Tuesday, June 9, 2015

நீ கடன் வாங்கினால்

'பிள்ளாய்! நீ கடனுக்காக பொறுப்பேற்றால்,
நீ கடன் வாங்கினால்,
அன்னியர் ஒருவருக்குப் பிணையாய் நின்றால்,
உன் வார்த்தைகளை முன்னிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,
உன் வாய்ச்சொல்லால் நீ பிடிபட நேரிட்டால்,
... ... ...
அவரை வருந்தி வேண்டிக்கொள்.
அதைச் செய்யும்வரை கண்ணயராதே.
வேடன்கையில் அகப்பட்ட மான்போலவும்,
கண்ணியில் சிக்கிய குருவிபோலவும் இருப்பாய்.
உன்னை விடுவித்துக்கொள்ளப்பார்!'
(நீதிமொழிகள் 6:1-5)

'கடன் கொடுக்காதே! கடன் வாங்காதே!
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும். நண்பனும் போய்விடுவான்!'
என்பார் ஷேக்ஸ்பியர்.

கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். சிலர் கடனே வாங்கக் கூடாது என்பார்கள். சிலர் அவசியம் ஏற்படும்போது வாங்கலாம் என்பர். சிலர் எளிதாகக் கடன் கொடுப்பர். சிலர் அதிகம் வட்டி வாங்குவர். எல்லா நாடுகளின் மேலும் கடன்கள் இருக்கின்றன. நம் ஒவ்வொருவர் மேலும் நம் நாடு கடன் வாங்கியிருக்கிறது. நகைக்கடன், தனிநபர்கடன், வட்டியில்லாக்கடன், கல்விக்கடன். திருமணக்கடன், கடன் அட்டை என வங்கிகளும், வணிக நிறுவணங்களும் கடன்களைத் தருகின்றன.

பிள்ளைகளுக்கு பெற்றோர் மேல் உள்ள கடன், பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மேல் உள்ள கடன். 'உன் அன்பிற்கு வாழ்நாள் முழுவதும் நான் கடன்பட்டிருக்கிறேன்' எனச் சொல்லும் அன்புக்கடன் என கடனுக்கு மற்ற அர்த்தங்களும் உள்ளன.

பொருளாதார அல்லது பணப்பரிவர்த்தணை சார்ந்த கடனைப் பற்றிய இன்றைய நீதிமொழிகள்பகுதி பேசுகின்றது.

கடன் என்றால் என்ன? ஒருவருக்கு ஒரு தேவை இருக்கிறது. ஆனால் அந்த தேவையை சந்திக்க அவரிடம் பொருள் இல்லை. தேவையின் நிர்பந்தத்தால் அவர் கடன்பட்டு பொருளைப் பெற்றுக்கொள்கிறார். பின் பொருள் வந்தவுடன் அவர் அந்தத் தொகையை திருப்பிக் கொடுத்து விடுகிறார். இந்தக் கடனைத் தவிர்க்க அவர் பொருளைத் தவிர்க்கலாம். சில நேரங்களில், கடன் தானாகவே தரப்படும். எப்படி? கடைக்குப் போகிறோம். இரண்டு வடை வாங்க 10 ரூபாய் எடுத்துப்போகிறோம். அன்றையதினம் பனியாரமும் இருக்கின்றது. ஆனால் நம்மிடம் காசு இல்லை. கடைக்காரர் தானாகவே 'சும்மா வாங்கிட்டு போங்க! அப்புறம் கொடுங்க!' என்று சொல்கிறார். இது நம்மேல் தானாகவே வரும் கடன். இதைத் தவிர்க்க எளிய வழி. பனியாரத்தைப் பார்த்தவுடன் நாக்கை அடக்கிக்கொள்வது. வாகனக்கடன் கூட ஏறக்குறைய இதுபோலத்தான்.

கடன் என்று வரும்போது தவணை என்ற ஒன்றும், வட்டி என்ற ஒன்றும் ஒட்டிக்கொள்கிறது. வடைக்கடைக்காரர் எத்தணை தவணையில் நாம் கட்ட வேண்டும் என்றும், எவ்வளவு வட்டி என்றும் நமக்குச் சொல்வதில்லை. ஆனால், நம் தொடர் வருகையே அவருக்கு வட்டி. எல்லாரையும் பார்த்து வடைக்கடைக்காரர் 'அப்புறம் கொடுங்க!' என்று சொல்வதில்லை. பரிச்சயமே அவரின் தாரள மனதைத் தூண்டுகிறது. ஆனால், வங்கிகள் தவணை மற்றும் வட்டி ஆகியவற்றை நமக்கு எழுத்தில் கொடுத்து, கையெழுத்தும் வாங்கிக்கொள்கின்றன.

