Monday, September 15, 2014

தம் சகோதரர் சகோதரிகளைப் போல!

இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை. ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார்...ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல ஆக வேண்டியதாயிற்று. (காண். எபிரேயர் 2:11-18)

இன்று அருட்பணியாளரின் உடல் குறித்து சிந்தித்தேன். அருட்பணியாளர்களுக்கும் இரத்தமும், சதையும் உண்டு. மனித உடலை ஏற்றதன் வழியாக இயேசு மனித உடலுக்குப் பெருமை சேர்க்கின்றார். நாம் நம் உடல் வழியாகவே இந்த உலகத்தோடும், மற்றவர்களோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். உடல் இல்லையேல் தொடர்பும் இல்லை. இந்த உடல் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் கருவி.

அ. இயேசு மனித இயல்பில் பங்கு கொண்டார்.
ஆ. சகோதரர், சகோதரிகள் என அழைக்க வெட்கப்படவில்லை.
இ. இரக்கமும், நம்பிக்கையும் கொண்ட தலைமைக்குருவாய் இருந்தார்.

அ. அருட்பணியாளர் தன் உடலை ஏற்றுக்கொள்ள வேண்டும். அன்பு செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு: ஒன்று, அதீதக் கவலை. மற்றொன்று, கண்டுகொள்ளாத நிலை. முதல் வகையினர் எந்நேரமும் தங்கள் உடல் குறித்த அக்கறை கொண்டவர்களாக இருப்பர். ஐயயோ! உடம்பு சுடுதே! கேன்சர் வந்துடுமோ? என்ற ரீதியில் இருப்பர். மற்ற வகையினர் முதல் அட்டாக் வந்தது தெரிந்தாலும் தவிர்க்கப்பட வேண்டிய உணவையும் உண்பர். தங்கள் உடலைப் பற்றியும், உடையைப் பற்றியும் அக்கறையற்றவர்களாக இருப்பர். 'நம்மள யார் பார்க்கப் போறா!' என்று சொல்லிக் கொண்டு அழுக்குத் துணிகளையே அணிந்து கொண்டு. பழைய கிழிந்த துண்டில் தலை துவட்டிக் கொண்டு இருப்பது சால்பு அன்று. தன் உடலின் வழியாகவே ஒரு அருட்பணியாளர் இறைப்பணி செய்கின்றார். மற்றவர்களோடு தொடர்பு கொள்கின்றார். ஊனும், இரத்தமும் உண்டு என்று சொல்லும் போது அருட்பணியாளர் தன் உணர்வுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் நாம் உணர்வுகளோடு போராடுகின்றோம். அல்லது உணர்வுகளை விட்டுப் பயந்து ஓடுகின்றோம். இரண்டுமே நல்லதல்ல. குறிப்பாக, எதிர்பாலரிடம் பழகும் போது இதைப் பார்க்கலாம். அவர்களோடு பேசினாலே நாம் காதலில் விழுந்து விடுவோம் என்ற தொனியில் அவர்கள் மேல் எரிச்சல் படுவதும், அவர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தவறு. எல்லாருமே ஒன்று தான். ஆண் - பெண் என்ற பேதம் ஒரு உடலியல் கூறுதானே தவிர, தவிர்க்கப்பட வேண்டியதோ, ஓடிவிடக் கூடியதோ அன்று.

மேலும், உடல் என்பது இறைவனின் ஆலயம் என்கிறார் தூய பவுல். இந்த உடலின் வழியாகவே நாம் இயேசுவின் திருவுடலை பீடத்தில் தொட்டுத் தூக்குகிறோம். உடலுக்கு எதிராக நாம் செய்யும் எதுவும் தவறே. 'அருட்பணியாளரின் தனிப்பட்ட வாழ்க்கை நிலை அவர் கொண்டாடும் அருட்சாதனக் கொண்டாட்டங்களைப் பாதிப்பதில்லை' என்கிறது திருச்சபையின் போதனை. அருட்பணியாளரையும் தாண்டி கடவுள் செயலாற்ற முடியும் தான். அதற்காக தொடர்பே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் அதற்கேற்ற உடல், உள்ள தயாரிப்பு பெற்றிருந்தால் தானே மற்றவர்களுக்கு நலம் தர முடியும். என் தனிப்பட்ட வாழ்க்கை என் பணியைப் பாதிக்காது என்று அவர் சொல்ல முடியுமா?

