Tuesday, May 31, 2022

உண்மையில்

இன்றைய (1 ஜூன் 2022) நற்செய்தி (யோவா 17:11-19)

உண்மையில்

இயேசு தன் சீடர்களுக்காகச் செய்யும் இறைவேண்டல் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது.

இன்றைய நற்செய்திப் பகுதியில், 'உலகு' என்ற வார்த்தையோடு இணைந்து, 'உண்மை' மற்றும் 'அர்ப்பணம்' என்னும் இரண்டு வார்த்தைகள் மேலோங்கி நிற்கின்றன. இந்த இரண்டு வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்போம்.

அ. 'உண்மை' 

கிரேக்கத்தில் 'அலெதேயா' என்று அழைக்கப்படுகிறது. இது, 'அ' மற்றும் 'லெதேயா' என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டு. ஒரு பொருளை மறுப்பதற்கு 'அ' முன்னால் சேர்த்து எழுதுவது வழக்கம். தமிழிலும் இதுபோன்றே இருக்கிறது. 'மலா' அல்லது 'மலம்' என்றால் 'அழுக்கு'. ஆக, அழுக்கற்ற தன்மையைச் சுட்டிக்காட்ட, அ-மலா அல்லது அ-மலம் என்று சொல்கிறோம். 'ஞானி' என்றால் கடவுளை அறிந்தவர். அ-ஞானி அல்லது அஞ்ஞானி என்றால் கடவுளை மறுப்பவர். 

'லெதேயா' என்றால் 'மறைக்கப்பட்ட நிலை' அல்லது 'ஒளிவுமறை நிலை' அல்லது 'இருட்டு நிலை' என்பது பொருள். இதை மறுக்கும் விதத்தில், இந்த வார்த்தைக்கு முன் 'அ' இணைத்தால், 'மறைக்கப்படாத நிலை,' 'ஒளிவுமறை இல்லாத நிலை,' 'இருட்டு இல்லாத நிலை' என்று பொருள் கொள்ளலாம்.

ஆக, உண்மை என்றால் மறைக்கப்படாத, ஒளிவுமறை இல்லாத, இருட்டு இல்லாத நிலை.

இந்த நிலை சாத்தியமா என்றால் இல்லை?

எடுத்துக்காட்டாக, நம் மொழி இயல்பாகவே வரையறைக்குட்பட்டது. நம் வார்த்தைகளால் எல்லாவற்றையும் நம்மால் அடுத்தவர்களுக்குப் புரிய வைக்க முடியாது. 'எனக்கு தலை வலிக்கிறது' என்று நான் சொல்கிறேன் என வைத்துக்கொள்வோம். இந்த மூன்று வார்த்தைகளின் பொருளை நீங்கள், உங்களுக்கு ஏற்கனவே வந்த தலைவலியின் பின்புலத்தில் புரிந்துகொள்வீர்கள். ஆனால், தலை வலியை நீங்கள் அனுபவிக்கவில்லை என்றால், 'தலை எப்படி வலிக்கும்? நீ பொய் சொல்கிறாய்!' என்று என்னிடம் சொல்வீர்கள். ஆக, நம் மூளையில் ஏற்கனவே உள்ள வகையினங்களை முன்னிட்டே நாம் பொருள் கொள்ள முடியும்.

இயேசு சொல்லும் உண்மை என்ன?

அது மொழி சார்ந்த உண்மை அல்ல. 

உண்மை என்பது நம் ஆன்மாவின் போராட்டம். இது ஒரு தொடர் போராட்டம். உண்மை என்பது இருத்தலோடு சமரசம் செய்யாத மனநிலை. உண்மை என்றால் நேர்மை. உண்மை என்பது வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் உள்ள பொருந்துநிலை. உண்மை என்பது வெளிவேடமற்ற நிலை. உண்மை நலம் தரும். உண்மை இன்றி அன்பு சாத்தியம் இல்லை. இரகசியம் காப்பது வேறு, உண்மை பேசுவது வேறு. இரகசியம் காப்பதும் உண்மையே.

'உண்மை உங்களை விடுதலை செய்யும்' (யோவா 8:32) என்று இயேசு சொல்கிறார். என்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ளும் உண்மை என்னுடைய கட்டுக்களிலிருந்து விடுதலை செய்யும். உண்மை பேசுபவர் யாருக்கும் பயப்படத் தேவையில்லை, யார்மேலும் கோபப்படவோ, பொறாமைப்படவோ தேவையில்லை. அவர் தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளமாட்டார். அவருக்குக் குற்றவுணர்வு இருக்காது. அவர் தன்னையே மற்றவர்களிடமிருந்து ஒதுக்கிக்கொள்ள மாட்டார். மற்றவர்கள் தன்னை நிராகரித்தாலும், ஒதுக்கி வைத்தாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டார். 'இதுதான் நான்' என ஏற்றுக்கொள்வார். இதுதான் விடுதலை.

இந்த விடுதலையைத் தான் இயேசு தன்னுடைய சீடர்கள் பெற வேண்டுமென்று விரும்புகிறார்.

ஆ. 'அர்ப்பணம்'

அர்ப்பணம் என்பது இங்கே தூய்மையாக்கப்படுவதைக் குறிக்கிறது. அர்ப்பணம் ஆக்கப்படும் எதுவும் தூய்மையாக்கப்படுகிறது என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். 'தூய்மை' என்பது 'அழுக்கற்ற நிலை' அல்லது 'தயார்நிலை.' தூய்மையான பாத்திரம் சமையலுக்கு தயாராக இருக்கிறது. தூய்மையான ஆடை அணிவதற்கு தயாராக இருக்கிறது. தூய்மையான இல்லம் வாழ்வதற்குத் தயாராக இருக்கிறது. தூய்மையான மனிதர் தனக்கும், பிறருக்கும், இறைவனுக்கும் தயாராக இருக்கிறார். 

ஆக, எந்த நிலையிலும் தயார்நிலையில் இருக்க வேண்டும்.

வாழ்வை நாம் ஒருமுறைதான் வாழ வேண்டும். 

எடுத்துக்காட்டாக, கோபமாகப் பேசி, பின் அதற்காக மன்னிப்பு கேட்கும்போது, வாழ்வை நாம் இரண்டு முறை வாழ்கின்றோம். நேரம் மற்றும் ஆற்றல் இரு முறை வீணாகிறது. ஆனால், கோபமாக நாம் பேசவே இல்லை என்றால், வாழ்வு ஒரே முறைதான் வாழப்படுகிறது. இதுதான் தயார்நிலை. இதுதான் தூய்மை நிலை.

நற்செயல்: 'உண்மை' மற்றும் 'தூய்மை' பற்றிய என் புரிதல் என்ன? இவற்றை நான் என் வாழ்வில் எப்படிப் பேணிக் காத்து வருகிறேன்? என்று கேட்பது.


Monday, May 30, 2022

மரியா – எலிசபெத்து சந்திப்பு

இன்றைய (31 மே 2022) திருநாள்

மரியா – எலிசபெத்து சந்திப்பு

நம் தாய்த்திருஅவையில் 13ஆம் நூற்றாண்டில் இத்திருவிழா தொடங்கப்பட்டது. முதலில் ஜூலை 2ஆம் தேதி கொண்டாடப்பட்ட இவ்விழா, பிற்காலத்தில் மே 31க்கு மாற்றப்பட்டது. அதாவது, மங்கள வார்த்தை திருநாளுக்கும் (மார்ச் 25), திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவுக்கும் (ஜூன் 24) இடையே கொண்டுவரப்பட்டது.

வானதூதர் தன் இல்லத்தை விட்டு வெளியேறிய அந்த நொடியே, கதவை அடைத்துவிட்டு மரியாவும் வெளியேறுகிறார். அப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா: 'அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' இயேசுவைத் தன் உடலில் தாங்கத் தொடங்கிய அந்த நொடி முதல் அவர் முழு இயக்கத்திற்கு உட்படுகிறார். எருசலேம் ஆலயத்தை நோக்கியோ, அல்லது தலைமைச்சங்கத்தை நோக்கியோ அவர் ஓடவில்லை. மாறாக, தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி ஓடுகிறார். 

மங்கள வார்த்தை மரியாவை முழுவதுமாக மாற்றியது: நாசரேத்தூரின் எளிய இளவல் இப்போது உன்னதரின் மகனின் தாயாகின்றார். இனி அவர் தன் விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே விரும்புவார். இனி அவர் அனைத்திலும் விரைந்தே செயல்படுவார்: விரைந்து பணியாற்றுவார், விரைந்து இறைத்திருவுளம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் அமைதியாக ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.

இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.

தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.

மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து மிகவும் எதார்த்தமானதாகவும் உண்மையாகவும் இருந்ததால் அது வயிற்றிலுள்ள குழந்தையைச் சென்றடைகின்றது.

'எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்' என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா. 

எலிசபெத்து மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளைப் பாடிப் புகழ்கின்றார். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது நம் முகம் நம்மையோ அல்லது மற்றவர்களையோ பார்க்காமல் இறைவனைப் பார்த்தால் எத்துணை நலம்! தன் வாழ்வு முழுவதும் இறைமையின் வெளிப்பாடாகப் பார்க்கத் தெரிந்த மரியாவின் நம்பிக்கைப் பார்வை நமக்கு வியப்பாக இருக்கிறது. 

ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருக்கின்ற மரியா பின்னர் வீடு திரும்புகின்றார்.

புறப்படும் பயணம் அனைத்தும் இல்லம் திரும்பவே என்பதும் ஒரு நல்ல வாழ்வியல் பாடம். பயணத்தின் எந்த இலக்கும் நம் வீடாகிவிடாது. நாம் திரும்ப வேண்டிய ஒரு வீடு எப்போதும் உண்டு.

நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி நம் அனைவரையும் பற்றிக்கொள்வதாக!


Sunday, May 29, 2022

துன்பம் உண்டு

இன்றைய (30 மே 2022) நற்செய்தி (யோவா 16:29-33)

துன்பம் உண்டு

நேற்றைய நாளில் நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இந்த வார வாசகங்கள் அனைத்தும் விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு அனுப்பப் போகின்ற தூய ஆவியார் பற்றிப் பேசுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 19:1-8), மலைப்பாங்கான பகுதியாகத் திகழ்ந்த எபேசு நகரத்துக்கு வருகின்றனர் புனித பவுலும் அவருடைய உடனுழைப்பாளர்களும். சீடர்களைக் கண்டு, 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்க, அவர்களோ, 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே' என்கின்றனர். பல நேரங்களில், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் போதும், அருங்கொடை இயக்க இறைவேண்டல்களின்போது மட்டுமே நாமும் தூய ஆவியார் பற்றி நினைக்கின்றோம். இவர் ஒரு மறக்கப்பட்ட மனிதராகவே இன்றும் நம்மோடு இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய பிரியாவிடை உரையில், 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.

இந்த உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் மனித வாழ்வில் உள்ள துன்பத்தைப் பற்றிப் பேசுகின்றன. எடுத்துக்காட்டாக, 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று சொல்லும் புத்தமதம், ஆசையை வெல்வதற்கான அஸ்டாங்க மார்க்கம் (எட்டு வழி) கற்பிக்கிறது. இந்த எட்டு வழியைக் கடைப்பிடிப்பதால் துன்பம் நீங்கிவிடுமா? நீங்காது! துன்பம் நம் வாழ்வின் எதார்த்தம்.

இத்தகைய எதார்த்தப் புரிதலைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம் முன்மொழிகின்றார்:

'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின் மீது வெற்றிகொண்டு விட்டேன்'

இதில் மூன்று விடயங்கள் உள்ளன:

அ. உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு

'துன்பம்' என்ற வார்த்தைக்கு இங்கே கிரேக்கத்தில் 'த்லிப்ஸிஸ்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 'த்லிப்ஸிஸ்' என்ற பெயர்ச்சொல் 'த்லிபோ' என்ற வினைச்சொல்லிலிருந்து வருகிறது. 'கசக்குவது,' 'பிழிவது,' 'நெருக்குவது,' 'அமிழ்த்துவது' என்பது இதன் பொருள். தானியங்களைக் கசக்குதல், துணியை அல்லது பழங்களைப் பிழிதல், கட்டகளை நெருக்கி அடுக்குதல், தண்ணீருக்குள் ஒன்றைக் கடினப்பட்டு அமிழ்த்துதல் போன்றவற்றைக் குறிக்க இவ்வினைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத்தில் அழுத்தம் பார்க்கும் கருவியில் த்லிப்ஸிஸ் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தின் பழைய சட்டப்படி, குற்றத்தை ஒத்துக்கொள்ளாத ஒருவர் மேல் பெரிய கனத்தை அழுத்திக் கொல்வது வழக்கம். அந்த வழக்கத்தின் பெயரும் 'த்லிப்ஸிஸ்.'

