Sunday, June 30, 2019

இறந்தோரைப் பற்றி

இன்றைய (01 ஜூலை 2019) நற்செய்தி (மத் 8:18-22)

இறந்தோரைப் பற்றி

'கடந்த காலத்தைப் பற்றி நாம் நினைக்கலாமா?' என்ற கேள்விக்கு நம்முடைய விடை மூன்று நிலைகளில் இருக்கிறது: (அ) 'கடந்த காலம்' நம்முடைய வேர். வேர் இல்லாமல் கிளை இல்லை. ஆக, எவ்வளவுதான் நாம் கிளை பரப்பினாலும் நம்முடைய வேரை மறந்துவிடக்கூடாது. ஆக, கடந்த காலத்தை எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும். (ஆ) கடந்த காலத்தை நினைக்க வேண்டும். அதற்காக மனத்தை அதிலேயே வைத்திருக்கக் கூடாது. முன்நோக்கிப் பார்த்து நடந்து முன்னேற வேண்டும். அதாவது, கார் ஓட்டுவது போல. பின்னால் வரும் அல்லது நாம் கடந்த வந்த பாதையை 'ரேர் மிரரில்' பார்க்கலாம். ஆனால், ரேர் மிரரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாம் முன்னால் மோதிவிடுவோம். ரேர் மிரரைப் பார்த்தும் பார்க்காமல் இருந்துகொண்டு, கண்முன் இருக்கும் பெரிய கண்ணாடி வழியாக வரவிருப்பதைப் பார்க்க வேண்டும். (இ) கடந்த காலத்தை முற்றிலும் மறந்துவிட வேண்டும். கடந்த காலம் நம்மைக் கட்டி வைக்கும் சங்கிலி. அதிலிருந்து விடுபடுவர் ஒருவரே மகிழ்ச்சியாளர். இதை கௌதம புத்தர் அதிகமாக வலியுறுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர், தான் இயேசுவைப் பின்பற்ற விரும்புவதாகச் சொல்கின்றார். அவரிடம் 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்கிறார். இன்னொரு சீடர், 'நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' என்று சொல்ல, இயேசுவோ, 'நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்' என்கிறார்.

இயேசுவின் அறிவுரையை எப்படிப் புரிந்துகொள்வது?

'இறந்தவர்' என்பது 'கடந்த காலத்தின்' உருவகமா? அல்லது

'உறவு, உடைமை என்று இறந்து கிடப்போரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீர் நுழையும் இறையாட்சி உறவில் இரத்த உறவும் இல்லை, திருமண உறவும் இல்லை' என்ற புதிய புரிதலா? அல்லது

'நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நீ இன்றை மட்டும் நினைத்து வாழ்!' என்பதா?

இன்றைய முதல் வாசகத்தை (தொநூ 18:16-33) நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஆண்டவராகிய கடவுள் சோதோம் நகரை அழிக்க முடிவெடுக்கின்றார். ஏனெனில், அங்கே பாவம் பெருகிவிட்டது. தனது இத்திட்டத்தைக் கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகின்றார். 'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?' எனக் கேட்கின்ற ஆபிரகாம், ஐம்பது, நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது, பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தாலும் நகர் அழிக்கப்படுமோ என இறைஞ்சுகின்றார். பத்துப் பேர் கூட இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இங்கே கடவுள் ஆபிரகாமிடம் சொல்வது இதுதான்: '(பாவத்தில்) இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவர். நீ என்னைப் பின்தொடர்!'

ஆக, இறந்தவர்கள் என்பவர்கள் தங்களைத் தாங்களே உறைநிலையில் வைத்துக்கொள்பவர்கள் - அது பாவமாக இருக்கலாம், எதிர்மறை உணர்வுகளாக இருக்கலாம், கடந்த காலமாக இருக்கலாம். உறைநிலையில் வாழ்க்கையை இருத்திக்கொள்பவர்கள் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதால் மற்றவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை.

ஆகையால்தான், தன்னைப் பின்பற்றும் சீடர்களை உறைநிலையிலிருந்து விடுவிக்க நினைக்கின்ற இயேசு, 'இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்கிறார்.

இன்று என் வாழ்வின் உறைநிலை எது? நான் எதில் இறந்தவராக இருக்கிறேன்?


Friday, June 28, 2019

புனிதர்கள் பேதுரு பவுல்

இன்றைய (29 ஜூன் 2019) திருநாள்

புனிதர்கள் பேதுரு பவுல்

இன்று உரோமைத் திருஅவையின் இருபெரும் தூண்களாக இருக்கின்ற புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

இவர்கள் எழுதிய எழுத்துக்களிலிருந்து இந்த இரு பெரும் ஆளுமைகளிடம் நான் கண்டு வியக்கும் குணங்களைச் சிந்திக்க விழைகிறேன்.

அ. பேதுரு குற்றவுணர்வைக் கையாண்ட விதம்

'இன்றிரவு சேவல் கூவுமுன் என்னை மூன்று முறை மறுதலிப்பாய்' என்கிறார் இயேசு.

'இல்லை. சாவிலும் உன்னைப் பிரியேன்' என்கிறார் பேதுரு.

ஆனால், அடுத்தடுத்த மறுதலிக்கிறார்.

முதல் தடவை மறுதலித்தபோதாவது, 'ஐயயையோ! இன்னும் கொஞ்சம் அலர்ட்டா இருந்துகொள்ளலாமே' என்றுகூட அவர் நினைக்கவில்லை. நிகழ்வுகள் மிக வேகமாக நடந்தேறுகின்றன. மூன்று முறை மறுதலிக்கின்றார். இது எப்படின்னா, முதல் முறை தடுமாறி விழுந்தவர், 'இனி விழக்கூடாது' என்று நினைத்து முடிவெடுப்பதற்குள் இன்னும் இரண்டு முறை விழுவதுபோல இருக்கிறது.

மறுதலித்தாயிற்று மூன்றுமுறை. சேவலும் கூவியாயிற்று.

தூரத்தில் அவர் இயேசுவைப் பார்ப்பதாக நாம் காணொளிகளில் பார்க்கிறோம். ஆனால், இயேசுவை அவர் பார்க்கவில்லை என்றாலும் அவருடைய உள்ளத்தில் குற்றவுணர்வு பிறந்திருக்கும். குற்றவுணர்வு என்பது என் மனதுக்கு தெரிந்த ஒன்றுக்கு எதிராக என் மூளை மற்றொன்றைச் செய்ய, என் மனது, 'இல்லை! இது தவறு' என்று என் மூளைக்குச் சொல்ல, மூளை பரிதவிக்கும் உணர்வு. ஆக, மனதுக்கும் மூளைக்கும் நடக்கும் போராட்டம்தான் குற்றவுணர்வு. இந்தக் குற்றவுணர்வு வந்தவுடன் மூளை, 'எல்லாம் முடிந்து போயிற்று. இனி நீ எப்படி அவரை எதிர்கொள்வாய். உன் வாழ்க்கை அவ்வளவுதான். நீ ஒரு தோல்வி' என நிறைய வார்த்தைகளை அள்ளிக் கொட்டும். ஆனால் மனம், 'பரவாயில்லை' என்ற ஒற்றை வார்த்தைதான் சொல்லும். மனதிற்குச் செவிகொடாமல் மூளைக்குச் செவிகொடுப்பவர் தன்னையே அழித்துக்கொள்ளத் துணிகிறார் - யூதாசு போல.

ஆனால், பேதுரு தன் மனத்திற்குச் செவிகொடுத்தார். 'நான் அவரை மறுதலித்தேன்தான். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்வார்' என்று தன் குற்றவுணர்வின் நேரத்தில் தனக்கு வெளியே பார்த்தார். இயேசுவே சொல்வது போல, 'குறைவாக மன்னிப்பு பெறுபவர் குறைவாக அன்பு செய்வார். நிறைவாக மன்னிப்பு பெறுபவர் நிறைவாக அன்பு செய்வார்.' பேதுரு நிறைவாக மன்னிப்பு பெற்றார் இறுதி வரை அன்பு செய்தார் இயேசுவை.

ஆக, இன்று நான் என் குற்றவுணர்வை எப்படிக் கையாளுகிறேன்? என் மூளையின் சொற்படி நடக்கிறேனா? என் மனத்தின் சொற்படி நடக்கிறேனா?

ஆ. பவுல் தன் மனப்போராட்டத்தை கையாண்ட விதம்

புதிய நம்பிக்கை கொண்டவர்களைக் கைது செய்யப் புறப்படுகிறார் பவுல். ஆனால், அந்த நம்பிக்கையின் பிதாமகனையே அறிவிக்கும் திருத்தூதராக மாறுகின்றார்.

இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றார். திருத்தூதர்களால் நிராகரிக்கப்படுகின்றார்.

அவரின் போதனையைக் கேட்டு மக்கள் வியக்கிறார்கள். ஆனால் அவரைக் கல்லால் எறிகிறார்கள்.

நற்செய்தி அறிவித்து மனம் மாற்றுகிறார். மனம் மாறியவர்கள் வேறு நற்செய்தியை நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

'கண்ணே மணியே' என திருச்சபையைக் கொஞ்சுகிறார். 'நான் குச்சியுடன் வர வேண்டுமா?' என எச்சரிக்கிறார்.

'என்மேல் தைத்த முள் ஒன்று உண்டு' என அழுகிறார். 'எனக்கு வலுவூட்டுகிற இறைவனின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு' எனத் துள்ளிக் குதிக்கிறார்.

'திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நான் பரிசேயன்' என பெருமிதம் கொள்கிறார். 'எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்' என சபதம் எடுக்கிறார்.

இவ்வாறாக, பவுலின் மனப்போராட்டம் இவருடைய முரண் வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. இந்த மனப்போராட்டம் பற்றி இவர் அடிக்கடி எழுதுகின்றார். மனப்போராட்டம் என்பது நல்லதுக்கும் தீயதுக்கும் என்றால் எளிதாக வென்றுவிடலாம். ஆனால், இரண்டு நல்லதுக்கு இடையே போராடும்போது, நல்லவை இரண்டிற்கு இடையே ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போதுதான் அது போராட்டமாகிவிடும். புதிய ஏற்பாட்டு யோசேப்பும் எப்போதும் இரண்டு நல்லவைகளில் ஒன்றைத் தெரிவு செய்வதையே போராட்டமாகக் கொள்கிறார்.

பவுல் எப்படி மனப்போராட்டத்தில் வெல்கிறார்?

ரொம்ப எளிது. தான் நம்பிய இயேசுதான் அவருக்கு அளவுகோல். இயேசுவோடு இயேசுவுக்காக என்றால், 'ஆம்', அப்படி இல்லை என்றால் 'இல்லை'

இவ்விரு புனிதர்களும் நம்முடைய குற்றவுணர்வையும், நம் மனப்போராட்டத்தையும் வெல்ல நமக்கு மாதிரிகளாக நிற்கின்றனர்.


Thursday, June 27, 2019

இயேசுவின் திருஇருதயம்

இன்றைய (28 ஜூன் 2019) திருநாள்

இயேசுவின் திருஇருதயம்

இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். ஏறக்குறைய 11ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் இந்த திருவிழா கொண்டாடப்பட்டதாக கிறிஸ்தவ வழிபாட்டு வரலாறு சொன்னாலும், இயேசுவின் அன்பைப் பற்றிய புரிதல்கள் ஒரிஜன், அம்புரோஸ், ஜெரோம், அகுஸ்தீன், மற்றும் ஐரேனியு அவர்களின் காலங்களிலேயே இருந்திருக்கின்றன.

இயேசுவின் திருஇருதயத்தைப் பற்றி நற்செய்தி நூல்களில் இரண்டு மறைமுகக் குறிப்புக்கள் உள்ளன:

'நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.' (மத் 11:29)

'படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வழிந்தோடின.' (யோவா 19:34)

மேற்காணும் இரண்டு குறிப்புக்களில் இரண்டாம் குறிப்பு இயேசுவின் இருதயத்தை நேரடிப்பொருளிலும், முதல் குறிப்பு உருவகப் பொருளிலும் சொல்கின்றது. இரண்டாம் குறிப்பிலிருந்து தொடங்குவோம்.

