Wednesday, September 17, 2014

தலைமைக்குரு போல...

ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும், மிக உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. அன்பு செலுத்தவும், நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. (எபிரேயர் 10:22-24)

ஒவ்வொரு அருட்பணியாளரும் தன் இறைமக்களுடன் கொண்டிருக்க வேண்டிய உறவைப் பற்றிச் சிந்திக்க இன்றைய இறைவாக்குப் பகுதி நம்மை அழைக்கிறது. மேற்காணும் இறைவாக்குக்கிற்கு முந்தைய பகுதியில் இரண்டு அதிகாரங்களில் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர் மிகவும் சிரத்தையோடு ஆண்டவரின் குருத்துவத்தின் மேன்மையை முன்வைத்துள்ளார். இவர் எழுதும் விதம் மிக அழகான கட்டமைப்பு கொண்டது. 7, 8, 9 மற்றும் 10ஆம் அதிகாரங்களை வாசிக்கும் போது ஏதோ திரைப்படம் பார்ப்பது போலவே இருக்கும்.

யூதர்களின் எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற பலி, எருசலேமின் ஆலயம், அப்போது நிலவிய குருத்துவம், அவர்களின் தலைவராக இருந்த தலைமைக்குரு என பல நிறுவனங்களைக் குறித்த நம் அறிவு இந்தத் திருமுகத்தால் தெளிவாகிறது.

இங்கே இரண்டு குருக்கள் பற்றிச் சொல்லப்படுகிறது. ஒருவர், மெல்கிசெதெக்கு. மற்றவர், தலைமைக்குரு. இவர்கள் யார்? மெல்கிசெதேக்கு ஆபிரகாமைச் சந்தித்ததை தொநூ 14:17-20ல் நாம் வாசிக்கிறோம். எபிரேயத்தில் 'மேலக்' என்றால் 'அரசர்'. 'செதேக்கு' என்றால் 'நீதி அல்லது நேர்மை'. ஆக, நீதியின் அரசர். இது ஒரு காரணப்பெயராகக் கூட இருக்கலாம். 'மெல்கிசெதேக்கைப் போல என்றென்றும் தலைமைக்குரு' என்றென்றும் குறிப்பிடுகிறார்கள். ஏன் அவர் என்றென்றும் இருக்கிறார்? மெல்கிசெதேக் ஆபிரகாமைச் சந்திக்குமுன் எங்கிருந்தார் எனவும், சந்தித்தபின் எங்கு சென்றார் என்றும் யாருக்கும் தெரியாது. ஆகையால் அவர் முதலும், முடிவும் அல்லாதவர் என்று சொல்வது மரபு.