ஆக, இயேசு இங்கே சொல்வது உள்ளம் சார்ந்த ஓர் அழுத்தம். அல்லது அந்த அழுத்தம் தரும் துன்பம். பாம்பாட்டிச் சித்தர் துன்பத்தை இப்படி வரையறுக்கிறார்: 'உன் மனம் உனக்கு வெளியே இருந்தால் அது துன்பம். உனக்கு உள்ளே இருந்தால் அது இன்பம்.' எடுத்துக்காட்டாக, நான் யாரிடமாவது கோபம் கொண்டால், அல்லது யாரையாவது நான் மன்னியாமல் இருந்தால் என் மனம் அவரைப் பற்றி எண்ணிக்கொண்டே இருக்கிறது. இதுதான் துன்பம். இதுதான் அழுத்தம். மாறாக, நான் என் மனம் என்மேல் மையம் கொண்டிருந்தால் துன்பத்திற்கு இடமில்லை.

துன்பம் என்பது அதிகம் அல்லது குறைவு என்ற இரண்டு நிலைகளில் வருகிறது. எடுத்துக்காட்டாக, தைராய்டு நோயை எடுத்துக்கொள்வோம். இந்தச் சுரப்பி அதிகம் சுரந்தாலும் துன்பம், குறைவாகச் சுரந்தாலும் துன்பம். சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் துன்பம், குறைவாக இருந்தாலும் துன்பம். ஆக, அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும் எதுவும் துன்பம் தருகிறது. அதிகமாக பாசம் அல்லது ஆசை அல்லது காமம் கொண்டிருத்தல் பற்றுக்களை உருவாக்கி துன்பம் தருகிறது. அதே வேளையில், குறைவாக பாசம் அல்லது ஆசை அல்லது காமம் கொண்டிருத்தல் மனதில் வெறுமையை உருவாக்கி வறட்சியை ஏற்படுத்திவிடுகிறது. 

இந்த வாக்கியத்தில், 'உலகம்' என்பது நம் பொதுவான இல்லம். யோவான் நற்செய்தியில், 'உலகு' என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு: ஒன்று, கடவுளுக்கு எதிராகச் செயல்படும் எதிராளிதான் உலகு. இரண்டு, மனிதர்களின் இயங்குதளம் உலகு. இங்கே இந்த வார்த்தை இரண்டாவது பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

ஆ. எனினும், துணிவுடன் இருங்கள்

துன்பம் போய்விட்டதால் அல்ல, மாறாக, துன்பம் இருந்தாலும் துணிவுடன் இருத்தல் வேண்டும். நம் இல்லங்களில் பெரிய பெரிய இழப்புக்களைத் தாண்டி நாம் எழுகிறோமே. எப்படி? துணிச்சல்தான். ஆக, துணிவு என்பது பயமற்ற நிலை.

இ. நான் உலகின்மேல் வெற்றிகொண்டுவிட்டேன்

இந்த செயல் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார் இயேசு. 'நிக்காவோ' என்றால் வெற்றி. அந்த வெற்றியில் எதிராளி முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். ஆனால், திரும்ப வரமாட்டான் என்பது பொருள் அல்ல. இயேசு தான் ஏற்கனவே உலகை வென்றுவிட்டதாக சீடர்களுக்கு முன்மொழிகின்றார்.

துன்பம் என்ற எதார்த்தத்தை இயேசு முழுமையாக அழித்துவிட்டதாகப் பொருள் இல்லை. அப்படிச் சொன்னால் அவர் தன்னையே முரண்படுத்துவதாக இருக்கும். ஏனெனில், இன்னும் சில நாள்களில் அவரே சிலுவையில் துன்புறுவார்.

ஆக, துன்பத்தின் நடுவிலும் துணிவுடன் இருக்க வேண்டும். இன்று வெற்றிகொள்ளலாம். நாளை மீண்டும் துன்பம் வரும். மறுபடியும் வெற்றி கொள்ள வேண்டும். இப்படியாக வாழ்க்கை நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

நற்செயல்: துன்பத்தைப் பற்றிய என் புரிதல் என்ன என்று கேட்பது.


Saturday, May 28, 2022

மறைதலே இறைமை

ஆண்டவரின் விண்ணேற்றம்

I. திருத்தூதர் பணிகள் 1:1-11 II. எபிரேயர் 9:24-28, 10:19-23 III. லூக்கா 24:46-53

மறைதலே இறைமை

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று 
நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் புனித அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம். 

இயேசுவின் விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன நம் நண்பர் அல்லது உறவினர் இருக்கிறார் என்று நாம் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' அல்லது 'விண்ணேற்பா?' 

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை. 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை. விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:


1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலே இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இது உருவாக்கப்பட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12).  இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும், 'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக' விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன்  மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது இரண்டு: ஒன்று, மனமாற்றம். இரண்டு, மன்னிப்பு. மேலும், 'இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்' (லூக் 24:48) என்கிறார் இயேசு. 'நீங்கள் சாட்சிகள்' என்னும் சொல்லாடல் இன்றைய முதல் வாசகத்திலும் (திப 1:8) உள்ளது. 'சாட்சி' என்பது நீதிமன்றச் சொல். சாட்சியம்தான் தீர்ப்பின் போக்கையே மாற்றும். சாட்சி சொல்பவருக்கும், சாட்சி சொல்லப்படுபவருக்கும் முரண் இருக்கக் கூடாது. சாட்சி சொல்பவர் தான் யார் சார்பாக சாட்சி சொல்கிறாரோ, அவரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலித்தல் வேண்டும். 'மனமாற்றம்,' மற்றும் 'மன்னிப்பு' இந்த இரண்டைத்தான் இயேசு நம்மிடம் விரும்புகின்றார். நம் இறைவன் கனிவின், கருணையின் இறைவன். அவர் நம்மைத் தண்டிப்பவர் அல்லர். ஆகையால்தான் இன்றைய இரண்டாம் வாசகமும், 'ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிக உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக' (எபி 10:22) என்று ஊக்கம் தருகின்றது. ஆக, மனமாற்றம், மன்னிப்பு, சாட்சியம் இம்மூன்றும் சீடர்களாகிய நம் பண்புகளாக இருத்தல் நலம். தொடர்ஓட்டத்தில் ஒரு வீரரின் கையிலிருந்து மற்ற வீரரின் கைக்கு மாறும் குச்சியைப்போல, ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் ஒருவரின் கையிலிருந்து அடுத்தவரின் கைக்கு மாறும் தீபம் போல விண்ணரசுப் பணி இயேசுவின் கையிலிருந்து இன்று நம் கைக்கு மாறுகின்றது. எந்த அளவிற்கு இது ஒரு கொடையோ, அந்த அளவிற்கு இது ஒரு கடமை. 'விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்குட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூட முடியும' (2 திமொ 2:5)

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: மகிழ்ச்சி

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார். இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம். ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!' (புனித அகுஸ்தினார்) 


Friday, May 27, 2022

முன்வருதல்

இன்றைய (28 மே 2022) முதல் வாசகம் (திப 18:23-28)

முன்வருதல்

இன்றைய முதல் வாசகத்தில் அப்பொல்லோ என்ற கதைமாந்தரைப் பார்க்கிறோம். இவர் எபேசில் கற்பித்து வருகின்றார். 

இவரிடம் அப்படி என்ன சிறப்பு?

பவுலைப் போல தமஸ்கு நகரிக்குச் செல்லும் வழியில் ஆண்டவரை எதிர்கொள்ளவில்லை என்றாலும், பேதுரு மற்றும் யோவான் போல ஆண்டவரின் திருத்தூதர்களாக இவர் இல்லாவிடினும், தானாக முன்வந்து நற்செய்திப் பணி செய்கின்றார். தன்னுடைய திறமைகள் அனைத்தையும் நற்செய்திப் பணிக்காகச் செலவிடுகின்றார். என்ன ஆச்சர்யம்!

ஆக, நம் வாழ்வில் நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டுமென்றால், பெரிய அளவில், பெரிய நபராக, பெரிய அழைத்தலைப் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. மாறாக, சிறிய அளவில், சிறிய நபராக, சிறிய அழைத்தலோடு செய்யலாம்.

முன்வருதல் எப்படி வரும்?

ஒன்று, எனக்கு என்மேல் தன்நம்பிக்கை இருக்கும்போது வரும். தன்நம்பிக்கை இல்லாமல் முன்வருதல் சாத்தியமில்லை. நான் நிறைய கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, ஏதாவது விளையாட்டு நடத்த, 'யாராவது முன்வருகிறீர்களா?' என்ற கேட்கும்போது, பலர் தயக்கம் காட்டுவதுண்டு. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று, தன்நம்பிக்கை குறைவு. ஒரே ஒரு இடத்தில்தான் அமர்வில் இருந்த 20 பேரும் கைகளை உயர்த்தினர். 

இரண்டு, அடுத்தவர் தேவையில் இருக்கும்போது. என்னுடைய தன்நம்பிக்கை மட்டுமல்ல. அடுத்தவரின் தேவையும் சில நேரங்களில் நம்மை முன்வரத் தூண்டும். நாம் நடந்து சென்றுகொண்டிருக்கிறோம். திடீரென நமக்கு முன்னால் செல்லும் நபர் ஒருவர் மயங்கி விழுகிறார். உடனே நாம் ஓடிச் சென்று அவரைத் தூக்குகிறோம். இங்கே, நம் தன்னம்பிக்கையைவிட அவருடைய தேவை நம்மை ஓட வைக்கிறது.

மூன்று, பணி நிமித்தமாக. பணியின் நிமித்தமாக சில நேரங்களில் நாம் முன்வருவோம். மருத்துவமனைக்குச் செல்கிறோம். அங்கே காயம் பட்டு ஒருவர் கட்டிலில் அழைத்துவரப்படுகின்றார். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கலாம், அடுத்தவர் தேவையில் இருக்கலாம். ஆனால், பணிசார் அறிவு இல்லாமல், அல்லது பணியின் கடப்பாடு இல்லாமல் நான் அவருக்கு உதவி செய்ய முன்வர முடியாது.

அப்பொல்லோ இந்த மூன்று காரணங்களுக்காக நற்செய்தி அறிவிக்க முன்வந்தாலும், இதையும் தாண்டி ஒரு காரணம் இருந்தது.

அவர், 'இயேசுவே மெசியா' என எடுத்துக்காட்டினார்.

தன் வாழ்வாலும், வார்த்தையாலும்.

நற்செயல்: சின்ன சின்ன விடயங்களில் நாம் முன்வருதலோடு இயங்குகிறோமா? என்று ஆராய்தல்.

Wednesday, May 25, 2022

கூடாரத் தொழில்

இன்றைய (26 மே 2022) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல். 

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல். 

பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று சில நேரங்களில் அருள்பணி செய்பவர்கள் தங்கள் அருள்பணி நிலையை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தங்களின் அருள்பணிக்காக மற்றவர்களின் சுமைகளைக் கூட்டும் நிலை சில இடங்களில் இருக்கிறது. தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையை அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது. 

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

முதலில், உழைப்பு.

இரண்டாவது, பழகும் திறன்.


Tuesday, May 24, 2022

ஏதென்சில் பவுல்

இன்றைய (25 மே 2022) முதல் வாசகம் (திப 17:15,22 - 18:1)

ஏதென்சில் பவுல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் ஏதென்ஸ் நகரில் ஆற்றிய உரையை வாசிக்கின்றோம்.

ஏதென்ஸ் நகர மக்கள் எப்படிப்பட்டவர்கள்?

திப 17:19-20 அவர்களைப் பற்றிச் சொல்கிறது: பின்பு, அவர்கள் பவுலை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், 'நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா? நீர் எங்களுக்குச் சொல்வது கேட்கப் புதுமையாய் உள்ளதே! அவற்றின் பொருள் என்னவென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்றனர்.

மேலும், சிலர், 'இதைப் பற்றி நீர் மீண்டும் வந்து பேசும். கேட்போம்' என்றனர் (காண். திப 17:32).

கிரேக்க மெய்யியலின் தொட்டில் ஏதென்ஸ். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்னும் மேற்கத்திய மெய்யியலின் பிதாமகன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, உரையாற்றிய ஊர் ஏதென்ஸ்.

ஆக, ஏதென்ஸ் மக்கள் (1) நிறையக் கற்றவர்கள், (2) புதிய கருத்துக்களை வரவேற்பவர்கள், (3) ஆழ்ந்து கேட்பவர்கள், (4) நன்றாகப் பேசுபவர்களை உற்சாகப்படுத்தக்கூடியவர்கள், (5) மீண்டும் வரவேற்றுக் கேட்கும் எண்ணம் உடையவர்கள், மற்றும் (6) மாற்றத்தை அறிவுசார்நிலையில் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். 