'விலாவைக் குத்தினார்' என்பதிலிருந்து 'இதயத்தைக் குத்தினார்' என்று எப்படிச் சொல்ல முடியும் எனச் சிலர் கேட்கலாம். பதில் எளிது. படைவீரர்கள் வழக்கமாக வலது கை பழக்கமுள்ளவர்கள். வலது கை பழக்கமுள்ளவர் மேல் நோக்கி ஒரு பொருளைக் குத்த அல்லது தாக்க வேண்டுமென்றால் அந்தப் பொருளின் இடப்பக்கம் தான் நிற்க வேண்டும். இதை நம் வீட்டில் ஒட்டடை அடிக்கும்போதே நாம் செய்யலாம். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் வலதிருந்து இடது என்று குச்சியைப் பிடிப்பர். இடக்கை பழக்கம் உள்ளவர்கள் இடதிலிருந்து வலுது என்று பிடிப்பர்.இந்தப் படைவீரர் இயேசுவின் இதயத்தைக் குத்த அதிலிருந்து தண்ணீரும் இரத்தமும் வெளிப்படுகிறது. இயேசு கல்தூணில் கற்றி அடிக்கப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து நிறைய இரத்தம் வெளியேறியது. இரத்தம் வெளியேறிய உடன் வேகமாக துடிக்கின்ற இதயம் தனக்கு அருகில் இருக்கின்ற நுரையீரலின் தண்ணீரையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும். இது இதயத்தைச் சுற்றி ஒரு பசை போல உருவாகும். இதை அறிவியலில் 'பெரிகார்டியல் எஃப்யூஷன்' அல்லது 'ப்ளேயுரல் எஃப்யூஷன்' என்பார்கள். ஆக, தண்ணீரும் இரத்தமும் இயேசுவின் இதயத்திலிருந்து வெளியேறுகின்றன.

'தண்ணீரும் இரத்தமும்' என்னும் வார்த்தைகள் 1 யோவா 5:6-8லும் காணக்கிடக்கின்றன. இங்கே, 'நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரெனத் தூய ஆவியார் சான்று பகர்கிறார்' என்கிறார் யோவான். 'நீர்' என்பது 'மண்ணகப் பிறப்பு' அல்லது 'மனிதப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆணின் உயிரணுவையும், 'இரத்தம்' என்பது 'விண்ணகப் பிறப்பு' அல்லது 'இறைப் பிறப்புக்குக்' காரணமாக இருக்கும் ஆண்டவரையும் குறிக்கிறது எனக் கொள்ளலாம்.

இயேசுவில் விண்ணும், மண்ணும் சங்கமிக்கின்றன. இறையியல்பும், மனித இயல்பும் ஒருங்கே பொருந்துகின்றன.

ஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முதல் பாடம், நம் ஒவ்வொருவரிலும் இருக்கும் இரு இயல்புகளையும் கண்டுகொள்வதோடு அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்தல் அவசியம். மனித இயல்பு ஒருபோதும் வெறுக்கத்தக்கது அல்ல.

இதன் பின்புலத்தில்தான், அருள்பணியாளர் திருப்பலியில் இரசத்தை அர்ப்பணம் செய்யும்போது, மனித இயல்பின் அடையாளமாக சில துளிகள் தண்ணீரை பூசைப் பாத்திரத்தில் சேர்க்கிறார். நாம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் அன்றாடம் இறை-மனித இயல்பின் இணைப்பைக் கொண்டாடிவிட்டு, இவ்விரு இயல்புகளையும் நாம் எதிரிகளாகப் பார்ப்பது தவறு இல்லையா?

முதற்குறிப்பில், 'கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்' என்று இயேசு தன்னைக் குறிப்பிடுகின்றார்.

'கனிவு' என்பது 'எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'எனக்கும் எனக்கும் உள்ள உறவில்' அவசியமானது. 'மனத்தாழ்மை' என்பது 'தாழ்வு மனப்பான்மை' அல்ல. 'தாழ்வு மனப்பான்மையில்' இருப்பவர் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார். அடுத்தவரோடு தன்னை ஒப்பீடு செய்து பொறாமை கொள்வார். அடிக்கடி எரிச்சல் படுவார். எல்லார் மேலும் கோபப்படுவார். எல்லாரையும் கண்டு ஒதுங்குவார். ஆனால், 'மனத்தாழ்மையில் இருப்பவர்' 'உடன்பிறப்பு போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவார். பிறர் தன்னைவிட மதிப்புக்கு உரியவர் என எண்ணுவார்' (காண். உரோ 12:10). மனத்தாழ்மை உள்ளவர் தன்னுடைய கையறுநிலை, நொறுங்குநிலை, உடைநிலை அனைத்தையும் ஏற்றுக்கொள்வார். கடவுள் முன்னும் மற்றவர் முன்னும் தன்னையே வெறுமையாக்குவார். ஏனெனில், தன்னிடம் உள்ளவை தன்னுடைய இயல்பை ஒருபோதும் கூட்டுவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இவ்வாறாக,

இன்றை திருநாள் நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத்தருகிறது:

அ. நம்மில் இருக்கும் இறை-மனித இயல்பை அடையாளம் கண்டு அதைக் கொண்டாடுதல். இதை அடுத்தவரிடமும் காணுதல். ஆக, நமக்கு அடுத்திருப்பவர் நமக்கு எதிராகத் தவறு செய்தாலும், 'அவர் மனித இயல்பில் செய்துவிட்டார்' என விட்டுவிட நம்மைத் தூண்டும் இப்புரிதல்.

ஆ. கனிவோடு இருத்தல் - எனக்கும் பிறருக்கும் உள்ள உறவில். கனிமொழி கூறல்.

இ. மனத்தாழ்மை கொண்டிருத்தல் - எனக்கும் எனக்குமான உறவில் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதல்.

Wednesday, June 26, 2019

பொறுமை

இன்றைய (27 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:21-29)

பொறுமை

நாம் கடந்த இரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கும் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மலைப்பொழிவின் இறுதியில் இயேசு ஒரு க்விஸ் வைக்கிறார்: 'நீங்க எந்த வகை அடித்தளத்தில் வீடு கட்டப் போகிறீர்கள்? பாறை மீதா? அல்லது மணல் மேலா?'

பாறை மீது கட்டுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 16:6-12, 15-16) ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவர் அவருக்குக் குழந்தை பிறக்கும் என வாக்களித்திருக்கிறார். ஆனால், நேற்றைய நற்செய்தியில் தானாகவே முன்வந்து எலியேசரை - தன் அடிமையின் மகனை - தத்து எடுத்துக்கொள்ள விழைகின்றார். அதுவும் பொறுமையின்மை. இன்று, சாராவின் வற்புறுத்துதலின் பேரில் பணிப்பெண் ஆகாரை ஏற்று அவர் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார். விவிலிய வரலாற்றில் முதல் வாடகைத்தாய் ஆகார்தான்.

ஆபிரகாம் ஒரு பக்கம் நம்பிக்கையின் தந்தையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பொறுமை இழந்தவராக இருக்கிறார்.

பொறுமை மிகவும் அவசியம்.

இத்தாலிய மொழியில் பொறுமையை, 'சாந்தா பட்சியென்ஷா' ('புனிதமான பொறுமை') என அழைக்கிறார்கள். அதுவும் இறைவன் செயலாற்றுவதைக் கண்டுகொள்ள நீடித்த பொறுமை அவசியம்.

இன்று இரண்டு நிமிட வீடியோவைக் கூட ஃபார்வர்ட் செய்து பார்க்கும் அளவிற்குப் பொறுமை இழந்து நிற்கிறோம். வைஃபை ஸ்லோ என்றால், சார்ஜிங் ஸ்லோ என்றால், லோடிங் ஸ்லோ என்றால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேகமான நெட்வொர்க்கை நோக்கி ஓடுகிறோம். இறுதியில், பேட்டரியும் குறைந்து, நாமும் மெலிந்து நிற்கிறோம்.

இறைவன் நம்மில் நடத்தும், நம்மைச் சுற்றி நடத்தும் அனைத்தும் அற்புதங்களே.

அவற்றைக் கண்டுகொள்ள பொறுமை அவசியம்.

அல்லது கற்பாறையின் மேல் வீடு கட்ட வேண்டும்.

ஆபிரகாம் ஆகார் என்ற மணல்மேல் வீடு கட்ட விரும்பினார். ஆனால், கடவுள்தாமே அவருக்குப் பாறையின் மேல் வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்.

மணலில் வீடு கட்டுவது எளிது. அதற்குத் தேவையான உழைப்பு மிகக் குறைவு. ஆனால், ஆபத்து மிக அதிகம்.
பொறுமையின்மையால் - நம் உள்ளத்தில், நம் இல்லத்தில், நம் வாகன ஓட்டுதலில், நம் பணியிடத்தில் - நாம் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்திருப்போம்.

ஆக, இன்று கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எத்துணை நலம்.

பொறுமையாக இதை வாசித்த உங்களுக்கு நன்றி.


Tuesday, June 25, 2019

நல்ல கனி

இன்றைய (26 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:15-20)

நல்ல கனி

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 15:1-12, 17-18) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம், 'உனக்கொரு மகன் பிறப்பான். அவன் உன்னைப் போலவே இருப்பான்' என்று வாக்களிக்கின்றார். ஆனால், கொஞ்சம் (இல்லை, நிறையவே!) அவசரப்படுகின்ற ஆபிரகாம், தன் வீட்டு அடிமை மகன் எலியேசரை தன்னுடைய வாரிசாக அல்லது மகனாக நினைக்க ஆரம்பிக்கின்றார். ஆனால், ஆண்டவரோ, இதை மறுக்கின்றார். மேலும், மகன் பிறப்பான் என்ற வாக்குறுதியை உறுதி செய்கின்றார்.

நல்ல கனியான இறைவனின் வாக்குறுதிக்குக் காத்திருக்க மறுக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்' என்று சொல்லும் இயேசு, அதையே எதிர்மறை வார்த்தைகளிலும் பதிவு செய்கின்றார்.

கனி என்பது மரத்தின் நீட்சி.

அல்லது விதையின் நீட்சி.

விதை எப்படி இருக்கிறதோ, விதையின் வீரியம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் அதன் கனியும் இருக்கும். நல்ல கனியாக நாம் வெளியே இருக்க வேண்டுமென்றால், அடிப்படையான மாற்றம் அவசியம்.
விதையை நாம் நச்சாக வைத்துக்கொண்டு கனியை நல்ல கனியாக எதிர்பார்த்தால் அது போலியாக, அல்லது வெளிப்புற ஒப்பனையாகவே இருக்கும்.

இன்று, என் உள்ளிருக்கும் இயல்பும் எனக்கு வெளியிருக்கும் வார்த்தையும் செயலும் இனியதாகக் கனிந்திருக்கிறதா? அல்லது இரண்டிற்கும் முரண் இருக்கிறதா?

மேலும், நல்ல கனி கொடுக்க நான் விரும்பினால் என் இயல்பில் மாற்றம் செய்ய வேண்டும்.


Monday, June 24, 2019

மேலாண்மை

இன்றைய (25 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:6, 12-14)

மேலாண்மை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று விடயங்களை அறிவுறுத்துகின்றார்: (அ) தூய்மையானது எதையும் தூய்மையற்றதற்காக வீணாக்க வேண்டாம், (ஆ) பிறரையும் உன்னைப் போல நினை, மற்றும் (இ) இடுக்கமான வாயிலைத் தேர்ந்தெடுக்கும் சிலரில் ஒருவராக இருக.

(அ) தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்

தூய்மையானது தூய்மையற்றதன் முன் எறியப்படக் கூடாது. அல்லது மதிப்புக்குரிய ஒன்று மதிப்பற்ற ஒன்றோடு கலக்கக் கூடாது.

'பன்றியின்-நாய்களின் முன் முத்துக்களை எறிய வேண்டாம்' - ஏனெனில், பன்றிகளுக்கு முத்துக்களின் அருமை தெரியாது. மேலும், அவற்றை அவை கற்கள் என நினைத்துக்கொண்டு நம் மேல் பாயவும் வாய்ப்பு இருக்கிறது.

இதை நான் நேர மேலாண்மையோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.

நேரம் என்பது தூய்மையானது அல்லது மதிப்பு மிக்கது.

இதை நான் மேன்மையான காரியங்களுக்குச் செலவிடாமல் காணொளி பார்த்துச் சிரிக்கவும், அயர்ந்து ஓய்ந்து கிடக்கவும், புறங்கூறித் திரிதலிலும் பயன்படுத்தினால், நான் பன்றிகள் முன்தான் என் நேரத்தை எறிகிறேன். இச்செயல்கள் என் நேரத்தை வீணாக்குவதோடு, நானே புதிதாக பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாகிவிடுகின்றன.

ஆக, விலைமதிப்பானது விலைமதிப்பற்றதன் முன் ஒருபோதும் நிற்கக் கூடாது.

(ஆ) பிறருக்குச் செய்வது

'நான் ஏமாற்றப்படக்கூடாது' என நினைத்தால், நான் யாரையும் ஏமாற்றக் கூடாது. 'என்னை எல்லாரும் பாராட்ட வேண்டும்' என நான் நினைத்தால், நான் எல்லாரையும் பாராட்ட வேண்டும். ஆக, ஒரு செயலைச் செய்யுமுன், அதை அடுத்தவரின் கண் கொண்டு பார்ப்பதுதான் பொன்விதி. பல நேரங்களில் நம் மனம் இயல்பாகவே நம்மை மட்டுமே சிந்திக்கிறது. நம்மைத் தாண்டிச் சிந்திப்பதில்லை

இதை, மனது மேலாண்மை எனலாம்.