இரண்டாவதாக, தலைமைக்குரு என்பவர் யார்? யூதர்களின் குருத்துவ முறையில், அதாவது, இயேசு காலத்துக் குருத்துவ முறையில் நான்கு வகையினர் இருந்தனர்: லேவியர், குருக்கள், முதன்மைக் குருக்கள் மற்றும் தலைமைக்குரு. லேவியர் என்பவர்கள் நம்ம ஊர் பீடப்பூக்கள் போல. குருக்கள் பலி செலுத்தும்போது உதவி செய்பவர்கள். பலிபீடத்தில் விறகு எடுத்து வைப்பார்கள். தண்ணீர் கொண்டு வருவார்கள். கத்தியைக் கழுவி வைப்பார்கள். துணியை மடித்து வைப்பார்கள். இப்படி எல்லா எடுபிடி வேலையையும் செய்வார்கள். இரண்டாம் வகையினர் குருக்கள். இஸ்ரயேலில் எண்ணற்ற குருக்கள் இருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்களின் முறை எடுத்து பணி செய்வார்கள். இரண்டு வகையான பலிகள் செலுத்த இவர்கள் தயாரிக்கப்பட்டனர். ஒருவகையான பலி இரத்தப் பலி. அதாவது, ஆடு, மாடு, புறாக்களை வெட்டுவது. மற்ற பணி தூபப் பலி. சாம்பிராணி போடுவது. சாம்பிராணி ஒரு ஆன்டிசெப்டிக்காகவே பயன்படுத்தப்பட்டது. அந்தக் காலத்தில் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன், சேனிடைசர், குளிர்சாதன வசதி எல்லாம் கிடையாது. இரத்தவாடை மற்றும் இறைச்சியின் வாடையை சாம்பிராணி போட்டே அகற்றினர். மேலும் இந்தப் பீடத்திலிருந்தே மிருகங்களின் இதயங்கள் போன்றவவை தீயில் போடப்படும். நாம் லூக்கா நற்செய்தியில் பார்க்கும் எலிசபெத்தம்மாளின் வீட்டுக்காரர் சக்கரியா இந்தப் பணியைத்தான் செய்து வந்தார். மூன்றாம் வகையினர் முதன்மைக் குருக்கள். இவர்கள் ஆலயத்தின் எல்லா மேலாண்மை வேலைகளையும் பார்ப்பவர்கள். எவ்வளவு பணம் வருது, எவ்வளவு பணம் போகுது, கூட்டம் இருக்கா, இல்லையா, சட்டம், ஒழுங்கு இருக்கா என்று பார்ப்பவர்கள். இவர்களுக்கென்று போலீசும் இருந்தது. இவர்கள் தாம் இயேசுவைக் கைது செய்தவர்கள், வாக்குவாதம் செய்தவர்கள், தண்டனை பெற்றுத் தந்தவர்கள். இவர்களுக்கெல்லாம் மேலாக இருப்பவர் தான் தலைமைக்குரு. இவர்தான் எல்லாருக்கும் பாஸ். பாஸ் என்றால் எல்லாரையும் ஆட்டிப்படைக்கக் கூடியவர். இந்த நிலைக்கு நிறைய பேர் பணம் கொடுத்தே வருவார்கள். இவரும், உரோமையின் கவர்னரும் தான் அந்தக்காலத்தில் இஸ்ரயேலை ஆண்டவர்கள். இவருக்குள்ள ஒரே வேலை ஆண்டுக்கு ஒரு முறை பலி செலுத்துவது. எருசலேம் ஆலயத்தின் கருவறைக்குள் இவர் மட்டும் தான் நுழைய முடியும். அதுவும், ஆண்டுக்கு ஒருமுறை. இவர் உள்ளே நுழையும் போது இவரின் இடுப்பில் கயிறு ஒன்றைக் கட்டி உள்ளே அனுப்புவார்களாம். பலி செலுத்தும் போது ஒருவேளை அவர் இறந்து விட்டால் மற்றவர்கள் வெளியிலிருந்தே இறந்தவரை வெளியே இழுத்துவிடலாம் அல்லவா! அப்படியாக ஆலயத்தின் கருவறைக்கு அவ்வளவு மதிப்பு தரப்பட்டது.

இன்றைக்கு உள்ள கத்தோலிக்க குருத்துவ முறை ஏறக்குறைய இதே அமைப்பையே கொண்டிருக்கிறது. லேவியர், குருக்கள், முதன்மைக் குருக்கள் மற்றும் தலைமைக்குரு என்று இருந்தது இன்று திருத்தொண்டர்கள். குருக்கள், ஆயர்கள் மற்றும் திருத்தந்தை என மாறி இருக்கிறது. அன்றைக்கு ஆடு வெட்டுன மாதிரி எல்லாம் இன்று இல்லை. இன்றைக்கு எல்லாமே ரொம்ப சோஃபியா மாறிடுச்சு. அவ்வளவுதான் வித்தியாசம். இன்னொரு பெரிய வித்தியாசம் இருக்கு. அன்று குருத்துவம் என்பது ஒரு குடும்பத் தொழில். என் தாத்தா, என் அப்பா, நான், என் மகன் என்று போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இன்று இது குடும்பத்தையோ, குலத்தையோ சார்ந்தது அல்ல. எல்லாருக்கும் பொதுவானது. திருமுழுக்கு பெற்ற எந்த ஆணும் குருவாக முடியும். பெண்களைக் குருக்கள் ஆக்கினால் என்ன என்று கேட்கிறீர்களா? அதற்கு காரணம் என்ன என்று தெரியுமா? அதைப்பற்றியெல்லாம் நாம் பேசக் கூடாது.

இயேசுவை மெல்கிசதேக்கு என்றும், மிகப்பெரும் தலைமைக்குரு என்றும் ஆசிரியர் எப்படிச் சொல்கின்றார்?

இயேசு கடவுள் என்பதால் அவருக்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. ஆகவே அவர் மெல்கிசதேக்கு. தன் சிலுவை மரணத்தால் வழியாக திருத்தூயகத்தின் திரையைக் கிழித்து இனி யாரும் உள்ளே நுழையலாம் என்று அவர் ஆக்கிவிட்டதால்  இயேசு மிகப்பெரும் தலைமைக்குருவாகின்றார்.

