Wednesday, June 24, 2015

இரண்டாம் இடமும் வெற்றியே

நாளை திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.

கத்தோலிக்கத் திருஅவை வழிபாட்டில் இயேசு, மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் என்னும் இந்த மூன்று பேரின் பிறந்தநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன.

இயேசுவின் பிறப்பைப் போலவே திருமுழுக்கு யோவானின் பிறப்பும் ஒரு அதிசயமே.

சக்கரியா - எலிசபெத்து - யோவான் இந்த மூன்று பெயர்களும் மனுக்குல மீட்பு வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

சக்கரியா என்றால் 'ஆண்டவர் நினைவு கூர்ந்தார்' என்றும், எலிசபெத்து என்றால் 'என் கடவுளின் வீடு' என்றும், யோவான் என்றால் 'இரக்கம்' அல்லது 'அருள்' என்றும் பொருள்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை பெயரிடும் சடங்கு.
அந்தக் காட்சியை நான் அடிக்கடி நினைத்துப் பார்த்ததுண்டு.

எலிசபெத்துக்கு குழந்தை பிறந்திருக்கிறது. சுற்றும் சூழ மக்கள் வந்திருக்கிறார்கள். பெயரிட வேண்டும். என்ன பெயர் என்று கேட்டபோது, சிலேடு ஒன்று கொண்டுவரச் சொல்லி எழுதுகின்றார்.
தான் கேள்வி கேட்டதால் வாய் ஊமையாகிப்போனவர், மற்றவர்கள் கேள்வி கேட்டவுடன் வாய் திறக்கின்றார்.

இவரின் பாடல்தான் ஒவ்வொரு நாள் காலையிலும் எங்கள் கட்டளைச் செபத்தில் இடம்பெறுகிறது.

'இருளிலும் இறப்பின் பிடியில் இருப்போருக்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது!' என்னும் வரி அவரின் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி.

மணமகனின் தோழனாய் இருப்பது போதும் என்று தன் வேலையை செவ்வனே செய்துவிட்டு விடைபெற்றவர் இவர்.

ஆக, முதலிடத்தில் இருப்பது மட்டும் வெற்றியல்ல. இரண்டாம் இடமும் வெற்றியே.



1 comment:

  1. ' திருமுழுக்கு யோவான்'...விண்ணிலிருந்து வந்த விடியலுக்கு கட்டியம் கூறியவர். விவிலியத்தில் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் திருச்சபையின் அன்றாட நிகழ்வுகளில் இல்லை என்பது வருந்தத் தக்க விஷயம்.'தான் கேள்வி கேட்டதால் ஊமையாகிப் போனவர் மற்றவர் கேள்வி கேட்டதால் வாய் திறக்கிறார்'....மனதைத் தொடும் வரிகள்.பல சமயங்களில் கட்டாந்தரையாக இறுகிப்போன நம் இதயங்களைக் கசிய வைப்பதே அடுத்தவர் நம்மிடம் தொடுக்கும் கேள்விகள் தான்.பல சமயங்களில் இந்தக் கதாநாயகர்களை வெளிச்சத்திற்குக் கொணர்வதே இந்த இரண்டாம் இட நாயகர்தாம்.தனக்குப் பின் வர இருப்பவரைத் தன்னைவிட மேலாக நினைத்தவர். இவரின் இந்த ' தாழ்ச்சியே' இன்று இயேசு, மரியாளுக்குச் சம்மாக இவர் பிறப்பையும் கொண்டாடும் நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. நல்ல பதிவு....

    ReplyDelete