பிறரைப் பற்றிச் சிந்திப்பதும் ஒரு பழக்கம்தான் என நினைக்கிறேன். அது திடீரென்று ஒரே நாளில் வருவது அல்ல. ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவாக வருவது.

ஆக, என்னுடைய சிந்தனை என்னை மையப்படுத்தியதாக இருக்கிறதா? அல்லது பிறரை மையப்படுத்தியதாக இருக்கிறதா?

(இ) இடுக்கமான வாயில்

இதை நாம் 'துன்ப மேலாண்மை' எனலாம்.

நம் மூளை இயல்பாகவே துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பற்றிக்கொள்கிறது. இதற்கு மாறான ஒரு வழியைத் தெரிந்துகொள்வதே துன்ப மேலாண்மை.

இடுக்கமான வாயிலால் என்ன பயன்?

வாயிலைக் கொஞ்சம் அகலமாக வைத்தால்தான் என்ன?

நான் இதை, 'வார்த்தை மேலாண்மை' என்றும் பார்க்கிறேன். நம் உதடுகள் இரண்டும் வாயில்கள். இவை எந்த அளவுக்கு இடுக்கமாக இருக்கின்றனவோ - அதாவது அமைதியாக இருக்கின்றனவோ - அந்த அளவிற்கு நமக்கு அல்லது. வாயின் அகலம் கூடக்கூட ஆபத்துக்களும் கூடும்.

ஆக, இதழ்கள் இடுக்கமான வாயில்களாக இருந்து, நம்முடைய கைகளும், மூளையும் அகலமான வாயில்களாக இருந்தால் நலம். இதற்கு எதிர்மாறாக இருந்தால் இன்னும் ஆபத்து.

நாம் காணும் இந்த அறிவுரைகள் இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 13:2, 5-18) வேறு வேறு நிலைகளில் வருகின்றன.

ஆபிராம் மற்றும் லோத்துவின் பணியாளர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஏனெனில், அவர்கள் செல்வம் அதிகரிக்க அதிகரிக்க பார்வை சுருங்கிக் கொண்டே வந்தது.

லோத்து வளமையான பகுதியைத் தேடிக்கொள்கிறார். அவர் தன்னுடைய வளர்ச்சியை மட்டும் மனத்தில் வைத்து பசுமையான பகுதியை - சோதோம் பகுதியைத் - தேடிக்கொள்கிறார். ஆனால், அதுவே அவருக்கு அகன்ற வாயிலாக மாறுகிறது.

Friday, June 21, 2019

தைத்த முள்

இன்றைய (22 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 12:1-10)

தைத்த முள்

அருள்பணி உருவாக்கப் பயிற்சி மையத்திலும் மற்ற இடங்களிலும், நான் வகுப்பு எடுக்கும்போது யாராவது தூங்கினால், முன்னெல்லாம் கோபம் வரும். இப்போது என்னவோ, தூங்குபவர் மேல் இரக்கமோ அல்லது பொறாமையோதான் வருகிறது. இதை உணர்வு முதிர்ச்சி என்பதா?

பவுல் இதை இன்றைய முதல் வாசகத்தில் வேறு மாதிரி சொல்கிறார்.

அதாவது, நாம் செய்கின்ற பணி சிலருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், அல்லது அது கண்டுகொள்ளப்படவில்லை என்றால், அல்லது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால், அது 'இறுமாப்பு அடையாமல் இருப்பதற்காக கடவுள் ஏற்படுத்திய ஒரு கருவி' என்கிறார் பவுல்.

அதாவது, 'நான் ஒரு நல்ல ஆசிரியர்' என்று நான் இறுமாப்பு கொள்ளாதவாறு, கடவுள் சிலரை வகுப்பில் தூங்க வைக்கிறார்.

இந்தப் புரிதல் ஏற்புடையதோ இல்லையோ, ஆனால், என் மனம் சோர்வு அடையாமல் இது பார்த்துக்கொள்கிறது.

கடந்த சில நாள்களாக நாம் வாசித்துக்கொண்டிருக்கும் கொரிந்து நகருக்கு பவுல் எழுதிய இரண்டாம் திருமுகத்தின் நிறைவுக்கு வந்துவிட்டோம். 'எனக்கு அருளப்பட்ட ஒப்புயவர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது' என்கிறார் பவுல்.

உடலில் தைத்த முள் - இதை வாசிக்கும்போதே உடம்பில் ஒரு முள் தைத்தால் எப்படி இருக்கும் என்று மனம் கேட்கிறது. நம்முடைய தொண்டையில் மீன் முள் சிக்கியிருந்தாலோ, அல்லது இறைச்சியோடு ஒட்டிய எலும்பு சிக்கியிருந்தாலோ நாம் படாத பாடு பட்டிருப்போம். கண்களில் விழுந்த தூசி, செருப்புக்குள் சிக்கிய கல் போன்றவை தரும் நெருடல்கள் வெளிப்புறத்தில் இருந்தாலும் நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

பவுலை வருத்திய முள் எது என்று நம்மால் ஊகிக்கத்தான் முடிகிறது. அது அவருடைய உடல்நலக் குறைவாகவோ, அல்லது அவருடைய வயது மூப்போ, அல்லது அவருடைய மன அழுத்தமோ, அல்லது குழுமத்தில் யாராவது ஒருவரோ, அல்லது தன் கடந்த வாழ்வு பற்றிய குற்ற உணர்வோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், 'தான் இறுமாப்பு அல்லது பெருமை கொள்ளாதவாறு கடவுள் இதை அனுமதித்துள்ளார்' என அதையும் நேர்முகமாகவே பார்க்கிறார் பவுல்.

மேலும், முள் தைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்ற கடவுளின் குரலையும் கேட்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 6:24-34), இயேசு, 'கவலை வேண்டாம்' எனக் கற்பிக்கிறார். உணவு, உடை, உயிர் பற்றிய கவலைகூட நம் உடலில் தைத்த முள்ளாக நம்மை வருத்தலாம். சில நேரங்களில் காரணமே இல்லாமல் நம் மனம் சோர்வுறும். உடலும் தளர்வுறும். இவை எல்லாமே முள் குத்தும் தருணங்கள்.

'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை' என்பதுபோல, கடவுளைப் பற்றி நாம் நினைத்துக்கொண்டே இருப்பதற்காக, அவரே ஒரு முள்ளை அனுப்புகிறார். பின் அவரே, 'அருள் உனக்குப் போதும்' என்கிறார்.

முள்ளும் நிஜம். அருளும் நிஜம்.


Thursday, June 20, 2019

வலுவின்மை

இன்றைய (21 ஜூன் 2019) நற்செய்தி (மத் 6:19-23)

வலுவின்மை

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். 2 கொரி 11:18, 21-30) நம் சிந்தனையைத் தொடங்குவோம். கொரிந்து நகரத் திருச்சபையில் ஒரு பெரிய தலைமைத்துவ பிரச்சினை நிகழ்கிறது. பவுலின் தலைமையை அல்லது பவுலின் நற்செய்தியை மறந்துவிடுகின்ற கொரிந்து சபையினர் இன்னொரு நற்செய்தியை, இன்னொரு திருத்தூதரைப் பிடித்துக்கொள்கின்றனர். அவரைவிடத் தான் எந்த அளவிலும் குறைவுபடாதவர் என அவர்களுக்கு எழுதுகிறார் பவுல். இங்கே அழகு என்னவென்றால், தன்னுடைய வல்லமையைப் பற்றி அவர் பெருமை பேசாமல் வலுவின்மை பற்றிப் பேசுகின்றார்.

ஒருவேளை நாம் பவுலின் இடத்தில் இருந்தால் என்ன பேசியிருப்போம்?

நான் உயிர்த்த ஆண்டவரை நேருக்கு நேர் சந்தித்தேன்.
திருத்தூதர்களோடு தொடர்பில் இருந்தேன்.
திருத்தூதர் பேதுருவின் வெளிவேடத்தைக் கண்டிக்கும் அளவிற்கு என்னுடைய அறநெறி இருந்தது.
நான் மூன்று பெரிய தூதுரைப் பயணங்கள் செய்தேன்.
பல திருச்சபைகளை ஏற்படுத்தினேன்.
பதிமூன்று கடிதங்களை எழுதினேன்.
எனக்கு கிரேக்கம், இலத்தீன், அரமேயம், எபிரேயம், சிரியக் என ஐந்து மொழிகள் தெரியும்.
எனக்கு ஆளுநர் வீட்டிலும் ஆட்களைத் தெரியும்.
தொழுகைக் கூடத் தலைவர் என் நண்பர்.
நான் ஒரு நல்ல போதகர்.
நிறையப் பேரை மனம் மாற்றியிருக்கிறேன்.
இப்படியாக, நாம் நம்முடைய வலுவின்மைகளை அடுக்கிக்கொண்டே போவோம். இல்லையா?

ஆனால், பவுல் மிகவும் மாறுபட்டவராக, தன்னுடைய வலுவின்மைகளைப் பட்டியலிடுகிறார்.

நான் அடிபட்டேன். கடலில் அகப்பட்டேன். அல்லலுற்றேன். இடர்கள் பட்டேன். கண்விழித்தேன். குளிரில் வாடினேன். ஆடையின்றி இருந்தேன். திருச்சபைகளைப் பற்றிக் கவலைப்பட்டேன். மற்றவர்கள் பாவத்தில் விழுவதைப் பார்த்து உள்ளம் கொதித்தேன்.

இப்படிச் சொல்லிவிட்டு, 'நான் பெருமை பாராட்ட வேண்டுமென்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்'

தன்னுடைய வலுவின்மையை அறிந்தவன்தான் நல்ல தலைவன்.

தன்னுடைய வலுவின்மையை அறிந்து ஏற்றுக்கொள்பவன்தான் நல்ல மனிதன்.

இது எப்படி வரும்?

நான் என்னுடைய அடையாளங்களால் சிறைப்பிடிக்கப்படாதபோதுதான் எனக்கு இந்த மனநிலை வரும். சில நேரங்களில், 'நான் ஓர் அருள்பணியாளர்' என்ற ஓர் அடையாளமே என்னை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது. நான் இந்த அடையாளத்தைப் பற்றிக்கொள்ளும்Nபுhது, 'அடுத்தவர் என்னை மதிக்கவில்லை,' 'என்னை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை' போன்ற தேவையற்ற கவலைகள் பிறக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார்.

பவுலைப் பொறுத்தவரையில் தன்னுடைய வலுவின்மைதான் அவருடைய செல்வம். தன்னுடைய நொறுங்குநிலைதான் அவருடைய சொத்து.

இன்று நாம் ஒரு பயோ டேட்டா எழுதுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் எது இடம் பெறும்? என் பெயர், படிப்பு, அறிந்த மொழிகள், செய்த பயணங்கள், எழுதிய புத்தகங்கள், அறிமுகமான நபர்கள், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகளா?

அல்லது என்னுடைய வலுவின்மை, இயலாமை, போராட்டங்கள், தோல்விகள், கவலைகள், ஏக்கங்களா?

முதலில் உள்ளவை நாம் மேலே அணிந்துகொள்ளும் ஆடைகள். அவை கிழிந்து போகும், நைந்து போகும். இரண்டாவது உள்ளவை நாம் உடலுக்குள் இருக்கும் எலும்புகள். அவை மறைவாகத்தான் இருக்கும். ஆனால், அவைதான் நமக்கு உருவமும், உயர்வும் கொடுக்கின்றன.

நம்முடைய வலுவின்மைகளைக் கொண்டாடவும்,

நம் விளக்கு அணைந்துபோயிருந்தாலும் அந்த இருளைக் கொண்டாடவும் அழைக்கிறார் பவுல்.

Wednesday, June 19, 2019

எண்ணங்கள்

இன்றைய (20 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 11:18, 21-30)

எண்ணங்கள்

யூடியூபில் நான் விரும்பிப் பார்க்கும் அலைவரிசைகளில் ஒன்று டேனியல் ஆலி என்பவருடையது. பணம், பண முதலீடு, பணம் ஈட்டுதல் போன்ற தலைப்புக்களிலும், பயணம், விவிலியம், மனைவி, மனைவியின் பிறந்தநாள், கிறிஸ்தவ அறநெறி போன்ற கருத்துருக்களிலும் நிறைய காணொளிகள் வெளியிட்டுள்ளார். பணக்காரர் ஆவதற்குத் தேவையான மூன்று குணங்கள் என்று ஒரு காணொளி இட்டார். அவை எவை?

(அ) உன்னை நீயே ஏற்றுக்கொள். அதாவது, நம்மிடம் இருக்கும் இருப்புநிலை - மொழி, நிறம், இனம், கையிருப்பு, உறவிருப்பு அனைத்தையும் ஒரு இன்வென்டரி எடுத்து, இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தவறு, இது சரி, இப்படி இருந்தால் நல்லா இருக்கும், அப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று கற்பனை செய்யக் கூடாது. மாற்ற முடிவதை மாற்ற முடியும், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளத்தான் முடியும் என்ற பக்குவம் அவசியம்.