இப்போ, நம்ம அருட்பணியாளருக்கு வருவோம். ஒவ்வொரு அருட்பணியாளரும் ஒரு மெல்கிசதேக்கு. ஒவ்வொரு அருட்பணியாளரும் ஒரு தலைமைக்குரு. அருட்பணியாளருக்கு முதலும் இருக்கின்றது, முடிவும் இருக்கின்றது. ஆனால் ஆன்மீக அடிப்படையில், அவர் தாம் பிறப்பதற்கு முன்பே தெரிவு செய்யப்படுகிறார் என்ற அடிப்படையில் பார்த்தால் அவருக்கு முதல் இல்லை. அதேபோல உடல் அளவில் இறந்தாலும் அவரது குருத்துவ முத்திரை அழியாமல் அவரது ஆன்மாவைப் பின்தொடர்கிறது என்பது திருச்சபையின் போதனை. ஆகையால் அவருக்கு முடிவும் இல்லை. தலைமைக்குரு போல அவர் கடவுளுக்கும், தன் இறைமக்களுக்கும் நடுவே நின்று அவர் பரிந்து பேசுவதால் அவரும் ஒரு தலைமைக்குருவே.

இந்த இரண்டு நிலைகளிலும் அவர் எப்படி இருக்க வேண்டும்?

அ. தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளம். மனச்சான்று என்பது குடும்பத்தில் பிறக்கிறது. நாம் 5 வயதுக்குள் இருக்கும்போதே வாழ்க்கையின் அடிப்படை மதிப்பீடுகளை நாம் நம் குடும்பத்தில் கற்றுக்கொண்டுவிடுகிறோம். அதற்குப் பின் நாம் கற்பதெல்லாம் மிகக் குறைவே. இந்த மனச்சான்று, ஒருவேளை நேர்வழியில் நமக்குக் கற்றுக்கொள்ளப்படாமல் இருந்து, நாம் தீய மனச்சான்றை, பிறழ்வுபட்ட மனச்சான்றைக் கொண்டிருந்தால் அதிலிருந்து நம் உள்ளம் விடுவிக்கப்பட வேண்டும்.

ஆ. தூய நீரில் கழுவப்பட்ட உடல். இது திருமுழுக்கை அடையாளப்படுத்தினாலும், உடல் தூய்மையை முன்வைக்கிறது. நம் மேசையையும், நம் பாத்திரங்களையும் நாம் துடைக்கும் போது நம்மையறியாமல் நம் உள்ளமும் தூய்மையாகிறது என்பார் பவுலோ கோயலோ. நம் உடல் தூய்மை, நம் இருப்பிடத் தூய்மை, நம் ஆலயத்தூய்மை எல்லாம் இதில் அடங்கும்.

இ. நேரிய உள்ளம். குறுக்கும், சுருக்கமும் இல்லாமல் நன்றாக அயர்ன் செய்யப்பட்ட வெள்ளைக் கதர் சட்டை போல.

ஈ. மிக உறுதியான நம்பிக்கை. யார் மேல்? நம் மேல். கடவுள் மேல். நம் மக்கள் மேல்.

இவையெல்லாம் இருக்கும் போதுதான் நாம் அன்பு செலுத்தவும், நற்செயல்கள் புரியவும் முடியும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் நம் அன்பு வெறும் வார்த்தைப் பரிமாற்றமாகவும், நற்செயல்கள் ஃபளக்ஸ் போர்டுகளாகவும் மட்டுமே நின்றுவிடும்.

சுருங்கச் சொல்லின், யூதர்களின் குருத்துவத்தைவிட இயேசுவின் குருத்துவம் மேன்மையாக இருக்கிறது. அந்த மேன்மையான குருத்துவத்தில் பங்கேற்கும் அருட்பணியாளர்களும் தங்கள் தலைவராம் கிறிஸ்துவை ஒத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

2 comments:

  1. குருத்துவத்தின் மேன்மையை விளக்கிய தந்தைக்கு நன்றி.

    ReplyDelete
  2. குருத்துவத்தின் பின்னனியைப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளீர்கள்.இக்குருத்துவத்தின் மேன்மையை அருட்பணியாளர்களும் சரி, இறைமக்களும் சரி..புரிந்து அறிந்து செயல்படும்போது இறைப்பிரசன்னத்தை முழுமையாக உணரமுடியும்.தந்தையின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete