Thursday, March 31, 2016

அக்சா

(இணைத் திருமுறை நூல்களில் 'சீராக்' தவிர்த்த மற்ற அனைத்து நூல்களையும் பற்றி எழுதியாயிற்று. இன்று முதல் 'நீதித்தலைவர்கள் நூலில் பெண்கள்' என்று சிந்திக்கலாம். பெண்களைப் பற்றித்தான் அல்லது பெண்களைப் பற்றியேதான் சிந்திக்க வேண்டுமா? என கேட்க வேண்டாம். இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்கள் நிறைய ஆச்சர்யங்களைத் தருகின்றார்கள்)

அக்சா - நீத 1:10-15 ல் வருகிறார் இவர். இதே நிகழ்வு யோசுவா 15:13-19-இலும் உள்ளது.

'அக்சா' என்றால் 'கொலுசு,' 'வளையல்,' அல்லது 'சிலம்பு' என்பது பொருள்.

இவரைப் பற்றிய பாபிலோனிய தால்முத் என்னும் நூல் இப்படிச் சொல்கிறது: 'அவளின் பெயர் அக்சா என ஏன் வழங்கப்பட்டது? ஏனெனில் அவளைக் காணும் எந்த ஆணும் தன் மனைவி மேல் கோபப்பட்டான்.'

அதாவது, நம்ம 'அக்சா'வின் அழகைப் பார்த்து அதில் பிரமிக்கும் ஆண்கள் அனைவரும், தம் மனைவியர் 'அழகு குறைவாக' இருப்பதாக அவர்கள்மேல் கோபப்படுவார்களாம். மேலும், இவளின் பெயர் 'கஆஸ்' ('கோபம்') என்ற எபிரேய மூலத்திலிருந்து வருகின்றது.

இவளின் அப்பா பெயர் 'காலேபு'. தெபீர் என்ற நகரை யார் அழிக்கிறார்களோ அவர்களுக்கு என் மகளை மணம் முடித்துக்கொடுப்பேன்! என அறிக்கை விடுகின்றார் காலேபு.

பெண் என்பவள் எபிரேய சமூகத்தில் ஆணின் (தந்தையின்) உடைமையாகக் கருதப்பட்டாள் என்பதற்கு இது சான்று. அதாவது, வெற்றி பெற்ற ஒருவருவருக்கு வழங்கப்படும் பரிசு அல்லது அன்பளிப்பு என மாற்றப்படுகிறாள் அக்சா.

மேலும், எபிரேய சமூகத்தில் வரதட்சணை என்பது 'பெண்-விலை' என அழைக்கப்பட்டது. அதாவது, விவசாய சமூகத்தில் ஒவ்வொருவரும் முக்கியமானவர். ஒரு பெண்ணை அவளது குடும்பத்திலிருந்து ஒரு ஆண் திருமணம் செய்து செல்கிறான் என்றால், அவன் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை பணம் கொண்டு நிரப்ப வேண்டும். ஆக, பெண் எடுக்கும் ஆண்தான், பெண்ணின் குடும்பத்திற்கு 'பணம்' அல்லது 'ஆடுகள்' அல்லது 'வேலை' என எதையாவது கொடுக்க வேண்டும்.

தெபீர் நகரை அழிக்கின்ற ஒத்னியேல் ('கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுளின் சிங்கம்') அக்சாவைக் கரம் பிடிக்கின்றான்.

'என் தந்தையிடம் ஒரு நிலம் கேள்!' என அவள் ஒத்னியேலைத் தூண்டுகிறாள். ஆனால், கழுதையை விட்டு இறங்கியபோது அவள், 'எனக்கு நீரூற்றுக்கள் வேண்டும்!' என்கிறாள்.

ஒத்னியேல் என்பவன் வறண்ட நிலம் என்றும், எனக்கு வேறு 'நீரூற்றுக்கள்' வேண்டும் என தன் தந்தையிடம் வேறு ஆடவர்களை அவள் கேட்பதாகவும் சிலர் வேறு பொருள் கொள்கின்றனர்.

தந்தையும் தன் மகள் கேட்டபடி 'மேல் ஊற்றுக்களையும், கீழ் ஊற்றுக்களையும் கொடுக்கின்றார்.'

போர்கள் மறைந்து, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக நிலங்களில் குடியிருக்க ஆரம்பிக்கிறார்கள். ஒத்னியேலும், அக்சாவும் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் வாழும் முதல் தம்பதியினர். இனி எல்லாமே மாறும்.

'அக்சா' அழகியோ இல்லையோ, ஆனால் அவள் தான் விரும்புவதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் திறமைசாலி.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் - அக்சா.

Wednesday, March 30, 2016

ஓ கிறிஸ்துவின் சிலுவையே


திருச்சிலுவையை நோக்கி நம் திருத்தந்தையின் மன்றாட்டு

25 மார்ச் 2016, புனித வெள்ளி, கொலோசியம், உரோமை

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, இறையன்பின் மனித அநீதியின் சின்னமே, அன்பிற்கான மேன்மையான பலியின், மடமையாய் மாறிய அளவுகடந்த தன்னலத்தின் சித்திரமே, இறப்பின் கருவியே, வாழ்வின் வழியே, கீழ்ப்படிதல் மற்றும் துரோகத்தின் அடையாளமே, துன்புறுத்துதலின் தூக்குமேடையே, வெற்றியின் கொடியே!

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, எழுந்து நிற்கும் உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - கோழைத்தனமான (எங்கள்) மௌனத்தின் நடுவில் கொல்லப்படும், உயிரோடு எரிக்கப்படும், காட்டுமிராண்டித்தனமான கத்திகளால் தொண்டை அறுக்கப்படும், கழுத்து வெட்டப்படும் எங்கள் சகோதரிகள், சகோதரர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - போர் மற்றும் வன்முறைக்குப் பயந்து, இறப்பை மட்டுமே இனி தங்கள் கதி எனக் கொண்டு, பல பிலாத்துக்கள் தங்கள் கைகளைக் கழுவி ஒதுங்கிக் கொள்ள, சோர்வுற்று, பயந்து நிற்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாந்தர்களின் முகங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்கள் மூளையை ஆவியால் நிரப்பாமல், அறிவால் நிரப்பிக் கொண்டு, வாழ்வின் ஆசிரியர்களாய் இல்லாமல், இறப்பின் ஆசிரியர்களாய் இருந்து கொண்டு, இரக்கத்தையும் வாழ்வையும் போதிக்காமல், தண்டனை மற்றும் இறப்பால் நேர்மையாளர்களைத் தீர்ப்பிடும் அறிவார்ந்தவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் வீணான தன்னார்வங்களைக் களையாமல், அப்பாவி மற்றும் மாசற்றவர்களின் மாண்பைக் களையும், பிரமாணிக்கமற்ற அருட்பணியாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பாவங்களையும், தவறுகளையும் பற்றிய அக்கறையின்றி, அடுத்தவர்கள்மேல் கல்லெறியவும் துணிந்தவர்களாய் கடினமான உள்ளம் கொண்டு, மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - சில மதங்களைப் பின்பற்றுபவர்கள், இறைவனின் தூய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, கடவுளின் புனிதப் பெயரைப் பயன்படுத்தி தங்கள் வன்முறையை நியாயப்படுத்தி, நிகழ்த்தும் அடிப்படைவாத மற்றும் தீவிரவாத செயல்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நீர்தாமே எங்களுக்குக் கற்றுக் கொடுத்த சமத்துவத்தையும், மதச்சார்பற்ற தன்மை என்ற வேற்று மதத்தையும் முன்வைத்து, பொதுவிடங்களில் உன்னை அப்புறப்படுத்தவும், பொதுவாழ்விலிருந்து உன்னை அகற்றவும் ஆர்வம் காட்டுபவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - போர் என்ற அடுப்பை அப்பாவிகளான தங்கள் சகோதரர்களின் இரத்தத்தால் எரித்து, தங்கள் பிள்ளைகள் உண்பதற்கு ரொட்டியை இரத்தத்தில் தோய்த்துக் கொடுக்கும் வல்லரசுகள் மற்றும் ஆயுதவிபாரிகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - முப்பது வெள்ளிக்காசுகளுக்காக யாரையும் காட்டிக் கொடுக்கும், விலைபேசும், இறப்பிற்கு கையளிக்கும் துரோகிகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - பொதுநலத்தையும், அறநெறியையும் காப்பாளர்களாக இருக்கத் தவறி, ஒழுக்கக்கேடு என்னும் சந்தையில் தங்களையே மிகக் கீழான விலைக்கு விற்கும், பெருந்திருடர்கள் மற்றும் ஊழல் செய்வோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - அழியக் கூடிய செல்வங்களுக்கு சேமிப்பு அறைகள் கட்டி, தங்கள் இல்லங்களின் வாசல்களில் லாசரை பசியால் வாடி இறப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மூடர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் தன்னலத்தால் அடுத்த தலைமுறைகளின் எதிர்காலத்தை அழிக்க, எங்களின் 'பொது இல்லத்தை' அழிப்பவர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - எங்களின் தன்மையமான வெளிவேட சமூகத்தில், தங்களின் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட வயதானவர்கள், உடல்திறன் அற்றவர்கள், மற்றும் ஊட்டம் பெறாத குழந்தைகளில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - எங்களின் சுரணையற்ற மற்றும் போதையிலிருக்கும் மனச்சான்றின் காணொளியாய், எத்தனை உடல்களைக் தின்றாலும் பசி அடங்காத பிணக்குழிகளாய் இருக்கும் மத்தியதரை மற்றும் ஏஜியன் கடல்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, முடிவற்ற அன்பின் வடிவமே, உயிர்ப்பின் வழியே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - மற்றவர்களின் கைதட்டல்களையும், பாராட்டுக்களையும் தேடாமல் நல்லதை செய்யும் நல்லவர்கள் மற்றும் நேர்மையாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களையே மற்றவர்களுக்காக தாரை வார்த்து அழிக்கும் மெழுகுதிரிகளாய், கடையவர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும், எங்கள் வாழ்வின் இருளகற்றும், பிரமாணிக்கமான, தாழ்ச்சி உள்ளம் கொண்ட அருள்பணியாளர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நற்செய்திக்கான அமைதியில், ஏழ்மை மற்றும் அநீதியின் காயங்களைக் கட்டுவதற்காக, எல்லாவற்றையும் துறந்து நிற்கும் நல்ல சமாரியர்கள், தங்களையே உமக்கு அர்ப்பணம் செய்த அருள்சகோதரிகள் மற்றும் துறவியரின் முகங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - நீதி மற்றும் நம்பிக்கையின் இலக்கணத்தை இரக்கத்தில் காணும் இரக்கமுடையோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் நம்பிக்கையை அன்றாட வாழ்க்கை எதார்த்தங்களில் மகிழ்வாக வாழ்ந்து, பிள்ளைக்குரிய கீழ்ப்படிதலுடன் கட்டளைகளைப் பின்பற்றும் எளிய மனிதர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பாவத்தின் வலியின் ஆழத்திலிருந்து, 'ஆண்டவரே, உன் அரசில் என்னை நினைவுகூறும்' என்று கதறவதற்குக் கற்றிருக்கும், குற்றமுணர்ந்த உள்ளங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - உன் மௌனத்தின் பொருளைப் புரிந்து கொண்டவர்கள் போல நடிக்காமல், தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், நம்பிக்கை என்னும் இரவின் இருளைக் கடந்த பேறுபெற்றவர்கள் மற்றும் புனிதர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் பிரமாணிக்கத்தால் அணி செய்து, திருமணம் என்னும் அழைப்பால் கனி தரும் குடும்பங்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தேவையில் மற்றும் கீழ்நிலையில் இருப்பவர்களை நோக்கி தாராளமாக ஓடிச் செல்லும் தன்னார்வத் தொண்டர்களில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - தங்களின் துன்பங்கள் வழியாக இயேசுவுக்கும் அவரின் நற்செய்திக்கும் நேரிய சான்று பகர, (அவர்மேல் கொண்ட) நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்படுவோரில்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, உன்னை இன்றும் நாங்கள் பார்க்கிறோம் - குழந்தை உள்ளம் கொண்டவர்களாய் கனவுகள் கண்டு, இவ்வுலகை இன்னும் இனிமையாக, மனிதத்தன்மை கொண்டதாக, நீதியுடையதாக மாற்ற முயற்சிகள் எடுக்கும் இனியவர்களில்.

