Saturday, September 6, 2014

உண்பதற்கு உம்மிடம் என்ன இருக்கிறது?

இயேசு மறுமொழியாக, 'தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா? அவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக் கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?' என்று கூறினார். (லூக்கா 6:3-4)

ஓய்வுநாளைப் பற்றிய சர்ச்சை வருமிடத்தில் எல்லாம் இயேசு தாவீது அரசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. தாவீது அரசரின் வாழ்வில் நடந்த நிகழ்வை நான் இதுவரை வாசித்ததே கிடையாது. இன்று அதை வாசிப்போம் என எடுத்துப் பார்த்தேன்.

அந்த நிகழ்வு இதோ.

1 சாமுவேல் 21:1-6. தாவீது இன்னும் அரசராகத் திருநிலைப்படுத்தப்படவில்லை. சவுல் அரசனிடமிருந்து அவரும், அவருடைய நண்பர்களும் தப்பித்து ஓடுகின்றனர். இந்த நிகழ்வு நடக்கும் இடம் நோபில். இங்கே குறிப்பிடப்படும் குரு அகிமெலக். அகிமெலக் - தாவீது உரையாடல் இதோ:

அகிமெலக்: நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா?

தாவீது: (...) உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும்.

அகிமெலக்: தூய அப்பமே என்னிடம் உள்ளது. சாதாரண அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்.

தாவீது: சாதாரணப் பயணத்தின் போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவு கொள்வதில்லை. இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்.

தொடர்ந்து தூய அப்பத்தை அகிமெலக் தாவீதுக்கு அளிக்கின்றார்.

பசி, பயணம் என்ற இந்த இரண்டிலும் எதுவும் அனுமதிக்கப்படலாம் என்பது பாலைவனத்தில் மக்கள் கொள்ளும் எழுதாத சட்டம். பசித்திருப்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் எந்த ஒரு சட்டமும் பொருந்தாது. அவர்களின் நலனே கருத்;தில் கொள்ளப்பட வேண்டும். விவிலியத்தில் முன்பின் தெரியாதவர்களுக்கெல்லாம் கிணற்றடியில் பெண்கள் தண்ணீர் இறைத்துத் தருவதாக இருக்கும். பசி மற்றும் தாகம் யாராயிருந்தாலும் ஒன்றுதான். அது தணிக்கப்பட வேண்டும். நல்லவரோ, கெட்டவரோ, தெரிந்தவரோ, தெரியாதவரோ அனைவருக்கும் பசியும், தண்ணீரும் ஒன்றுதான். நாம் ஒருவருக்கு இந்த இரண்டையும் மறுத்தால் நாம் பயணம் செய்யும் போது நமக்கு அது கிடைக்காமல் போகும் என்ற கருத்து பாலைநில மக்களிடையே நிலவியதால் பசியையும், தாகத்தையும் தணிப்பதில் மும்முரமாக இருந்தனர்.
இறைவனின் இல்லத்தின் அப்பத்தை உண்ண பசி மட்டும் போதாது, தூய்மையும் வேண்டும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் வாசகப் பகுதி இது. பெண்களின் உறவு என்பது முதல் ஏற்பாட்டு நூலில் தீட்டாகவே கருதப்பட்டுள்ளது. இல்லறத்தில் பெண்களோடு உறவு என்பது தீட்டு அல்ல. ஆனால் இறைப்பணிக்கு வந்தவர்களுக்கும், இறைவனின் பிரசன்னத்திற்குள் வருபவர்களுக்கும் அது தீட்டாகக் கருதப்பட்டது. ஆணின் விந்தணுக்களில் அவரின் ஆற்றல் இருப்பதாகவும், அது நீங்கி விட்டால் உடலில் அவரின் பலம் குறைந்து விடுகிறது என்பதும், அந்த அணுவில் உயிர் இருக்கிறது, உயிர் தரும் இறைவனின் பிரசன்னத்திற்கு வருமுன் தன்னிடம் இருக்கும் உயிரை பத்திரப்படுத்தல் அவசியம் என்ற பின்புலமே இந்தக் கருத்தியலுக்குக் காரணம்.

கத்தோலிக்கத் திருஅவை தன் திருப்பணியாளர்களை மணத்துறவு மேற்கொள்ள அழைப்பு விடுக்கும் பல காரணங்களில் இதுவும் ஒன்று.

தாவீதும் அவருடைய நண்பர்களின் 'துறவு' எனக்கு வியப்பாக இருக்கிறது. சாதாரண அரசனின் வேலை செய்யச் செல்லும் அவர்கள் மேற்கொள்ளும் விரதம் விந்தையாக இருக்கிறது. அவர்களின் மனத்திடம் பாராட்டுதற்குரியது. 'பயணத்தின் போது' உடலுறவு தவிர்க்கப்பட்டதன் காரணம் உடலுறவில் மனமும், உடலும் வலுவிழக்கிறது என்பதாலும், பயணத்திற்கு மனமும், உடலும் வலிமை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

இளைஞர்களின் தூய்மை அவர்களின் பசிக்கு அப்பம் பெற்றுத் தருகின்றது.

இந்த இறைவாக்குப் பகுதி சொல்வது இரண்டு:

அ. பசி, தாகம் என்று யாராவது வந்தால் அவர்களிடம் சட்டம் பேசக் கூடாது. நம்மிடம் உள்ளதைக் கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் இதே நிலை நாளை நமக்கும் வரலாம்.

ஆ. இறைவனின் பிரசன்னத்தில் பணிபுரிபவர்களுக்கும், அவரின் பிரசன்னத்தை நெருங்கி வருபவர்களுக்கும் உளத்தூய்மையம், உடல் தூய்மையும் அவசியம். இன்று அறிவியல் மற்றும் உடலியல் காரணங்களைச் சொல்லி சப்பைக் கட்டு கட்டினாலும் முதல் ஏற்பாட்டு நூலின் புரிதல் இதுவே.


1 comment:

  1. தம்மை நாடிவருவோரின் பசிதீர்க்கும் முறை பற்றி 'செட்டிநாட்டுப'பகுதியில் ஒரு நல்லபழக்கம் உண்டு.இப்பொழுதெல்லாம் உணவுகேட்டு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.ஆனால் என் சிறுவயதில் பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்." முன் கதவை யாரும் அடைக்காதீர்கள்; பசியாற வருபவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று போய் வருவார்கள்" என்று.பிறரின் வயிறைக் குளிர் வைப்பது புண்ணியங்களில் எல்லாம் பெரிய புண்ணியம்..ஏனெனில் இறைவனே கூட நம்மிடம் பசியாற வரலாம் விவிலியத்தின கூற்றுப்படி.
    இறைவனின் பிரசன்னத்தில் பணிபுரிபவர்களும்,அதை நெருங்கி வருபவர்களும் காக்க வேண்டிய உடல்,உள்ளத்தூய்மை பற்றியும் அதற்குக் கொடுத்திருக்கும் அழகான விளக்கங்களும் புதியவை எனினும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.தந்தையின் அத்தனை முயற்சிக்கும் பாராட்டும், நன்றியும்...

    ReplyDelete