ஆ. தன்னை ஏற்றுக் கொள்வது போல அடுத்தவர்களையும் ஏற்றுக் கொள்வதே 'சகோதரர், சகோதரிகள்' என அழைப்பது. 'சக உதரன்!' - அதாவது தாயின் உதரத்தைப் பகிர்ந்து கொள்பவர்களே சகோதரர், சகோதரிகள். 'நான் கடவுளின் மகன். எனக்கு எல்லாம் தெரியும். நீங்க என்ன சொல்றது!' என்று இயேசு ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொண்டதோ, மற்றவர்களை தாழ்வாக நினைத்ததோ கிடையாது. 'வானகத் தந்தை ஒருவர். நாமெல்லாம் சகோதர, சகோதரிகள்' என்றே எண்ணினார். நேற்றைய தினம் என் பங்கின் பழைய பாசுக்கு பிரியாவிடை நிகழ்வு நடந்தது. நிறைய மக்கள் வந்து வாழ்த்தினார்கள். அவர் இறுதியாகச் சொன்னது இதுதான்: இன்று முதல் எனக்கு வேறு குடும்பம். வேறு சகோதர, சகோதரிகள். அருட்பணியாளர் ஒருவர் மட்டும்தான் எல்லாக் குடும்பத்துக்கும் உரியவராகின்றார். ஒரு பள்ளியில் முதல்வராக இருக்கும் ஒரு துறவற நிலை குருவானவர் பள்ளியில் தன் மாணவர்களோடும், சக ஆசிரியர்களோடும் உறவு கொண்டிருந்தாலும், அவரை யாரும் (எக்செப்ஷன் இருக்கலாம்!) தன் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பங்கின் அருட்பணியாளர் ஒரு குடும்பத்தில் பிறப்பு, திருமுழுக்கு, படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம், நோய், இறப்பு' என அனைத்திலும் உடனிருக்கிறார். இதில் உரிமையும் இருக்கின்றது. கடமையும் இருக்கின்றது. உரிமையை மட்டும் எடுத்துக் கொண்டு, கடமையைப் புறக்கணித்தல் கூடாது.

தன் உடன் அருட்பணியாளர்களையும், தனக்குக் கீழ் இருக்கும் அருட்பணியாளர்களையும், குருமாணவர்களையும் கூட சகோதரர்களாகவே பார்க்க வேண்டும். நான் குருமாணவராக இருந்தபோது எங்கள் பங்கில் ஒரு அருட்தந்தை இருந்தார். காலையிலிருந்து மாலை வரை வேலை வாங்குவார். எல்லாரும் சாப்பிட்ட பின் மிச்சம் இருக்கும் சாப்பாட்டை சமையற்கட்டில் வைத்துச் சாப்பிடச் சொல்வார். இரவில் வராண்டாவில் தூங்கச் சொல்லிவிட்டு கதவை அடைத்துக் கொள்வார். 'இவனும் நாளை நம்மைப் போல அருட்பணியாளர்' என்ற நிலையில் இல்லாவிட்டாலும், மனிதாபிமான அடிப்படையிலாவது நடத்தலாமே. இன்றும் அந்த அருட்பணியாளரைப் பார்த்தால் என் முகம் வேறு பக்கம் திரும்பிக் கொள்கிறது. அருட்பணியாளர்களின் தவறான அணுகுமுறைகளால் மக்கள் கோயிலுக்கு வராமல் இருக்கிறார்கள் என்பது மக்கள் கோவிலுக்கு வராததன் மூன்றாவது காரணமாக இருக்கின்றது ஒரு கணக்கெடுப்பில்.

இ. இரக்கமும், நம்பிக்கையும் கொண்ட குரு. கடவுளிடத்தில் நம்பிக்கை, சக மனிதரிடத்தில் இரக்கம். இன்று காலை என் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'நான் பங்குப்பணிக்காக போகும் பங்கில் வரியே வாங்க மாட்டேன்' என்று சொன்னேன். 'வரி வாங்காமல் எப்படி சமாளிப்பாய்?' என்று கேட்டார்கள். 'அப்பகுதி அறநிலையத்தாரிடம் கோவிலை ஒப்படைத்து விடுவேன். அவர்களே வருமானத்தையும், செலவையும் பார்த்துக் கொள்வார்கள். அல்லது என் சொந்த உழைப்பால் என் செலவினங்களைக் கவனித்துக் கொள்வேன்' என்றேன். ஒருமுறை இறந்த ஒருவரின் அடக்கத்திற்காக அவரது உறவினர்கள் பங்குத்தந்தையிடம் வந்தனர். 'குடும்பக் கார்டு இருக்கா?' 'இருக்கு!' 'கொடுங்க பார்ப்போம்!' பார்க்கிறார். 12 ஆண்டுகளாக வரிப்பணம் செலுத்தவில்லை. கால்குலேட்டர் எடுத்து 12 ஆண்டுகளுக்கு என்ன என்று கணக்குப் பார்க்கிறார். 'இவ்வளவு பணம் கொடுங்கள்! நான் கல்லறைச் சீட்டு தருகிறேன்!' என்றார். பாவம்! வந்திருந்தவர்களும் எல்லாரும் கொஞ்சம், கொஞ்சம் போட்டு பணத்தைக் கட்டிவிட்டே முணுமுணுத்துக் கொண்டே சென்றார்கள். மதிய உணவு அருந்தும் போது பங்குச் சாமி என்னைப் பார்த்து, 'இப்படித்தான் சாமி! நாம ஸ்ட்ரிக்டா இருக்கணும். சமயம் பார்த்து வாங்கிப்புடணும்!' என்றார். நான் சாப்பிட்டுக் கொண்டே சொன்னேன்: 'சாமி நீங்க கணக்குப் பார்த்து 12 வருஷமா கட்டலன்னு சொன்னீங்களே! வந்திருந்தவர் உங்களைப் பார்த்து, 'சரி! இந்த 12 வருஷம் எங்களை உங்கள்ல யாராவது வந்து பார்த்தீங்களா? நாங்க எங்க தூங்குறோம்? என்ன வேலை செய்யறோம்? என்பதாவது தெரியுமா? எங்க நல்லது கெட்டது என்னன்னாவுது உங்களுக்குத் தெரியுமா?' இப்படின்னு நம்மைப் பார்த்துக் கேட்டா அதுக்கு நாம என்ன சாமி பதில் சொல்வோம்?'