'அடுத்தவரிடம் கடன் பட்டால் அன்று இரவே அடைத்துவிட வேண்டும்' என்று சொல்வார் என் அம்மா. ஏனென்றால் அந்த இரவில் நமக்கு ஏதாவது ஆகி, கடனைக் கொடுக்க இயலாமல் போய்விட்டால், 'பாவி! கடனைக் கொடுக்காமலேயே போய்விட்டான்!' என்று மற்றவர்கள் சொல்ல நேரிடுமாம்.

'கடன்பட்டார் நெஞ்சம்போல்!' என்ற சொல்லாடலை, நீதிமொழிகள் நூல் 'மான்', 'குருவி' என்ற இரண்டு உருவகங்களாகத் தருகின்றது. மானும், குருவியும் இயல்பாகவே மென்மையானவை. இப்பொழுது கண்ணியிலும், வலையிலும் அகப்பட்டுவிட்டால் இன்னும் வலுக்குறைந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ஆக, கடன் தருபவர் வலிமையானவர். கடன் பெறுபவர் வலுக்குறைந்தவர். மானையும், குருவியையும் வேடன் என்னவும் செய்ய முடியும்! அதுபோலத்தான் கடன் தருபவரும் என்னவும் செய்ய முடியும்!

இன்றைய இளைய தலைமுறை நம் பெற்றோர் சம்பாதித்;ததை விட மாதாமாதம் 10 மடங்கு கூட சம்பாதித்தாலும், மாத இறுதியில் ஒன்றும் கையில் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். இதற்கிடையில் 21 வயதில் ஒரு இளைஞன் வேலைக்குச் செல்லத் தொடங்கும்போதே, வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் சுமை. தன் வாழ்நாளைக் கடனைக் கட்டுவதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கடைக்குப் போய்தான் வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, கைபேசியிலேயே வாங்க முடிவதால், நினைத்தவுடன் எல்லாவற்றையும் வாங்க நினைக்கின்றோம்.
வங்கிகளும், வணிக நிறுவனங்களும் வேடன் போல வலைகளை வைத்துக்கொண்டு நிற்கின்றன.

'கடன் வாங்காதே! கடன் கொடுக்காதே!'


1 comment:

  1. வளர்ந்து வரும் இன்றையத் தலைமுறையினருக்கு மிக்க பயனுள்ள பதிவு. வெற்றியான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தனை சூட்சுமங்களையும் இந்த 'நீதிமொழிகளிலிருத்தே' பெற்றுக்கொள்ளலாம் போலத்தெரிகிறது.'கடன் வாங்காதே; கடன் கொடுக்காதே'....கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு.விதி யாரை விட்டது? கடன் கொடுப்பதற்கு ஆள் இருக்கிறது என்பதற்காகவே ( ஏதோ அவர்கள் தர்மம் செய்வது போல) கடன் வாங்குபவர்கள் எத்தனையோ பேர்.தந்தை corporate sideஐ மட்டும் தான, குறிப்பிட்டிருக்கிறார்.அன்றாடப் பிழைப்புக்கு வழியில்லாமல் கந்து வட்டி, மீட்டர் வட்டி என்று வாங்கிக் காணாமல் போன குடும்பங்கள் எத்தனையோ! இப்பொழுது அரசு கொஞ்சம் விழித்துக்கொண்டுள்ளது. இப்படி வட்டி வாங்குபவர் மீது சட்டம் கடுமையைக் காட்டினால் இந்த அன்றாடம் காய்ச்சிகள் பிழைப்பு நடத்த இயலும்.ஆனால் கண்டிப்பாக ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் பின் அவரைப்பார்க்கும் போதெல்லாம் ( அவர் நல்லவராய் இருப்பினும் கூட) அவரிடம் வாங்கிய கடன் தான் நம் கண் முன்னே வந்து நம்மை மிரட்டும்.ஆகவே முடிந்த வரை வரவுக்குள் செலவு செய்யப்பழகுவோம்; வேடன் கையில் மானாகவும், கண்ணியில் அகப்பட்ட குருவியாகவும் ஆவதைத் தவிர்ப்போம்.நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு!!!

    ReplyDelete