Thursday, September 18, 2014

டேஸ்ட் ஆஃப் தெ புட்டிங்

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால் தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். (எபிரேயர் 11:1-2)

நம்பிக்கை என்றால் என்ன என்பதற்கான வரையறையை நாம் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் மட்டுமே பார்க்கிறோம். கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் 13ஆம் அதிகாரத்தில் அன்பிற்கென ஒரு பாடல் இருக்கின்றது. நம்பிக்கைக்கென ஒரு பாடல் என்று நாம் எபிரேயர் 11ஐச் சொல்லலாம்.

நம்பிக்கை என்ற வார்த்தையைப் புரிவதில் இப்போது ஒரு குழப்பம் இருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு இன்னும் 10 நிமிடத்தில் பஸ் வந்துடும்னு நம்புறேன்னு சொல்றதுக்கும், கடவுளை நம்புறேன்னு சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நம்பிக்கை என்ற வார்த்தையைப் புரிந்து கொள்ள நான் எப்போதும் எடுக்கும் மேற்கோள் 1 கொரிந்தியர் 13:13 தான்.

'ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது' (1 கொரி 13:13)

இந்த இறைவாக்கை பழைய மொழிபெயர்ப்பில் பார்த்தால், 'ஆக, விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் மேலானது அன்பே' என்று இருக்கிறது.

விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற வார்த்தைகளை இன்றைய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என மாற்றிவிட்டோம்.

இன்று நாம் எபிரேயர் திருமுகத்தில் பார்க்கும் மதிப்பீடு விசுவாசம். புதிய மொழிபெயர்ப்பில் நம்பிக்கை.

ஒவ்வொரு திருமுக ஆசிரியரும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து தன் திருமுகத்தை எழுதுகிறார். கொரிந்து நகரத் திருச்சபையில் அன்பு குறைவாக இருந்தது. ஆகையால் அன்பின் மேன்மை குறித்து அவர்களுக்கு எழுதுகின்றார். உரோமைத் திருச்சபையில் செயல்கள் அதிகம் முன்வைக்கப்பட்டு விசுவாசம் ஓரங்கட்டப்பட்டது. ஆகையால் பவுல் விசுவாசத்தின் மேன்மை பற்றி அவர்களுக்கு எழுதுகின்றார். திருத்தூதர் யாக்கோபின் திருச்சபையில் விசுவாசத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு செயல்கள் மறுக்கப்பட்டது. ஆகையால் அவர்களுக்கு 'செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம்' என எழுதுகிறார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் சந்திக்கும் திருச்சபை யூத மரபிலிருந்து புதிதாக கிறிஸ்தவர்களாக மாறியவர்களை அதிகம் கொண்டதாக இருந்தது. யூதர்கள் விருத்தசேதனம் போன்ற வெளிப்புற செயல்களை மட்டும் வலியுறுத்தினர். அவர்களுக்கு விசுவாசமே மேன்மையானது என்பதை யூதர்களின் விவிலியத்தின் வழியாக மேற்கோள் காட்டுகின்றார் ஆசிரியர்.

வழக்கமாக நம்பிக்கைக்கு (விசுவாசம்) உதாரணமாக ஆபிராகமையே சொல்வர். ஆனால் ஆசிரியர் ஆபேலிலிருந்து அட்டவணைப்படுத்துகிறார். தொடக்கநூல் தொடங்கி மக்கபேயர் நூல் வரை குறிப்பிடப்பட்டுள்ள இஸ்ரயேல் மக்களின் முக்கிய கதாமாந்தர்களை நம்பிக்கையின் சான்றாக வைக்கின்றார் ஆசிரியர். இப்படியாக நம்பிக்கையின் வழியாகவே அனைவரும் மேன்மையடைந்தனர் எனவும், இந்த நம்பிக்கையில் தளராமல் தன் திருச்சபை இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறார்.

நம்பிக்கை என்பது கடவுளின் கொடை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட நபர் சார்ந்தது. நம்பிக்கை என்பது அன்பைப் போலவே ஒரு உறவு. எடுத்துக்காட்டாக. நம் பெற்றோர். நம் பக்கத்து வீட்டாரைப் பொறுத்த வரையில் நம் பெற்றோர் என்பர்கள் இவ்வுலகில் உடலோடு உலவும் இரண்டு மனித உயிர்கள். ஆனால் நாம் அவர்களை வெறும் உடலாகவோ, உணர்வுகளின் தொகுப்பாகவோ பார்ப்பதில்லை. அவர்களோடு நாம் ஒன்றாகிவிடுகிறோம். அன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என நம்மால் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. தன் அப்பா தன்னைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் தான் குழந்தை நிம்மதியாகத் தூங்குகிறது. பக்கத்து வீட்டுக்காரர் நம்மைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் அது தூங்கப் போகிறதா? அல்லது விழித்திருக்கிறதா? இல்லை!

நம்பிக்கை என்பது ஒரு நெருக்கம். நம்பிக்கைக்கு காரணம் தேவையில்லை.

