Friday, September 19, 2014

புத்துணர்வு பெற்றவர்களாக!

அ. எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. (12:1)

ஆ. நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். (12:2)

இ. துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள். (13:3)

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் உதவியோடு இந்த ஐந்து நாட்களும் ஒரு தியான முயற்சியில் ஈடுபட்டோம். இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் இந்தத் திருமுகத்திலிருந்து இன்று நாம் உலகத்திற்கு என்ன எடுத்துச் செல்லப்போகிறோம்.

ஒவ்வொரு முறை தியானம் செய்யும் போதும் நான் நினைத்துக்கொள்ளும் ஒரு உருவகம் கப்பல். கப்பல் கட்டப்படுவது துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்காக அல்ல. கடலுக்குள் பயணம் செய்து, காற்றையும், அலையையும் எதிர்கொண்டு தன் இலக்கை அடைவதில் தான் அதன் பயன்பாடு அமைந்திருக்கிறது. தியானத்தின் நிறைவில், 'ஆண்டவரே! நாம் இங்கேயே இருப்பது எத்துணை நல்லது! உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றும் என மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்று தாபோர் மலையில் பேதுரு சொன்ன வார்த்தைகள் நம் மனதில் வரக் கூடாது. இந்த இடம் நன்றாக இருக்கிறது தான். ஆனால் இந்த இடம் நமக்கு நிரந்தரமானதல்ல.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியரும் ஒரு மறையுரை போல தன் திருமுகத்தை எழுதி அதை நிறைவு செய்யும் போது தன் இலக்கு மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றார். அந்த அறிவுரைகளில் மூன்றை எடுத்து அதை நம் அருட்பணி வாழ்வில் செயல்படுத்திப் பார்க்க முயற்சி செய்வோம்.

அ. பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுங்கள். நாம் எல்லாருமே பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கோம். ஒவ்வொருவருக்கும் பந்தயத்திடல் வேறு வேறாக இருக்கின்றது. நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது குருமாணவர் பயிற்சி மையத்தின் தோட்டத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த செல்வம் என்பவரை தினமும் பார்ப்பேன். புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டவர். ரொம்ப ஜாலியாக நீர் பாய்ச்சிக் கொண்டிருப்பார். 'இந்த வருடத்தோடு படிப்பு முடிந்தது! இனி நிம்மதியாக இருக்கலாம்! செல்வத்தின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி இனி என் முகத்திலும் இருக்கும்!' என்று தினமும் சொல்லிக்கொள்வேன். ஆனால் 12ஆம் வகுப்போடு படிப்பு முடியவில்லை. இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொருவருக்கும் பந்தயத்திடல் ஒவ்வொரு சவாலை வைக்கின்றது. அருட்பணி நிலையில் வரும் ஒரு சோதனை, 'அந்த டிராக் நல்லா இருக்கிறதே!' என்பதுதான். வாத்தியாரா ஆகியிருக்கலாமோ? வக்கீலா ஆகியிருக்கலாமோ? என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆசைகள் வரும். நம்ம சும்மாயிருந்தாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் உசுப்பேத்தி விடுவார்கள். 'ஃபாதர் உங்களுக்கு இருக்கிற டேலன்டுக்கு நீங்க ஏன் புத்தகம் எழுதக்கூடாது? நீங்க ஏன் மாதா டிவியில பேசக் கூடாது? நீங்க ஏன் பிஷப்பாகக் கூடாது?' என்று உடம்பை ரணகளமாக்கிவிடுவார்கள். 'என் பந்தயம் இதுதான். அதில் நான் நன்றாக ஓடினால் போதும்!' என நினைக்க மனஉறுதி அவசியம். கொஞ்சம் மனம் உறுதியை இழந்து விட்டால் தண்ணீரில் அடித்துச் செல்லப்படும் தக்கை போல வாழ்க்கை பரிதாபமாக மாறிவிடும்.