புனிதமான சிலுவையே, உன்னில் நாங்கள் பார்க்கிறோம் - இறுதி வரை அன்பு செய்யும் கடவுளையும், ஒளிக்குப் பதிலாக இருளை விரும்புவோரின் இதயங்கள் மற்றும் மனங்களின் பார்வை இழக்கச் செய்து மேலோங்கி நிற்கும் பகைமையையும்.

ஓ கிறிஸ்துவின் சிலுவையே, மனிதத்தை பாவ வெள்ளத்திலிருந்து மீட்ட நோவா பெட்டகமே, தீமை மற்றும் தீயவனிடமிருந்து எங்களை மீட்டருள்வாய்! ஓ தாவீதின் அரியணையே, இறைவனின் முடிவற்ற உடன்படிக்கையின் முத்திரையே, வீண்மையின் மயக்கங்களிலிருந்து எங்களைத் தட்டி எழுப்புவாய்! ஓ அன்பின் ஓலமே, இறைவன், நன்மை மற்றும் ஒளி மீதுள்ள ஆசையால் எங்களை நிரப்புவாய்!


ஓ கிறிஸ்துவின் சிலுவையே, பகலவனின் வருகை படர்ந்திருக்கும் இரவைவிட வலிமையானது என எங்களுக்குக் கற்றுத்தருவாய்! ஓ கிறிஸ்துவின் சிலுவையே, மாயைபோல் தெரியும் தீமையின் வெற்றி, வெற்றுக் கல்லறை, உயிர்ப்பின் உறுதி மற்றும் எவற்றாலும் தோற்கடிக்க, மங்கலாக்க, வலுவிழக்க முடியாத இறைவனின் அன்பிற்கு முன் தகர்ந்து போம் என்றும் கற்றுத்தருவாய்! ஆமென்.

Tuesday, March 29, 2016

மாஸ்டர் - விக்டிம்

ஐந்து நாட்களுக்கு முன் நாம் விட்ட எஸ்தர் (கி) நூலுக்குத் திரும்புவோம்.

எஸ்தர் மற்றும் மொர்தெக்காய் சந்தித்த இரண்டு பிரச்சினைகள்:

ஒன்று, ஆமான்.

இரண்டு, எல்லா யூதர்களும் கொல்லப்படுவதற்கான ஆணை.

ஆமானின் உண்மையான குணம் தெரிந்து அரசன் அவனைத் தூக்கிலிட்டுவிட்டான்.

இப்போது, இரண்டாம் பிரச்சனை தீர வேண்டும்.

'உனக்கு வேறென்ன வேண்டும்?' என்று அரசன் எஸ்தரிடம் மீண்டும் கேட்க, எஸ்தர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தன் இனத்து மக்களை ஆபத்திலிருந்து விடுவிக்கின்றாள்.

இதற்கு நன்றியாக 'பூரிம்' திருநாளை யூதர்கள் கொண்டாடுகிறார்கள். 'பூரிம்' என்றால் 'திருவுளச் சீட்டுகள்,' அல்லது 'தங்களுடைய நலனுக்காக' என்பது பொருள். தங்களின் நலனுக்காக இறைவனின் திருமுன் விழுந்த சீட்டுதான் எஸ்தர்.

எஸ்தர் நூல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

வாழ்வில் நமக்கு நடக்கும் நிகழ்வுகளில் நாம் இரண்டு மனப்பக்குவங்களை உருவாக்க முடியும். ஒன்று, அந்த நிகழ்வின் மாஸ்டர் ஆக இருப்பது. இரண்டு, அந்த நிகழ்வின் விக்டிம் ஆக இருப்பது.

கல்யாண வீடுகளில் இந்த இரண்டு வகை மக்களையும் பார்க்கலாம். ஒரு சிலர் யார் வீட்டுக் கல்யாணம் என்றாலும், தாங்களாகவே முன்வந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள். பந்தி பரிமாறுவார்கள். எல்லாரிடமும் வந்து பேசுவார்கள். மற்றும் சிலர் தங்கள் வீட்டுக் கல்யாணமே என்றாலும் சற்று தள்ளியே இருப்பர். வந்திருக்கும் ஒவ்வொருவரையும் தங்கள் மனதளவில் திறனாய்வு செய்து கொண்டிருப்பார்கள். சின்ன விஷயத்துக்கெல்லாம் குறைபட்டுக்கொள்வார்கள்.

'மாஸ்டர்' ஆக இருப்பதற்கும், 'விக்டிம்' ஆக இருப்பதற்கும் ஒரே வித்தியாசம்தான்.

'பொறுப்புணர்வு'

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்விற்கு, நாம் பொறுப்பு ஏற்றால் நாம் மாஸ்டர். பொறுப்பை உதறித் தள்ளினால் விக்டிம்.

விக்டிம் ஆக இருக்கும்போது நமக்கு வரும் முதல் உணர்வு 'சுய-இரக்கம்(!)' - 'எனக்கு என்ன தெரியும்?' 'என்னால் எப்படி முடியும்?' என்று தன்னையே குற்றப்படுத்திக்கொள்வது. 'என்னால் எப்படி அரசன் முன் போக முடியும்?' 'நான் என்ன செய்ய முடியும்?' என எஸ்தர் முதலில் ஒதுங்க நினைக்கிறாள். ஆனால், அந்த நேரத்தில் மொர்தெக்காய் உற்சாகம் கொடுக்கிறார்.

மொர்தெக்காய் கொடுத்த உற்சாகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னைச் சுற்றிய நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்கிறார் எஸ்தர்.

அவரின் பொறுப்புணர்வே அவரை மாஸ்டர் ஆக்குகிறது.

எஸ்தர் (கி) நூல் நிறைவுபெற்றது.



Monday, March 28, 2016

ஆண்டவரைக் கண்டேன்!

இயேசுவின் உயிர்ப்பை பற்றி பதிவு செய்யும்போது, நாம் மறக்க முடியாத ஒரு இளவல் மகதலா நாட்டு மரியாள்.

இந்த இளவலுக்கு வயது 16 முதல் 18 இருந்திருக்க வேண்டும்.

ரொம்பவே தைரியசாலி இவள்.

ஏறக்குறைய அதிகாலை 3 முதல் 6 மணிக்குள், இரவாய் இருந்தபோதே, இயேசுவின் கல்லறையைத் தேடி வருகிறாள் இந்த ஜான்சி ராணி.

கல்லறை வாசலின் கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டதும், கண்டிப்பாக அவள் மகிழ்ச்சி அடைந்திருப்பாள். 'இயேசுவின் உயிரற்ற உடலையாவது ஒருமுறை தொட்டுவிடலாம்!' என துள்ளிக் குதித்திருப்பாள். ஆனால், அருகில் சென்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. இயேசுவின் உடலைச் சுற்றியிருந்த ஆடைகள் மட்டுமே கிடக்கின்றன.

அப்படியே ஓடியவள், பேதுருவை மற்றும் யோவானைக் கண்டுபிடிக்கிறாள்.

'ஆண்டவரைக் காணோம்!' என்கிறாள்.

இங்கே நற்செய்தியாளர் யோவானின் இலக்கியத்திறத்தை பாராட்ட வேண்டும். 'இயேசுவின் உடலைக் காணோம்!' அல்லது 'சடலத்தைக் காணோம்!' அல்லது 'இயேசுவைக் காணோம்!' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஆண்டவரை' என்கிறார். எபிரேயத்தில் பெண்கள் தங்கள் கணவரை, 'பால்' அல்லது 'அதோனாய்' என அழைப்பார்கள். இதன் பொருள் 'ஆண்டவர்' என்பது. 'என் கணவரைக் காணோம்!' என்று மரியாள் சொல்கிறாள். (பயந்துடாதீங்க! முழு பதிவையும் படிங்க!)

யோவான் நற்செய்தியாளர் தன் நற்செய்தி முழுவதிலும் இயேசுவை மணமகனாகவே முன்வைக்கிறார். திருமுழுக்கு யோவான் இயேசுவை மணமகன் என்று அழைக்கிறார். காலனிகளைக் கழற்றி மனைவியை உரிமையாக்கிக்கொள்ள அவரால் மட்டுமே முடியும் என்கிறார். இயேசுவின் முதல் அறிகுறி திருமண நிகழ்வில் நடந்தேறுகிறது. சமாரியப்பெண்ணுடன் இயேசு உறவாடும்போதும், மணமகன்-மணமகள் போலவே உரையாடல் நடக்கிறது. இந்த உருவகத்தை தொடர்ந்து கையாளும் யோவான், இயேசுவை மணமகனாக உயிர்ப்பு நிகழ்விலும் உருவகப்படுத்துகிறார்.

பேதுருவும், யோவானும் கல்லறையைப் பார்த்துவிட்டுப் போனதும், மரியாள் மட்டும் இன்னும் அதே இடத்தில் நின்று அழுதுகொண்டிருக்கிறாள் (காண். யோவா யோவா 20:11). அவள் ரொம்ப சிம்ப்பிள் கேர்ள். எதார்த்தவாதி. அவளுக்கு உயிர்ப்பு, மறுபிறப்பு இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியவில்லை. அவளுக்கு அழ மட்டுமே தெரிகின்றது. இன்றும் நம்ம பொண்ணுங்க புரியாத எதார்த்தத்தின் முன் கண்ணீர் மட்டுமே வடிக்கின்றனர்.

மரியாள் அழுது கொண்டே திரும்பிப் பார்க்கிறாள். அங்கே இயேசு நின்றுகொண்டிருக்கிறார். ஆக, மரியாள் முதலில் கல்லறையை நோக்கி நின்று அழுதிருக்க வேண்டும். 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என அந்த உருவம் கேட்டபோது, அவளுக்கு அவர் ஒரு தோட்டக்காரராகவே தெரிகின்றார். வழக்கமாக, நாம் ஒருவரை ரொம்ப அன்பு செய்யும்போது, யாரைப் பார்த்தாலும், நமக்கு நம் அன்புக்குரியவரைப் பார்ப்பதுபோல இருக்கும். ஆனால், இங்கே அன்புக்குரியவரே தோட்டக்காரர் போலத் தெரிகின்றார். அங்கேதான் டுவிஸ்ட் வைக்கிறார் யோவான். இயேசுவுக்கும், மரியாளுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்ட இருவரையும் செயற்கையாக அந்நியப்படுத்துகிறார்.