நாம் செய்யும் எல்லா செயல்களிலும் நம் மனம் நம் மூளைக்கு அடிமை. ஆனால் காதலிலும், நம்பிக்கையிலும் மட்டும் தான் நம் மூளை நம் மனதிற்கு அடிமை. அப்படி இருந்தால் தான் அன்பும், நம்பிக்கையும் உயிரோட்டமாக இருக்க முடியும். மூளை மனதை அடிமையாக்க முயற்சித்தால் அங்கே பிரச்சனை வந்துவிடும். நம் மூளை நாம் அன்பு செய்பவரையும், நம்மை அன்பு செய்பவரையும், நாம் நம்பும் கடவுளையும் விமர்சிக்க ஆரம்பிக்கும், திறனாய்வு செய்யும், 'இது ஏன்! அது ஏன்!' என்று கேட்கும், 'அப்படி இருக்குமோ! இப்படி இருக்குமோ!' என்று சந்தேகம் கொள்ளும்.

அருட்பணியாளருக்கு அன்பிலும், நம்பிக்கையிலும் மூளை ஆட்சி செய்யவே கூடாது. ஒரு பங்குத்தளத்தில் இருந்துவிட்டு அடுத்த பங்குத் தளத்திற்குச் செல்லும் போது இந்தப் போராட்டம் இருக்கும். ஒரு பங்கில் நாம் பெற்ற அனுபவங்களை மூளை நினைவுபடுத்திக் கொண்டு அதை அப்படியே புதிய பங்குத்தளத்தில் தொடர்புபடுத்த நினைக்கும். பழைய பங்களில் எல்லா டீச்சரும் என்கிட்ட பேசினாங்களே. அப்படின்னா இங்க உள்ள டீச்சரும் பேசுவாங்க. பழைய பங்கில கான்வென்ட்டில் சிஸ்டர்ஸ்லாம் நம்ம கூட சண்டை போட்டாங்களே. அப்படின்னா இங்கயும் அப்படித்தான் இருப்பாங்க. பழைய பங்கில் அந்தோணியாருக்கு நிறைய பக்தர்கள் இருந்தார்களே, அப்படின்னா இங்கயும் ஒரு குருசடி அந்தோணியாருக்குக் கட்டணும். ஆனால் புதிய பங்கில் டீச்சர்ஸ் இல்லையென்றால் என்ன ஆகும்? நாம் வேறு யாரிடமும் பேசுவும் மாட்டோம். கான்வெண்ட் இல்லையென்றால் நாம் வேறு யார்கூடயாவது சண்டை போடவும். இந்த பங்கில் மாதா பக்திதான் அதிகம் என்றால் ஏன் அந்தோணியார் பக்தியைத் திணிக்க வேண்டும்?

அன்பிலும், நம்பிக்கையிலும் எப்போதும் திறந்த மனம் வேண்டும். மனம் மூடிவிட்டால் அங்கே அன்பும், நம்பிக்கையும் புழுக்கத்தில் இறந்துவிடும்.

அன்பும், நம்பிக்கையும் வெறும் மதிப்பீடுகள் மட்டுமல்ல. அவை வாழ்வில் செயல்களாக வெளிப்பட வேண்டும். 'டேஸ்ட் ஆஃப் தெ புட்டிங் இஸ் இன் தெ ஈட்டிங்' என்பார்கள். நாம் நல்லவர் என்றால் அது நற்செயல்களாக வெளிப்பட வேண்டும். அன்பும், நம்பிக்கையும் செயல்கள். அன்பிலும், நம்பிக்கையிலும் அடுத்தவர்தாம் மையப்படுத்தப்பட வேண்டும்.

உன்னிடம் இருப்பதை அவனுக்குக் கொடுப்பதை விட
அவனுக்குத் தேவையானதை அவனுக்குக் கொடுத்தால்
அவன் மகிழ்ச்சியாய் இல்லம் திரும்புவான்.
'ஐயோ! பசிக்கிறது!' என்று வருபவனுக்கு
உன்னிடம் இருக்கும் செபமாலையும், மாதா படமும் நீ கொடுத்தால்
அவன் பசியாறுமா?
அந்த நேரத்தில் பத்து ரூபாய் நோட்டுதான்
அவனது செபமாலை, மாதா எல்லாம்!

'இந்த நம்பிக்கையால் தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்!'


1 comment:

  1. இந்த நாட்களில் பதிவுகள் அருட்பணியாளர்களையே மையப்படுத்தியிருப்பதால் கொஞ்சம் தள்ளிநிற்க வேண்டியுள்ளது.ஆனால் எந்நிலையிலிருப்பவருக்கும் நம்பிக்கை,அன்பு இந்த இரண்டுமே ஒரு வண்டியின் இரு சக்கரங்கள்.உண்மைதான்...நாம் அன்பு செய்பவர்களை நம் மூளை வழி இல்லாமல் மனத்தின் வழியே பார்த்தால்தான் அவர்களது நிறை,குறைகளோடு அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும்.இலையெனில் நம் மூளை நம் அன்புக்கும் 'அடைக்கும் தாழாகிவிடும்'அன்பும்,நம்பிக்கையும் நற்செயலில் வெளிப்படவேண்டும்..அருமை.பசி என்று வருபவனுக்குத் தேவை 10 ரூபாய் அதாவது ஒரு கை சாதம்...முத்தாய்ப்பு.நாம் நேசிப்பவரிடம் நாம் பேசுவது எதன்வழி...மனமா இல்லை மூளையா...!!?? யோசிப்போம்.....

    ReplyDelete