே மகிழ்ச்சியின் அளவுகோலைத் தேடினால் நாம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்கவே போவதில்லை. வெளியே பார்க்கும் போது ஒப்பீடும், கோபமும், பொறாமையுமே வருகின்றது.

உ. சமூக நிர்வாகம்
ஒருவேளை வேலை பார்த்த ஐந்து குழுவினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என வைத்துக் கொள்வோம். சாயங்காலம் வீடு திரும்பியவுடன் சண்டைதான் வரும். சண்டைக்குக் காரணம் பொறாமை. ஒருவர் மற்றவரை முதலில் கேலி பேசுவார்கள்! 'அம்மா! இவன் காலையில இருந்து வேலை பார்த்தான்! ஆனா நான் ஒரு மணி நேரம் தான் வேலை பார்த்தேன். ஆனா எனக்கும் ஒரு தெனாரியம்! அவனுக்கும் ஒரு தெனாரியம்!' என்பான் கடைசியில் வந்தவன். முதலில் வந்தவன் கோபப்படுவான். வலிமையுள்ளவனாயிருந்தால் மற்றவனை அடிப்பான். ஒரு தலைவனின் தாராள குணத்தால் ஒரு குடும்பம் சின்னாபின்னமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் காயின்கள் உருவாகக் கடவுள்தான் காரணம். தன் பலிபொருள் ஏற்றுக்கொள்ளப்படாததால் காயினுக்கு பொறாமை வருகின்றது. காயின் பதரைக் கொடுத்தான் என்றும் ஆபேல் கொழுத்த ஆட்டைக் கொடுத்தான் என்றும் சொல்லாதீர்கள். பைபிளில் அப்படி ஒன்றும் இல்லை. அப்படிச் சொல்லி நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்?

மேலும் இந்த ஒரு நாள் நடந்தது போலவே எல்லா நாளும் நடக்குது என வைத்துக் கொள்வோம். அங்கே ஒட்டு மொத்த சமூகத்திலும் சிக்கல் உருவாகும். காலையில் ஒருவன் வேலைக்குப் புறப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்வான்? 'டேய்! எங்கடா கிளம்பிட்ட! நீ காலையில வேலை பார்த்தாலும் ஒரே சம்பளம் தான்! சாயங்காலம் வேலை பார்த்தாலும் அதே சம்பளம் தான்! நம்ம சாயங்காலமே போவோம்!' இதனால் நன்றாக வேலை பார்ப்பவர்களின் 'மோட்டிவேஷனும்' கெடுகிறது அல்லவா?


1 comment:

  1. அழகான பதிவு. நேற்றைய உவமையை என்னை மாதிரி கோணலாகப் பார்க்கும் சிலருக்காக எல்லாக்கோணங்களிலிருந்தும் ஆய்வு செய்திருக்கிறீர்கள்.நன்றி.2 விஷயங்கள் எனக்கு ஒத்துவருவதால் எடுத்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.
    1.நாம் இறக்கும்போது நல்லவர்களாக இருந்தால் போதும் என்பதாலும் ஆனால் எப்போது இறப்போம் என்று தெரியாத காரணத்தாலும் எப்பொழுதுமே நல்லவர்களாக இருப்போம்.2நம் கையில் இருக்கும் பொக்கிஷத்தைப்பாராமல் அடுத்தவரின் கையில் உள்ளதை ஆராய ஆரம்பித்தோமானால் நமக்கு மிஞ்சுவதெல்லாம் தேவையற்ற ஒப்பீடும்,கோபமும், பொறாமையுமே! இவற்றைக்கடைபிடித்தாலே போதுமே நாம் கரையேற..எதற்குத் தேவையற்ற குழப்பங்கள்!!?? தந்தையின் இந்த பெருமுயற்சிக்கு என் 'சபாஷ்'...

    ReplyDelete