'நீர் அவரை தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துக்கொள்வேன்' (20:15) என்கிறாள் மரியாள். துணிச்சல்காரி மட்டும் அல்ல. பலசாலியும் கூட அவள்.

'மரியா!' என்கிறார் அந்த நபர்.

'இரபூனி!' என திரும்பிப் பார்க்கிறார் மரியாள்.

அதான் ஏற்கனவே திரும்பிவிட்டாள்தானே. மறுபடியும் எப்படி திரும்புகிறாள். யூதப் பெண்கள் பொதுவில் ஆண்களுடன் நேருக்கு நேர் பேசுதல் கூடாது. ஆக, மரியா, அவருக்குத் தன் முதுகைக் காட்டித்தான் பேசியிருந்திருப்பாள். அதனால்தான் மீண்டும் திரும்புகிறாள்.

'என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே!' என்கிறார் இயேசு.

ஆக, 'இரபூனி' என்று மரியாள் அழைத்துக்கொண்டே, இயேசுவை ரொம்ப இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாள்.

இந்தக் கட்டிப்பிடித்தலில் அவளின் எண்ண ஓட்டங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கும்?

'உங்கள ரொம்ப அடிச்சுட்டாங்களாடாமா!'

'ரொம்ப வலிச்சதாடாமா!'

'எங்கடாமா போனீங்க இந்த மூன்று நாள்!'

'இனி என்கூடவே இருந்திடுங்கடாமா! உங்கள நான் பத்திரமா பாத்துக்குவேன்!'

என அன்பை அள்ளி இரைத்திருப்பாள் மரியாள்.

இயேசு-மரியாள் சந்திப்பு, முதல் ஏற்பாட்டு, ஈசாக்கு-ரெபேக்கா சந்திப்பு போலவே இருக்கிறது.

அங்கே, அவர்கள் வயலில் சந்திக்கின்றனர்.

இங்கே, இவர்கள் தோட்டத்தில் சந்திக்கின்றனர்.

அங்கே, ரெபேக்கா முக்காடிட்டு இருந்ததால் ஈசாக்கை முழுவதும் பார்க்க முடியவில்லை.

இங்கே, மரியாளின் பார்வை மறைக்கப்பட்டு இருந்ததால் இயேசுவை அடையாளம் காண முடியவில்லை.

'ரெபேக்கா ஈசாக்குக்கு மனைவியானார்' என நிறைவடைகிறது அங்கே (தொநூ 24:67).

'நான் ஆண்டவரை (என் கணவனைக்) கண்டேன்' என நிறைவடைகிறது இங்கே (யோவான் 20:18).

இதுதான் மரியாள் பேசும் கடைசி வார்த்தை.

மரியாள் நம் ஒவ்வொருவரின் உருவகம். நாம் உயிர்த்த ஆண்டவரைத் தேடி அலைகின்றோம். அந்தத் தேடலின் இறுதியில் நாமும் இந்த வார்த்தைகளைகத் தான் கூற வேண்டும்:

'நான் ஆண்டவரைக் கண்டேன்!'

இயேசுவே புதிய மணமகன். நாம் அவரின் மணவாட்டிகள்.


Saturday, March 26, 2016

அவர் இங்கு இல்லை!

இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களும் பதிவு செய்திருக்கின்றனர்.

லூக்காவின் பதிவில் உள்ள முக்கியக்கூறைக் காண்போம்:

மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அப்பெண்களை நோக்கி, 'உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்? ... அவர் இங்கே இல்லை' என்றார்கள்.

அதாவது, 'அங்கே' இருப்பவரை 'இங்கே' தேடுவதேன்!

இயேசு அவரின் வாழ்நாள் முழுவதும் தேடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

'ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடுகின்றான்.'

'இயேசுவின் பெற்றோர் காணாமல்போன இயேசுவை விருந்தினர்களின் கூட்டத்தில் தேடுகின்றனர்.'

'காடு, மேடெல்லாம் இயேசுவைத் தேடிச் செல்கின்றனர் அவரின் சீடர்கள்.'

இயேசுவின் அறிகுறிகளைக் கண்ட அவரின் எதிரிகள் அவரைக் கொல்லத் தேடுகின்றனர்.

கெத்சமேனித் தோட்டத்தில் தன்னைக் கைது செய்ய வந்தவர்களை நோக்கி, 'யாரைத் தேடுகிறீர்கள்?' எனக் கேட்கின்றார் இயேசு.

இந்த எந்த நிகழ்விலும், இயேசு அவர்களின் கண்களில் படவேயில்லை.

ஏனெனில், அவர்கள் 'அங்கே' தேடுவதற்குப் பதிலாக அவரை 'இங்கே' தேடினார்கள்.

தேட வேண்டும் என்றால் கண்கள் திறந்திருக்க வேண்டும். நாம் தேடும் ஒரு பொருள் நம் கண்களில் பட்டுவிட்டது என்றால், நம் தேடல் முடிந்துவிடுகிறது.

ஆக, தேடுதலில் நம் புலன்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

ஆனால், புலன்களால் தேடினால் இயேசு கிடைப்பதில்லை.

காணாமற்போன தன் குழந்தை இயேசுவை விருந்தினர்கள் கூட்டத்;தில் தேடிக்கொண்டிருந்த மரியாளுக்கு டக்கென்று வானதூதரின் சொற்கள் நினைவிற்கு வந்திருக்கும். பிறக்கும் போகும் குழந்தை இறைமகன் என நமக்குச் சொல்லப்பட்டதே. இறைமகனை இறைவனின் வீட்டில்தானே தேட வேண்டும் என எருசலேம் நோக்கிச் செல்கிறார். இயேசுவைக் கண்டுகொள்கின்றார்.

புலன்களுக்கு எட்டாத இயேசு, மரியாளுக்கு வானதூதரின் வார்த்தைகள்மேலிருந்த நம்பிக்கையில் எட்டுகின்றார்.

இன்று நாம் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற வேண்டுமென்றால் இயேசுவை 'இங்கே' தேடுவதற்குப் பதிலாக, 'அங்கே' தேட வேண்டும்.

கண்கள் திறந்திருந்தால் நாம் 'இங்கே' தேடலாம்.

கண்கள் மூடியிருந்தால் மட்டுமே நாம் 'அங்கே' தேட முடியும்.

இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தை யோவான் நற்செய்தியாளரும், '(அவர்) கண்டார், நம்பினார்' என பதிவு செய்கின்றார்.

மனித புலன்களையும் தாண்டிச் செல்லும் ஆற்றல் பெற்ற ஒருவருக்கே உயிர்ப்பு அனுபவம் சாத்தியமாகும்.

புலன்களோடு தேடினால், நம் தேடலும் புலன்களோடு முடிந்துவிடுகிறது. முடிந்துவிடும் எதுவும் இறந்துவிடக் கூடியது. நம் கண்களுக்குத் தெரியும் எதுவும் மறைந்துவிடக் கூடியது.

ஆனால், கண்களுக்கு எட்டாதது, காலங்காலமாக நிலைக்கக்கூடியது.

உயிர்ப்பு என்பது கண்களை மூடிக்கொண்டு பார்க்கும் ஓர் அனுபவம்.

உதாரணத்திற்கு, என் அன்பிற்கினிய ஒருவரிடம் நான் பேசுகிறேன். சிரிக்கிறேன். அவரின் ஆடைகளை இரசிக்கிறேன். அவரைத் தொடுகிறேன். அடுத்த நாள் அவர் என்னைவிட்டு தூரமாய் போய்விடுகிறார். முந்தின நாள் போல நான் அவரிடம் பேச, சிரிக்க, இரசிக்க, அவரை தொட முடியவில்லையென்றாலும், முந்தின நாள் போலவே அவர் என்னுடன் இருப்பதாக ஓர் உணர்வு வருகிறது. இனி அவரிடம் பேச, சிரிக்க, இரசிக்க, அவரை தொட முடியாமல் போனாலும், அவர் என்னில் ஓர் அனுபவமாகப் பதிந்துவிடுகிறார். அந்த அனுபவம் என்னை இன்னும் முன்நோக்கி நடக்க திடம் அளிக்கிறது.

சீடர்களோடு உண்டு, உறங்கி, உறவாடி, வழிநடந்த இயேசு, இனி அப்படி எதுவும் செய்ய மாட்டார். ஆனால், அந்த அனுபவம் சீடர்களை முன்நோக்கித் தள்ள வேண்டும்.

சீடர்கள் முன்நோக்கி தள்ளப்பட்டனர் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் நீங்களும், நானும்.

சீடர்கள் பெற்ற அதே அனுபவத்தை காலத்தால், இடத்தால் அப்பாற்பட்ட நாமும் பெற முடிகிறது என்றால் எப்படி?

கண்களுக்கு எட்டாதது, காலங்காலமாக நிலைக்க வல்லது.

அதுதான் உயிர்ப்பு.

Friday, March 25, 2016

நடுவுல கொஞ்சம்

வெள்ளிக்கிழமைக்கும், ஞாயிற்றுக்கிழமைக்கும் இடையே உள்ள சனிக்கிழமை என்ன நடந்தது என்பது பற்றி,

இயேசுவின் இறப்புக்கும், உயிர்ப்புக்கும் இடையே என்ன நடந்தது என்பது பற்றி நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டு எதுவும் எழுதவில்லை.

சனிக்கிழமை யூதர்களின் ஓய்வுநாள் என்பதால் அவர்கள் எந்த வேலையும் செய்திருக்க வாய்ப்பில்லை என நினைத்தாலும், இந்த சனிக்கிழமையில் நிறைய செயல்கள் நடந்தேறத்தான் செய்தன:

இந்த நாளில்தான்...

'மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டேன்!' வாயில் சிக்கிய முள்போல, விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல், தலைமைச் சங்கம் கொடுத்த காசுகளை அவர்கள்முன்னேயே வீசி எறிந்துவிட்டு, யூதாசு இறந்திருப்பார்...

பேதுரு தான் மறுதலித்ததை மரியாளிடம் மற்ற சீடர்களிடம் சொல்லி அழுதிருப்பார். 'என்னிடம் யாரும் வராதீங்க! நான் பாவி! ஐயோ! அவரை நான் மறுதலிச்சுட்டேனே!' என புலம்பியிருப்பார்.

இயேசுவின் ஆடையின் மேல் சீட்டுப்போட்டு, அது தனக்கு விழுந்த மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அந்த படைவீரன் எல்லாரிடமும் அதைக் காட்டி மகிழ்ந்திருப்பார்.

'அவனைக் கொன்றாயிற்று! எல்லாம் முடிந்தது!' என ஓய்ந்திருக்க முடியாமல், 'ஒருவேளை சொன்னது மாதிரி உயிர்த்துவிடுவானோ!' என்ற தலைமைக்குருக்களும், மற்ற தலைவர்களும், கல்லறைக்கு காவல் போடுவது பற்றி முடிவெடுத்து, ஓய்வுநாளில் ஆள்கிடைக்காதததால், கையில காலுல விழுந்து, காவலுக்கு ஆள் பிடித்திருப்பர்.