(ஆ) உன் அதீத ஆசைகளை விட்டுவிடு. 'லஸ்ட்' என்றவுடன் 'காமம்' என்று நாம் நினைக்கத் தேவையில்லை. அதீத ஆசை எதன் மேல் இருந்தாலும் ஆபத்துதான். அது படிப்பாக, புகழாக, பெண்ணாக, ஆணாக, பயணமாக, பொழுதுபோக்காக, குடியாக, போதையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(இ) உன் எண்ண ஓட்டத்தை நிறுத்து. 'ட்ரிஃப்ட்' என்றால் ஒன்றைச் செய்ய முயலாமல் அதை ஒட்டியே பேசிக்கொண்டிருப்பது. எடுத்துக்காட்டாக, சாப்பிட்டபின் என்ன செய்வது என்பதை சாப்பிட்ட பின் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு, செய்யவா, வேண்டாமா என மனம் பிளவுபட்டு இருப்பது. இந்த நேரத்தில் நம் மூளை கண்டதையும் சிந்திக்கும். சிந்திக்கும் அனைத்தையும் சரி என்றும் சொல்லும் அது.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல், இந்த மூன்றாம் பிரச்சினையைத்தான் கொரிந்தில் காண்கிறார். அவர்கள் 'எண்ணங்களைச் சீரழியவிட்டுக்கிடக்கிறார்கள்.' மேலும், பவுலின் நற்பண்புகளை எல்லாம் அவருடைய வீக்னஸ் எனப் பார்க்க ஆரம்பித்தார்கள். பவுலை விட்டுவிட்டு இன்னொருவரை எளிதாக ஏற்றுக்கொள்கின்றனர்.

பவுல் தன்னுடைய கையறுநிலையில் இப்படிப் புலம்புகிறார்:

'நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை. இனி இருக்கவும் மாட்டேன் ... உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா? நான் உங்கள் மீது அன்பு கொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.'

நம்முடைய கையறுநிலையில் நாம் கடவுளைத் துணைக்கு இழுத்துப் புலம்புவதுபோல பவுலும் புலம்புகின்றார்.

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 6:7-15), 'மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போக வேண்டாம்' என அறிவுறுத்துகிறார் இயேசு.

மிகுதியான எண்ணங்களும் வேண்டாம்.

மிகுதியான சொற்களும் வேண்டாம்.

நாளை, நாளை மறுநாள், அடுத்த வருடம், அடுத்த பத்து வருடம் என ரொம்ப யோசித்துக்கொண்டே இருக்க வேண்டாம்.

இப்போது நான் விளையாடப் போக வேண்டும். அவ்வளவுதான்!

Tuesday, June 18, 2019

வலக்கை செய்வது

இன்றைய (19 ஜூன் 2019) நற்செய்தி (மத் 6:1-6, 16-18)

வலக்கை செய்வது

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தர்மம் செய்தல் பற்றியும், இறைவேண்டல் செய்வது பற்றியும் நோன்பு இருத்தல் பற்றியும் பேசுகின்றார். இம்மூன்றிலும் அடிப்படையாக இருப்பது, நாம் செய்யும் செயல் பிறருக்குத் தெரியக்கூடாது. 'மறைவாயிருக்கின்ற இறைவனுக்கு மட்டுமே இவை தெரிய வேண்டும்.'

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 9:6-11), கொடுத்தலின் அவசியத்தைப் பதிவு செய்கிறார் பவுல்.

நான் குருமடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, மதுரையில் உள்ள உறவினர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஒரு சிறிய மோதிரம் பரிசளிக்க விரும்பினார் என் அம்மா. மோதிரத்தை வாங்கித் தந்தவர் தான் வர இயலாததால் நான் சென்று அக்குழந்தை அணிவிக்குமாறு சொன்னார். 'குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் அதன் விரலில் போட்டுவிடாதே. எல்லாரும் இருக்கும்போது போட்டுவிடு!' என்று சொல்லி அனுப்பினார்.

நாம் செய்கின்ற நல்ல செயல் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றும், நாம் யாருக்காவது எதையாவது கொடுப்பது மற்றவருக்குத் தெரிய வேண்டும் என்றும், நாம் எங்காவது வருவது யாருக்காவது தெரிய வேண்டும் என நினைக்கிறோம்.

கடந்த வாரம் திருச்சிக்கு நம் தமிழக முதல்வர் வந்தார். திருச்சி எங்கும் கட்அவுட்களும், சுவரொட்டிகளும், கொடிகளும். ஏன்? 'நான் வருவது அடுத்தவருக்குத் தெரிய வேண்டும்'

எல்லாமே 'ஈகோ' தான். எல்லாமே மாயை தான்.

என்னதான் என் முகத்தை நான் சுவரொட்டியில் அடைத்து ஊரெல்லாம் ஒட்டினாலும், பார்வையற்ற நபருக்கு அது ஒன்றுமில்லைதான், வீட்;டிலேயே இருப்பவர்களுக்கு அது ஒன்றுமில்லைதான், அந்தப் பக்கம் செல்லாதவருக்கு ஒன்றுமில்லைதான். அப்படியிருக்க, என் ஈகோவுக்கு நான் ஏன் தீனி போட வேண்டும்?

இதுதான் இயேசுவின் கேள்வி. செபிக்கும்போது, தர்மம் செய்யும்போது, நோன்பிருக்கும் போது நம்முடைய ஈகோ மறைய வேண்டுமே தவிர, ஈகோவுக்குத் தீனி போடும் காரணிகளாக அவை மாறிவிடக் கூடாது.

'நான் செய்வது மற்றவருக்குத் தெரிந்தால் அவரும் தூண்டுதல் பெறுவார்' என்றும், 'உங்க பேரை, நீங்க ஐம்பதாயிரம் நன்கொடை கொடுத்ததை நான் கோவிலில் வாசிக்கிறேன். அப்பதான் மற்றவர்களுக்க அது இன்ஸ்பிரேஷனாக இருக்கும்' என்றும் சில இடங்களில் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இயேசுவின் பதில் ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக இருக்கிறது: 'யாருக்கும் தெரியக்கூடாது!'

அடுத்தவர்களுக்கு எவ்வளவு கொடுப்பது?

'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்கிறார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்கிறார்' என்கிறார் பவுல்.

'பெறுபவர் எல்லாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்' என்பது வாழ்க்கை நியதி. ஆக, கடவுளிடமிருந்து பெற்றவர்கள் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்கிறார் பவுல்.

'கொடுப்பவர் எல்லாம் பெற்றுத்தான் ஆவர்' என்பதும் வாழ்க்கை நியதி. ஆக, கொடுப்பதை மறைத்துக் கொடுக்கச் சொல்கிறார் இயேசு.

என்னதான் செய்வது?

கொடுப்பதா? வேண்டாமா?

'கொடுப்போம்' ஏனெனில் 'நாம் பெற்றோம்'

'பெறுவோம்' ஏனெனில் 'நாம் கொடுக்கிறோம்'


Monday, June 17, 2019

தர்மசங்கடம்

இன்றைய (18 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:43-48)

தர்மசங்கடம்

தமிழில் உள்ள 'தர்மசங்கடம்' என்ற சொல்லாடலை நாம் அடிக்கடி பயன்படுத்தியிருப்போம். இந்த வார்த்தையின் வேர் 'தர்மசங்கட்' என்ற சமஸ்கிருதச் சொல். இரண்டு நன்மைகளுக்கு இடையே அல்லது இரண்டு தீமைகளுக்கு இடையே நாம் சிக்கிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறும் நிலையே 'தர்மசங்கடம்.'

எடுத்துக்காட்டாக, நம் வீட்டில் குழந்தைக்கு பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக நாம் பத்தாயிரம் ரூபாய் எடுத்து வைக்கிறோம். நாளைதான் பள்ளிக்கட்டணம் கட்ட இறுதி நாள். 'காலையில் உன் பள்ளிக்கட்டணத்திற்கு பணம் தருகிறேன்' என்று வாக்குறுதி கொடுத்து அழுதுகொண்டிருந்த குழந்தையின் அழுகையை இப்போதான் நிறுத்தியுள்ளோம். இந்த நேரத்தில், நம் கூடப்பிறந்த தம்பிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்ற செய்தி வருகிறது. செய்தியைச் சொன்னவர், 'உடனே ஒரு பத்தாயிரம் எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வாங்க!' என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிடுகிறார். பள்ளிக்கட்டணத்திற்காக பணத்தை ஒதுக்கினால் தம்பிக்கு ஆபத்து. தம்பிக்காக பணத்தை ஒதுக்கினால் குழந்தையின் அழுகைக்குக் காரணமாகி, நம் வாக்குறுதியையும் நாம் உடைத்தவர்களாகிவிடுவோம். இதுதான் தர்மசங்கடம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 8:1-9), கொரிந்து நகரத் திருச்சபைக்கு, 'கொடுத்தல் என்ற அறநெறியைக்' கற்றுத் தருகின்றார். எருசலேம் திருச்சபையில் மக்கள் துன்புறுகிறார்கள். அவர்களுக்காக பல திருச்சபைகளில் பணம் சேகரிக்கிறார் பவுல். கொரிந்து நகரத் திருச்சபை பணக்காரத் திருச்சபை. பணம் இருந்தால் போதுமா? மனம் வேண்டுமே! அந்த மனத்தைத் தூண்டி எழுப்புவதற்காக, 'மாசிதோனியத் திருச்சபையை' எடுத்துக்காட்டாகக் காட்டி, 'அவர்கள் கொடுத்தார்கள். நீங்களும் கொடுங்கள் ... நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் அனைத்தும் கொண்டிருக்கிறீர்கள். அதுபோல அறப்பணியும் செய்யுங்கள்' என அறிவுறுத்துகிறார் பவுல். கொடுத்தலுக்கு உதாரணமாக இயேசுவின் மனுவுருவாக்கத்தை முன்வைக்கிறார்.

பிறருக்குக் கொடுக்கும் உணர்வை கடவுளின் அருள் என அழைக்கிறார் பவுல்.

'எனக்கு தேவை இருக்கிறது. பிறருக்கும் தேவை இருக்கிறது. நான் என்ன செய்வது?' என்ற தர்மசங்கடத்தில் இருக்கிறது கொரிந்து சபை.

தர்மசங்கடத்தில் நாம் எந்த முடிவு எடுத்தாலும் நாம் சரியாகத்தான் இருப்போம். தர்மசங்கடமான சூழலில் நல்லது-கெட்டது என்ற கொள்கை வேலை செய்யாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'அன்பு செலுத்துபவர்களிடம் மட்டும் அன்பு செலுத்துவதா?' அல்லது 'எல்லாருக்கும் அன்பு செலுத்துவதா?' என்ற தர்மசங்கடம் பற்றிப் பேசுகின்றார் இயேசு. இங்கே, விண்ணகத் தந்தையை மாதிரியாக வைக்கின்றார்.

பிறருக்குக் கொடுப்பதில் உள்ள தர்மசங்கடம் இதுதான்: 'நான் இதைக் கொடுக்கவா?' 'எனக்குத் தேவை வந்தால் என்ன செய்வது?' 'என் தேவைக்கு யார் வருவார்?'

பிறரிடம் வாங்குவதிலும் தர்மசங்கடம் இருக்கிறது: 'இவரிடம் நான் இதை வாங்கிவிட்டால் இவருக்கு நான் நன்றிக்கடன்பட வேண்டும். ஆகவே, வேண்டாம்.' 'இவர் அன்பின் மிகுதியால்தானே கொடுக்கிறார். ஆகவே, வேண்டும்.'

தர்மசங்கடமான சூழல்கள் எடுக்கும் எந்த முடிவும் சரியே. எந்த முடிவும் சூழல் சார்ந்ததே.
இந்த இடத்தில் கடவுளை மாதிரியாக வைத்துச் செயல்படுவது ஒரு தொடர் பயிற்சியே.


Sunday, June 16, 2019

வீணாக்க வேண்டாம்

இன்றைய (17 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:38-42)

வீணாக்க வேண்டாம்

சொட்டுச் சொட்டாய் வடியும் நீர் ஒரு நாளுக்கு இருபது லிட்டர், மாதத்திற்கு அறுநூறு லிட்டர், வருடத்திற்கு ஏழாயிரத்து இருநூறு லிட்டர் என கணக்கிட்டு தண்ணீரை வீணாக்க வேண்டாம் என பண்பலையில் சக்தி மசாலா பொதுநலம் கருதி எச்சரிக்கிறது.

