Tuesday, June 30, 2015

மூன்று வகை விதிமுறைகள்

'ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்! அது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது!' என்று கடந்த சனிக்கிழமை நம்ம அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. அமெரிக்க சொன்னத நீங்க ஏன் தம்பி எழுதுறீங்கனு கேட்குறீங்களா? அமெரிக்காவுல ஒருத்தர் செத்தா உலகமே அழணும், அங்கே ஒருவருக்கு முதுகில் அரித்தால் உலகமே சொரியணும், அவங்க என்ன சொன்னாலும் நாமலும் திரும்ப சொல்லணும், அவங்க என்ன சாப்பிடுறாங்களோ அத நாமும் சாப்பிடணும். ஏன்னா, அது அமெரிக்கா!

(மற்றொரு குறுஞ்செய்தி: ஐரோப்பிய ஒன்றியம்-கிரேக்கம் பிரச்சினையை தீர்க்க உலகத்தின் கட்டப்பஞ்சாயத்துக்காரர் களமிறங்கியிருக்கிறார் என்பது லேட்டஸ்ட் செய்தி!)

அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் அங்கீகரிக்கப்பட்டது பற்றி பலர் பல கேள்விகளை எழுப்புகின்றனர்:

ஓரினச்சேர்க்கை திருமணம் முடித்தவர்கள் என்ன 'செய்வார்கள்'? என்பதிலிருந்து, 'இது தவறா, சரியா?' என்பது வரை கேள்விகள் நீள்கின்றன.

இந்த உலகில் நாம் மூன்று வகை விதிமுறைகளால் (three principles) கட்டப்பட்டிருக்கிறோம் (இதற்கு மேலும் இருக்கலாம்!)

ஒன்று. Good and Bad. நன்மை-தீமை. நன்மையானதை நாட வேண்டும். தீமையானதை விலக்க வேண்டும். உதாரணத்திற்கு எனக்கு உடல் பருமன் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். காலையில் எழுந்து தினமும் 1 மணிநேரம் ஓட வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார். ஆக, காலை 5 மணிக்கு எழுந்து 1 மணிநேரம் ஓடுவது எனக்கு நன்மையானது. ஓடாமல் ஓய்ந்து தூங்குவது தீமையானது. அல்லது பேருந்தில் செல்கிறேன். என்னிடம் 10 ரூபாய் இருக்கிறது. ஒருவர் ரொம்ப பசிக்குது என்று என்னிடம் பிச்சை கேட்டு வருகிறார். அவரிடம் 10 ரூபாய் கொடுத்து அவரின் பசியைப் போக்குவது நன்மையானது. அவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தீமையானது.

இரண்டு. Pleasure and Pain.  இன்பம்-துன்பம். மேற்காணும் முதல் விதிக்கு எதிராக இருப்பது இரண்டாவது. அதாவது, இன்பமானதை நாடுவது, துன்பமானதைத் தள்ளிவிடுவது. காலையில் 5 மணிக்கு எழுவதற்கு பதிலாக இன்னும் ஒருமணிநேரம் தூங்குவது இன்பமானது. ஆக, மூளை துன்பத்தை விலக்கி இன்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது என்னிடமிருக்கும் 10 ரூபாயை எடுத்து நான் நீட்டப்போகும் வேளையில் என் மூளை என்ன சொல்கிறது? ஏன்டா, ஏன்? நல்லாத்தான போய்கிட்டு இருக்கு! உள்ள வை அந்த 10 ரூபாய! அது இருந்தா இறங்குனவுடனே ஒரு குச்சி ஐஸ் வாங்கலாம்ல. பெரிய தர்ம பிரபு. நீட்டுறாரு! இப்படி சொல்லி, என்னை இரண்டாம் விதிக்குள் இழுத்துவிடுகிறது.

மூன்றாவது விதி. Legal and Illegal - சட்டரீதியானது - சட்டத்திற்கு புறம்பானது. இந்த விதியின்படி சட்டத்திற்கு உட்பட்டதை செய்யவேண்டும். சட்டத்திற்குப் புறம்பானதை தவிர்க்க வேண்டும்.

இப்ப ஓரினச்சேர்க்கை திருமணத்தை எடுப்போம்!

மூன்றாம் விதிப்படி இது இப்பொழுது சட்டரீதியானது.

இரண்டாம் விதிப்படி இது இன்பத்தை நாடுவது.

ஆனால், முதல் விதிக்குள் வரும்போதுதான் பிரச்சினை வருகிறது. இது நல்லதா, கெட்டதா?

நாம் எங்கிருந்து இதைப் பார்க்கிறோம் என்பதில்தான் இந்தக் கேள்விக்கு விடை இருக்கிறது. ஆக, ஒரு சின்ன விஷயத்திலேயே நமக்கு நல்லது, கெட்டது பார்ப்பதில் இவ்வளவு குழப்பம் இருக்கிறது. அப்படின்னா, இந்த உலகத்தில் எல்லாருக்கும் பொதுவான நல்லது அப்படி என்று எதுவும் இல்லையா?

இருக்கு...! என்னது! அதான் அமெரிக்காவே சொல்லிடுச்சே! அப்புறம் என்ன?

2 comments:

  1. எந்த ஒரு விஷயமுமே தந்தையின் கூற்றுப்படி 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கைதான்'. இப்படி ஒரு விஷயம் என் வீட்டில், என் குடும்பத்தில் நடந்தால் அது எனக்கு என்ன பாதிப்பைக் கொண்டுவரும் என எண்ணும் போதுதான் ஒரு பிரச்சனையின் வீரியமே நமக்கு விளங்குகிறது.இப்ப தந்தையின் கன்சர்ன் இந்த ஓரின சேர்க்கையாளர் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதா அல்லது அதை அங்கீகரித்தது அமெரிக்கா என்பதா?? ஆகாத பெண்டாட்டி கால்பட்டாலும் குற்றமாம்...கைபட்டாலும் குற்றமாம்...??!!

    ReplyDelete