'பாஸ்கா கொண்டாடும் நல்ல நாள் அதுவுமா, நம்ம ஆலயத்தின் திரைச்சீலை கிழிஞ்சுடுச்சே!' என நல்ல சகுனம்-கெட்ட சகுனம் பார்த்துக்கொண்டிருந்திருப்பர் ஆலயத்தின் பணியாளர்கள்.

'என்னை எதுக்கு பிடிச்சாங்க?' 'என்னை எதுக்கு விட்டாங்க?' என்று யோசித்துக்கொண்டே குழம்பிப் போயிருப்பார் பரபா.

'மூன்றாம் நாள் காரியம் செய்யணும்!' என எண்ணிக்கொண்டிருந்த இயேசுவின் இளவல்கள், அவரின் இறந்த உடலுக்குப் பூசுவதற்கு, நறுமணத் தைலம் தயாரிக்க ஒன்றாகக் கூடி வந்திருப்பர்.

'அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்' என்று நான் சொல்லியும், நீ கேட்காமல் அவரைக் கொல்வதற்குக் கையளித்துவிட்டாய், என பிலாத்தின் மனைவி, பிலாத்துவிடம் சண்டை போட்டு, பேசாமல் இருந்திருப்பார்.

இயேசுவின் இறப்பால் நண்பர்களான பிலாத்துவும், ஏரோதுவும், ஒன்றுகூடி வந்து, 'நாம எப்படி இருந்தோம்!' என்று தங்கள் நட்பின் பழைய நினைவுகளை அசைபோட்டிருந்திருப்பர்.

இப்படி நிறைய நடந்திருக்கும்.

ஆனால், நாளைய நாள் நமக்குச் சொல்வது ஒற்றைவார்த்தை: 'மௌனம்'

கல்லறையின் மௌனத்தைக் காட்டத்தான் நற்செய்தியாளர்கள், நடுவுல கொஞ்சம் பக்கத்தை, அப்படியே வெறுமையாக விடுகிறார்கள்.

இறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் கடந்து செல்வதற்கு,

இறப்பையும், உயிர்ப்பையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் தேவையானது மௌனம்.

இந்த மௌனத்தின் ஆற்றலை அற்புதமாக உணர்ந்தவர் இயேசுவின் தாய் மரியாள்.

தன் வயிற்றில் மௌனமாய் இருந்த இயேசு பத்து மாதங்கள் கழித்து புதிய உயிராகப் பிறந்ததுபோல, பூமித்தாயின் வயிற்றில் மூன்று நாட்கள் மௌனமாய் இருக்கும் இயேசு, உயிர்ப்பார் என நம்பினார்.

சனிக்கிழமையின் மௌனத்தை மரியாள் அறிந்ததால்தான் என்னவோ, இன்றும் நாம் மரியாளை சனிக்கிழமை நினைவுகூறுகின்றோமோ?

ஒரு வார்த்தைக்கும், அடுத்த வார்த்தைக்கும் நடுவுல இருக்கும் மௌனமே உரையாடல்.

ஒரு ஓசைக்கும், அடுத்த ஓசைக்கும் நடுவுல இருக்கும் மௌனமே இசை.

இயேசுவின் இறப்புக்கும், உயிர்ப்புக்கும் நடுவுல இருக்கும் மௌனமே வார்த்தை.

வார்த்தை மனுவுருவானார். இன்று மனிதனின் இறுதி உருவாம் மண்ணில் அடக்கத்தை அனுபவித்தார்.

மௌனமும் வார்த்தை என்பதால்,

இயேசுவே வார்த்தை என்பதால்,

நடுவுல எல்லா பக்கமும் இருக்கு!



Thursday, March 24, 2016

வீடு திரும்புவோம்

நாளை பெரிய வெள்ளி.

நம் ஆண்டவர் இயேசுவின் சிலுவை மரணத்தை நினைவுகூறுகின்றோம்.

என் பங்கில் ரொம்ப ஆக்டிவ்வாக இருந்த, 90 வயது (ஓய்வுபெற்ற) பேராசிரியர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இன்று அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளைச் சந்தித்து ஆறுதல் சொல்ல அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

'மருத்துவமனைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவேயில்லை' என்று கண்ணீர் வடித்தார் அவரின் துணைவியார்.

கணவன்-மனைவி என இருவரும் இணைந்தே ஆலயத்திற்கு வருவார்கள். எங்கள் பங்கின் இளவல்களுக்கு ஆங்கிலம், இஸ்பானியம், கிரேக்கம் பயிற்றுவித்தார்கள். அவர் ஒரு பாடகர். நடிகர். கவிஞர். ஓவியர். எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர்.

'பிறரன்பு' என்றால் அவரின் பெயரைச் சொல்லிவிடலாம்.

'இறப்பு' என்பதன் புதிய அர்த்தம் இன்று நான் கண்டேன்.

ஆம். 'வீடு திரும்பாததுதான்' இறப்பு.

இறப்பு நம்மை நம் வீட்டுக்குத் திரும்ப அனுப்புவதில்லை.

இயேசு, யூதாசு, பேதுரு - இந்த மூன்று பேரையும் சிந்தனைக்கு எடுப்போம்.

கல்வாரிக்குச் செல்லும் இயேசு இனி வீடு திரும்ப மாட்டார். இனி அவரைத் தொழுகைக்கூடத்தில் பார்க்க முடியாது. அவரின் உதடுகளில் தொங்கிக் கொண்டிருந்து, அவரின் போதனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை அவர் காண முடியாது. கலிலேயக் கடலில் நடக்க முடியாது. பெத்தானியாவின் தன் நெஞ்சுக்கு நெருக்கமான மார்த்தா-மரியா-லாசர் வீட்டுக்குச் செல்ல முடியாது. இனி தன் அம்மாவையும், அப்பாவையும் காண முடியாது. தன் அன்புச் சீடர்களின் முகத்தைப் பார்க்க முடியாது.

இறப்பு எவ்வளவு கொடியது. அது எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.

இயேசுவுக்கும்!

யூதாசு - பேதுரு

இருவருமே இயேசுவோடு மூன்று வருடங்கள் இருந்தவர்கள். அவரின் இன்ப, துன்பங்களில் பங்கேற்றவர்கள்.

யூதாசு காட்டிக் கொடுக்கின்றார்.

பேதுரு மறுதலிக்கின்றார்.

'இவர்தான் இயேசு' என சொல்லக் கூடாத இடத்தில் சொல்லிவிட்டார் யூதாசு.

'இவர்தான் இயேசு' என சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லத் தவறிவிட்டார் பேதுரு.

பேதுரு இன்றும் திருஅவையின் முதல் திருத்தூதராக இருக்கின்றார்.

ஆனால் யூதாசுக்கு இயேசுவின் உயிர்ப்பைப் பார்க்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

எதற்காக யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்? யோவான் நற்செய்தியாளர் யூதாசை, பண ஆசை பிடித்தவன், திருடன், சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவன் என சித்தரிக்கின்றார். மத்தேயுவும் வஞ்சப்புகழ்ச்சியில் 'நண்பா' என்கிறார். லூக்கா கொஞ்சம் கரிசணையோடு இருக்கின்றார். யூதாசைப் பற்றி அதிகம் எழுதுபவர் லூக்காதான். யூதாசின் வலுவின்மையை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறார்.

யூதாசும், பேதுருவும் இரண்டு வலுவின்மைகள்.

பேதுரு வீடு திரும்பினார்.

யூதாசு திரும்பவில்லை.

எப்படி?

தான் இயேசுவை மறுதலித்தவுடன், தன் தவற்றால் குத்தப்பட்டு, தன்னுள்ளே தன்னைப் புதைக்காமால் இயேசுவின் முகம் பார்க்கின்றார் பேதுரு.

ஆனால், இயேசுவை காட்டிக் கொடுத்தவுடன், தனக்குள்ளே பார்க்கின்றார் யூதாசு.

இயேசு தன் மண்ணக வீடு திரும்பவில்லையென்றாலும்,

தன் வானகத் தந்தையின் வான் வீடு திரும்புகின்றார்.

கல்லறை அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது.

'நாமும் வீடு திரும்புவோம்!' என்ற நம்பிக்கை தருகிறது இயேசுவின் இறப்பும், உயிர்ப்பும்.

Wednesday, March 23, 2016

அருள்பணியாளர்களின் திருநாள்

நாளை பெரிய வியாழன். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பணிக்குருத்துவத்தை ஏற்படுத்திய இந்நாளில், ஒவ்வொரு ஆண்டும் திருத்தைலத் திருப்பலியைக் கொண்டாடும் தாய்த் திருச்சபை, இந்த நாளை குருத்துவத்தின் ஆண்டுவிழாவாக நினைவுகூர்ந்து, தன் அருள்பணியாளர்களின் குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்க அழைக்கிறது.

ஆக, நாளை அருள்பணியாளர்களின் திருநாள்.

அருள்பணியாளர்கள் ('presbyter,' or 'priest') என்றால் 'மறைமாவட்ட அருள்பணியாளர்கள்.' துறவற சபை குருக்களை துறவிகள் ('religious') என்றுதான் திருச்சபை அழைக்கிறதே தவிர, அவர்களை 'அருள்பணியாளர்கள்' என அழைப்பதில்லை. (மறைமாவட்ட அருள்பணியாளர்கள் கொஞ்சம் காலரைத் தூக்கிவிட்டுக்கோங்கப்பா!)

திருவழிபாட்டு அறிவுரைப்படி இந்த திருத்தைல திருப்பலி நிகழ்வு பெரிய வியாழன் அன்றுதான் நடைபெற வேண்டும் என்றாலும், தங்கள் தலத்திருஅவையின் தேவை கருதி ஆயர்கள் இதை புனித வாரத்தின் திங்கள், செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் கொண்டாடலாம். மதுரை உயர்மறைமாவட்டத்தில் இந்த திங்களன்று இது கொண்டாடப்பட்டது.

அருள்பணியாளர்கள் வாக்குறுதிகள் புதுப்பிக்கும் சடங்கில் ஆயர் அவர்கள் அருள்பணியாளர்களைப் பார்த்துக் கேட்கும் மூன்று கேள்விகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ் திருப்பலி புத்தகத்தில் உள்ள மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை. மூல மொழியாம் இலத்தீனிலும், அதை மிக ஒட்டிய இத்தாலியனிலும் வாசிக்கும்போது இவ்வாக்குறுதிகள் ஆச்சர்யமாக இருக்கின்றன. இத்தாலியன் மொழிபெயர்ப்பை நான் இங்கே தமிழாக்கம் செய்கிறேன்:

கேள்வி 1:

ஆயர்: அன்பிற்கினிய அருள்பணியாளர்களே,
இயேசு கிறிஸ்து தன் குருத்துவத்தை திருத்தூதர்களுக்கும், நமக்கும் பங்கிட்டுக்கொடுத்த நாளின் ஆண்டு நினைவை புனித திருச்சபை கொண்டாடுகிறது. (இந்நாளில்) நீங்கள் உங்கள் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது உங்கள் ஆயர் முன்னிலையிலும், இறைவனின் புனித மக்கள் முன்னிலையிலும் கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிக்க விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கே மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. ஓர் அருள்பணியாளர் இயேசுவின் குருத்துவத்தில் பங்கேற்கிறார். இது ஒரு புதிய புரிதல். ஏனெனில், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கு முன் வரை, 'ஒரு அருள்பணியாளர் தலத்திருச்சபையின் ஆயரின் குருத்துவத்தில் பங்கேற்கிறார்' என்ற புரிதலே இருந்தது. இந்தப் புதிய புரிதலில், எல்லா அருள்பணியாளர்களையும் இணைப்பவர் கிறிஸ்துதான் என்பதும், அருள்பணியாளர்கள் மனித இயல்பில் அல்ல, மாறாக, இறை இயல்பிலேயே பங்கேற்கிறார்கள் என்பதும், அருள்பணி நிலையில் உயர்ந்தவர் - தாழ்ந்தவர் இல்லை என்பதும் அடிக்கோடிடப்படுகிறது.