என்றுமில்லாமல் இன்று தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு - விழிப்புணர்வை விட - அச்சம் மேலோங்கிவிட்டது. ஊடகங்கள் படுத்துகிற பாட்டில் தண்ணீர் பஞ்சம், வறட்சி என்று மக்களை இன்னும் அலற விடுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 6:1-10), 'நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம்' என அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, ஒரு கன்னத்திற்கு மறு கன்னம், அங்கிக்கு மேலாடை, ஒரு கல் தொலைவுக்கு இரு கல் தொலைவு என நம்மை கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க அறிவுறுத்துகிறார். 'இன்னும் கொஞ்சம் நடந்தால்தான் என்ன?' என்பதுபோல இருக்கிறது இயேசுவின் அறிவுரை.

தண்ணீரை வீணாக்காமல் இருக்க நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்க வேண்டும். அதாவது, வழக்கமாக குழாயை அரைகுறையாய் மூடிவதற்குப் பதிலாக, கொஞ்சம் சிரத்தை எடுத்து திருகி மூடி தண்ணீர் நின்றுவிட்டதை உறுதி செய்ய வேண்டும்.

அருளை வீணாக்காமல் இருக்கவும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மைல் நடக்கத்தான் வேண்டும்.

எக்ஸ்ட்ரா மைல் நடக்கும்போது உணவு கூட வீணாவதில்லை. ஹோட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய மீதம் இருக்கிறது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடந்து பாத்திரங்களை எடுத்து, உணவை அவற்றில் பக்குவமாக வைத்து, குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாத்தால் உணவு வீணாவதில்லை. அடுத்த நாள் உண்பதற்குப் பயன்படும் நிலையில் இருக்கிறது. அப்படி எக்ஸ்ட்ரா மைல் நடக்காமல் அப்படியே உணவுப் பொட்டலங்களை மேசையில் விட்டுவிட்டால், உணவும் கெடுவதோடு, அறையும் நாற்றம் அடிக்கத் தொடங்குகிறது.

தானே எப்படி எக்ஸ்ட்ரா மைல் நடக்கிறேன் என்பதை பவுல் மிக அழகாக எழுதுகிறார்: 'அனைத்துச் சூழ்நிலைகளிலும் நாங்கள் கடவுளின் பணியாளர்கள் என்பதை எங்கள் நடத்தையால் காட்டுகிறோம். வேதனை, இடர், நெருக்கடி ஆகியவற்றை மன உறுதியோடு தாங்கி வருகிறோம். அடிக்கப்பட்டோம். சிறையிடப்பட்டோம. உழைத்தோம். கண்விழித்தோம். தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, தூய ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம்.'

பவுல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடப்பதால், அவர், 'தூய்மை, அறிவு, பொறுமை, நன்மை, ஆவியின் கொடைகள், வெளிவேடமற்ற அன்பு' ஆகியவற்றைக் கொண்டிருக்க முடிகிறது.

அல்லது

இவற்றைத் தக்கவைத்துக்கொள்ள நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நடத்தல் அவசியம்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா பார்த்தல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா நேரம் செலவிடல், கொஞ்சம் எக்ஸ்ட்ரா கரிசணை என இருந்தால் அருள் வீணாவதில்லை.

Friday, June 14, 2019

ஆம் - இல்லை

இன்றைய (15 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:33-37)

ஆம் - இல்லை

நேற்று மாலை சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். தேவையான சோப்புக்களை எடுத்துக்கொண்டு திரும்பும்போது இடைமறித்த இளவல் ஒருவர், 'சார், ஹேர் ஆயில் செக்ஷனுக்கு வாங்க! க்ரே ஹேர் நிறைய இருக்கு! இதைப் போட்டா சரியாயிடும்!' என்றார். உடனே எனக்கு ஆங்கில எழுத்தாளரின் வார்த்தைகள்தாம் நினைவிற்கு வந்தன: 'க்ரே ஹேருக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதன் பெயர் கில்லட்டின். அது பிரெஞ்சு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.' ஆக, தலையை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

கறுப்பாக்க, வெள்ளையாக்க நாம் செய்யும் முயற்சிகள் எல்லாம் நம்முடைய வீணான போராட்டமே.

இதை இன்றைய நற்செய்தியில் இயேசுவே சொல்கிறார்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையில் இருக்க வேண்டிய தூய்மை பற்றிப் பேசிய இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், வார்த்தையில் இருக்க வேண்டிய தூய்மை பற்றிப் பேசுகின்றார்:

அ. பொய்யாணை இட வேண்டாம்.

ஆ. ஆம்-இல்லை என்பதைவிட மிகுதியாகப் பேச வேண்டாம்.

'இன்று நடப்பதே உனக்குத் தெரியாது. நாளை நடப்பதை அறிந்தவன் போல பேசாதே' என்று நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கிறது. அதாவது, எல்லாம் என் கையில் இருப்பதுபோல நினைத்து ஆணையிடக் கூடாது. ரொம்ப உன்னிப்பாக இதைச் செய்தால் நாம், 'நாளைக்குத் திருமணத்திற்கு வருகிறேன்' என்று கூட யாரிடமும் சொல்ல முடியாது. ஏனெனில், நாளைவரை நாம் உயிரோடிருப்பது நம் கைகளில் இல்லையே.

தன்னுடைய சீடர்கள் மிகக் குறைவான அளவில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

தேவையற்ற வார்த்தைகளைத் தவிர்த்தலும், 'ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை' என்பது தவிர, வார்த்தைகளைக் கூட்டாமல் இருப்பதும் நம் உடலுக்கும் மனத்திற்கும் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 5:14-21), பவுல், இதையொத்த கருத்து ஒன்றைப் பகிர்கிறார்: 'நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை'

'மதிப்பிடுவது' (to evaluate)

'மனிதர்களை ஒருபோதும் மதிப்பிடக் கூடாது' என்று என்னுடைய பாஸ் அருள்பணி. விமி சார்லி அடிக்கடி சொல்வார். மனிதர்களை மதிப்பிட்டால் அவர்களை அன்பு செய்ய முடியாது. மனிதர்கள் தங்களுக்கென ஒரு விதியை வகுத்துக்கொள்பவர்கள். தாங்கள் செய்யும் எச்செயலையும் நியாயப்படுத்தக் கூடியவர்கள். அவர்களை மதிப்பிட்டால் நமக்குத்தான் விரக்தி ஏற்படும்.

நாம் மதிப்பிடும்போது தேவையற்ற வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை அளக்கிறோம். அளவுகோலுக்கு மேல் போகிறோம்.

தேவையற்றதை வைத்துகொண்டே இருப்பது, கூட்டிக்கொண்டே இருப்பது - நமக்கு, நம் அலமாரிக்கு, நம் வீட்டின் உள்ளறைக்கு, நம் உள்ளத்திற்கு, நம் உடலுக்கு எதுவும் அழகல்ல.

'ஆம்' என்றால் 'ஆம்.' 'இல்லை' என்றால் 'இல்லை.'

'வேண்டும்' என்றால் 'வேண்டும்.' 'வேண்டாம்' என்றால் 'வேண்டாம்.'


Thursday, June 13, 2019

மண்பாண்டம்

இன்றைய (14 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:27-32)

மண்பாண்டம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, தன் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, 'விபச்சாரம் செய்யாதே' என்ற பழைய கட்டளையைக் குறிப்பிட்டு, 'இச்சையுடன் நோக்குவதைத் தவிர்' என்று விபச்சார எண்ணத்தை வேரோடு அழிக்க அழைக்கின்றார். மேலும், மணவிலக்கு பற்றியும் பேசுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 4:7-15) அழகான உருவகம் ஒன்றை வாசிக்கின்றோம். தன்னுடைய திருப்பணியைப் பற்றி எழுதுகின்ற பவுல் எப்படி எழுதுகின்றார்?

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்றே நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது.'

'மண்பாண்டம்' என்றவுடன் நாம் பழைய காலத்தில் சோறு சமைக்கும் பானை என்றோ, தண்ணீர் சேமித்து வைக்கும் பானை என்றோ, அரிசி சேமித்து வைக்கும் குதிர் என்றோ எண்ண வேண்டாம். பவுலின் காலத்தில் மண்பாண்டம் மனித கழிவுகளைச் சேகரிக்கப் பயன்பட்டது. கழிவறைகள் பொதுவாக வழக்கத்தில் இல்லாத அக்காலத்தில் மனிதக் கழிவுகள் மண்பாண்டங்களில் சேகரிக்கப்பட்டு, அவை அடிமைகளால் சுத்தம் செய்யப்படுத்தப்பட்டன. இப்படிப்பட்ட மண்பாண்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளைப் போட்டு வைத்தால் எப்படி இருக்கும்? இதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதே நேரத்தில் தங்க நகைகள் உள்ள மண்பாண்டத்தை மற்றவர்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்கள். மதிப்புக்குரியதொன்றாகக் கருதுவார்கள். மண்பாண்டத்திற்கு மதிப்பு எப்படி வந்தது? அதன் உள்ளிருக்கும் புதையலை வைத்துத்தானே.

ஆக, பவுல், ஒரு பக்கம் தன்னையே தகுதியற்ற மண்பாண்டம் என்று சொல்கிற வேளையில், மற்றொரு பக்கம் தன்னுடைய மதிப்பு தனக்குள் இருக்கும் கடவுளின் வல்லமையால் வருகிறது என்பதை அறிக்கையிடுகின்றார்.

இதை அப்படியே கொஞ்சம் நற்செய்தியோடு பொருத்திப் பார்ப்போம்.

விபச்சாரம் அல்லது இச்சையான பார்வை ஏன் வருகிறது?

ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு ஏன் மற்றொரு இணையை நாட வேண்டும்?

மனிதர்கள் தங்களுடைய இயல்பிலேயே பலரோடு உடலுறவு கொள்ள விரும்புபவர்கள் என உளவியலும், சமூகவியலும் சொன்னாலும், சமூக மற்றும் சமய வரையறைகள் இதற்குத் தடை விதிக்கின்றன. திருமணம் என்ற நிறுவனத்திற்கு இதை ஒரு பெரிய தடைக்கல்லாகப் பார்க்கின்றன.

ஒருவர் தன் துணையை விட்டுவிட்டு மற்றொரு இணையை நாடக் காரணம் என்னவென்றால், அவர் தன்னுடைய துணையை வெறும் மண்பாண்டமாகப் பார்ப்பதுதான்.

திருமணத்தின் தொடக்கத்தில் தங்கம் மட்டுமே கண்களுக்குத் தெரிய, காலம் செல்லச் செல்ல மண்பாண்டம் தெரிய ஆரம்பிக்கிறது. அதில் உள்ள கீறல்கள், அழுக்கு, சொரசொரப்பு தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது நாம் மற்றொரு 'தங்கத்தை' நாட ஆரம்பிக்கிறோம்.

மற்றொரு பக்கம், இச்சையோடு பார்ப்பவர் அந்த மண்பாண்டத்தை உடைத்து தங்கத்தை அள்ளிவிட நினைக்கிறார்.

விபச்சாரம் செய்பவர் தன் மனைவியின் 'தங்கத்தை' பார்க்காமல் 'மண்பாண்டத்தைப்' பார்க்கிறார். இச்சையோடு பார்ப்பவர் 'மண்பாண்டத்தை' உடைத்து 'தங்கத்தை' ('அங்கத்தை') அள்ளிக்கொள்ள நினைக்கிறார். இரண்டுமே தவறு என்கிறார் இயேசு.

இன்றைய நாள் வாசகங்கள் இரண்டு செய்திகளை வழங்குகின்றன:

அ. நாம் ஒவ்வொருவரும் கடவுளின் வல்லமையை, சாயலைத் தாங்கியிருக்கும் மண்பாண்டங்கள். நம்மில் தங்கமும் உண்டு, களிமண்ணும் உண்டு. இதை அப்படியே ஏற்றுக்கொள்வது.

ஆ. நம் உறவு நிலைகளில் - துறவு மற்றும் திருமண உறவில் - மற்றவரின் தங்கத்தை மட்டுமே பார்ப்பது.

மனந்தளராமல்

இன்றைய (13 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:20-26)

மனந்தளராமல்

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 3:15-4:1, 3-6) நாம் மையமாக் காணும் 'மனந்தளராமல்' என்ற வார்த்தையையும், நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் 'மனத்தாங்கல்' என்னும் வார்த்தைiயும் எடுத்து இன்று நாம் கொண்டாடும், புனித பதுவை நகர் அந்தோனியார் வாழ்வோடு இணைத்து சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், மலைப்பொழிவின் ஒரு பகுதியாக, சினங்கொள்ளுதல் பற்றிப் பேசும் இயேசு, 'உங்கள் காணிக்கைகளைச் செலுத்த வரும் போது ... மனத்தாங்கல் ... உண்டென நினைவுற்றால்' என்கிறார். இங்கே என்னுடைய மனத்தாங்கல் அல்ல. மாறாக, மற்றவருடைய மனத்தாங்கலே முன்வைக்கப்படுகிறது. ஆக, நான் அடுத்தவரின் கால்களில் நின்று உணர அழைக்கப்படுகிறேன்.

மனத்தாங்கல் எப்போது வருகிறது?