இங்கே, நாம் முதலில் ஏதென்ஸ் நகர மக்களிடமிருந்து மேற்காணும் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். 

தொடர்ந்து, பவுல் இன்று நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லித் தருகின்றார்:

(1) பவுலின் அறிவுத்திறன்

பவுலுக்கு எபிரேயம், அரமேயம், கிரேக்கம், சிரியம், மற்றும் இலத்தீன் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், பவுலுக்குத் திருச்சட்டமும் யூத இறையியலும் அவரின் சம காலத்து மெய்யியல் சிந்தனைகளைகளும் நன்றாகத் தெரியும். இந்த அறிவுத்திறன் அவருக்கு நிறைய தன்மதிப்பையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கும். நாம் வாழ்வில் அறிந்துகொள்ளும் ஒவ்வொன்றும் இன்னொரு நாள் எங்கேயோ பயன்படும். ஆக, நமக்கு நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே நடக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(2) பவுலின் துணிச்சல்

பவுல் இங்கே தனிநபராக மக்கள் கூட்டத்தை, புதிய மக்கள் கூட்டத்தை எதிர்கொள்கின்றார். கடவுளின் துணை உள்ள ஒருவருக்கே இத்துணிச்சல் வரும். ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த அனுபவம் உண்டு. பேருந்தில் செல்லும்போது, திருமண விழாவிற்குச் செல்லும்போது, பணி மாற்றம் அடைந்து செல்லும்போது என நாம் ஒவ்வொரு முறையும் புதிய புதிய நபர்களைப் பார்க்கிறோம். பழகுகிறோம். உறவுகளை உருவாக்குகிறோம். பணிகளைச் சிறந்த முறையில் செய்கிறோம். காரணம், கடவுளின் உடனிருப்பு. இதை நாம் உணர்தல் அவசியம்.

(3) சமயோசிதப் புத்தி

எந்த நேரத்தில் எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ, செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் அதை அப்படிச் சொல்லும் பக்குவம். கூட்டத்தைப் பற்றிய அச்சமோ, புதிய இடத்தைப் பற்றிய கலக்கமோ இல்லாத பவுல், தன் கண்முன் நடக்கின்ற ஒன்றை அப்படியே எடுத்துப் பேசுகிறார். 'நீங்கள் அறியாத தெய்வத்துக்கு' என்று அங்கே இருந்த ஒரு பீடத்தை மையமாக வைத்து தொடங்குகிறார். என்ன ஆச்சர்யம்!

விளைவு,

மக்களின் மனத்தைக் கவர்கின்றார் பவுல்.

புதிய இடம், புதிய நபர், புதிய வேலை போன்ற எதார்த்தங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? தன் இலக்கு, இருத்தல், மற்றும் இயக்கம் பற்றி அறிந்த பவுல் போன்றவர்களுக்கு எல்லா இடமும், எல்லா நபர்களும், எல்லா வேலையும் ஒன்றே.


Monday, May 23, 2022

சிறைக் கதவுகள்

இன்றைய (24 மே 2022) முதல் வாசகம் (திப 16:22-34)

சிறைக் கதவுகள்

இன்றைய முதல் வாசகம் பவுல் மற்றும் சீலாவின் 'பேராண்மை' பற்றிச் சொல்கிறது. 'பேராண்மை' என்றால் என்ன? திருக்குறளில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் திருவள்ளுவர், 'பிறன்மனை நோக்கா பேராண்மை' என்கிறார். ஆண்மையில் பெரிய ஆண்மை பிறன்மனைவியை நோக்காமல் இருப்பது என அப்படியே பொருள்கொள்ளலாம். ஆனால், 'சிறுமைத்தனம்' அல்லது 'சின்னப்பிள்ளைத்தனம்' என்னும் சொற்களுக்கு எதிர்பதமாக 'பெருந்தன்மையே பேராண்மை' என்றும் எடுத்துக்கொள்ளலாம். இவ்விறுதிப் பொருளையே நாம் எடுத்துக்கொள்வோம்.

பிலிப்பி நகர மக்கள் திரண்டெழுந்து பவுலையும் சீலாவையும் தாக்குகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன்? பிலிப்பு நகரத் திருச்சபைக்குப் பவுல் எழுதிய மடலை ஆசிரியர்கள் 'அன்பின் மடல்' என்கிறார்கள். ஏனெனில், இந்த மடலில்தான் பவுல் மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். 'என் அன்பர்களே,' 'என் சகோதர, சகோதரிகளே,' 'என் வாஞ்சைக்குரியவர்களே,' 'நீங்களே என் மகிழ்ச்சி,' 'நீங்களே என் வெற்றிவாகை' என்று அவர்களை உச்சி முகர்கிறார். இந்த மக்களில் சிலர்தாம் பவுலையும் சீலாவையும் சிறையில் அடைக்கின்றனர்.

மக்களால் அடிப்பட்டு, உட்சிறையில் (மிகவும் பாதுகாப்பானது) தள்ளப்பட்டு, கால்கள் தொழுமரத்தில் மாட்டிவைக்கப்பட்டுக் கிடந்த பவுலும் சீலாவும் நள்ளிரவில் கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றனர். சிறையின் இருளிலும், குளிரிலும், தனிமையிலும் இவர்களால் எப்படிப் பாட முடிந்தது? மற்றக் கைதிகள் இவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, இவர்கள் இரவிலும் இருளிலும் பாடல்கள் பாடி மற்ற கைதிகளுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

அந்த நேரத்தில் தான் அந்த அற்புதம் நிகழ்கிறது. பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சிறைக் கதவுகள் திறக்கின்றன. அனைவரின் விலங்குகளும் கழன்று விழுகின்றன. சிறைக் காவலர் பதறி அடித்து ஓடி வருகிறார். கதவுகள் திறந்திருப்பதால் கைதிகள் தப்பித்திருக்கலாம் என எண்ணுகின்ற அவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். கைதிகளைத் தப்பவிட்டதால் இவருக்குக் கொலை தண்டனை கிடைக்கும் என்பதால், இவரே அத்தண்டனையைத் தனக்குக் கொடுத்துக்கொள்கிறார். 

ஆனால், பவுலோ, 'நீர் உமக்கு தீங்கு எதுவும் செய்துகொள்ளாதீர். நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்' என்கிறார். காவலர் ஓடி வந்து பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுகிறார். 'பெரியோரே நாங்கள் மீட்படைய என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார். தற்கொலைக்காக வாளை எடுத்தவரின் வாழ்வு டக்கென்று மாறிப்போகின்றது.

பின் அனைவரும் நம்பிக்கை கொள்கின்றனர்.

இரண்டு விடயங்கள்:

ஒன்று, நாம் பவுலைப் போல பேராண்மையோடு இருக்க வேண்டும். தப்பிச் செல்வதற்கான, தவறு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும், அற்புதம் நடந்தும் தனது பேராண்மையில் உறுதியாக இருக்கிறார் பவுல். இதுவே மேன்மக்களின் அடையாளம். இவர்கள் தங்கள் வாழ்வை தங்கள் கைகளில் எடுத்து வாழ்பவர்கள். தங்கள் வாழ்வை தாங்களே மேலாண்மை செய்பவர்கள். வெளியிலிருந்து வரும் நபரோ, செயலோ, நிகழ்வோ இவர்களின் செயலை மாற்றிவிட முடியாது. இவர்கள் மனஉறுதி கொண்டவர்கள். இப்படிப்பட்ட பேராண்மை இருந்தது என்றால் நாம் நம் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்திலும் உறுதியாக, கலக்கமின்றி இருக்க முடியும்.

இரண்டு, நாம் சிறைக்காவலரைப் போல இருக்கக் கூடாது. ஏன்? 'கைதிகள் தப்பித்திருப்பார்கள்' என்று எண்ணி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். அதாவது, பிரச்சினை என்ன என்று தெரியாமலேயே நாம் தீர்ப்பிடக் கூடாது. 'ஐயோ! எல்லாம் முடிஞ்சுடுச்சு! இனி ஒன்றுமே இல்லை!' என்று நாமே முடிவுகட்டிவிடக் கூடாது. விளக்கை எற்றி, இருள் அகற்றி என்ன, எது என்ற பொறுiமாயகப் பார்க்க வேண்டும். அவசரபுத்தியினால் தன் வாழ்வை இழக்கும் நிலைக்குப் போய்விடுகிறார் காவலர். வாலைப் பார்த்தவுடன், 'பாம்பு, பாம்பு' எனக் கத்தக் கூடாது. அது பாம்பாக இருக்கலாம். பாம்புராணியாக இருக்கலாம். ஏதோ, சிறிய பிளாஸ்டிக் அல்லது நைலான் கயிறாகக் கூட இருக்கலாம்.

அவசர புத்தி, உடனடி விமர்சனம், உடனடி முடிவு அனைத்தும்  பேராண்மைக்குச் செல்ல விடாமல் நம்மை மூடி வைத்திருக்கும் சிறைக்கதவுகளே.

பவுலின் பேராண்மை பெற்று, காவலரின் அவசரபுத்தி அகற்றி வாழ்தல் நலம்.


Sunday, May 22, 2022

லீதியா

இன்றைய (23 மே 2022) முதல் வாசகம் (திப 16:11-15)

லீதியா

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், செந்நிற அல்லது பிங்க் நிற ஆடைகள் செல்வந்தர்களாலும், அரசவை உறுப்பினர்களாலும், மேட்டுக்குடி மக்களாலும் அணியப்பட்டன. இவர் செய்கிற இந்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

லீதியா வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார். திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார். லூக்கா அழகாக எழுதுகின்றார்: 'அதன் பின் லீதியா எங்களிடம், 'நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்' என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.'

இங்கே இவரின் இன்னொரு பண்பையும் பார்க்க முடிகிறது. 

தாராள உள்ளம். லீதியாவுக்கு வயது ஏறக்குயை 20 முதல் 25க்குள் தான் இருந்திருக்க வேண்டும். தனியாக வாழ்பவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடித்தவராக இருக்கலாம். அல்லது திருமணம் முடிக்கத் தயார்நிலையில் இருக்கலாம். ஆனால், பவுலைத் தன் இல்லத்தில் ஏற்கின்றார். தான் பெற்ற நம்பிக்கைக்கு உடனடியாகக் கைம்மாறு செய்கின்றார் லீதியா. இதுதான் இவரின் பண்பு. நமக்கு நல்லது ஒன்று நடந்தால் உடனே ஏதாவது ஒன்றை மற்றவருக்குச் செய்ய வேண்டும் என்பார் இத்தாலியின் ரோஸா பாட்டி. ஏனெனில், நாம் செய்வது நமக்கே திரும்பி வரும் என்பது பிரபஞ்சத்தின் விதி. ஆக, மீட்பையும் நம்பிக்கைiயும் இலவசமாக வாங்காமல் அதற்கு ஒரு விலை கொடுக்கத் தயாராகின்றார் லீதியா.

இந்த இளவல் நமக்குத் தரும் பாடங்கள் மூன்று:

அ. தன்மதிப்பு மற்றும் தன்னம்பிக்கை - இது அவருடைய தொழிலில் வெளிப்பட்டது.

ஆ. புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம் - இது அவருடைய மனமாற்றத்தில் வெளிப்பட்டது.

இ. அந்நியரை வரவேற்கும் பரந்த மனம் - இது திருத்தூதர்களை ஏற்றுக்கொண்டதில் வெளிப்பட்டது.


Saturday, May 21, 2022

வெறுமையை நிரப்பும் இறை அமைதி!

பாஸ்கா காலம் 6ஆம் ஞாயிறு

திருத்தூதர் பணிகள் 15:1-2, 22-29 திருவெளிப்பாடு 21:10-14, 22-23 யோவான் 14:23-29

வெறுமையை நிரப்பும் இறை அமைதி!

உளவியல் அறிஞர் பிராய்டின் முதன்மைச் சீடர் கார்ல் யுங் அவர்கள் கண்டுபிடித்த முக்கியமான உளவியல்கூறு 'ஆர்க்கிடைப்' ('ஆர்கே' என்றால் கிரேக்கத்தில் 'தொடக்கம்' என்றும் 'டிப்போஸ்' என்றால் 'மாதிரி' அல்லது 'பண்பு' என்றும் பொருள்). இதை 'தொடக்கமாதிரி' என்று மொழிபெயர்த்தல் சால்பன்று. ஆக, நம் புரிதலுக்காக, இதை 'உள்ளுறை உணர்வு' என மொழிபெயர்த்துக் கொள்வோம். மனித மனத்தில் 12 ஆர்க்கிடைப்புகளைக் கண்டுபிடிக்கிறார் யுங். இந்த ஆர்க்கிடைப்பில் எது மேலோங்கி இருக்கிறதோ அதுவே ஒரு மனிதரின் ஆளுமையை ஆள்கிறது.

இந்த 12 ஆர்க்கிடைப்புகளைச் சுருக்கி 6 உள்ளுறை உணர்வுகளாக, தன் 'ஹீரோ விதின்' என்ற நூலில் பதிவு செய்கின்றார் கேரல் பியர்சன்: 'குழந்தையுள்ள உணர்வு' (இன்னசன்ட்), 'அநாதை உணர்வு' (ஆர்ஃபன்), 'சாட்சிய உணர்வு' (மார்ட்டர்), 'நாடோடி உணர்வு' (வாண்டரர்), 'போராளி உணர்வு' (வாரியர்) மற்றும் 'மந்திரவாதி உணர்வு' (மேஜிசியன்). நம்மை ஹீரோவாக மாற்ற நாம் நெறிப்படுத்த வேண்டிய முதல் உணர்வு 'அநாதை உள்ளுறை உணர்வு' (ஆர்ஃபன் ஆர்க்கிடைப்). இந்த உணர்வு நம் எல்லாரிடமும் இருக்கிறது. இந்த உணர்வுதான் அடுத்தவர்களை நோக்கி நம்மையும், நம்மை நோக்கி மற்றவர்களையும் இழுக்கிறது. மற்றொரு பக்கம், இந்த உணர்வுதான் மற்றவர்கள்மேல் சந்தேகத்தையும் வருவிக்கிறது.

எதற்கு இந்த உளவியல் பின்புலம்?

இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி வாசகம் (யோவான் 14:23-29), இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையின் (14:1-31) ஒரு பகுதி. 'அன்பு செய்வதை' மையமாக வைத்து இயேசு பேசும்போது, 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்' (14:18) என்கிறார். முதல் மொழிபெயர்ப்பில் 'அநாதைகளாக' என்ற வார்த்தை இப்போது 'திக்கற்றவர்களாக' என்று மாற்றப்பட்டுள்ளது. 'அநாதை' என்ற வார்த்தை 'அ,' 'நாதி' என்ற இரண்டு வார்த்தைகளின் சுருக்கமாகவே இருக்க வேண்டும். அதாவது, 'வழியில்லாதவர்,' 'திசையில்லாதவர்,' 'திக்கில்லாதவர்'தான் அநாதை. 

தான் தன் சீடர்களைவிட்டுப் போனவுடன், அவர்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே உணர்கிறார் இயேசு. இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'அநாதை' அல்லது 'திக்கற்றவர்' என்ற வார்த்தை இடம்பெறவில்லையென்றாலும், 'செல்கிறேன்,' 'நான் போகிறேன்,' 'என் தந்தையிடம் செல்கிறேன்' என்னும் இயேசுவின் வார்த்தைகள் அவரது உடனடிப் பிரிவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இந்தப் பிரிவை ஈடுசெய்ய இயேசு 'தூய ஆவியானவர் என்னும் துணையாளரை' வாக்களிப்பதும், இந்தப் பிரிவின் வலியை நமக்கு உணர்த்துகிறது.

'வெறுமையை நிரப்பும் இறை அமைதி' - என்று இன்றைய சிந்தனைக்கு நாம் தலைப்பிடுவோம்.

இன்றைய மூன்று வாசகங்களும் இந்த ஒரு கருத்தையே மையமாகக் கொண்டிருக்கின்றன. முதல் வாசகத்தில் 'நம்பிக்கை கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படாததால்' அவர்கள் மனத்தில் வெறுமை உருவாகிறது. இரண்டாம் வாசகத்தில் 'கோவிலும், கதிரவனும், நிலாவும்' இல்லாத வெறுமை. நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு உருவாக்கும் வெறுமை.

இன்றைய முதல் வாசகம் (திப 15:1-22, 22-29) திரு அவை வரலாற்றின் முதல் திருச்சங்கம், 'எருசலேம் திருச்சங்கம்' கூட்டப்பட்டதன் நோக்கத்தையும், அதில் எடுக்கப்பட்ட முடிவையும் பற்றிச் சொல்கிறது. தொடக்கத் திருஅவையில், கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவிய யூதரல்லாதவர்கள் (புறவினத்தார்கள்) ஒரு பிரச்சினையைச் சந்திக்கின்றனர். ஒருவர் யூதராக மாற விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவராக மாற என்ன செய்ய வேண்டும்? இங்கே இரண்டு விதமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இயேசு மற்றும் இயேசுவின் திருத்தூதர்கள் யூதர்களாக இருந்ததால், யூத மரபு மற்றும் சட்டங்களைக் கடைப்பிடிப்பது கிறிஸ்தவர்களுக்கும் கடமை என்று நினைத்த சிலர், கிறிஸ்தவர்களாக மாறும் அனைவரும் முதலில் யூதராக வேண்டும் என நினைக்கின்றனர். அப்படி ஆனால் என்ன ஆகும்? இங்கே இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஓரங்கட்டப்படும். அதாவது, மீட்பு என்பது நம்பிக்கையால் அல்ல. மாறாக, செயலால்தான் என்ற தவறான புரிதல் உருவாகும். பவுல் மற்றும் பர்னபாவைப் பொறுத்தமட்டில், இயேசுவின்மேல் கொண்ட நம்பிக்கையால்தான் மக்கள் மீட்பு பெறுகிறார்களே அன்றி, அவர்களுடைய செயல்களால் அல்ல. இந்தப் பிரச்சினை எருசலேமுக்குக் கொண்டுவரப்பட்டபோது பேதுருவும், யாக்கோபுவும் ஒரு மனத்துடன் இதை அணுகுகின்றனர். 'நாம் சுமக்க இயலாத சுமையை இச்சீடருடைய கழுத்தில் எப்படி ஏற்ற முடியும்?' என்று பேதுருவும், 'இன்றியமையாதவை தவிர வேறொன்றையும் சுமத்தக் கூடாது' என்று யாக்கோபுவும் தீர்ப்பு வழங்கி, 'விருத்தசேதனம் செய்யாமலேயே ஒருவர் கிறிஸ்தவராக மாறலாம்' என்கிறார். இந்தத் தீர்ப்பால்தான் இன்று வரை நாமும் விருத்தசேதனம் இன்றி கிறிஸ்தவர்களாகின்றோம்! மேலும், இது எதைக் காட்டுகிறது என்றால், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையே போதுமானது என்ற இறையியலையும் முன்னிறுத்துகிறது. கடவுளுக்கு நாம் ஏற்புடையவராக நம் நம்பிக்கை போதுமானது. 

இதைவிட மேலாக, கொள்கைகளுக்காக மக்களை இழந்துவிடக்கூடாது என்றும், மக்களுக்காக கொள்கைகளையும் இழக்கலாம் என்று இவர் மனிதர்களுக்குத் தரும் முன்னுரிமை, 'ஓய்வு நாள் இருப்பது மனிதருக்காக, மனிதர் இருப்பது ஓய்வுநாளுக்காக அல்ல' என்ற இயேசுவின் போதனையின் தாக்கத்தை உணர்த்துகிறது. 'எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர்' (15:24) என்று தான் கேள்விப்பட்டதாக எழுதுகின்றார் யாக்கோபு. இந்தக் கலக்கத்தை அவர் போக்கி, 'அமைதி உரித்தாகுக!' 'நல்லா இருங்க!' (15:29) என வாழ்த்துகிறார்.

ஆக, கலக்கம் உருவாக்கிய வெறுமை நீங்கி அமைதி பிறப்பதைச் சொல்கிறது இன்றைய முதல் வாசகம். இதையே தூய பவுல் தன் திருமடலில், 'அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார்' (எபே 2:17) என எழுதுகின்றார்.

'புதிய வானகம், புதிய வையகம்' என்று கடந்த வார இரண்டாம் வாசகத்தில் கண்ட யோவானின் காட்சி இன்றைய வாசகத்தில் (காண். திவெ 21:10-14, 22-23) 'புதிய எருசலேம்' என்று தொடர்கின்றது. மண்ணக எருசலேமில் 12 நுழைவாயில்கள் இருந்தன. இஸ்ரயேல் இனத்தில் இருந்த 12 குலங்களின் அடையாளமாக இந்த 12 வாயில்கள் இருந்தன. புதிய இஸ்ரயேலில் 12 வானதூதர்கள் இந்த வாயில்களில் நிற்கின்றனர். மேலும், புதிய இஸ்ரயேலாகிய இயேசுவின் 12 திருத்தூதர்களின் பெயர்கள் அங்கே இடம்பெற்றிருக்கின்றன. மண்ணக எருசலேமில் மிக முக்கியமாக இருந்தது திருக்கோவில். இந்தத் திருக்கோவிலில் பகலில் கதிரவனும், இரவில் நிலவும் ஒளிவீசின. ஆனால், புதிய எருசலேமில் கோவிலும் இல்லை. கதிரவன் மற்றும் நிலா என்னும் ஒளிச்சுடர்களும் இல்லை. 'இல்லை' என்ற 'வெறுமையை' நிறைவு செய்வது யார்? 'எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே' (21:22). இந்த 'ஆட்டுக்குட்டியே ஒளிதரும் விளக்காகவும்' இருக்கின்றது. பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் எஸ்ரா மற்றும் நெகேமியா தலைமையில் இரண்டாம் ஆலயத்தைக் கட்டி எழுப்புகின்றனர். இந்த இரண்டாம் ஆலயம் உரோமையர்களால் கி.பி. 70ஆம் ஆண்டு தரைமட்டமாக்கப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் நாம் யோவானின் காட்சியைப் பார்க்க வேண்டும். எருசலேமில் ஆலயம் இல்லாத குறையை இனி இயேசுவே நிரப்புவார் என்று தன் திருஅவை மக்களுக்கு நம்பிக்கை தருவதற்காகவே, 'ஆட்டுக்குட்டியை கோவில்,' என்றும், உரோமையரின் படையெடுப்பால் உருவான 'இருளை' அகற்றும் 'ஒளி' என்றும் முன்வைக்கின்றார். 

ஆட்டுக்குட்டி எப்படி கோவிலாக முடியும்? அல்லது ஒளியாக முடியும்? எருசலேம் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 'பாவ மன்னிப்பு பலியை' ஒப்புக்கொடுப்பார் தலைமைக்குரு. தன் பாவக்கழுவாய்க்கென ஒரு ஆட்டுக்குட்டியும், தன் மக்களின் பாவக்கழுவாய்க்கென ஒன்றும் என இரண்டு ஆட்டுக்குட்டிகளோடு, திருத்தூயகம் செல்வார் அவர். அந்தப் பலி வழியாக, மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் இழந்த அமைதியும், ஒளியும் மீண்டும் திரும்பும். ஆனால், இயேசு தலைமைக்குரு மட்டுமல்ல. அவரே ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி தன் இறப்பால் ஒரே முறை எக்காலத்திற்குமான முழுமையான பலியைச் செலுத்தி இழந்த அமைதியையும், ஒளியையும் மீட்டுக்கொடுத்துவிட்டது. 

ஆக, உரோமையரின் படையெடுப்பு விட்டுச் சென்ற வெறுமையை நீக்கி நிறைவையும், ஒளியையும் தருகின்றார் இயேசு என எடுத்துரைக்கிறது இரண்டாம் வாசகம்.

'ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?' என்று யூதா கேட்க (14:22), அதற்கு இயேசு சொல்லும் விடையே இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 14:23-29).

யூதாவின் கேள்விக்கும், இயேசுவின் விடைக்கும் நேரிடையான தொடர்பு இருப்பது போலத் தெரியவில்லை(!). 'என்மீது அன்பு கொண்டிருத்தல்' என்று தொடங்கி, அதே சொல்லாடல்களோடு முடிகிறது இயேசுவின் விடை. இயேசுவின் விடையின் மையமாக இருப்பது: 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்னும் வார்த்தைகள்தாம்.

இயேசு தம் சீடர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இவரின் இந்தப் பிரிவு திருத்தூதர்கள் நடுவில் நான்கு வகை உணர்வுகளை ஏற்படுத்துகிறது: (அ) அவர்கள் அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருப்பர் ('துணையாளர் கற்றுத்தருவார்'), (ஆ) அவர்கள் பயத்தில் அனைத்தையும் மறந்துவிடுவர் ('துணையாளர் நினைவுறுத்துவார்'), (இ) அவர்கள் கலக்கம் அடைவர் ('நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'), (ஈ) அவர்கள் அச்சம் கொள்வர் ('நீங்கள் மருள வேண்டாம்'). மொத்தத்தில் இந்த நான்கு வகை உணர்வுகளும் திருத்தூதர்களின் உள்ளத்து வெறுமையின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்த வெறுமைக்கு மாற்றாக இயேசு முன்வைப்பது அமைதி.