ஆ. அருள்பணியாளர்கள் தருவது 'வாக்குறுதி' ('promise') இதை துறவிகளின் 'பொருத்தனை' ('vow')-யிலிருந்து வேறுபடுத்த வேண்டும். 'பொருத்தனை' என்பது நாம் ஆலயத்தில் இறைவனுக்குச் செலுத்தும் நேர்ச்சை ('votive') போன்றது. 'பொருத்தனையை' விட 'வாக்குறுதி' அதிக நம்பகத்தன்மையை உள்ளடக்கியது.

இ. அருள்பணியாளர்கள் தங்கள் வாக்குறுதியை ஆயர் முன்னிலையில், இறைமக்கள் முன்னிலையில் தங்கள் இறைவனுக்கே நேரிடையாகத் தருகின்றனர். ஆனால், துறவியர் தங்கள் 'பொருத்தனைகளை' தங்கள் மாநில முதல்வரிடம்தான் ('provincial' or his / her representative) கொடுக்கின்றனர். மேலும், இங்கே ஆயரும், இறைமக்களும் நான் கொடுக்கும் வாக்குறுதிக்கு சாட்சிகளாய் ('witnesses') இருக்கிறார்கள்.

கேள்வி 2:

ஆயர்: நீங்கள் உங்களையே மறுத்தும், கிறிஸ்துவின் அன்பினால் தூண்டப்பெற்று எவ்வித வற்புறுத்தலுமின்றி நீங்களே விரும்பி, அவரின் திருச்சபைக்காக ஏற்றுக்கொண்ட தூய பொறுப்புக்களை நிறைவேற்றியும், நம் குருத்துவத்தின் முன்மாதிரியாய் இருக்கின்ற ஆண்டவர் இயேசுவோடு, உங்களையே நெருக்கமாக்கி இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. குருத்துவம் என்பது ஒரே நாளில் அடைந்துவிடும் நிலை அல்ல. அது ஒவ்வொரு நாளும் ஒரு அருள்பணியாளர் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தின் இலக்கு ஆண்டவர் இயேசுவோடு தன்னையே இணைத்துக்கொள்ளுதல். ஆக, ஓர் அருள்பணியாளர் முதலில் தன்னையே கிறிஸ்துவோடு இணைத்துக்கொள்ள வேண்டும். (அப்படி இணைத்தால்தான் தன் மக்களை இறைவனோடு இணைக்க முடியும்).

ஆ. 'உங்களையே மறுத்தல்' என்றால், 'இனி நான், எனது, எனக்கு' என்று எதுவும் இல்லை என்பது பொருள்.

இ. 'எவ்வித வற்புறுத்தலுமின்றி.' என் ஏழு ஆண்டு அருள்பணி வாழ்வுப் பயணத்தில் இந்த வார்த்தைதான் இன்று எனக்கு ரொம்ப முக்கியமானதாகத் தெரிகின்றது. நானாக விரும்பி, யாருடைய வற்புறுத்தலுமின்றிதான் அருள்பணிநிலையை ஏற்றுக்கொள்கிறேன் என்றால், நான் எவ்வித முணுமுணுப்பும், எதிர்பார்ப்பும் இன்றி பணி செய்ய வேண்டும். மேலும், ஒன்றை விரும்பி ஏற்றுக்கொண்டபின், அதில் நிலைத்திருக்க வேண்டுமே தவிர, 'இன்னொன்றையும் நான் விரும்புகிறேன், அதுவும் எனக்கு வேண்டும்' என நினைப்பது மேன்மையன்று.

கேள்வி 3:

தலையும், மேய்ப்பருமான கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி, மனித விருப்பங்களால் வழிநடத்தப்படாமல், உங்கள் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் (வழிநடத்தப்பட்டு), கடவுளின் மறைபொருள்களை புனித நற்கருணை மற்றும் மற்ற வழிபாட்டு செயல்பாடுகள் வழியாக நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக இருக்கவும், மீட்பின் வார்த்தையின் பணியை பற்றுறுதியடன் நிறைவேற்றவும் விரும்புகிறீர்களா?

அருள்பணியாளர்கள்: ஆம், விரும்புகிறேன்.

இங்கேயும் மூன்று கூறுகள் முக்கியமானவை:

அ. முதல் வாக்குறுதி (கேள்வி 2) அருள்பணியாளரின் தனிநபர் வாழ்வையும், இரண்டாம் வாக்குறுதி (கேள்வி 3) அவரின் பணிவாழ்வையும் மையப்படுத்தி இருக்கிறது. பணிவாழ்வு 'மனித விருப்பங்களால்' உந்தப்படக்கூடாது. அதாவது, தான் செய்யும் ஒவ்வொரு (வழிபாட்டு) செயலிலும், 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்று அருள்பணியாளர் எண்ணக் கூடாது. 'இந்தப் பூசை வைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' 'வீடு சந்திக்கச் சென்றால் என்ன கிடைக்கும்?' 'இவரிடம் நான் நல்ல நட்பை வளர்த்துக்கொண்டால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற எண்ணங்கள் அறவே கூடாது. இப்படிப்பட்ட கேள்விகள் ஓர் அருள்பணியாளரை ஒரு முதலாளியாக ('capitalist') ('எதில் நான் இன்வெஸ்ட் செய்தால் எனக்கு அதிக பலன் கிடைக்கும?') அல்லது நுகர்வோராக ('consumer') ('இவரிடமிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?') மாற்றிவிடும். அருள்பணியாளர் தன் சகோதரர்கள்மேல் கொண்ட அன்பினால் உந்தப்பட வேண்டும். பங்குத்தளத்தில் பணியாற்றும் ஓர் அருள்பணியாளர் அந்தப் பங்குத்தளத்தின் 'பாஸ்' அல்ல. மாறாக, சகோதரர். அந்த நிலையில்தான் அவர் தன் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

ஆ.கடவுளின் மறைபொருள்களையே அருள்பணியாளர் நிறைவேற்றுகின்றார். 'மறைபொருள்' என்பதால் இங்கே நம்பிக்கை மிக முக்கியமானது. கடவுளின் மறைபொருள்கள் மேல் எனக்குள்ள நம்பிக்கை முதலில் ஆழப்பட வேண்டும். மேலும், இது கடவுளின் மறைபொருள் என்பதால், நான் என் மூளையைக் கசக்கி விடை கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இ. 'நம்பகத்தன்மை.' 'பற்றுறுதி.' மக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு வங்கியில் போடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த வங்கியின் மேல் அவர்களுக்கு முதலில் நம்பகத்தன்மை வரவேண்டும். அந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளரின் நம்பிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டும். தாங்கள் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதியில் பற்றுறுதியோடு இருத்தல் வேண்டும். ஓர் அருள்பணியாளர் ஒரு வங்கி அதிகாரியைவிட அதிக பொறுப்பு கொண்டவர். நான் என் நண்பனிடமும் சொல்லத் தயங்கும் என் இரகசியத்தை, என் தனிவாழ்வை ஓர் அருள்பணியாளரிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், அது என் குளியலறையை அவருக்குத் திறந்து காட்டுவது போன்றது. 'இதுதான் நான்!' என்று என்னிடம் மக்கள் தங்களையே முழுமையாக நிறுத்துகிறார்கள் என்றால், நான் எவ்வளவு நம்பகத்தன்மை கொண்டவராகவும், நான் தரும் வாக்குறுதியில் பற்றுறுதி கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

நீண்ட கதையை ஒற்றை வாக்கியத்தில் சுருக்கினால், எனக்கும் எனக்கும், எனக்கும் இறைவனுக்கும், எனக்கும் என் சகோதரர்களுக்கும் உள்ள உறவு என்பது ஒரு வாக்குறுதி. நான் காப்பாற்றும் ஒவ்வொரு வாக்குறுதியும் அருள்பணிவாழ்வு என்ற ஓவியத்தில் நான் தூரிகையால் தீட்டும் வண்ணக் கோடுகள். நான் தவறும் ஒவ்வொரு வாக்குறுதியும் அந்த ஓவியத்தில் நான் கத்தியால் இழுக்கும் கீறல்கள்.

'இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை. அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' (பவுல், 2 கொரி 4:7).


Tuesday, March 22, 2016

ஏற்றமும் இறக்கமும்

எஸ்தர் (கி) 5:9 - 7:10 ஆமோனின் இறக்கத்தையும், மொர்தெக்காயின் ஏற்றத்தையும் பதிவு செய்கிறது.

'ரொம்ப ஆடாதடா!' என்று நம்ம ஊர்ல சொல்வாங்க. அந்த நிலைக்கு ஆளாகிவிடுகிறான் ஆமான்.

'அரசனுக்கு அப்புறம் நான்தான்!'
'அரச முத்திரையை பயன்படுத்துவது நான்தான்!'
'விருந்துக்கு அழைக்கப்பட்டது நான்தான்!'
'எல்லார்முன் பெருமைப்படுத்தப்பட்டது நான்தான்!'
என 'எல்லாம் நான்தான்' என எண்ணிக்கொண்டிருந்த ஆமானுக்கு, மொர்தெக்காயைப் பார்க்கும்போதெல்லாம் கோபம், கோபமாக வருகிறது. 'மொர்தெக்காயை ஒழித்துக்கட்ட வேண்டும்!' என்று தன் மனைவி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து சூழ்ச்சி செய்கிறான் ஆமான்.

இதற்கிடையில், மொர்தெக்காய் அரசனின் உயிர்காப்பாற்றிய நிகழ்வைப் பற்றி அவனது அலுவலர்கள் அவனுக்குச் சொல்ல, அரசனும் மொர்தெக்காயை பெருமைப்படுத்த நினைக்கிறான்.

'ஒருவனை எப்படி பெருமைப்படுத்தலாம்?' என பொத்தாம்பொதுவாக அரசன் ஆமானைக் கேட்க, ஆமானும், தன்னைத்தான் அரசன் பெருமைப்படுத்தப்போகிறான் என நினைத்து, 'அப்படி செய்யணும்!' 'இப்படி செய்யணும்!' 'மெல்லிய ஆடைகள் அணிவிக்கணும்!' 'உயர்ரக குதிரையைக் கொடுக்கணும்!' 'நகரைச் சுற்றிவரணும்!' என சொல்கிறான். ஆனால், இந்த மரியாதை அனைத்தும் மொர்தெக்காய்க்குச் செய்யப்படுகிறது. கூனிக்குறுகி, தன் தலையை மூடிக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறான் ஆமான்.