மனத்தாங்கல் என்பது மனதில் விழுந்த ஒரு சிறு கீறல். அந்தக் கீறலை நாம் தொடர்ந்து வைத்திருக்கும்போது அது பெரிதாகிக்கொண்டே வரும் - கொஞ்சமாய் கிழிந்த செருப்பை தொடர்ந்து போட்டால் முழுவதும் கிழிந்துவிடுவது போல. ஆங்கிலத்தில் 'a stitch in time saves nine' என்ற பழமொழி உண்டு. அதாவது, சரியான நேரத்தில் நாம் ஒட்டுப்போடுவது இன்னும் கிழிவதையும், பல முறை ஒட்டுப்போடுவதையும் தவிர்க்கிறது.

கீறல் விழக் காரணமாக இருப்பது யார்? 'நான் அனுமதித்தால் ஒழிய என்னை யாரும் காயப்படுத்த முடியாது' என்ற பக்குவம் பெற்றவருக்கு, கீறல் தன்னால் தான் வருகிறதே அன்றி, அடுத்தவரால் வருவதில்லை என்பது தெரியும். ஆக, கீறலை அனுமதிப்பதும் அனுமதிக்காமல் இருப்பதும் என் கையில்.

இரண்டாவது, அதீத சிந்தனையைக் கட்டுப்படுத்த வேண்டும். நான் இந்த நொடி இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மனம் தட்டச்சு செய்கிறது. இன்னொரு மனம் நான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது. நினைத்துக்கொண்டிருக்கிற மனம்தான் என்னுடைய ஈகோ. இந்த ஈகோவை நான் கட்டுப்படுத்த வேண்டும்.

புனித அந்தோனியார் மிகப் பெரிய போதகராக வளர்ந்த நேரம், அவருடைய வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத அவருடைய துறவு இல்லத் தலைவர் அவரை பாத்திரம் கழுவும் பணிக்கு அமர்த்துகிறார். ஆனால், அந்தோனியார் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. 'எனக்கு போதிக்கவும் தெரியும், பாத்திரம் கழுவுவம் தெரியும். நீர் என்னை அனுமதிக்காததால் என் போதனை தாழ்ந்து போவதுமில்லை. நான் வீழ்ந்துபோவதுமில்லை' என்ற ஒரு நேர்முக மனப்பாங்கு கொண்டிருந்தார். தனக்கு வெளியே இருந்து வரும் எதுவும் தன் மனத்தைக் கீற அவர் அனுமதிக்கவே இல்லை.

இந்த மனப்பாங்கைப் பெற, இன்றைய முதல் வாசகம் சொல்வது, 'மனந்தளராமல்' இருப்பது. 'நாங்கள் மனந்தளராமல் இருக்கிறோம்' என்கிறார் பவுல். உடல் தளர்ந்தால் அது உடலை மட்டுமே பாதிக்கும். ஆனால், மனம் தளர்ந்தால், அது மனத்தை, உடலை, உறவை என அனைத்தையும் பாதிக்கும்.

என் வாழ்வின் தெரிவுகளில் நான் மனந்தளராமல் இருந்து, அதீத எண்ணங்களைக் கட்டுப்படுத்தி, 'என் வாழ்க்கை என் கையில்' என்று வாழும்போது மனத்தாங்கல் வருவதில்லை.

என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதில் அல்ல என் மகிழ்ச்சி. என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் என்னிடம் உள்ளது மகிழ்ச்சி. இந்த மனநிலையைப் பெற்றிருந்த புனித அந்தோனியார் நமக்கு முன்மாதிரி.

Tuesday, June 11, 2019

சிற்றெழுத்து

இன்றைய (12 ஜூன் 2019) நற்செய்தி (மத் 5:17-19)

சிற்றெழுத்து

'சாமுவேல் வளர்ந்தான். ஆண்டவர் அவனோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழ விடவில்லை' (காண். 1 சாமு 3:19)

'தரையில் விழுவது' என்றால் வீணாவது என்பது பொருள். தொடக்கநூலில் யூதா, தாமார் நிகழ்வில், 'அந்த மரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து, ஓனான் தாமாரோடு உடலுறவு கொள்கையில், தன் சகோதரனுக்கு வழி மரபு தோன்றாதவாறு தன் விந்தை தரையில் சிந்தி வந்தான்' (காண். தொநூ 38:8) என்ற இறைவார்த்தைப் பகுதியில் இப்பொருள் தெளிவாகிறது.

தரையில் விழும் அல்லது கீழே விழும் எதுவும் வீணாகிறது என்பது விவிலியப் புரிதல்.

நாம் பழக்கடைக்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். ஒரு கிலோ மாம்பழம் வாங்குகிறோம். வாங்கும்போது கடைக்காரர், 'இப்பழங்கள் நன்கு இனிக்கும்' என்கிறார். வீட்டிற்கு வந்து அவற்றை அறுத்துச் சாப்பிட்டால், அது ரொம்பவே புளிக்கின்றது. உடனடியாக, கடைக்காரர் நம்மை ஏமாற்றிவிட்டார் என்கிறோம். கடைக்காரர் சொன்ன சொற்கள் வெற்றுச் சொற்களாக இருக்கின்றன.

ஆக, சொற்கள் தாங்கள் எவற்றைக் குறிக்கின்றனவோ அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் அவை வெற்றுச் சொற்கள் அல்லது பொய்ச் சொற்கள் ஆகின்றன.

நான் நான்கு மணிக்கு பேருந்து நிலையத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, நான் நான்கு மணிக்கு வரவில்லை என்றால் என் சொற்கள் தரையில் விழுந்த சொற்கள் ஆகிவிடுகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு. திருச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து வார்த்தைகளும் தம்மில் நிறைவேறுவதாகச் சொல்கின்றார். மேலும், 'அயோட்டா' என்று அழைக்கப்படுகின்ற கிரேக்க சிற்றெழுத்து-புள்ளி கூட அழிக்கப்படாது என்கிறார்.

'நிறைவேறுவது' என்றால் 'செயல்வடிவம் பெறுவது.'

நான் ஒரு கட்டுரை எழுதவேண்டும் எனச் சொல்கிறேன் என்றால், அந்தக் கட்டுரை எழுதி முடிக்கும்போதுதான் அது செயல்வடிவம் பெறுகின்றது.

இன்று நாம் நம்முடைய சொற்களாலேயே அறியப்படுகின்றோம். நம்முடைய இதயத்தின் நீட்சியே சொற்கள். சொற்களை இலாவகமாகக் கையாள ஒரு வழி சிரிப்பும், அமைதியும். சில இடங்களில் சொற்களை உதிர்க்காமலேயே வெறும் புன்முறுவலால், அல்லது வெறும் அமைதியால் நாம் பதில் கூறிவிட முடியும். நாம் இன்று எப்படிப்பட்ட சொற்களைப் பேசுகிறோம்? அல்லது எழுதுகிறோம்? எவ்வளவு சொற்கள் நிறைவு பெறுகின்றன? எவ்வளவு பொருள்கள் தரையில் சிந்தப்படுகின்றன?

மலைப்பொழிவின் ஒவ்வொரு போதனையும் புனிதத்தையும் மகிழ்ச்சியையும் நோக்கமாகக் கொண்டதாக இருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் என்னுடைய புனிதத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஊற்றாக இருக்கின்றனவா?

சிற்றெழுத்து தானே, சின்ன வார்த்தை தானே என வார்த்தைகளை வீணடிக்க வேண்டாம். நிறைவேறாத வார்த்தைகள் எல்லாம் வீணான வார்த்தைகளே. அவை பிறக்காமலேயே இருந்திருந்தால், பேசுபவருக்கு நலமாய் இருந்திருக்கும்!

Monday, June 10, 2019

புனித பர்னபா

இன்றைய (11 ஜூன் 2019) திருநாள்

புனித பர்னபா

இன்று புனித பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். பவுலின் நுகத்தடித் தோழராக, உடனுழைப்பாளராக இவர் அறியப்பட்டாலும், பவுலின் வாழ்வில் இன்னும் ஒரு முக்கியமான இடத்தை பெறுகின்றார்.

பவுலைப் பொறுத்தவரையில் அவர் இறைவனின் அழைப்பு மூன்று நிலைகளில் பெறுகின்றார்: ஒன்று, தாயின் கருவறையிலிருந்தே தன்னை இறைவன் அழைத்ததாகப் பதிவு செய்கிறார். இரண்டு, தமஸ்கு நகர் போகும் வழியில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். மூன்று, அவருடைய பணி ஏற்கப்படாமல், துவண்டு போய்க் கிடக்க, அவரை திருத்தூதர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார் பர்னபா.

பர்னபா வழியாக தன்னுடைய இறையழைத்தலை மூன்றாம் முறையாகக் கண்டுகொள்கின்றார் பவுல்.
சரியான நபரை இனங்கண்டு சரியா இடத்தில் அவருக்குரியவற்றைக் கொடுக்க முன்வருவதற்கு நிறைய தாராள உள்ளம் தேவை. இதை பர்னபா கொண்டிருந்தார். இவரின் தாராள உள்ளத்திற்குக் கடவுளும் நல்ல பரிசைத் தருகின்றார். இவரைத் தன்னுடைய சிறப்புப் பணிக்கென ஒதுக்கிவைத்துக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:13-16) 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!' என்கிறார் இயேசு. ஆக, ஒளியின் நிறைவு அல்லது நோக்கம் அதன் பயன்பாட்டில்தான் இருக்கிறது. மனித வாழ்வின் நோக்கமும் நிறைவும் அதுவே என்பதை பர்னபா உணர்ந்திருந்தார்.

இதை நாமும் கற்றுக்கொள்ளலாமே!

Sunday, June 9, 2019

இரக்கம் நிறைந்த கடவுள்

இன்றைய (10 ஜூன் 2019) முதல் வாசகம் (2 கொரி 1:1-7)

இரக்கம் நிறைந்த கடவுள்

இன்றிலிருந்து சில நாள்களுக்கு நாம் முதல் வாசகமாக கொரிந்தியருக்கு பவுல் எழுதிய இரண்டாம் திருமடலிலிருந்து வாசிக்கின்றோம்.

இந்த மடல் பவுலின் இக்கட்டான காலகட்டத்தில் எழுதப்பட்டது. மக்கள் தன்னுடைய பணியை ஏற்றுக்கொள்ளாத நிலை, வெறுமை, தனிமை, சோர்வு, விரக்தி, மக்கள் பவுலுடைய நம்பிக்கைiயுயும், நாணயத்தையும் கேள்விக்குட்படுத்திய நிலை என்னும் பின்புலத்தில், யாருக்கெல்லாம் இவ்வுணர்வுகள் அன்றாட வாழ்க்கை அனுபவங்களாக இருக்கின்றனவோ, இவர்கள் எல்லாருக்கும் இந்த மடலின் வார்த்தைகள் மிக அழகாகப் பொருந்தும்.

எடுத்துக்காட்டாக, பங்குத் தளத்தில் இருக்கின்ற அருள்பணியாளர் ஒருவருக்கு எதிராக மக்கள் முணுமுணுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அவர் பின்வரும் பகுதியில் தனக்கான ஆறுதலைத் தேடலாம்:

'போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. புகழுவார் புகழலும் இகழுவார் இகழலும் எங்களைப் பாதிப்பதில்லை. ஏமாற்றுவோர் என அவர்களுக்குத் தோன்றினாலும் நாங்கள் உண்மையான பணியாளர்கள். அறிமுகமில்லாதோர் எனத் தோன்றினாலும் எல்லாரும் எங்களை அறிவர். செத்துக்கொண்டிருப்பவர்கள் எனத் தோன்றினாலும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொடுமையாகத் தண்டிக்கப்பட்டோர் எனத் தோன்றினாலும் நாங்கள் கொல்லப்படவில்லை. துயருற்றோர் எனத் தோன்றினாலும் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏழையர் எனத் தோன்றினாலும் நாங்கள் பலரைச் செல்வராக்குகிறோம். எதுவும் இல்லாதவர் எனத் தோன்றினாலும் நாங்கள் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம்' (2 கொரி 6:8-10)

பவுலால் எப்படி இப்படி எழுத முடிகிறது?

இதற்குக் காரணம் கடவுளைப் பற்றிய அவருடைய புரிதல்தான். நாம் கடவுளை எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் மற்றவர்களையும் மற்றவற்றையும் பார்க்கிறோம். கடவுளை நாம் தண்டிப்பவராக, நீதித்தீர்ப்பளிப்பவராகப் பார்த்தால், அடுத்தவரையும் நாம் தீர்ப்பிடுவோம், தண்டிப்போம்.

பவுல் கடவுளை எப்படி பார்க்கிறார்?

'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று. அவரைப் போற்றுவோம்!'