'அமைதி' ('எய்ரேனே' - 'ஐரின்' என்ற பெயர் இதிலிருந்தே வருகிறது!) என்ற வார்த்தையை யோவான் இங்கேதான் தன் நற்செய்தியில் முதன்முதலாகப் பயன்படுத்துகிறார் (காண்க. 20:19, 21, 26). யூதர்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்தி விடைபெறும்போது 'ஷலோம்' ('அமைதி') என்று சொல்வர். ஆக, இயேசுவின் பிரியாவிடை உரையில், 'சரி போய்ட்டு வர்றேன்' என்ற பொருளை இது மேலோட்டமாகக் காட்டினாலும், இதற்கு ஆழமான பொருளும் இருக்கிறது.

அது என்ன ஆழமான பொருள்? முதலில், இயேசு அமைதியை 'தருகின்றார்.' ஆக, இது ஒரு கொடை. திருத்தூதர்கள் தங்களின் நற்செயலால் பெறும் ஊதியம் அல்லது வெகுமதி அல்ல இது. இதை இயேசுவே கொடையாகத் தருகின்றார். இரண்டாவதாக, 'அமைதியை தருகிறேன்' என்று சொல்லாமல், 'என் அமைதியைத் தருகிறேன்' என்கிறார் இயேசு. தன் கதவருகில் காத்திருக்கும் மரணமும் அந்த அமைதியை பறித்துவிட முடியாது.  மூன்றாவதாக, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்' என்ற வாக்கியத்தை, 'நாங்கள் அவருடன் குடிகொள்வோம்' என்ற வாக்கியத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ஆக, 'அமைதி' என்பது வெறும் 'ஷலோம்' என்னும் வார்த்தை அல்ல. மாறாக, தந்தை-மகன்-தூய ஆவியானவரின் ஒருங்கிணைந்த பிரசன்னம் மற்றும் உடனிருப்பு. ஆக, இறைவனே அமைதி. ஆகையால்தான், 'நான் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்கிறார் இயேசு.

யோவான் நற்செய்தியில் 'உலகம்' என்பது 'கடவுளுக்கு எதிரான எல்லாவற்றின் ஒட்டுமொத்த உருவகம்.' உங்களுக்கு அமைதி தருவது எது? - என்று நான் உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? 'இயற்கை காட்சி,' 'புதிய இடம்,' 'மௌனம்,' 'சலனமற்ற நிலை,' 'மெல்லிசை,' 'பறவைகளின் கீச்சு,' 'குழந்தைகளின் கொஞ்சல்,' 'நண்பர்' என நீங்கள் நிறைய சொல்லலாம். அல்லது, 'போர் இல்லாத நிலை,' 'தன்னலமில்லாத நிலை,' 'வன்முறை இல்லாத நிலை' என்றும் சொல்லலாம். இயேசுவின் காலத்தில் உரோமையர்கள், 'உரோமையின் அமைதி' (பாக்ஸ் ரொமானா) என்ற ஒரு கருதுகோளை வைத்திருந்தனர். அதாவது, உரோமையர்களின் காலனிக்குள் யாரும் எங்கும் பயணம் செய்யலாம். குற்றங்கள் தண்டிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும். 

உலகம் தரும் அமைதியை, (அ) அரசியல் அமைதி, (ஆ) உறவு அல்லது நட்பில் அமைதி, (இ) உள்மன அமைதி அல்லது உளவியல் அமைதி என மூன்று கட்டங்களுக்குள் அடக்கிவிடலாம். இவற்றில் எந்த அர்த்தத்தையும் இயேசுவின் 'அமைதி' குறிக்கவில்லை. ஏனெனில் இந்த மூன்று வகை அமைதியும் நீடிக்க இயலாதவை. ஒரு அரசு மற்ற அரசோடு போர் தொடுத்தால் அரசியல் அமைதி குலைந்துவிடும். நண்பர்களுக்குள் புரிதல் குறையும்போது உறவில் அமைதி போய்விடும். சின்ன எதிர்பார்ப்பு-ஏமாற்றம்கூட நம் உள்மன அமைதியைக் குலைத்துவிடும். இவ்வாறாக, உலகம் தரும் அமைதி, 'நீடிக்க இயலாததது,' 'குறையுள்ளது,' 'ஏமாற்றக்கூடியது.' இயேசுவின் அமைதி நீடித்திருக்கக் கூடியது, நிறைவானது, ஏமாற்றம் தராதது. எப்படி? இயேசுவின் அமைதி ஒரு அனுபவம். எப்படிப்பட்ட அனுபவம்? இறைவனே குடியிருக்கும் அனுபவம். அந்த அனுபவம் அன்பு, மகிழ்ச்சி, மற்றும் வார்த்தையைக் கேட்டலில் அடங்கியிருக்கிறது. 

ஆக, தன் பிரிவால் ஏற்படும் வெறுமையை தன் தந்தை-மகன்-தூய ஆவியார் என்னும் உடனிருப்பு கொண்டு வரும் அமைதியால் நிறைவு செய்கிறார் இயேசு.

இவ்வாறாக, முதல் வாசகத்தில், 'நம்பிக்கையா? அல்லது விருத்தசேதனம் என்னும் செயலா?' என்ற கேள்வி உருவாக்கிய வெறுமை தூய ஆவியாரின் செயல்பாட்டால் களையப்பட்டு, சீடர்களின் மனத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரப்பப்படுகிறது. இரண்டாம் வாசகத்தில், நகரில் கோவில் இல்லாத வெறுமையை ஆட்டுக்குட்டி நிரப்பி கடவுளின் உடனிருப்பை மக்களுக்குத் தருகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பிரிவு கொண்டுவரும் வெறுமை, 'நாங்களும் அங்கு வந்து குடிகொள்வோம்' என்று கடவுளின் பிரசன்னத்தால் நிரப்பப்படுகிறது.

இவற்றை நாம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது?

1. கருத்து வேறுபாட்டிலிருந்து ஒருமைப்பாட்டிற்கு

இன்றைய முதல் வாசகத்தில் நாம் காணும் புறவினத்தார்கள் வெறுமனே நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு சரணாகதி அடையவில்லை. 'இது எப்படி? அது எப்படி?' என்று கேள்வி எழுப்புகின்றனர். அந்தக் கேள்வியே தொடக்கத் திருச்சபையின் திருப்புமுனையாக அமைகிறது. ஆக, கருத்து வேறுபாடுகள் வருவதில் தவறில்லை. அதே வேளையில், கருத்து வேறுபாடு எழும்போது அதை ஏற்று அதற்கான ஒருமைப்பாட்டு வழியைக் கண்டுபிடித்தல் தலைவர்களின் கடமையாக இருக்கிறது.

2. கோவில் இல்லா நகரம்

கடவுள் நம்மைவிட்டுப் போய்விடுவதில்லை. அவர் காணக்கூடிய குத்துண்ட ஆட்டுக்குட்டியாக நம் முன் நிற்கிறார். ஆக, சிதைக்கப்படும், ஒடுக்கப்படும் மனிதத்திலும் அவர் இருக்கிறார். நம் வெறுமை உணர்வை நாம் ஏற்றுக்கொள்ளும்போது அதை எதிர்ப்பதற்கான வல்லமை நமக்குப் பிறக்கிறது. ஆக, குத்துண்டு கிடக்கும் ஆட்டுக்குட்டியே வெற்றி பெறும். கோவில் இல்லா நகரமே ஒளி பெறும்.

3. நாங்கள் அவருடன் குடிகொள்வோம்!

நம் வெறுமை நீங்க வேண்டுமெனில் அவர் குடிகொள்ள நாம் இடம் தர வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும். வார்த்தைகள் கேட்க முதலில் நம் உள்ளம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதியை நாம் அடையும்போது அமைதியைப் பெற்றுவிடுகிறோம்

இறுதியாக,

நம் தனிநபர், குடும்பம், சமூகம் என்னும் தளங்களில் நாம் உணரும் அநாதை உணர்வை அமைதி உணர்வாக மாற்றும் ஆற்றல் இறைவனிடம் உண்டு. தூரமாகத் தெரியும் நேரத்தில்தான் அவர் நம் அருகில் இருக்கிறார். யூதா, சீலா என்னும் காணக்கூடிய தூதர்கள் வடிவிலும், தூய ஆவியார் என்னும் காண இயலாத வடிவிலும் அவர் இன்றும் வருகிறார் நம் வெறுமையை நிரப்ப!


Friday, May 20, 2022

இரவில் காட்சி

இன்றைய (21 மே 2022) முதல் வாசகம் (திப 16:1-10)

இரவில் காட்சி

திருத்தூதர் பணிகள் நூலை வாசிக்கும்போதெல்லாம் தொடக்கத் திருஅவையில் இருந்த உயிரோட்டத்தை மிக எளிதாக நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று, எபேசு திருஅவையின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட திமொத்தேயு என்னும் இளவல் பவுலோடு பணியில் கைகோர்க்கின்றார். அவருடைய தாய் யூதப் பெண், தந்தையோ கிரேக்கர். இருந்தாலும், மற்ற யூதர்களை மனத்தில் கொண்டு அவருக்கு விருத்தசேதனம் செய்விக்கின்றார். இங்கே நாம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். புறவினத்தார் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என எருசலேம் வரை சென்று வாதிட்ட பவுல், இங்கே திமொத்தேயுவுக்கு ஏன் விருத்தசேதனம் செய்விக்கின்றார்? மிகவும் எளிதான பதில். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்காக பவுல் இந்த முடிவு எடுக்கின்றார். இதுதான் மனம் சார்ந்த முடிவு. பவுல் தன் பணியில் அறிவுசார்ந்த விதத்தில் மட்டுமே செயல்படவில்லை. தேவையற்ற விவாதங்களையும் சொற்போர்களையும் தவிர்ப்பதற்காக தன் உறுதிப்பாட்டோடு சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கின்றார். இதுதான் மேய்ப்புப் பணி அறிவு. பணிக்கும் பணியின் மக்களுக்கும் ஏற்றவாறு தன் திட்டங்களையும் செயல்களையும் மாற்றிக்கொள்வது.

இரண்டாவது நிகழ்வு, பவுல் காண்கின்ற காட்சி.

- பவுல் அங்கு இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மாசிதோனியர் ஒருவர் வந்து நின்று, 'நீர் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்' என்று வேண்டினார். இக்காட்சியைப் பவுல் கண்டதும், நாங்கள் மாசிதோனியருக்கு நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்துள்ளார் என எண்ணி, அங்குச் செல்ல வழி தேடினோம் -

இந்நிகழ்வை இப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா. இதற்கு முன்னதாக, 'ஆசியாவில் (ஆசியாக் கண்டம் அல்ல!) இறைவார்த்தையை அறிவிக்காதவாறு தூய ஆவியார் தடுக்கவே' என்றும் பதிவிடுகின்றார் லூக்கா.

திருத்தூதர்களும் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களும் தூய ஆவியாரால் முழுவதுமாக இயக்கப்படுகின்றனர். ஆவியின் செயல்பாட்டை எளிதாக உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயலாற்றுகிறார்கள். பவுல் காட்சி கண்டாலும் அந்தக் காட்சியைக் கடவுளின் கண் கொண்டே பார்க்கின்றார். 

திருத்தூதர் பணிகள் நூலில் கடவுள் தன்னைப் பல்வேறு நிலைகளில் நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துகின்றார்: காட்சி, கனவு, உள்ளுணர்வு, உருவகம், மற்றவர்களின் வார்த்தைகள். கடவுள் எப்படித் தன்னை வெளிப்படுத்தினாலும் அவற்றில் கடவுளைக் காண அவர்கள் கற்றிருந்தனர். இதுதான் முக்கியம்.

இன்று இந்தப் பிரபஞ்ச உள்ளுணர்வு நம்மில் வேகமாக மறைந்து வருகின்றது. அமைதியிலும், சலனமற்ற நிலையிலும்தான் பிரபஞ்சத்தோடு நம் உள்ளுணர்வை இணைத்துக்கொள்ள முடியும். இன்று நம்மைச் சுற்றி எழும் சத்தங்கள், நம் உள்ளத்தின் பயங்கள், கோபம், குற்றவுணர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவை உள்ளுணர்விலிருந்து நம்மைத் தள்ளி வைக்கின்றன. அல்லது உள்ளுணர்வை நாம் அறியாத வண்ணம் செய்துவிடுகின்றன.