ஆ. இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நாம் ஒருவரைப் பார்ப்பதற்கும், அவர் மேல் கண்களைப் பதிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. நாம் பார்க்கும் போது பார்க்கப்படும் நபர் எல்லாப் பொருட்களையும் போல ஒரு பொருளாகத் தோன்றுகிறார். ஆனால் கண்கள் அவர் மேல் பதிய வைக்கப்படும் போது அவர் நம்மோடு உறவாடுகிறார். திருமணத்தின் முதல் நாள் அன்று புதிய மணமகன், புதிய மணமகள் மேல் கண்களைப் பதிய வைக்கிறார். ஐ! இங்க மச்சம் இருக்கே! அங்க தழும்பு இருக்கே! சிரிச்சா குழி விழுதே! நாக்கு பிங்க் கலரா இருக்கே! உதடு படுத்திருக்கும் வரிக்குதிரை போல இருக்கே! என்று ஒவ்வொன்றாக இரசிக்கம் பார்வை, ஆண்டுகள் கடக்கக் கடக்க, மனைவி வெறும் நடமாடும் பொருளாகவே கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றார். இது அருட்பணி நிலைக்கும் பொருந்தும். அருட்பணி நிலையில் ஆரம்ப காலத்தில் இருந்த ஆர்வம் வற்ற ஆரம்பிக்கிறது. நம் திராட்சை ரசம் குறைந்து போகின்றது. இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்த நாம், ஒவ்வொரு திருப்பலியையும் அர்த்தத்தோடு நிறைவேற்றிய நாம் திருப்பலி வைக்கும் ரோபோக்களாக மாறிவிடுகிறோம். அதே நற்செய்தி! அதே வாசகம்! அதே பீடம்! அதே அப்பம்! அதே இரசம்! அதே அங்கி! அதே திருவுடை! அதே! அதே! என்று எல்லாம் ஒன்றுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டால் நம் கண்கள் இயேசுவின் மேல் பதியவில்லை என்றே அர்த்தம். இந்த இறைவாக்கின் மற்றொரு பரிணாமம் என்னவென்றால், நம் கண்கள் இயேசுவின் மேல் பதிந்துவிட்டால் வேறு எதுவும் அந்த இடத்தைப் பிடிக்கக் கூடாது. இன்று நம் ஸ்மார்ட்ஃபோன்களைப் பார்க்கும் நேரம் கூட இயேசுவைப் பார்ப்பதில்லையே.

இ. நாம் துன்புறுபவர்கள். ஆகையால் துன்புறும் மற்றவர்களின் மேல் பரிவு வேண்டும். பரிதாபப்படுவதற்கும், பரிவு காட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. பரிதாபம் என்பது ஒரு உணர்வு. பரிவு என்பது ஒரு செயல். எங்கோ நடந்த விமான விபத்தில் பலியானவர்களைக் குறித்த செய்த கேட்டு 'ஐயோ!' என்று நாம் சொல்வது பரிதாபப்படுவது. அது ஒரு உணர்வாக மட்டுமே நின்றுவிடுகிறது. ஆனால், அதுவே நமக்கு நெருக்கமான ஒருவர் தேவையில் இருக்கும் போது அங்கு ஓடிச்சென்று நம் ஒன்றிணைப்பைக் காட்டுவது பரிவு. இன்று இறைமக்கள் பரிதாபப்படும் அருட்பணியாளர்களை விரும்புவதில்லை. பரிவு காட்டும் அருட்பணியாளர்களையே விரும்புகிறார்கள். பரிதாபம் காட்டும் போது நம் மற்றவரிடமிருந்து விலகி நிற்கிறோம். அல்லது 'நல்ல வேளை! நான் நல்லா இருக்கிறேன்!' என்ற ஒரு மட்டுமித உணர்வு இருக்கிறது. ஆனால் பரிவில் நாம் ஒன்றாகி விடுகிறோம். இந்தப் பரிவில் நாம் இறைமகன் இயேசுவையே ஒத்திருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் நடக்கும் பிறப்பு, திருமணம், இறப்பு என எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பதும், அழுவாரோடு அழுது, சிரிப்பாரோடு சிரிப்பதுமே பரிவு.

அருட்பணி நிலைக்கு நன்றி கூறியவர்களாக, இறைப்பற்றும், பிறரன்பும் கொண்டு ஒவ்வொரு பொழுதும் 'இன்றே!' என எண்ணி வாழ்ந்தால் இனி எல்லாம் சுகமே!

புத்துணர்வு பெற்றவர்களாக மதுரை உயர்மறைமாவட்ட இனியவளின் முகத்தை நிமிர்த்த வீறுகொண்டு புறப்படும் என் உடன்பணியாளர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்!

வாழ்க்கை சிலரை செங்கல்லால் முகத்தில் அடிக்கிறது.
சிலரை மயிலிறகால் வருடிக்கொடுக்கிறது.
ஏன் எனக்கு செங்கல், அவனுக்கு மயிலிறகு? -
என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே
முடிந்துவிடுகிறது வாழ்க்கை!


1 comment:

  1. எத்துணை உண்மையான,அடிமனத்தின் ஆழத்திலிருந்து வந்து விழும் வார்த்தைகள்..,எபிரேருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் வார்த்தைகள் அருட்பணியாளர்களுக்கு மட்டுமின்றி இறைமக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றன.அருட்பணியாளர்களும் இறைமக்களும் ஒருவருக்கொருவர் 'பரிவை' மட்டுமே பகிர்ந்து செயல்பட்டால் 'புண்ணியபூமி' என்று ஒரு இடத்தை நாம் தேடிப்போகத்தேவையில்லை.தந்தையே! தங்கள் பதிவின் இறுதி ஐந்து வரிகள்...ஐயோ..தாங்களே மயிலிறகாய் மாறிவிட்ட உணர்வைக் கொடுக்கிறது.பாராட்டுக்கள்! தாங்களும்,தங்களின் சக்குருக்களும் வீறுநடைகொண்டு பயணிக்கப்புறப்படும் இந்நேரத்தில் எங்களின் செபங்களையும்,வாழ்த்துக்களையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்...இறைவன் அனைவரையும் தம் வரங்களால் நிரப்புவாராக!

    ReplyDelete