'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்பதுபோல, தொடர்ந்து எஸ்தரும், ஆமான் அனுப்பிய அரசாணை பற்றி அரசனிடம் போட்டுக்கொடுக்கிறாள்.

'எஸ்தர், என்னை ஒன்றும் செய்துவிடாதே!' என்று எஸ்தரின் காலைப் பிடித்து ஆமான் ஒருநாள் கெஞ்சிக் கொண்டிருக்க, 'ஏன்டா, என் மனைவியையே தொட்டுப் பேசுகிறாயா?' என கோபம் கொள்ளும் அரசன், ஆமான் நட்டுவைத்த தூக்குமரத்திலேயே அவனைத் தூக்கிலிடுகிறான்.

தம்பி ஆமான், 'மற்றவருக்கு நாம் தீங்கு நினைத்தால் அந்த தீங்கு நமக்கே திரும்பி வரும்' என்றும்,

ஐயா மொர்தெக்காய்,  'தன் மதிப்பு இன்று மற்றவர்களுக்குத் தெரியவில்லையென்றாலும், ஒருநாள் கண்டிப்பாக தெரியும்' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்.

Monday, March 21, 2016

உனக்கு என்ன வேண்டும்?

'என் இக்கட்டான நிலையை நீர் அறிவீர்.
பொதுவில் தோன்றும்போது தலைமீது அணிந்து கொள்ளும்
என் உயர்நிலையின் அடையாளத்தை
நான் அருவருக்கிறேன். தீட்டுத் துணிபோல் வெறுக்கிறேன்.
தனியாக இருக்கும்போது நான் அதை அணிவதில்லை'
(எஸ்தர் (கி) 4:17)

மொர்தெக்காயின் மன்றாட்டைத் தொடர்ந்து, எஸ்தரின் மன்றாட்டையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். மன்றாட்டின் இறுதியில் வரும் மேற்காணும் வசனம், எஸ்தரின் எளிய உள்ளத்தைக் காட்டுகிறது. எஸ்தர் தானாக அரசி பதவிக்கு ஆசைப்பட்டவர் இல்லை என்பதையும், அரசிக்குரிய கிரீடத்தையும் தான் வெறுப்பதாகவும் சொல்கின்றார்.

தன் நோன்பு மற்றும் மன்றாட்டுக்களை முடித்துக் கொள்கின்ற எஸ்தர் எழுந்து மன்னனிடம் செல்கின்றார்.

மன்னன் அழைத்தாலொழிய யாரும் அவனிடம் செல்ல முடியாது என்பதால், உடல்நிலை சரியில்லாதவள்போல் தன் பணிப்பெண் மேல் சரிந்து கொண்டே செல்கின்றார். மன்னனின் இரக்கத்தையும், கருணையையும் பெரும் வழி இது.

மன்னனின் பிரசன்னத்தில் எஸ்தர் மயங்கி விழ, அரசன் அவரைத் தேற்றுகிறான்.

'எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் விருப்பம் யாது? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன்' என்கிறான் அரசன்.

தன் பிறந்தநாள் அன்று தன் முன் நடனமாடி தன்னையும், விருந்தினர்களையும் மகிழ்வித்த சலோமியிடமும், ஏரோது இதே வார்த்தைகளையே சொல்கிறான். 'அரசை வைத்து அரசி என்ன செய்வாள்?' என்ற தைரியத்தில்தான் அரசர்கள் இப்படிக் கேட்டார்களோ என்னவோ!

அரசன் கேட்ட இந்தக் கேள்வியிலேயே புத்தகத்தின் முடிவு தெரிந்துவிடுகிறது. அரசன் மனமிரங்கிவிட்டான். எஸ்தரும் தான் நினைத்தை சாதித்துவிடுவாள்.

இப்போ எஸ்தருக்கு இருக்கும் பிரச்சினைகள் இரண்டு:

அ. தன் இனத்தின்மேல் வெறுப்பு கொண்டிருக்கும் ஆமான் அழிய வேண்டும்.
ஆ. தன் இனத்தை அழிப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும்.

இரண்டு பிரச்சினைகள் என்பதால், இரண்டு விருந்துகள் கொடுக்கின்றார் எஸ்தர். இரண்டு விருந்திலும், மன்னனும், ஆமானும் மட்டுமே அழைக்கப்பெறுகின்றனர்.


Sunday, March 20, 2016

மொர்தெக்காயின் மன்றாட்டு

எஸ்தர் (கி) பிரிவு 4ல் இரண்டு இடைநில் பாடல்கள் இருக்கின்றன:.

இந்த இரண்டுமே மன்றாட்டுக்கள். முதல் மன்றாட்டு மொர்தெக்காயினுடையது. இரண்டாவது எஸ்தருடையது.

மொர்தெக்காயின் மன்றாட்டின் (4:17a-17j) உட்கூறுகளைப் பார்ப்போம்.

கடந்த இரண்டு பிரிவுகளுக்கு முன், மொர்தெக்காய் ஆமானுக்கு வணக்கம் செலுத்த மறுத்தார் என குறிப்பிட்டிருந்தோம். தான் எதற்காக ஆமானுக்கு வணக்கம் செலுத்தவில்லை என்று அதன் காரணத்தை தன் மன்றாட்டில் குறிப்பிடுகின்றார்:

'தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்கு காரணம்
செருக்கோ இறுமாப்போ வீண்பெருமையோ அல்ல என்பதையும் நீர் அறிவீர்.
இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக்கூட முத்தமிட்டிருப்பேன்.
ஆனால் கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது என்பதற்காகவே
இவ்வாறு நடந்து கொண்டேன்.'

பச்சிளங்குழந்தைகளின் உள்ளங்கால்களை நாம் முத்தமிட்டிருப்போம்.

கொஞ்சம் மிஞ்சிப்போய், காதலியின் உள்ளங்கால்களையும் முத்தமிட்டிருக்கலாம்.

'உள்ளங்காலை முத்தமிடுதல்' என்பது 'உள்ளங்காலில் ஒட்டியிருக்கும் தூசி அளவு என்னையே தாழ்த்துகிறேன்' என்பதற்கான உருவகம்.

மொர்தெக்காய் தன் கடவுளாகிய ஆண்டவரைத் தவிர மனிதர்கள் எவரையும் வணங்க, அல்லது திருப்திபடுத்த விரும்பாதது, அவரின் நிறைவான மனத்தைக் காட்டுகிறது.

மேலும்,

'உரிமைச்சொத்து,' 'உடைமை' என்ற இரண்டு வார்த்தைகள் வழியாக தன் மக்களை அடையாளப்படுத்துகிறார்.

இறுதியாக,

மக்களும் தங்கள் ஆற்றலெல்லாம் கூட்டி ஆண்டவரை நோக்கிக் கத்தினார்கள் என்று பாடல் நிறைவடைகிறது.

'ஏனெனில் தங்களது சாவு பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்'

இதுதான் மக்கள் அனுபவித்த பெரிய துன்பம்.

நாம் பிறந்த நாள் முதல் சாவின் நிழல் நம்மீது நீண்டு கொண்டே இருக்கின்றது. இந்த சாவின் நிழல் இப்போது அழுத்தும் இருளாக இருந்தால், வேறு ஒன்றையும் நம்மால் பார்க்க முடியாமல் போய்விடும். அப்படித்தான் இருக்கிறார்கள் இந்த மக்கள்.

'சாவின் நிழல்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (திபா 23:4)


Saturday, March 19, 2016

ஆன்மீகம் மட்டுமே

தங்கள் எல்கைக்குட்பட்ட எல்லா நகரங்களில் வாழும் யூதர்களை அழித்துவிட ஆணையிட்டுவிட்டு, அரசனும், ஆமானும் குடிமயக்கத்தில் இருக்கின்றனர். மக்களோ குழப்பத்தில் இருக்கின்றனர்.

அரசாணை அறிவிக்கப்பட்டவுடன் யூதர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்றும் அவர்களின் உணர்வுகள் எப்படி இருந்தன என்றும் பதிவு செய்கின்றது எஸ்தர் (கி) 4:1-17.

அரசானையைக் கேட்ட மொர்தெக்காய் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, சாக்கு உடை அணிந்து, தன்மேல் சாம்பல் பூசிக்கொள்கின்றார்.

'உன் சித்தப்பா சாக்கு உடை அணிந்திருக்கிறார்!' என எஸ்தர்க்கு சொல்லப்படுகிறது.

'அதைக் கழற்றி விட்டு இந்த புதிய ஆடைகளை அணிந்துகொள்ளச் சொல்லுங்கள்!' என்று புதிய ஆடைகளைக் கொடுத்துவிடுகிறார்.

எதற்காக சித்தப்பா ஆடைகளைக் கிழித்துக் கொண்டார் என்பது எஸ்தர்க்கு தெரியவில்லை. அதாவது, அரசன் செய்யும் எதுவும் அரசிக்குத் தெரியவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா?

அப்படித்தான் அரசியர் வைக்கப்பட்டனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு இரகசியம் காப்பதில்தான் இருக்கின்றது. பெண்களுக்கு தெரிந்து விட்டால் அது எல்லாருக்கும் தெரிந்துவிடும் என்பதற்காக அரசின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடங்களில் பெண்களை அனுமதிக்கவில்லை அக்கால அரசர்கள். மேலும், அரசியாகவே இருந்தாலும் அரசன் தனக்கென்ற இரகசியங்களை தானே வைத்துக்கொண்டான். மேலும், அந்தப்புரம் என்பது ஒரு இரும்புச்சுவர். வெளியுலகின் நடப்புக்கள் தெரிய வாய்ப்பில்லை. அரண்மனையே அப்படித்தான் இருந்தது. ஆகையால்தான், 'மாதம் மும்மாரி பெய்கின்றதா?' எனக் கேட்கின்றான் அரசன். நாட்டில் மழை விழுவது கூட அரசனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதை தெரிந்து கொள்ள அவனுக்கு நேரமுமில்லை.

தான் அரசல் புரசலாகக் கேட்ட அரசாணை பற்றி உறுதி செய்து கொள்ள மொர்தெக்காயிடம் தூது அனுப்புகின்றார் எஸ்தர். உறுதி செய்வதற்காக கடிதத்தின் ஒரு பிரதியை அனுப்புகின்றார் மெர்தெக்காய். மேலும், எஸ்தர் எப்படியாவது முயற்சி செய்து காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்கின்றார்.

எஸ்தர் பயந்து சாகின்றாள். 'அரசன்முன் எப்படி செல்வது? நானே அவரைப் பார்த்து 30 நாட்கள் ஆகிவிட்டன!' என்கிறார். எஸ்தர் பின்வாங்குகிறாள்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட மொர்தெக்காயுக்கு கோபம் வருகிறது.

'நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ண வேண்டாம்!' என எச்சரிக்கின்றார். மேலும், 'நீ இந்த நேரத்தில் வாளாவிருந்தாலும், ஒன்றும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டாலும் வேறு வழியாக பாதுகாப்பு யூதர்களுக்கு வரும்!' என்கிறார்.

மொர்தெக்காயின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, 'எஸ்தர் ஒரு சந்தர்ப்பவாதி, பிழைக்கத் தெரிந்தவள்!!' என எண்ணத் தோன்றுகிறது. அதாவது தனக்குக் கிடைப்பது கிடைத்துவிட்டால் போதும். அடுத்தவர்களைப் பற்றி அவருக்குக் கவலையில்லை.