கடவுள் இன்றும் நம் உள்ளுணர்வு வழியாக நம்மைத் தொடர்ந்து உந்தித் தள்ளிக்கொண்டிருக்கின்றார். அதைச் சரியாகக் கண்டுகொள்ள சலனங்கள் தவிர்க்க வேண்டும்.

பவுல் தன்னுடைய விருப்பு மற்றும் வெறுப்புகள் அனைத்தையும் கடந்தவராகவும், கடவுள் மற்றும் கடவுள் பணி மட்டுமே தன் இலக்கு என்று உணர்ந்தவராகவும் இருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பணியாளர் தலைவரை விடப் பெரியவர் அல்லர்' என எச்சரிக்கின்றார் இயேசு.

பவுல் தன்னை ஒரு பணியாளர் என்றும், கடவுளைத் தலைவர் என்றும் எப்போதும் மனத்தில் இருத்தி, அந்த வரையறையில் உறுதியாக இருந்தார். வரையறை தெளிவானால் சலனம் குறையும். சலனம் குறைய உள்ளுணர்வு உரைக்கும்.


Tuesday, May 17, 2022

பிரச்சினை

இன்றைய (18 மே 2022) முதல் வாசகம் (திப 15:1-6)

பிரச்சினை

'பிரச்சினை என்பது தயிர் போல. அதை உடனடியாகக் கவனிக்க வேண்டும். அதை அப்படியே விட்டுவைத்தால் அதன் புளிப்பு கூடிக்கொண்டே போகும்' 

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

'பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி நேரம். நேரம் ஆக ஆக பிரச்சினைகள் தங்களையே தீர்த்துக்கொள்ளும். ஆறப்போட்டால் மாற்றம் பிறக்கும்.'

பிரச்சினைகளை இப்படிக் கையாளுபவர்கள் சிலர்.

இன்றைய முதல் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். புதிய நம்பிக்கையை எற்றுக்கொண்ட புறவனித்தார், யூதர்கள் போல விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டும். அதாவது, ஒருவர் யூதராக மாறினால்தான் கிறிஸ்தவராக மாற முடியும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது. 

இதைச் சொன்னவர்களுக்கும் பவுலும் பர்னபாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகிறது. ஏனெனில், பவுலுக்கும் பர்னபாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை. இவர்கள் இருவருமே தாராள உள்ளத்தினர். தங்களுடைய பார்வையை விரித்துப் பார்ப்பவர்கள். ஆக, உடலின் ஓர் உறுப்புச் சிதைவு இவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

வாழ்வில் நாம் இப்படி இருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். 'இதுல என்ன இருக்கு!' என்று கேட்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

மேலும், இந்த இடத்தில் பவுல் மற்றும் பர்னபாவின் பரந்த சிந்தனை நமக்கு வியப்பு தருகிறது. மேலாண்மையியலில், 'பெட்டிக்கு வெளியே சிந்திப்பது' என்னும் ஒரு சொல்லாடல் உண்டு. அதாவது, புதிய கருத்தைச் சொல்வது அல்லது பரந்த மனப்பான்மை கொண்டிருப்பது. பவுல் மற்றும் பர்னபா மட்டும் இப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை கொண்டிராவிடில், நாமும் இன்று விருத்தசேதனம் செய்த பின்னரே கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும். அல்லது முதலில் யூதர்களாக மாறி, பின்னர்தான் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க முடியும்.

இன்னொன்றையும் இங்கே கவனிக்க வேண்டும். பிரச்சினையை நேருக்கு நேரான சொற்போர் அல்லது விவாதமாக முன்னெடுக்காமல் பிரச்சினைக்கான முழுத் தீர்வை அவர்கள் காண விரும்புகின்றனர். பல நேரங்களில் நாம் நேருக்கு நேர் சொற்போர் செய்து நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகின்றோம். இன்று சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட செயல் மிகவும் அதிகமாக உள்ளது. 

குழப்பம் நீடிக்கவே உடனடியாக அவர்கள் எருசலேம் பயணம் செய்து இப்பிரச்சினையை திருத்தூதர்கள் மற்றும் மூப்பர்களிடம் கொண்டு செல்கின்றனர். அதாவது, தங்கள் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு இப்பிரச்சினையைத் தீர்க்க நேரம் எடுத்து, சிரமம் எடுத்துப் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஆக, தாங்களாகவே தீர்த்தாலன்றி பிரச்சினை தீராது என்பது ஒரு பக்கம். அதே வேளையில், தாங்கள் விரும்பும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால் பிரச்சினையை உடடினயாக தங்களைவிட மேலிடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.

இங்கே இவர்களுடைய பெருந்தன்மையையும் கவனிக்க வேண்டும். 'நான்தான் நற்செய்தி அறிவித்தேன். நான்தான் புதிய நம்பிக்கையை ஊட்டினேன். எனவே நான்தான் இவர்களின் தலைவர்' என்று உரிமை கொண்டாடாமல், தங்கள் பணியிலிருக்கும் பலனிலிருந்து ஒதுங்கி நிற்கின்றனர். நற்செய்தி அறிவித்தலில் உள்ள கடமையைச் செய்தார்களே தவிர, அதில் உள்ள உரிமையைக் கொண்டாடவில்லை.

எருசலேம் சென்ற பர்னபா மற்றும் பவுலை அனைத்துச் சகோதரர்களும் வரவேற்கின்றனர். தொடக்கத் திருஅவையில் சகோதர உறவு ஒன்றே மேலோங்கி நின்றது. அங்கு மொழி, இனம் என எந்தப் பாகுபாடும் இல்லை.

பிரச்சினை உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தங்கள் நம்பிக்கையாளர்கள் தேவையற்ற பிரச்சினைகள் என்னும் சுமைகளைச் சுமக்கக் கூடாது என்பதற்காக, சுமைகளைச் சுமக்க திருத்தூதர்கள் முன்வருகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 15:1-8), திராட்சைக் கொடி - கிளை உருவகம் தருகிறார் இயேசு. தன்மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் கிளையை சுமையாகப் பார்ப்பதில்லை கொடி. 

ஆக, இன்று நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் எப்படி கையாளுகிறோம்?

பிரச்சினை மற்றவர்களுக்கு என்று நினைக்கும்போது அதை ஏற்கும் பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறதா?

பொறுப்புணர்வு கூடக் கூட நமக்கு ஆற்றல் கூடும். 

நமக்கு ஆற்றல் கூடக் கூட பிரச்சினைகள் எளிதாகத் தீர்க்கப் பெறும்.

Sunday, May 15, 2022

கட்டளைகளைக் கடைப்பிடித்தல்

இன்றைய (16 மே 2022) நற்செய்தி (யோவா 14:21-26)

கட்டளைகளைக் கடைப்பிடித்தல்

இயேசுவின் பிரியாவிடை உரையில் பல கருத்துகள் திரும்பத் திரும்ப வருகின்றன. சில விடயங்களின் பொருள் நமக்கு நேரிடையாக விளங்குவதில்லை. அன்புக் கட்டளை கொடுக்கின்ற இயேசு, தொடர்ந்து அதைப் பற்றியே பேசுகின்றார்.

'நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்' என்று சொல்கின்ற இயேசு தன் சீடர்களுக்கு அன்புக் கட்டளை வழங்குகின்றார். ஆனால், தொடர்ந்து, 'என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர்' எனப் போதிக்கிறார். 'கட்டளைகள்' என இயேசு பன்மையில் குறிப்பிடுவது எது? மேலும், 'நான் உங்கள்மீது அன்பு கூர்வது போல நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கூருங்கள்' எனச் சொல்கின்ற இயேசு, இங்கே, 'என் மீது அவர் அன்புகூர்ந்துள்ளார்' என அன்பின் திசையைத் தன் பக்கம் திருப்புகின்றார். பின்னர் தொடர்ந்து, 'அன்பு செய்யும் ஒருவரே நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்' என மொழிகின்றார். 

அன்பு, கட்டளை, வார்த்தை, கீழ்ப்படிதல், கடைப்பிடித்தல் என நகரும் இந்த நற்செய்தி வாசகப் பகுதியை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

'கட்டளைகள்' என்பதை 'வார்த்தைகள்' என எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பட்டியலிடுகிறது இந்த வாசகப் பகுதி:

ஒன்று, இதன் வழியாக நாம் கடவுளை அன்புகூர்கிறோம்.

இரண்டு, கடவுள் நம்மில் வந்து தங்கும் அளவுக்கு நம்மைத் தயாராக்குகிறோம்.

மூன்று, தூய ஆவியாரை உள்ளத்தில் பெறும் நாம் அவரால் கற்றுக்கொடுக்கப்படுகிறோம்.

இயேசுவின் விண்ணேற்றத் திருவிழா நெருங்கி வருகின்ற வேளையில், வாசகங்கள் அதற்கான தயாரிப்புக்கு நம்மை இட்டுச் செல்கின்றன என்பதை மனத்தில் கொள்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் (திப 14:5-18) லிஸ்திராவில் கால் ஊனமுற்றிருந்த ஒருவருக்கு நலம் தருகின்ற பவுல் மற்றும் பர்னபாவைக் காண்கின்ற மக்கள், 'தெய்வங்களே மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன' என்று சொல்லி, அவர்களுக்குப் பலியிட முயற்சி செய்கின்றார்கள். அவர்களுடைய புரிதலைத் திருத்துகின்ற பவுல், 'பயனற்ற பொருள்களை விட்டுவிட்டுக் கடவுளிடம் திரும்புங்கள்' என அறிவுறுத்துகின்றார்.

கொஞ்ச நேரம் நாம் அமர்ந்து யோசித்துப் பார்த்தால், கடவுளிடம் திரும்புவதைத் தவிர மற்ற அனைத்துமே பயனற்றவை என்றே தோன்றுகின்றது.

இன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ள நம் மண்ணின் தலைமகன் தேவசகாயம், கடவுளிடம் திரும்புவது ஒன்றே தேவை என உணர்ந்தவர். பயனற்றவற்றை அடையாளம் காணவும், அவற்றை விட்டுவிடவும் நிறையத் துணிவும் மனத்திடமும் விடாமுயற்சியும் தேவை. இவற்றை நம் புனிதர் நமக்குக் கற்றுத் தருவாராக!


Saturday, May 14, 2022

நிறைவேற்றுதல்!

பாஸ்கா காலம் 5ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 14:21-27 II. திருவெளிப்பாடு 21:1-5 III. யோவான் 13:31-35

நிறைவேற்றுதல்!

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). ஆங்கிலத்தில், 'கேட்ச் 22 கட்டம்' என்ற ஒரு சொலவடை உண்டு. அதன் பொருளை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த அருள்பணியாளர் ஒருவரின் முதல் நன்றித் திருப்பலியில் ஒரு மறையுரை கேட்டேன். மறையுரை வைத்த அருள்பணியாளர் புதிய அருள்பணியாளருக்கு அறிவுரை சொல்வது போல தன் மறையுரையைக் கட்டமைத்திருந்தார்: 'அன்பிற்கினிய அருள்பணியாளரே, வாழ்த்துக்கள். புதிய ஆடை, புதிய திருவுடை, புதிய திருப்பலிப் பாத்திரம், புதிய புத்தகம், புதிய கைக்கடிகாரம், புதிய காலணிகள் என்று ஜொலிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நீங்க இன்று எங்க போனாலும் உங்களுக்கு பொன்னாடை போர்த்துவாங்க! உங்க உள்ளங் கைகளை முத்தமிடுவார்கள். உங்களைக் கட்டித் தழுவுவார்கள். உங்கள் கைகளை அன்பளிப்புக்களால் நிரப்புவார்கள். உங்களை முதல் இருக்கையில் அமர வைப்பார்கள். 'உங்களுக்கு என்ன வேண்டும்' என்று கேட்டு பரிமாறுவர். இது வெறும் 21 நாள்களுக்குத்தான். 22ஆம் நாள் வரும். நீங்க பழசு ஆயிடுவீங்க. அன்றுதான் உங்க அருள்பணி வாழ்க்கை தொடங்கும். 'இதுதான் வாழ்க்கையா' என்று புலம்ப ஆரம்பிப்பீங்க. 25 வருடங்களுக்கு உங்க பக்கத்துல யாரும் வர மாட்டாங்க. இதே கூட்டம் உங்களுடைய வெள்ளி விழாவுக்கு வரும். 'உங்கள ஆஹா ஓஹோ என்று சொல்வாங்க!' கூட்டம் மறுபடி காணாமல் போகும். காலம் அனுமதித்தால் பொன்விழா கொண்டாடுவீர்கள். நீங்க இன்று எப்படி உங்க பணியைத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, அந்த 22ஆம் நாளில் நீங்க என்ன முடிவெடுத்து எப்படி உங்க பயணத்தை முடிக்கப் போறீங்களோ அதுதான் முக்கியம்.'