கத்தோலிக்க அடக்கச் சடங்கில் இறந்தவர் உடலின் முன் நின்று அருள்பணியாளர் சொல்லும் முதல் வார்த்தைகளும் இவையே. ஆக, நம்முடைய உடல் இறைவனின் இரக்கத்தின்முன் ஒப்படைக்கப்படுகிறதே தவிர, அவருடைய தீர்ப்பின்முன் அல்ல.

ஆக, கடவுளை இரக்கம் நிறைந்தவராகவும், அவரை ஆறுதல் அளிப்பவராகவும் நாம் பார்த்தால், இன்று எல்லாரையும் இரக்கக் கண்களோடு பார்க்க ஆரம்பித்து அனைவருக்கும் ஆறுதல் மொழி பகர்வோம்.

பவுலோடு நாம் செய்யும் இறைவார்த்தைப் பயணத்தில் பவுலின் புரிதல் நம் புரிதலாகட்டும். இந்த உலகில் இன்று நமக்குத் தேவை அறிவும், அழகும், பணமும், பதவியும், படிப்பும் அல்ல. நிறைய இரக்கமும், நிறைய ஆறுதலும்தான் தேவை.

Friday, June 7, 2019

வாடகை வீடு

இன்றைய (8 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 28:16-20, 30-31)

வாடகை வீடு

வாடகை வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா? அல்லது வசித்திருக்கிறீர்களா?

சாலைகளில் சில சமயங்களில் மக்கள் வீடு மாறிச் செல்லும்போது வாகனங்களில் பொருள்களைச் சுமந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். வாடகை வீடு நமக்கு ஒரு இரண்டாங்கெட்டான் உணர்வைத் தரும். நாம் இருக்கும் இடம் நமக்குச் சொந்தம். ஏனெனில், நாம் வாடகை கொடுக்கிறோம். அதே இடம் நமக்குச் சொந்தமல்ல. ஏனெனில், அது வேறொருவருடையது. 'இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு ஊரெல்லாம் வீடு' என்பது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் நேர்முகமான உணர்வைக் காட்டுகிறது. இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டுவதை விட வாடகைவீட்டில் வாழ்வதையே மக்கள் விரும்புகிறார்கள். பணி, படிப்பு என்று புலம்பெயர்தல் நடக்கும் போது சொந்த வீட்டைவிட வாடகை வீட சௌகரியமானது.

வாடகை வீட்டில் சில அசௌகரியங்கள் இருந்தாலும், வாடகை வீடு நமக்கு பெரிய வாழ்க்கைப் பாடத்தைச் சொல்கிறது.

நம் ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் நம்முடைய உடல். உயிரை இரவல் கொடுத்தவன் அதை எடுத்தவுடன், உடலை வாடகைக்குக் கொடுத்த மண் அதை தனக்கென எடுத்துக்கொள்கிறது.

நம் தாயின் கருவறை நாம் தங்கியிருந்த வாடகை வீடுதான். திருமணம் வரை தங்கும் பிறந்த வீடு, திருமணம் முடிந்தவுடன் தங்கும் மாமியார் வீடு, வேலைக்காக வெளிநாட்டில் தங்கியிருக்கும் வீடு, விடுதி, படிக்கும்போது, பணியிடத்தில் தங்கியிருக்க என நாம் தற்காலிகமாக வைத்திருக்கும் அனைத்துமே வாடகை வீடுகளே.

நம்முடைய உறவுகளும் வாடகை உறவுகளே. நாம் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் உறவுகள் வாடகை உறவுகளே. உறவுகள் - இரத்த, திருமண, உடன்படிக்கை - அனைத்துமே நமக்கு உடைமை அல்ல. பாதியில் வந்த அனைத்தும் பாதியில் செல்ல வேண்டும், ஒன்றுமில்லாமல் வந்தவன் ஒன்றுமில்லாமலேயே செல்ல வேண்டும் என்பதே வாழ்வியில் நியதி.

ஆனால், பாதியில் வந்த உறவு என்றாலும் உறைவிடம் என்றாலும் உயிர் என்றாலும் உடல் என்றாலும் அதை நாம் எப்படிப் பயன்படுத்தி நம்மையே நிறைவாக்கிக்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் இரகசியம்.

இன்றைய முதல் வாசகத்தில், 'பவுல் தனி வீட்டில் தங்கியிருந்தார்,' 'பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்' என பதிவு செய்கிறார் லூக்கா. பவுல் தன்னுடைய பழகும் திறன் மற்றும் உறவைப் பயன்படுத்தி, சிறையிலிருந்து வெளியேறி வீட்டுச் சிறைக்குச் செல்கின்றார். தனி வீடு. ஆனால், காவலாளிகள் இருப்பர்.

அங்கே பவுல் ஞானம் பெறுகிறார்.

தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.

'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.

வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.

வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.

'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.

நிரந்தரமான இறைவனை விட, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!


Thursday, June 6, 2019

தன்முனைப்பு

இன்றைய (7 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 25:13-21)

தன்முனைப்பு

மனிதர்களாகிய நமக்கு பாலுணர்வு மற்றும் வன்முறை உணர்வு என்னும் இரண்டு உணர்வுகள்தாம் மேலோங்கி இருக்கின்றன என்கிறார் உளவியல் அறிஞர் ஃப்ராய்ட். ஆனால், இவ்விரண்டையும் தாண்டி அல்லது இவ்விரண்டையும் உந்தித் தள்ளுகிற ஒரு உணர்வு இருக்கிறது. அதுதான், 'தன்முனைப்பு' அல்லது 'தன்முக்கியத்துவம்' (self-importance). 'மற்றவரைவிட நான் முக்கியமானவன் அல்லது முக்கியமானவள்' என்ற உணர்வு நமக்குப் பல நேரங்களில் இருக்கிறது. இந்த உணர்வில் நல்லது இருக்கிறது. அதாவது, இது இருந்தால்தான் நாம் நம் முன்னெடுப்புக்களில் வெற்றி பெற முடியும். நாம் குழந்தையாக கருவுரும் நிகழ்விலேயே இது இருக்கிறது. பல ஆயிரம் விந்தணுக்களில் தன்முனைப்பு கொண்டிருக்கிற விந்தணுவே முட்டையோடு கலக்கிறது. ஆக, 'நான்தான் முக்கியமானவன், முக்கியமானவள்' என்ற உணர்வு நமக்கு இயல்பாக இருக்கிறது. இதில் நன்மையும் இருக்கிறது. நம் முதல் பெற்றோரின் பாவமும் இதுதான். 'அது என்ன? யாரோ இங்கே கடவுள்னு இருக்காராமே! அவரைவிட நான் முக்கியமே!'

ஆனால், இதில் நிறைய தீமைகள் இருக்கின்றன. அடுத்தவரை ஏற்றுக்கொள்ளாமை, பொறாமை உணர்வு, ஒப்பீடு, கோபம், தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை இவை அனைத்தும் இந்த உணர்வில்தான் ஊற்றெடுக்கின்றன. 'என்னை எல்லாருக்கும் தெரியும்,' 'எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு,' 'நான் யார்னு தெரியுமா?' இவை போன்ற சொல்லாடல்கள் எல்லாம் இவ்வுணர்வின் குழந்தைகள். இதை இப்போது லேட்டஸ்ட் வார்த்தையில் 'கெத்து காட்டுதல்' என்கிறார்கள்.

நான் பேராயரின் செயலராக இருந்தபோது நினைப்பதுண்டு. ஒரு பங்கு அல்லது ஊர் அல்லது நிறுவனத்தின் விழாவிற்குச் செல்லும்போது, விழாவிடத்தை நெருங்குகையில் ஒரு பெருமித உணர்வு இருக்கும். பேராயரோடு அமர்ந்து செல்வதால் இருக்கும் உணர்வு அது. வெடி, கொட்டு சத்தம், மாலையின் நறுமணம், சந்தனம், குங்குமம், வீடியோ, ஃபோட்டோ என அமர்க்களமாக இருக்கும். ஆனால், விழா முடிந்து வீடு திரும்பும்போது சிக்னலில் மற்ற கார்களோடு கலந்து நிற்கும்போதும் எங்கள் காரும் 'ஆயிரம் கார்களில் ஒரு கார்' தான். ஆக, முதலில் நான் பெற்ற 'முக்கியத்துவ' உணர்வு இரண்டாவது நிகழ்வில் ஒன்றுக்கும் பயன்படாது.

ஆக, 'தன்முனைப்பு' அல்லது 'தன்முக்கியத்துவம்' எல்லாம் இடம் சார்ந்தது. அல்லது நம் மூளைக்குள் உதிக்கும் உணர்வே அன்றி வேறில்லை. இன்னும் சொன்னால் அது ஒரு மாயை.

இன்றைய முதல் வாசகத்தில் பவுலின், இயேசுவின் தன்முனைப்பு அல்லது தன்முக்கியத்துவம் காயப்படுகிறது. எப்படி? நம்பிக்கையாளர்கள் இயேசுவை கிறிஸ்து என்றும், கடவுள் என்றும், கடவுளின் மகன் என்றும் கொண்டாடுகிறார்கள். பவுலை சீடர் என்றும் புறவினத்தாரின் திருத்தூதர் என்றும் கொண்டாடுகின்றனர். ஆனால், என்ன நடக்கிறது?

அகிரிப்பா அரசனும், பெர்னிக்கியுவும் பெஸ்துவைச் சந்திக்கின்றனர். அகிரிப்பா ரொம்ப நாள் எருசலேமில் இருக்கிறார். அவர்களுக்கு பொழுது போகவில்லை. இந்த நேரத்தில் கைதிகளைப் பற்றிய பேச்சு வருகிறது. அப்போது பெஸ்து சொல்கிறார்: 'கைதியா விடப்பட்ட ஒரு மனிதர் இருக்கிறார் ... இறந்து போன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள்'

பெஸ்துவைப் பொறுத்தவரையில், பவுல் என்பவர் ஒரு கைதி. இயேசு என்பவர் இறந்து போன ஒருவர்.

ஆக, நம் அடையாளங்கள் துடைத்து எறியப்படும் நேரம் கண்டிப்பாக வரும். அந்த இடத்தில், அந்த நேரத்தில் நாம் தன்முனைப்பு, தன்முக்கியத்துவம் கொண்டிருக்க முடியாது. இதை எப்படி எதிர்கொள்வது? இந்த நேரத்தில் நம் மகிழ்ச்சியை எப்படி தக்கவைத்துக்கொள்வது?

ரொம்ப சிம்பிள்.

நம் அடையாளங்களோடு நம்மை ஒன்றிக்கவே கூடாது. மற்றவர்களிடமிருந்து என்னைப் பிரித்துப் பார்க்காமல் இணைத்துப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள், பாராட்டுகிறார்கள் என்னும் மாயைக்குள் சிக்கிவிடக் கூடாது.

பவுலும் சிக்கவில்லை. இயேசுவும் சிக்கவில்லை.

கைதியாக இருந்தாலும் பவுல் பவுல்தான். இறந்தவராக இருந்தாலும் இயேசு இயேசுதான்.

Wednesday, June 5, 2019

உரோமையிலும்

இன்றைய (6 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

உரோமையிலும்

நம் வாழ்வில் அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று தெரியாத வண்ணம் ஒரு திரை எந்நேரமும் நம் கண்முன் தொங்கிக்கொண்டே இருக்கிறது. வெகு சில ஞானியரே அத்திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுகொள்கின்றனர். சிலருக்குக் கடவுள்தாமே கொஞ்சம் திரையை விலக்கிக் காட்டுகின்றார்.

கடவுள் திரையை விலக்கிக் காட்டும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம்.

பவுல் எருசலேமிற்கு வருகின்றார். கைது செய்யப்படுகின்றார். அவருடைய யூத சமூகத்தைச் சார்ந்தவர்களே அவருக்கு எதிராக கிளர்ந்து எழுகின்றனர். எந்த அளவிற்கு என்றால், 'பவுலைப் பிய்த்து எறிந்து விடுவர் என்று ஆயிரத்தவர் தலைவர் அஞ்சிப் படைவீரர் அவரைக் கூட்டிக்கொண்டு செல்லும்' அளவிற்கு.

சிறையின் தனிமையில் இருந்த பவுலை ஆண்டவர் சந்திக்கின்றார்.

'எல்லாம் முடிந்தது! இனி மரணம்தான்!' - என்று நினைத்துக் கொண்டிருந்த பவுலின் அருகில் வருகின்ற ஆண்டவர் சற்றே திரையை விலக்குகின்றார். 'துணிவோடிரும்! எருசலேமில் என்னைப் பற்றிச் சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்று பகர வேண்டும்' என மொழிகின்றார்.

'எருசலேமே முடிவு' என்று நினைத்த பவுலுக்கு, பாதை இன்னும் கொஞ்சம் நீள்கிறது.

'மறுபடியும் மொதல்ல இருந்தா ...!' என்று கூட பவுல் அங்கலாய்த்திருக்கலாம். ஆனால், இறைவன் தன் உடனிருப்பை அவருக்கு உணர்த்துகின்றார்.