துறவறசபைக் அருட்செல்வர்களும், அருட்செல்வியர்களும் அருட்பணியாளர்களைப் பார்த்து (அவர்களைப் பார்த்து அல்ல! தங்களுக்குள்!) சொல்லும் குற்றச்சாட்டு இதுதான்: 'நீங்க மக்களோட வரிப்பணத்துலயும், காணிக்கைக் காசுலயும் சாப்பிடுறீங்க! ஆனா, நாங்க பள்ளியிலும், கல்லூரியிலும் வேலை செய்கிறோம்.' இதற்கு மற்றொரு நாளில் பதில் சொல்வோம். இன்று அவர்களின் குற்றச்சாட்டை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

எதற்காக வரி கட்ட வேண்டும்? அரசுக்கு வரி கட்டலாம். சரி. இங்க நாமெல்லாம் ஒரே அரசுக்குள்ளதான இருக்கிறோம். அப்புறம் எதுக்கு வரி? வரி வாங்குவதால் தான் இன்றும் இந்த மண்ணில் இன்னும் ஆங்கிலேயராகவே நம்மைப் பார்க்கிறார்கள். இந்துக்களின் கோவில்களை அரசு பார்த்துக் கொள்வது போல நம் கோயில்களையும் பார்த்துக் கொள்ளட்டுமே. யாராவது ஒருவர் நாம் கொடுக்கும் குடும்ப கார்டு எனக்கு வேண்டாம் என்று சொன்னால் நம் நிலை என்னவாகும்? 'கேள்வி கேட்டா இரத்தம் கக்கிச் சாவான்!' என்ற வடிவேலு காமெடி சொல்லும் பயத்தில் மக்கள் இருப்பதால் தான் நம் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

பயம், குற்றவுணர்வு - இந்த இரண்டும் தான் மதத்தின் சக்கரங்கள். இவை இரண்டும் இல்லையென்றால் மதத்திற்கும், கடவுளுக்கும், அருட்பணியாளர்களுக்கும் வேலையில்லை.

நம் மனித இயல்பில் நாம் ஒருவர் மற்றவரைச் சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து , ஒருவர் மற்றவரை உரிமை கொண்டாடவும், இரக்கம் காட்டுவும் இன்று என்னை அழைக்கிறது இயேசுவின் அருட்பணிநிலை.


1 comment:

  1. இன்றையப்பதிவு அருட்பணியாளர்களுக்கென்று இருப்பினும் இல்லறத்தாரும் தெரிந்துகொள்வதில் தப்பில்லை.அருட்பணியாளர்கள் இவ்வுலகில் இருப்பினும் இவ்வுலகைச்சார்ந்தவர்கள் அல்லர்..என்று கூறப்பட்டதெல்லாம் அந்தக்காலம்.இன்று ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு வாழ்வது அத்தியாவசியமான ஒன்று."பயம்,குற்றவுணர்வு இல்லையெனில் கடவுள்,அருட்பணியாளர்களுக்கு வேலையில்லை"..புத்தி ஓரளவு இதை ஒத்துக்கொண்டாலும் மனம் முரண்டு பிடிக்கிறதே! "ஒருவர் மற்றவரையும் உரிமை கொண்டாடவும்,இரக்கம் காட்டவும் இன்று என்னை அழைக்கிறது இயேசுவின் அருட்பணி நிலை"... அழகு.வாழ்த்துக்கள்..

    ReplyDelete