நிற்க.

அருள்பணி நிலையில் மட்டுமல்ல. திருமண வாழ்விலும் 'கேட்ச் 22 கட்டம்' உண்டு. கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு உள்ள ஈர்ப்பு குறையும் நாள் 22ஆம் நாள். அந்த 22ஆம் நாளை வெல்கிறவரே வெற்றியாளர். அதையும் தாண்டி இறுதிவரை 'திராட்சை இரசத்தை வைத்திருப்பவரே' மாபெரும் வெற்றியாளர்.

அருள்பணி, திருமணம் என்று பெரிய அளவில் வாழ்க்கை நிலையைத் தொடங்கினாலும், தொழில், பயணம், படிப்பு என சிறிய அளவில் என்றாலும் தொடங்கும் பலவற்றை நாம் நிறைவுசெய்வதில்லை. ஒன்றை நாம் நிறைவு செய்வதில்தான் அதன் பயன்பாடு தெரிகிறது.

சிலவற்றின் நிறைவு வேகமாகத் தெரிந்துவிடும். சிலவற்றின் நிறைவு தெரிய காலமாகும். தாயின் கருவறையில் உருவாகும் குழந்தை நிறைவு பெற ஏறக்குறை 9 முதல் 10 மாதங்கள் ஆகின்றன. நம் வீட்டில் திடீரென ஒரு பைப் உடைந்துவிடுகிறது. உடனடியாக ப்ளம்பரை அழைக்கிறோம். அவர் வந்த சில நிமிடங்களில் உடைப்பு சரியாகிவிடுகிறது. தண்ணீர் தடையின்றி வருகிறது. அவரின் பணி ஒரு நாளின் இறுதியில் கண்டுவிடுகிறோம். காய்ச்சல் அடிக்கிறது. மருத்துவரிடம் போகிறோம். ஊசி போட்டு மாத்திரை கொடுக்கிறார். காய்ச்சல் நீங்குகிறது. நம் உடல்நலம் நிறைவு பெறுகிறது. ஆக, ஒரு நாளில் மருத்துவரின் வேலை நிறைவுபெறுகிறது. ஆசிரியரின் வேலையின் நிறைவு பத்து மாதங்கள் கழித்து மாணவர்கள் எழுதும் தேர்வில் கிடைக்கிறது.

நிறைவுபெறும் எல்லாமே நமக்கு ஒரே வகையான உணர்வையும் தருவதில்லை. சிறையில் தன் தண்டனை நிறைவுபெறவதை எண்ணுகின்ற கைதி மகிழ்கிறார். ஆனால், நமக்குப் பிடித்தவர் நம்மோடு இருந்துவிட்டு நம்மை நகரும் நேரம் நிறைவுறும்போது நம் மனம் வருந்துகிறது. தொடங்கும் எல்லாம் நிறைவு பெற வேண்டும் என்பதே வாழ்வின் நியதி. நான் இந்த மறையுரையை எழுதத் தொடங்குகிறேன். அதை நிறைவு செய்யும்போதுதான் அது வாசிப்பவருக்குப் பலன் தரும். நிறைவுபெறாத எதுவும் நம்மைப் பாதிப்பதில்லை. சில நேரங்களில் சில நிறைவேறாததால் நாம் ஏங்குகிறோம். சில நிறைவுபெறாமல் செய்கின்றோம்.

கடவுளின் செயல் நிறைவுறுவதை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதுபோல நாமும் நம் வாழ்வில் பணிகளை நிறைவேற்ற நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 14:21-27) பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பயணம் நிறைவு பெறுவதை லூக்கா பதிவு செய்கின்றார். பிசிதியா அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியா, லீஸ்திராவிலிருந்தும் தொழுகைக்கூடத் தலைவர்கள் மற்றும் மக்களால் துரத்திவிடப்பட்ட திருத்தூதர்கள் தெர்பைக்கு வருகிறார்கள் ஆனால், அங்கே அவர்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மேலும், பல புறவனித்தார்கள் பதிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்களை 'உறுதிப்படுத்தியபின்' தாங்கள் புறப்பட்ட இடமான (காண். திப 13:1-3) அந்தியோக்கியா திரும்புகிறார்கள். தாங்கள் எவ்வழி நடந்து வந்தார்களோ, அதே வழியில் திரும்பிச் செல்கிறார்கள். தங்கள் பாதச்சுவடுகளைத் தாங்களே பின்பற்றுகிறார்கள். சில இடங்களில் அவர்கள் எதிர்ப்புக்களையும் ஆபத்துக்களையும் சந்திக்க நேர்ந்தாலும் துணிந்து செல்கிறார்கள். ஏனெனில், தாங்கள் ஏற்படுத்திய குழுமங்களை 'ஊக்கப்படுத்துவம், உறுதிப்படுத்துவதும் அவசியம்' என அவர்கள் அறிந்திருந்தனர். புதிய நம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய செய்தி எல்லாம், 'நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்றே இருந்தது. புதிய நம்பிக்கையாளர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று அவர்களுக்கு போலியான ஆறுதலைக் கொடுக்கவில்லை திருத்தூதர்கள். புதிய நம்பிக்கைக்கு எதிர்ப்பு இருக்கும் என்று அவர்கள் தெளிவுபட எடுத்துச் சொன்னார்கள். மேலும், தாங்கள் செல்கின்ற இடங்களில் தங்கள் பணியைத் தொடர்வதற்கான அடிப்படையான தலைவர்களையும் அவர்கள் நியமித்தார்கள். அவர்கள் அந்தியோக்கியா வந்தபோது, 'பணியைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாகவும், கடவுளே தங்கள் வழியாக அனைத்தையும் செய்தார்' என்றும் அவர்களுக்குச் சொல்கிறார்கள். இவ்வாறாக, தாங்கள் நிறைவு செய்த அனைத்திலும் கடவுளின் கைவிரலைக் கண்டனர் பவுலும் பர்னபாவும்.

பவுல் மற்றும் பர்னபாவின் முதல் தூதுரைப் பணி நிறைவு கிறிஸ்தவம் என்னும் புதிய நம்பிக்கை வேகமாகப் பரவி வளர்வதற்கு வித்திட்டது. தாங்கள் வெறுத்து ஒதுக்கப்பட்டாலும், நிராகரிக்கப்பட்டாலும், ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், திருத்தூதர்கள் துணிந்து மேற்கொண்ட பணி கிறிஸ்தவத்தின் கதவுகளைப் புறவினத்தாருக்கு திறந்துவிட்டது. அவர்களின் நிறைவு புதிய தொடக்கமானது.

ஆக, எதிர்ப்பு, நிராகரிப்பு, ஆபத்து என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து தங்கள் முதல் தூதுரைப் பயணத்தை நிறைவு செய்கின்றனர் பவுலும் பர்னபாவும்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். திவெ 21:1-5) யோவான் கண்ட இறுதி வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. உலக முடிவில் கடவுள் 'நிறைவேற்றும்' செயலைக் காட்சியில் காண்கிறார் யோவான். நான்கு அடையாளங்களை இங்கே பார்க்கிறோம். முதலில், 'புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும்' காண்கிறார் யோவான். 'இதோ அனைத்தையும் புதியன ஆக்குகிறேன்' என்று சொல்லும் கடவுள் முன்னைய விண்ணத்தையும் மண்ணகத்தையும் புதியதாக ஆக்குகின்றார். இரண்டாவதாக, 'கடல் இல்லாமல் போயிற்று.' இது கடவுள் தீமையை வெற்றிகொண்டதை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில், 'கடல்' என்பது 'தீமை அல்லது பேயின்' உருவகமாகப் பார்த்தனர் இஸ்ரயேல் மக்கள். கடலின் குழப்பமும்,  ஆழமும், அலைகளின் கூச்சலும் கடலைக் கடவுளின் எதிரி என எண்ண வைத்தது. ஆக, தீமையின் துளி கூட இல்லாவண்ணம், கடல் அங்கே இல்லாமல் போகிறது. மூன்றாவதாக, 'புதிய எருசலேம் இறங்கி வருகிறது.' இத்திருநகர் மணமகள் என உருவகிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், எருசேலம் கடவுளின் பிரசன்னத்தோடு தொடர்புடையதாக இருந்தது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள உறவு திருமண உடன்படிக்கை உறவாகப் பார்க்கப்பட்டது. கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள நெருக்கத்தையே திருமணம் என்னும் அடையாளம் காட்டுகிறது. ஆக, இதே நெருக்கத்தோடு 'கடவுள் அவர்கள் நடுவே குடியிருப்பார்.' நான்காவதாக, 'சாவு இராது. துயரம் இராது.' இது உலகத்தின் முகத்திலிருந்தே கண்ணீர் துடைக்கப்படும் எனச் சொல்கிறது. 

வேதகலாபனை, துன்பங்கள், அச்சுறுத்தல்கள் எனத் துயருற்ற கடவுளின் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது இக்காட்சி. கடவுள் அனைத்தையும் நன்மையாக நிறைவுறச் செய்வார் என்று சொல்வதன் வழியாக, இப்போதுள்ள அனைத்தும் ஒருநாள் நிறைவு பெறும் என்றும், இப்போது காண்பதும் அனுபவிப்பதும் நிறைவு அல்ல என்றும் சொல்கிறது இக்காட்சி. மேலும், துன்புறும் அனைவரும் கடவுளோடு திருமண உறவில் இணைவர். கடவுள் எல்லாவற்றையும் நிறைவு செய்துவிட்டார். மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த நிறைவை அடைவதற்கு எதிர்நோக்கோடு காத்திருப்பது மட்டும்தான். 

ஆக, தான் செய்த படைப்பு வேலையை நிறைவு செய்யும் கடவுள் அந்த நிறைவை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறார். இறைமக்கள் அனுபவிக்கும் வேதகலாபனை என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' அவர்கள் கடக்க கடவுள் அவர்களோடு உடனிருக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 13:31-35) இயேசுவின் இறுதி இராவுணவு பிரியாவிடை உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அப்பத்தைப் பெற்றுக்கொண்ட யூதாசு விருந்திலிருந்து வெளியேறியவுடன், 'இப்போது மானிட மகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்' என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில், 'மாட்சி பெறுதல்' அல்லது 'மாட்சிப்படுத்துதல்' என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, மற்றும் விண்ணேற்றத்தைக் குறிக்கிறது. தன்னுடைய மாட்சியால் கடவுளும் மாட்சி பெறுகிறார் என்று சொல்வதன் வழியாக, தன்னுடைய செயல் அனைத்தும் கடவுளின் திருவுளம் மற்றும் நோக்கத்தோடு இணைந்தது என்றும் சொல்கிறார் இயேசு. கடவுளுக்கும் இயேசுவுக்கும் நெருக்கமான இந்த உறவு உலகிற்கு வாழ்வு கொடுக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக இயேசு மீட்புப்பணியை நிறைவேற்றுகிறார்.

மேலும், தான் நிறைவேற்றும் பணியை தன்னுடைய சீடர்கள் இவ்வுலகில் 'புதிய அன்புக் கட்டளை' வழியாகத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.' இவ்வாறாக, சீடத்துவத்தின் அடையாளமாக அன்பு செலுத்துவதை முன்வைக்கிறார் இயேசு. 

ஆக, இயேசு தன்னுடைய பாடுகள் என்னும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து மாட்சியடைகின்றார். சீடர்கள் தங்களுடைய அன்பு செலுத்துதல் வழியாக நாளும் 'கேட்ச் 22 கட்டத்தை' கடந்து இயேசுவின் பணியை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் பவுலும் பர்னபாவும் தங்களின் முதல் தூதுரைப்பயணத்தை அனைவருக்கும் ஊக்கம் தந்து நிறைவேற்றுகின்றனர். இரண்டாம் வாசகத்தில் கடவுள் தன்னுடைய படைப்பை புதிய விண்ணகம்-மண்ணகம் என நிறைவேற்றியுள்ளதால் நம்பிக்கையாளர்கள் அதை நோக்கி நகர்கின்றனர். நற்செய்தி வாசகத்தில் தன் மீட்புச் செயலை நிறைவேற்றும் இயேசு, அன்பால் இவ்வுலகில் அது சீடர்கள் வழியாக தொடர்ந்து நிறைவேற்றப்படவும் வேண்டும் என்கிறார். கடவுளின் நிறைவுச்செயல்கள் அனைத்திற்காகவும் நன்றி கூறும் திருப்பாடல் ஆசிரியர் (பதிலுரைப் பாடல்), 'ஆண்டவர் தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்' (145:13) என்கிறார்.