இன்று இத்திரை விலகல் பல நேரங்களில் நம் சக மனிதர்கள் வழியாக நடக்கலாம்.

நான் பதினொன்றாம் வகுப்பிற்குச் செல்வதற்கு முன் அந்த நிகழ்வு நடந்தது. அடுத்த நாள் நான் குருமடத்திற்குச் செல்ல வேண்டும். சாப்பாட்டுப் பணம், பள்ளிக் கட்டணம், நோட்டு புத்தகங்கள், செய்முறை நோட்டுகள் என வாங்க ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. வீட்டில் பணம் இல்லை. இரண்டு மூன்று பேரிடம் கேட்டுப் பார்த்தும் எங்கள் கிராமத்தில் கிடைக்கவில்லை. அன்று எங்கள் வீட்டில் இருந்தது இருபது, முப்பது கோழிகள். மாலையில் ஒருவர் வந்து ஓட்டலுக்கு அவசரமாக கோழிகள் தேவைப்படுகின்றன என்றும், இருக்கின்ற கோழிகளை அப்படியே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு, இப்போதைக்கு ஆயிரம் ரூபாய் வைத்துக்கொள்ளுமாறும், மற்றதை எடை போட்ட பின் அடுத்த நாள் தருவதாகவும் சொல்லிச் சென்றார்.

இங்கே இவரின் கரத்தைக் கடவுளின் கரம் என்று சொல்லி ஆன்மீகமயமாக்கவில்லை. இருந்தாலும், இப்பிரபஞ்சம் யாரோ ஒருவரை அனுப்பி மற்றவரின் கனவை நனவாக்க விழைகிறது. 'துணிவோடிரும்! இன்னும் நீ மதுரை போய் படிக்க வேண்டும்' என்று அந்த நபர் சொல்வது போல இருந்தது.

இதே போன்ற அனுபவங்கள் நமக்குப் பல இருக்கலாம். நாமே பலருக்கு இத்தகைய அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம்.

ஒன்றை மட்டும் கற்க வேண்டும். வாழ்க்கை எப்போதும் முடிந்துவிட்டது என்று நினைக்கவே கூடாது. வாழ்வின் தொடக்கத்தை நாம் தொடங்கவில்லை. அப்படியிருக்க அதை நாம் எப்படி முடித்துக்கொள்ள முடியும். ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை நம்மை நடத்திச் செல்லும். மேலும், இந்த நேரங்களில் நாம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடவும் தேவையில்லை. ஒவ்வொருவரின் வழியும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எல்லாரும் ஒரே வழியில் வந்தால் நெரிசல் அதிகமாகிவிடும். ஆக, என் வழியில் நான் நடக்கப் பழகினால் அதுவே எனக்குப் போதும்.

இன்றும் பவுலின் காதுகளில் ஒலித்த அதே குரல் நம் காதுகளிலும் ஒலிக்கிறது.

நாம் தனிமையாக, சோகமாக, விரக்தியில், நோயில், முதுமையில், கையறுநிலையில், வறுமையில் இருக்கும்போது, அவர் சொல்கிறார்: 'துணிவோடிரும்! இன்னும் நீ நகர வேண்டும்!'

Tuesday, June 4, 2019

ஒப்புகை

இன்றைய (05 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 20:28-38)

ஒப்புகை

நேற்றைய முதல் வாசகத்தில் நாம் வாசித்த பவுலின் எபேசு உரை இன்று நிறைவு பெறுகிறது. முதலில் பவுல் மூப்பர்களை எச்சரிக்கின்றார். இரண்டாவதாக, தன்னைப் பற்றி ஒப்புகை செய்கின்றார். மூன்றாவதாக, விடை பெறுகின்றார்.

அ. எச்சரிக்கை

'மூப்பர்களை' 'கண்காணிப்பாளர்கள்' என்று அழைக்கின்றார் பவுல். தொடக்கத் திருஅவையில் 'கண்காணிப்பாளர்' என்பவர் இன்றைய திருஅவையில் 'ஆயர்' (பிஷப்) அல்லது 'பேராயர்' (ஆர்ச்பிஷப்) ஆவார். திருஅவையில் பிரச்சினை அல்லது பிரிவினை வரும்போது இவர்கள் 'ஆண்டவரின் அருள் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும்' என எச்சரிக்கின்றார். பவுல் தன்னை பெரிய ஆளாக ஒருபோதும் நினைக்கவே இல்லை. தன் குழுமத்திலும் பிரச்சினைகள் எழலாம் என உணர்கின்றார். ஆக, இன்றைய சூழலில் நாம் எல்லாரிலும் எல்லாவற்றிலும் 'பெர்ஃபெக்ட்' தேடுவது தவறு என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் நிகழ்வுகள் பிறழ்வு பெறும்போது அவற்றை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டுமே தவிர, பிறழ்வே இருக்கக் கூடாது என்று நாம் நினைக்கக் கூடாது.

ஆ. ஆசைப்பட்டதில்லை

'எவருடைய பொன்னுக்கோ வெள்ளிக்கோ ஆடைக்கோ நான் ஆசைப்பட்டதில்லை' என மார்தட்டுகிறார் பவுல். அதாவது, இவருக்கு எந்தவித கவனச் சிதறல்களும் இல்லை. தன்னுடைய பணியின் இலக்கு எது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். ஆக, பொருள் சேர்க்கும் கருவியாக தன்னுடைய பணியை அவர் கருதவே இல்லை. மேலும், தான் உழைத்து பிறருக்கு நன்மை செய்ததாகவும் சொல்கிறார். தன் தேவையை நிறைவேற்றுவதோடு பிறரின் தேவைக்காகவும் உழைக்கின்ற ஒரு மேலான தலைவரை நாம் இங்கே பார்க்கிறோம். 'பெற்றுக் கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை' என்று இயேசுவின் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொண்டிருக்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நம் நற்செய்தி நூல்களில் இல்லை. மற்ற ஏதாவது ஓரிடத்தில் பதிவு செய்யப்பட்ட வார்த்தைகளாக இவை இருக்கலாம்.

இ. இறைவேண்டல்

பவுல் தங்கள் கண்களிலிருந்து மறையப் போகிறார் என்று உணர்கின்ற எபேசின் மூப்பர்கள் அவருக்காக இறைவேண்டல் செய்கிறார். இது ஓர் ஆச்சர்யமான விடயம். இறைவேண்டல் கண்ணுக்குத் தெரியாதவரையும் நம் கண்முன் கொண்டுவருகிறது. இவ்வாறாக, பவுலை என்றென்றும் நினைவுகூறுத் தொடங்குகின்றனா மூப்பர்கள்.

இறுதியாக,

மூப்பர்கள் கப்பல்வரை சென்று வழியனுப்புகிறார்கள்.

நம் வீட்டுக்கு வருபவர்களை கதவு வரை சென்று நாம் வழியனுப்புகிறோம். அவர் போய்விட்டார் என்று உறுதி செய்வதற்காக அல்ல. மாறாக, இதே இடத்தில் நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்ற செய்தியை அவருக்குச் சொல்வதற்காகத்தான்.

இன்று,

நம்முடைய இறைவார்த்தை வேர், ஆசை, உழைப்பு, இறைவேண்டல் பற்றிய பார்வைகள் எப்படி இருக்கின்றன?

Monday, June 3, 2019

என் முகத்தை

இன்றைய (4 ஜூன் 2019) முதல் வாசகம் (திப 20:17-27)

என் முகத்தை

திருத்தூதர் பணிகள் நூலில் காணப்படும் உரைகளில் பவுலின் எபேசு உரை (காண். திப 20:17-38) மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஏனெனில், திருஅவையின் கட்டமைப்பு, மூப்பர்களின் பணி, இறைவார்த்தைப் பணியின் முக்கியத்துவம் என நிறையக் கருத்துக்கள் இங்கே இடம் பெறுகின்றன. இவ்வுரையின் முதல் பகுதியை இன்றைய முதல் வாசகத்திலும் தொடர்ச்சியை நாளைய முதல் வாசகத்திலும் வாசிக்கிறோம்.

சூழல் இதுதான். எபேசில் பணி புரிகின்ற பவுல் பணியை முடித்துவிட்டு மிலேத்துவிலிருந்து புறப்படுகின்றார். புறப்படுமுன் ஆளனுப்பி எபேசின் மூப்பர்களை வரவழைக்கின்றார். வந்தவர்களிடம் பிரியாவிடை உரை ஆற்றுகின்றார்.

நேற்றும் இன்றும் சாலைகளில் நிறைய இளவல்கள் விடுதிக்குச் செல்வதற்காக பெட்டியும், பாயும், வாளியும், கப்புமாய் நிற்பதைக் காண முடிந்தது. புத்தகப் பை, ஆடைகள், நோட்டுப் புத்தகங்கள் என தங்கள் குழந்தைகளுக்காக பாரம் சுமக்கின்ற அப்பாக்கள் மற்றும் அம்மாக்களின் கண்களில்தாம் எத்தனை கனவுகள்? தன்னுடைய மகனும் மகளும் தான் தங்களுடைய வாழ்வின் கதாநாயகர்கள் என்று கொண்டாடுகின்ற அவர்கள், தங்களுடைய எளிமை, வெகுளித்தனம், எதையும் நம்பும் குணம் என்று தங்கள் கிராமத்துக் குணங்களோடு நகரத்தில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துவிடுகிறார்கள்.

விடுதி வளாகங்கள் இன்று நிறைய கண்ணீரைப் பார்த்திருக்கும். 'பத்திரமா போய்ட்டு வாங்கம்மா, வாங்கப்பா!' என்று வெகு சில குழந்தைகளே பெற்றோர்களே வழியனுப்பியிருப்பார்கள். சில குழந்தைகள், 'இன்னும் கொஞ்ச நேரம் இருங்க!' என்றிருப்பார்கள். 'அந்த அவளைப் பாரு! அவளுக்கு நமக்கு பக்கத்து ஊருதான்!' என்று நமக்குத் தெரியாத ஒரு குழந்தையின், விடுதிக் காப்பாளரின், அருள்சகோதரியின் கையைப் பிடித்து ஒப்படைத்திருப்பார்கள் பெற்றோர்கள். 'நல்லா படி! அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன்!' என்று சொல்லி பேருந்துக்குக் காசு போக, மற்ற எல்லாவற்றையும் மகன்-மகள் கையில் திணித்துவிட்டு கண்கள் சுரந்து, நா வறண்டு பேருந்து ஏறுவார்கள்.

ஏறக்குறைய பவுலின் நிலையில் இப்பெற்றோர்களின் நிலைபோலத்தான் இருக்கின்றது.

தான் விட்டுச் செல்லும் குட்டித் திருச்சபை எப்படி வளருமோ? என்ற ஏக்கமும் கவலையும் ஒரு புறம், தான் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் மறுபுறம். 'இன்னும் கொஞ்ச நேரம் இருக்கவா? அல்லது போகவா?' என்ற இழுபறி நிலையிலிருந்து மாறி, 'இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை' என்று புட்டு உடைக்கின்றார் பவுல்.

பவுல் எந்த அளவிற்குத் தன்னை அறிந்திருந்தார் என்பதையும், எந்த அளவிற்கு தூய ஆவியாரின் வழிகாட்டுதலைத் தன் வாழ்வில் உணர்ந்திருந்தார் என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது. ஆக, 'என் வாழ்க்கை இப்படித்தான் போகிறது. அடுத்து இது நடக்கும். அதற்கடுத்து இது நடக்கும்' என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் செதுக்கி வாழ்கிறார் பவுல். மேலும், அடுத்த நிலைக்குத் தயார் நிலையில் இருக்கின்றார்.

வாழ்க்கையை ஒரு ஓட்டமாகப் பார்க்கிறார் பவுல். ஓட்டத்தில் ஓடத் தொடங்கியவர் இலக்கை அடையும் வரை ஓட வேண்டும் என்பது கட்டாயம். பாதியில் ஓட்டத்தை நிறுத்துவது ஓடுபவருக்கு இழுக்கு.

இன்று நான் என் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறேன்?

மார்க்கஸ் அவுரேலியு வாழ்க்கையை 'பணம்,' 'ஓடுகின்ற ஆறு' என்று உருவகப்படுத்துகிறார். ஓடுகின்ற ஆற்றில் ஒருமுறைதான் நாம் காலை வைக்க முடியும். அடுத்த முறை வைக்கும்போது அத்தண்ணீர் கடந்துவிடும். ஆக, வாழ்வில் எதையும் தள்ளிப்போடாமல் நாம் சந்திக்கும் நபர், செய்யும் பணி, மேற்கொள்ளும் பயணம் என அனைத்திலும் முழுமையாக ஈடுபட்டால் நலம்.

ஆக, 'இனி என் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை' என்பது எதிர்மறையான சொல்லாடல் அல்ல. மாறாக, வாழ்க்கையை முழுமையாக வாழ விரும்பும் ஒருவரின் நேர்முகமான வாக்குறுதி.