Wednesday, September 10, 2014

உங்களுக்கு வரும் நன்மை என்ன?

உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன?
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? (லூக்கா 6:32-34)

மத்தேயு நற்செய்தியில் மலை மேல் நின்று மிக நீண்ட போதனையை நிகழ்த்தும் இயேசு லூக்கா நற்செய்தியில் அதே போதனையை சமவெளியில் நின்று நிகழ்த்துகின்றார். இது சமவெளிப் பொழிவு எனவும் அழைக்கப்படுகின்றது. மத்தேயு நற்செய்தியில் இயேசு புதிய மோசேவாக முன்வைக்கப்படுகின்றார். ஆகவே அவர் மலை மேல் நின்று போதிக்கின்றார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் சமத்துவத்தின் நற்செய்தியாளர். ஆகவே இயேசுவை சமவெளியில் நிறுத்திப் பேச வைக்கின்றார்.

மலையில் நின்றாலும், சமதளத்தில் நின்றாலும் போதனை ஒன்றுதான்.

சாதாரணமாக இருப்பதை விட கொஞ்சம் சிறப்பாக இருந்து பாருங்களேன் என்று இயேசு அழைப்பு விடுக்கின்றார். இதுதான் இந்தப் போதனையின் சாராம்சம்.

'உங்களுக்கு வரும் நன்மை என்ன?'

இந்தக் கேள்வியை இயேசு மூன்று முறை கேட்கின்றார்.

அன்பு செய்வது, நன்மை செய்வது, கடன் கொடுப்பது - இந்த மூன்றிலும் மற்றவர்கள் இருப்பது போல இல்லாமல் கொஞ்சம் மேலாக இருக்கச் சொல்கின்றார்.

கந்து வட்டித் தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வரச் சொல்லி தமிழக அரசுக்கு இன்று உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இயேசு இன்று கடன் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றார். திரும்பக் கிடைக்கும் என நினைத்து நாம் கடன் கொடுக்கக் கூடாதாம். இயேசுவின் போதனை வட்டிக்கடை நடத்துபவர்களுக்கும், கிரெடிட் கார்ட் விநியோகிக்கும் வங்கிகளுக்கும், ஏன் அகில உலக பொருளாதாரத்திற்குமே பெரிய சவாலாக இருக்கும்.

நாம் செய்வது எதுவும் நமக்கே திரும்பக் கிடைக்கும் என்பதுதான் வாழ்க்கை நியதி. அப்படியிருந்தாலும் நாம் செய்வது நமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்து எதையும் செய்யக் கூடாது என்றே இயேசு சொல்கின்றார். இதையே பகவத் கீதை 'நிஷ்காமகர்மா' என்று சொல்கின்றது.

எதிர்பார்ப்பு இல்லாமல் நம் அன்பையும், பணத்தையும், ஆற்றலையும் கொடுக்க இயேசு சவால் விடுகின்றார்? இன்றைக்கு எங்கு பார்த்தாலும் 'ஐஸ் பக்கெட்' சவால். இயேசுவின் இந்த பக்கெட் சவாலுக்கு நாம் தயாரா?


1 comment:

  1. கண்டிப்பாக நாம் செய்யும் எந்த காரியமும் நம்மிடமே திரும்பி வரும் என்பது இயற்கையின் நியதி.ஆனால் நாம் ஒருவருக்கு ஒரு நூறு ரூபாயை அல்லது ஏதோ ஒரு பொருளோ கொடுத்தால் நாம் கொடுத்த உருவத்திலேயே நம்மிடம் அது திரும்பி வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே! 'மகராசியா இரும்மா' என நம்மைநோக்கி உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறார்களே,அந்த ஆசீர்வாதமாக்க்கூட இருக்கலாமே! ஆகவே எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பையும்,நன்மைத்தனத்தையும் அலுங்கிக் குலுங்கி அளிப்போம் சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களுக்கு.விண்ணகத்தில் நம் அக்கௌன்டைப் பெருக்குவோம்...'ஐஸ் பக்கெட்' சவாலை சந்திக்க முடியாமல் போகலாம்..ஆனால் இயேசுவின் சவாலைச் சந்திக்கக் தயார்தான்...

    ReplyDelete