இன்று நம்முடைய பணிகளை நாம் 'நிறைவேற்றுவதற்கு' இறைவாக்கு வழிபாடு தரும் பாடங்கள் எவை? 

இந்த வாரம் நாம் பெரிய பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடப்போவதில்லை. சண்டை இடும் இரு நாடுகளைச் சேர்த்துவைக்கப்போவதில்லை. அணு ஆயுதங்களை ஒழிக்கப்போவதில்லை. ஊழல், இலஞ்சம் போன்றவற்றை துடைத்துப்போடப்போவதில்லை. நம்மை யாரும் சிலுவையில் அறையப்போவதில்லை. வேதகலாபனைக்கு உள்ளாக்குவதில்லை. கோவிலிலிருந்து வெளியே தள்ளிவிடுவதில்லை. ஆனால், சின்னச் சின்ன விடயங்கள் செய்வோம். புதிய தொழில் தொடங்குவோம். நண்பர்களைச் சந்திப்போம். மருத்துவமனைக்குச் செல்வோம். பயணம் செய்வோம். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது பற்றி யோசிப்போம். புதிய வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவோம். நம் வீட்டு நாய்க்குட்டியை குளிப்பாட்டுவோம். பூனைக்கு பால் சோறு வைப்போம். இவற்றை 'நிறைவேற்றுவதில்தான்' வாழ்வின் நிறைவு இருக்கிறது. இவற்றை எப்படி நிறைவேற்றுவது?

1. 'ஊக்குவித்தல்'

'ஊக்குவித்தல்' என்றால் உற்சாகம் கொடுத்தல். நமக்கும் பிறருக்கும். நாம் தொடங்கும் பலவற்றைப் பாதியில் நிறுத்தக் காரணம் ஊக்கக்குறைவுதான். 'என்னைக் கொஞ்சம் யாராவது ஊக்கப்படுத்தியிருந்தால் நான் சாதித்திருப்பேன்' என்ற புலம்பல்கள் நம்மில் இருக்கத்தான் செய்கின்றன. எனக்கு நானே ஊக்கம் கொடுப்பதையும், எனக்கு அடுத்திருப்பவர் தளர்ந்துபோகும்போது அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் நான் என் பண்பாகக் கொள்ள வேண்டும். 'மகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது? எப்படி பணம் கட்டுவது?' என புலம்பல் கேட்கிறோமா! 'வாங்க! நான் கூட்டிட்டுப் போறேன். யார்கிட்டயாவது பணம் கேட்போம். எப்படியாவது அடைப்போம்' என்று சொல்வதுதான் ஊக்கம். ஆக, எனக்கு நானே ஊக்கம் கொடுக்கும் போது நான் என் வேலைகளை நிறைவேற்றி, அடுத்தவருக்கு ஊக்கம் கொடுத்து அவரின் வேலை நிறைவுபெற நான் உதவுகிறேன் - பவுல், பர்னபா போல.

2. 'ஒன்றின் முடிவை நினைத்துத் தொடங்குவது'

'முடிவை அல்லது இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குங்கள்' என்கிறார் ஸ்டீபன் கோவே. வெறும் கட்டாந்தரையில் நிற்கின்ற ஒரு ஆர்கிடெக்ட் அந்த இடத்தில் கட்டாந்தரையைப் பார்ப்பதில்லை. ஒரு பெரிய அப்பார்ட்மெண்டை அல்லது மல்டி மாலை காட்சியில் பார்க்கிறார். அப்படிப் பார்ப்பதால்தான் அவரால், 'இங்கே கேட் வரும். இங்கே பார்க்கிங் வரும். இங்கே வீடுகள் வரும்' என்று அவரால் சொல்ல முடிகிறது. ஆக, கல்லூரியில் சேரும்போதே நம்முடைய கான்வொக்கேஷன் நாளை மனதில் வைத்துச் சேர வேண்டும். இதையே இரண்டாம் வாசகத்தில் யோவான் தன்னுடைய குழுமத்திற்குச் சொல்கின்றார். புதிய விண்ணகத்தையும் மண்ணகத்தையும் மனத்தில் வைத்து வாழச் சொல்கின்றார். இது வெறும் கற்பனை என்று நாம் எண்ணக் கூடாது. நாம் காட்சிப்படுத்துவதை பிரபஞ்சம் அப்படியே நமக்குக் கொடுக்கும். ஆக, இறுதியைக் காட்சிப் படுத்துதல் அவசியம். இராபின் ஷர்மா அழகான வாழ்க்கைப் பாடமாக இதைத் தருகிறார்: 'நல்ல வாழ்க்கை வாழனுமா? ரொம்ப சிம்பிள். உங்களுடைய ஃப்யூனரல் ஒரேஷன் (அடக்கத் திருப்பலி உரை) எழுதுங்கள். நான் இறக்கும்போது என்னைப் பற்றி இப்படிச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதை அப்படியே பின்னோக்கி வாழுங்கள். 'இவர் நிறைய மொழிகள் கற்றார்' என்று எழுதுங்கள். மொழிகளைப் படியுங்கள். 'இவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்' என்று எழுதுங்கள். நிறையப் பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.' ஆக, நிறைவை அல்லது முடிவை மனத்தில் வைத்து எதையும் தொடங்குவோம்.

3. 'எல்லாரும் அறிந்துகொள்ள வேண்டும்'

நான் நிறைவுசெய்வது எனக்கும் என் சமூகத்திற்கும் பயன்தர வேண்டும். பிறர் என்னைப் பற்றி அறிய வேண்டும். ஒருவர் வாழ்க்கையிலாவது நான் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் இயேசு தன் சீடர்களுக்குச் சொல்கின்றார். 'நீங்கள் என் சீடர்கள்' என்பது எனக்கும் உங்களுக்குமான ஒன்று அல்ல. மாறாக, அதை மற்றவர்கள் உங்கள் அன்புச் செயலால் அறிய வேண்டும் என்கிறார். சீடத்துவத்திற்கான அடையாளமாக இயேசு மிகச் சிறிய ஒன்றைத் தெரிந்துகொள்கிறார்: 'அன்பு செய்வது.' மேலும், நாம் செய்யும் எல்லா வேலையிலும் அன்பு கலந்து செய்ய வேண்டும். இரண்டு பேர் லெமன் ஜூஸ் செய்கின்றனர். ஒரே மாதிரியான பொருள்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால். சுவை மாறுபடுகிறது. ஏன்? அன்பினால்தான்! நாம் செய்யும் அனைத்திலும் அன்பைக் கலந்தால் நிறைவு இனிமையாகும்.

இறுதியாக,

தொடங்கியது எல்லாம் நிறைவேற வேண்டும். நிறைவேற்றுதலின் பொறுப்பு தொடங்கியவரிடமே இருக்கிறது. அருள்பணியாளர் திருநிலைப்பாட்டுச் சடங்கில், கீழ்ப்படிதல் வாக்குறுதி கொடுத்தவுடன் ஆயர், 'உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் சொவ்வாராக' (பிலி 1:6) என்கிறார். தொடங்குவோம். அவரின் துணையோடு அனைத்தையும் நிறைவேற்றுவோம். தொடங்கும் அனைத்தும் இனிமையாய் நிறைவுறும்!


Friday, May 13, 2022

புனித மத்தியா

இன்றைய (14 மே 2022) திருநாள்

புனித மத்தியா

'மத்தியா' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுளால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள்.  தொடக்கத் திருஅவையில் யூதாசின் இறப்புக்குப் பின்னர், அவருடைய இடத்தை நிரப்புமாறு இருவர் முன்னால் நிறுத்தப்படுகின்றனர்: 'பர்சபா' மற்றும் 'மத்தியா.' இவர்களில் யாரைத் தெரிந்துகொள்வது என்று பார்க்க சீட்டுப் போடுகின்றனர். சீட்டு இவர் பெயருக்கு விழுகிறது.

திருவுளச் சீட்டு எடுத்தல் அல்லது அறிதல் என்பது யூத மரபிலும் இருந்த வழக்கமே. இந்த வழக்கத்தின்படி 'ஊரிம்' மற்றும் 'தும்மிம்' என்னும் இரு கட்டைகள் அல்லது உருளைகளைக் கொண்டு தலைமைக்குரு இறைவனின் திருவுளத்தை அறிந்து சொல்வார். பொதுவாகப் போருக்குச் செல்லும் முன்னர் திருவுளம் அறியப்பட்டது.

முதலில், 'யூதாசின் இடத்தை நிரப்புதல்' என்பதைப் புரிந்து கொள்வோம்.

இயேசுவின் திருத்தூதர்கள் 12 பேர். 12 என்ற எண் முதல் ஏற்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் பெறக் காரணம் யாக்கோபின் புதல்வர்கள் 12 பேர். இவர்கள் வழியாகவே இஸ்ரயேல் என்ற இனத்தில் உள்ள 12 குலங்கள் உருவாகின்றன. இஸ்ரயேலின் 12 புதல்வர்களில் 11வது புதல்வரான யோசேப்பு அவர்களுடைய சகோதரர்களால் விற்கப்படுகின்றார். அவருடைய இரு மகன்களின் பெயர் மனாசே மற்றும் எப்ராயிம். 'லேவி' என்னும் குலம் குருத்துவக் குலம் ஆகிறது. யோசேப்பு என்ற ஒரு குலம் இல்லை. அது அவருடைய மகன்கள் பெயரால் இரு குலங்களாக மாறியது. ஆக, 12 என்ற எண் தக்கவைக்கப்பட்டது.

திருத்தூதர்கள் தங்கள் வேர்களையும், தொடக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ள விரும்புகின்றனர். குறிப்பாக, தங்கள் தலைவரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவே 12 திருத்தூதர்களை நியமித்ததால், அதே எண்ணை அவர்கள் நிலைக்க வைக்க விரும்புகின்றனர். அதன்படி, யூதாசின் இடம் காலியாக இருக்க, அந்த இடத்தில் ஒருவரை நிரப்பும் தேவை எழுகின்றது.

இதற்கிடையில், பவுல் தன் சிறப்பு அழைப்பின் வழியாக திருத்தூதர்கள் குழாமில் சேர்க்கப்பட்டதுடன், புறவினத்தாரின் திருத்தூதர் என்றும் தன்னை அழைத்து மகிழ்கின்றார். மேலும், சில இடங்களில் பர்னபா என்ற பெயரும் திருத்தூதர் அட்டவணையில் உள்ளது.

இன்றைய திருநாளின்படி மத்தியா 12வது நபர். திருவுளச் சீட்டால் தெரிவு செய்யப்பட்ட நபர்.

புனித மத்தியாவைப் பற்றிய குறிப்பு நற்செய்தி நூல்களில் இல்லை. ஆனால், இவர் இயேசுவோடு அவருடைய விண்ணேற்றம் வரை இருந்ததாக திருத்தூதர் பணிகள் பதிவு செய்கின்றது. யுசேபியு அவர்கள் எழுதிய நூலில் இவர் 'தோல்மாய்' என அழைக்கப்படுகின்றார். அலெக்சாந்திரிய நகர் கிளமெந்து, 'சக்கேயுவின் இன்னொரு பெயர்தான் மத்தியா' என எழுதுகிறார். சில இடங்களில் இவருடைய பெயர் 'பர்னபா' என்றும் உள்ளது.

இவருடைய பணி மற்றும் இறப்பு பற்றியும் மூன்று குறிப்புகள் உள்ளன: ஒரு குறிப்பின்படி, இவர் கப்பதோசி பகுதியில் பணியாற்றிவிட்டு அங்கே இறந்தார் என்றும். இன்னொரு குறிப்பில், அவர் மனித இறைச்சி சாப்பிடும் கொடியவர்களுக்கு நற்செய்தி அறிவித்து கல்லால் எறியப்பட்டு இறந்தார் என்றும், மூன்றாவது குறிப்பில், இவர் எருசலேமில் பணியாற்றி வயது முதிர்ந்து இறந்தார் என்றும் உள்ளது.

இன்றைய திருநாள் நமக்குச் சொல்வது என்ன?

இயேசுவின் திருத்தூது நிலைக்குள் நாம் அனைவரும் நுழைய முடியும். இந்த மத்தியா என்பவர் நம் அனைவருடைய பதிலி. பணியாளர் நிலையில் இருந்த இவர் நண்பர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றார். சீடர் என்ற நிலையில் இருந்த இவர் திருத்தூதர் என்ற நிலைக்கு மேன்மைப்படுத்தப்படுகின்றார்.

சீட்டு நம் பெயருக்கு விழுதல் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த அதிர்ஷ்டத்துக்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கிறார் மத்தியா.