ஆனால், அவர் அப்படிப்பட்டவர் அல்லர்.

'எனக்காக செபியுங்கள்' என்று சொல்லிவிட்டு, தானும் செபிக்கத் தொடங்குகின்றார்.

... ... ...
... ... ...

'எனவே ஆண்டவரிடம் மன்றாடு.
பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு.
நம்மைச் சாவினின்று காப்பாற்று!'

மொர்தெக்காய் இப்படித்தான் முதலில் தூதுவிடுகின்றார்.

எஸ்தர் செய்ய வேண்டிய செயல்கள் மூன்று:

அ. மன்றாட வேண்டும்
ஆ. பரிந்து பேச வேண்டும்
இ. சாவினின்று காப்பாற்ற வேண்டும்

'செபம் பண்ணுங்க போதும்!' என்று விட்டுவிடவில்லை. 'பரிந்து பேச வேண்டும்!' என்றும் சொல்கின்றார்.

அதாவது, ஆன்மீகம் மட்டுமே உதவாது.

என்னதான், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்!' என்று செபம் செய்தாலும், வீட்டுல அடுப்பை நாமதான் பத்த வைக்கணும்!



Friday, March 18, 2016

நாங்கள் vs. அவர்கள்

நம் மனித மனம் மனிதர்களை இரண்டு குழுக்களுக்குள் அடக்குகிறது: ஒன்று, 'நாங்கள்' ('We' / 'Us'). மற்றது, 'அவர்கள்' ('They' / 'Them') 'நாங்கள்' என்பது 'எங்களின் நாடு, எங்களின் மக்கள், எங்களின் கடவுள்,' என்று நாம் உரிமை கொண்டாடுவது. 'அவர்கள்' என்பது 'அவர்களின் நாடு, அவர்களின் மக்கள், அவர்களின் கடவுள்,' என்று தள்ளி வைப்பது. இந்த இரண்டும் மனித கலாச்சாரம் சொல்லிக் கொடுத்த பகுப்புகள். நாம் பிறந்து, வளர்ந்தபோதே, நாம் யாரோடு பேச வேண்டும், என்ன படிக்க வேண்டும், யாரை வழிபட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், யாரை திருமணம் முடிக்க வேண்டும் என 'நாங்கள்' சார்ந்த எல்லாவற்றையும் கற்பித்துவிடுகிறது நம் குடும்பம். இந்த 'நாங்கள்' என்ற எல்கையைத் தாண்டுபவர்கள் எல்லாம் குற்றவாளிகள். கடந்த வாரம் உடுமலைப்பேட்டையில் நடந்த சங்கர் படுகொலைக்கு இதுதான் காரணம். 'கௌசல்யா' 'நாங்கள்' குழுவையும், 'சங்கர்' 'அவர்கள்' குழுவையும் சார்ந்தவர்கள் (குழுவின் பெயரை மாற்றியும் எழுதிக்கொள்ளலாம்). சங்கர் என்பவர்கள் தன் குழு எல்கையை மீறி அடுத்தவர் குழுவுக்குள் நுழைந்தது குற்றம் எனக் கருதப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்.இது சரியா? தவறா? என்றெல்லாம் நம்மால் ஒட்டுமொத்தமாகச் சொல்ல முடியாது. அந்தந்த குழுவைப் பொறுத்தே நன்மை-தீமை நிர்ணயிக்கப்படுகிறது.

என் எல்லையைத் தாண்டி நானும் வரமாட்டேன், உன் எல்லையைத் தாண்டி நீயும் வரக்கூடாது என்ற எழுதாத சட்டத்தை இது கொண்டிருக்கிறது. 'நாங்கள்,' 'அவர்கள்' என்ற இரண்டு குழுக்களுக்கு இடையே இருக்கும், உரசல், மோதல், இறுக்கம்தான் வரலாற்றை நகர்த்துகிறது என்கின்றனர் சமூகவியல் அறிஞர்கள்.

எஸ்தர் 2:19 - 3:15ல் 'நாங்கள்,' 'அவர்கள்' என்ற இரண்டு குழுக்களுக்கும் இடையே உள்ள போராட்டத்தைத்தான் பார்க்கின்றோம்.

இங்கே 'நாங்கள்' என்பவர்கள் பாரசீகர்கள். 'அவர்கள்' என்பவர்கள் யூதர்கள்.

'நாங்கள்' என்ற குழுவில் அரசன் அர்த்தக்சஸ்தா, அரசி ஆஸ்தின், அரசனுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஆமான் ஆகியோரும், 'அவர்கள்' என்ற குழுவில் அரசி எஸ்தர், அவரின் சித்தப்பா மொர்தெக்காய் ஆகியோர் இருக்கின்றனர்.

யூதப் பெண் எஸ்தர் பாரசீக மன்னனின் அரசியாகிவிட்டார்.

மொர்தெக்காய் அரசனை பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியதால் அரண்மனையின் முக்கியப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுவிட்டார்.

எல்லாம் நல்லா போனால் கதை எப்படி தொடரும்?

மொர்தெக்காயின் வில்லனாக வருகின்றான் ஆமான்.

'எல்லாரும் எனக்கு குட்மார்னிங் சொல்றாங்க! ஆனா, இந்த மொர்தெக்காய் மட்டும் சொல்ல மாட்றான்! அவன் யூதன் என்பதால் திமிர்!' என்று நினைக்கின்ற ஆமான், மொர்தெக்காயை அழிக்க நினைத்து, ஒட்டுமொத்த யூதர்களையும் அழித்துவிட திட்டமிடுகிறான்.

வரலாற்றில் நடந்த பெரிய படுகொலைகளுக்கெல்லாம் காரணம் இப்படிப்பட்ட சின்ன விஷயங்கள்தாம்.

இந்த திட்டத்தை வேகமாக நிறைவேற்ற வேண்டுமென்றால், அரசாணை தான் வழி என எண்ணுகின்ற ஆமான் அரசனின் மண்டையைக் கழுவி, அவனையும் சம்மதிக்க வைத்துவிடுகிறான்.

பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில் ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு அரசன் அனுப்பிய ஆணை, 27 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

இந்த மடலின் முக்கியத்துவம் என்னவென்றால், இம்மடல் 'இந்தியா' என தொடங்குகிறது. இது நம்ம இந்தியாதான் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது, பாரசீகர்களின் ஆட்சி இந்தியாவின் பஞ்சாப் வரை பரவியிருந்தது. மேலும், இந்தியாவில் அன்றுதொட்டு இன்றுவரை யூதர்கள் இருக்கின்றார்கள். விவிலியத்தில் குறிப்பிடப்பட்ட பெயருடன் இன்று வரை உயிரோடு இருக்கும், வெகுசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இப்போதுதான் கதையின் இறுக்கம் அதிகமாகிறது:

'எல்லா யூதர்களும் அழிக்கப்படுவார்களா?

அரசவையில் அரசியாக இருக்கும் எஸ்தர் யூதர்களைக் காப்பாற்றுவாரா?

தன்னை யூதர் என்று அரசனிடம் வெளிப்படுத்துவாரா?

அப்படி அவர் வெளிப்படுத்தினால் அரசி பட்டம் பறிக்கப்படுமா?

அப்படி அவர் வெளிப்படுத்தாமற்போனால் யார் காப்பாற்றுவார்?'

என கேள்விகள் மின்னி மறைகின்றன நம் மனதில்.

எஸ்தர் (கி) 3ஆம் பிரிவு மிக அழகான வசனத்துடன் முடிகிறது:

'(இவ்வாணை அறிவிக்கப்பட்டபின்) மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்.
நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!'

'நாங்கள்' என்ற பாரசீகர்களுக்குள்ளும் இப்போது, 'ஆள்வோர்' (அரசன், ஆமான்) என்ற 'நாங்களும்,' 'ஆளப்படுவோர்' (மக்கள்) என்ற 'அவர்களும்' உருவாகிவிடுகின்றனர்.

சென்னையில் வெள்ளம் வந்து மக்களையும், உடைமைகளையும் வாரிக்கொண்டு சென்றபோது, நம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தூக்கம் வந்திருக்குமா? என்று நினைத்தேன்!

அந்தக் கேள்விக்கு விடை இன்று கிடைத்தது:

பிரச்சனை என்ற ஒன்று வந்தால்...ஆள்வோர் குடிமயக்கத்தில் இருப்பர், ஆளப்படுவோர் குழப்பத்தில் இருப்பர்.

சாதி, மதம், இனம், மொழி - இவற்றால் எழும் பிரச்சினைகள்தாம் ஆள்வோரின் பலம். இவைகள் இருந்தால்தான் அவர்களின் இருப்பும் இருக்கும். பிரச்சினைகளைத் தக்க வைக்க தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்துவிட்டு, நன்றாகத் தூங்குவர்.

தேடல் தொடரும்.


Thursday, March 17, 2016

அழகான கள்ளி

எஸ்தர் நூல் (கி) 2:5-18, எஸ்தர் அரசி ஆவதை விவிரிக்கிறது.

1. சித்தப்பா மகள்

எஸ்தர் அம்மினதாபின் மகள். அம்மினதாபு மற்றும் அவர் சகோதரர் மொர்தெக்காய் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர்கள். பென்யமின் குலத்தில் பிறந்த சவுல்தான் இஸ்ரயேலின் முதல் அரசனாக மகுடம் சூடுகின்றார். ஆக, எஸ்தர் தன் இரத்தத்திலேயே அரச ஜீன்களைக் கொண்டிருக்கிறார். எஸ்தரின் பெற்றோர் இறந்துவிட, அவரை தன் வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொள்கின்றார் மொர்தெக்காய். அவரை வளர்த்து, பின் தானே அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார் மொர்தெக்காய். எஸ்தர் மொர்தெக்காயின் சகோதரின் மகள் என்றால், அவர் அவளுக்கு சித்தப்பா முறை வேண்டும். எஸ்தர் அவளுக்கு மகள் முறை. மகளையே எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்? என்ற கேள்வி தேவையில்லை. முதல் ஏற்பாட்டில் 'சகோதரன்' என்பது எல்லா இரத்த உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. 'அவள் அழகில் சிறந்த பெண்மணி' என்ற ஒற்றைச் சொல்லாடல் வழியாக எஸ்தரை வர்ணிக்கிறார் ஆசிரியர். ஆக, மொர்தெக்காயும், எஸ்தரும் சூசா நகரில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நேரத்தில்தான் அரசிக்கான நேர்காணல் பற்றிய அறிவிப்பு வருகிறது. எஸ்தரின் வயது 14 முதல் 16க்குள்தான் இருக்க வேண்டும்.

2. கண்களில் தயவு கிடைத்தது

நேர்காணல் அழைப்பு மட்டும் அல்ல. அது கண்டிப்பான கடமையாக இருக்கின்றது. அதாவது, எல்லா இளம் பெண்களும் கண்டிப்பாக இதில் பங்கேற்க வேண்டும். சூசா நகரின் எல்லாப் பெண்களும் கொண்டு வரப்பட்டு, பொறுப்பாளர் காயுவிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். காயுவுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள்மேல் அவர் பரிவு காட்டுகிறார். அவளுக்கு வேண்டிய ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உணவை உடனே கொடுக்கின்றார். மேலும் அவளுக்குப் பணி செய்ய ஏழு பணிப்பெண்களையும் கொடுத்து, அந்தப்புரத்தில் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்.

'கண்களில் தயவு கிடைத்தல்' என்பது முதல் ஏற்பாட்டில் முக்கியமான சொல்லாடல். ஆபிரகாமுக்கு எகிப்திய பாரவோனின் கண்களில் தயவும், யாக்கோபுக்கு ஏசாவின் கண்களில் தயவும், யோசேப்புக்கு போத்திபாரின் கண்களில் தயவும், தாவீதுக்கு சவுலின் கண்களில் தயவும் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் முன்பின் தெரியாத ஒரு நாட்டிற்குச் செல்லும்போது, அவர் என்னதான் கெட்டிக்காரராக, ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், அங்கிருப்பவரின் தயவு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. கண்களில் தயவு கிடைப்பது மிக முக்கியமான ஒன்று. அப்படி நமக்கு கிடைக்கும் தயவு நம்மையே புதிய மனிதராக மாற்றிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பக்கத்திலிருந்து பார்த்தால், நம் எல்லாருக்கும் யாராவது ஒருவரை பார்த்தவுடன் பிடித்துவிடும் அனுபவம் இருக்கும். அவர் மேல் நமக்கு தயவு இருக்கும். அவர் என்ன செய்தாலும் சரி என்று தோன்றும். அவர்மேலேயே நம் கண்கள் இருக்கும்.

அப்படித்தான் இருக்கிறது காயுவுக்கு. எஸ்தரைப் பார்த்தவுடன் காயுவுக்கு பிடித்துவிடுகிறது. இதில் கடவுளின் கரம் அல்லது சப்கான்சியஸ் லெவலின் பொருத்தமும் இருக்கிறது.

3. பெயர் சொல்லி அழைத்தல்

(எஸ்தர் தான் ஒரு யூதப்பெண் என்பதை வெளிப்படுத்தவில்லை. மேலும் அப்படி வெளிப்படுத்த வேண்டாம் என்று மொர்தெக்காய் அவருக்கு கட்டளையிட்டிருக்கிறார். எஸ்தரை அந்தப்புரத்தில் விட்டாலும், அவர்மேல் தன் கண்களை பதித்து காவல் காக்கிறார் மொர்தெக்காய்)

நேர்காணலுக்கான தயாரிப்பு பன்னிரண்டு மாதங்கள் நடக்கின்றது. ஆறுமாதம் வெள்ளைப் போளம் பூசியும், ஆறுமாதம் நறுமணப் பொருட்கள் பூசியும் தங்களையே தயாரிக்கின்றனர் பெண்கள். அதன்பின் ஒவ்வொருவரும் அரசனின் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். அரசனோடு இரவைக் கழித்த பெண், அடுத்த நாள் வேறு அந்தப்புரத்திற்கு மாற்றப்படுவர். ஆக, அரசனோடு இருக்கும் வாய்ப்பு ஒருமுறை தான் கொடுக்கப்படுகிறது. மேலும், நேர்காணல் முடித்தவர்களை, முடிக்காதவர்களிடமிருந்து பிரிக்க இந்த டெக்னிக்கை பயன்படுத்துகின்றனர்.

அரசனுக்கு ஒருத்தியைப் பிடித்திருக்கிறது என்றால், அவளை 'பெயர் சொல்லி அழைப்பார்.' அப்படி பெயர் சொல்லி அழைக்கப்பட்டால், அவள் மீண்டும் அரசனிடம் செல்லலாம். நேர்காணலில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும், எப்படி நடந்திருக்கும் என்று எதுவும் தெரியவில்லையென்றாலும், மாலையில் போய் காலையில் வருவார்கள் என்ற சொல்லாடலைப் பார்க்கும்போது நம் உதட்டோரம் சின்ன புன்னகை வந்து போகிறது!

அரசன் தன்னிடம் வரும் எல்லாப் பெண்களின் பெயர்களைக் கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தனக்குப் பிடித்தவளின் பெயரை மட்டுமே கேட்கின்றான். கேட்பதோடல்லாமல் அவளை திரும்ப அழைப்பதற்காக தன் நினைவிலும் பதித்துக்கொள்கிறான். ஆக, அரசனின் நினைவில் இருக்கும் அளவுக்கு ஒருத்தி முக்கியத்துவம் பெற்றாள்தான் அவள் திரும்ப அழைக்கப்படுவாள்.

'கடவுள் என்னைப் பெயர்சொல்லி அழைத்தார்' என்று இறைவாக்கினர்கள் எசாயா, எரேமியா தங்களைப் பற்றிச் சொல்கின்றனர். இதன் பொருள் இப்போதுதான் புரிகிறது. இவர்கள் கடவுளின் நினைவில் நின்றவர்கள். அது பெரிய பாக்கியமே!

4. கண்டதும் காதல்

ஏழாம் ஆண்டில், பன்னிரண்டாம் மாதத்தில் அரசனிடம் செல்கின்றாள் எஸ்தர். ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக, அழகானவராக இருந்தாலும், நேரமும், காலமும் கூடி வந்தால்தான் அவர் வெற்றி பெற முடியும் என்பது முதல் ஏற்பாட்டு கால நம்பிக்கை. 'ஏழு', 'பன்னிரண்டு' என நிறைவு கூடிவரும் நேரத்தில் எஸ்தர் அந்தப்புரம் செல்கின்றாள். அவளின் அழகில் அரசன் மயங்குகிறான். கண்டதும் காதல் கொள்கின்றான். அரசனுக்கு வயது 30 முதல் 35 இருக்கலாம். 'மற்ற எல்லாப் பெண்களையும்விட எஸ்தரை மிகவும் விரும்பியதால், அவளை அரசியாக்குகிறான்' அரசன்.

5. விருந்தும், வரிவிலக்கும்

விருந்துக்கு வர மறுத்த தன் முன்னாள் மனைவி ஆஸ்தினைக் கடுப்பேற்றுவதற்காக, புதிய அரசி தேர்வானதை விருந்து வைத்து அறிவிக்கின்றான் அரசன். அதுவும் ஏழுநாள் நடக்கிறது. அடுத்து அரசன் செய்யும் செயல் மிக முக்கியமானது: 'தம் ஆட்சிக்கு உட்பட்டோர்க்கு வரிவிலக்கு அளிக்கின்றான்' (2:18). வரி தான் ஒரு அரசின் முதுகெலும்பு. வரி இல்லாவிட்டால் ஓர் அரசு முடங்கிவிடும். அதையே வேண்டாம் என்று அரசன் ஏன் சொல்கிறான் என்றால், அந்த அளவுக்கு அவன் மயங்கிவிட்டான். 'எனக்கு எஸ்தர் கிடைத்துவிட்டதால், வாழ்வில் எல்லாம் கிடைத்துவிட்டது, இனி வரியும் வேண்டாம், காசும் வேண்டாம்!' என சொல்லும் அளவுக்குப் பிடித்துவிடுகிறது எஸ்தரை.

எஸ்தர் - ஓர் அழகான கள்ளி!

தேடல் தொடரும்.



Wednesday, March 16, 2016

ஒப்பனைப் பொருட்கள்

1. கடந்த வருடம் என்னுடன் பங்குப் பணியாற்றிய கொலம்பிய நாட்டு அருட்பணியாளர், தன் நாட்டின் இளவல் இருத்தி 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றதையும், அவரின் ஃபோட்டோவையும் பலரிடம் காட்டிக் கொண்டிருந்தார். 'என் நாட்டு பெண்கள்தாம் அழகிகள்!' என்று மார்தட்டிக்கொண்டார். 'இந்தியா மிஸ் யுனிவர்ஸ்' வாங்கியிருக்கா? - எனக் கேட்டார். 'ஆம், வாங்கியிருக்கிறது. ஆனால், இனி அந்தப் பட்டம் தேவையில்லை' என்றேன். உலக அழகிப் போட்டி என்பது ஒரு வியாபாரத் தந்திரம். Olay, Avon, L'Oréal, Neutrogena, Nivea, Lancôme, Dove, Estee Lauder, Bioré, Shiseido போன்ற நிறுவனங்கள்தாம் இந்தப் போட்டியை ஸ்பான்சர் செய்பவை. அழகு என்பது எது என்பதை இவர்கள் நிர்ணயிப்பார்கள். தங்கள் சந்தை எந்த நாட்டில் விரிக்கப்பட வேண்டுமோ அந்த நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள ஒரு இளவலை 'உலக அழகி' என அறிவிப்பார்கள். பின் அந்த நாட்டில் உள்ள எல்லா இளவல்களும், இந்த 'உலக அழகி' போல உடுத்த, அழகுசெய்ய ஆசைப்படுவார்கள். இவர்களும் அங்கே போய் கடை விரிப்பார்கள். ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா என நம்ம ஊர் அழகிகள் அறிவிக்கப்பட்டபோது வேகமாக நம் ஊருக்குள் நுழைந்த இந்த வியாபாரிகள் நம் வீட்டுப் பெண்களின் குளியலறைக்குள் இருந்த மஞ்சள், சந்தனம் போன்றவற்றை வேகமாக வெளியேற்றிவிட்டு, தங்களின் ரோஸ் பவுடர், க்ரீம்களால் நிறைத்தனர். அன்று முகத்தில் வளரும் முடியைக் குறைக்க மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் எல்லாம் இன்று ஆவோன், ஓலே ரோல் ஓவர் க்ரீம் பூசத் தொடங்கிவிட்டார்கள். ஒரு நாட்டில் தங்கள் சந்தை ஸ்டெடி ஆனதும் அடுத்த நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். இவர்களின் விலை எல்லா நாட்டிலும் ஒரே விலை. அமெரிக்காவில் மணிக்கு 10 டாலர் என உழைக்கும் இளவல் ஒருத்தி 7 டாலர் கொடுத்து, Avon Skin So Soft வாங்குவது அவளுக்கு பெரிய இழப்பல்ல. ஆனால், நம்ம ஊரில் மாதம் 3000க்கு வேலை பார்க்கும் ஒரு சராசரி இளவல் இதே க்ரீமுக்காக 550 ரூபாய் (வருமானத்தில் 6ல் ஒரு பங்கு) செலவழிக்க வேண்டும். இது ஒரு முறை பயன்படுத்தி முடித்துக்கொள்ளும் பொருள் அல்ல. முடி வளர வளர வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். வெறும் 5 ரூபாய் கோபுரம் பூசு மஞ்சள்தூளில் முடிகின்ற சமாச்சாரத்தை எப்படி மாற்றிவிட்டார்கள் இவர்கள்! மதுரையின் ஒப்பனைக்காரர் தெரு கூட இன்று வெளிநாட்டு க்ரீம்களை விற்கும் கடைகளால் நிரம்பிவிட்டதுதான் காலக்கொடுமை.

2. கடந்த மாதம் L'Oréal (பிரெஞ்சு காஸ்மெடிக் நிறுவனம்) இணையதளத்தின் முதல் பக்கத்தில் ஆப்பிரிக்க கண்டத்து இளவல் ஒருத்தியின் படத்தைப் போட்டு, 'கறுப்பும் அழகே!' என தலைப்பிட்டிருந்தார்கள். இதைப் பார்த்தவுடன், 'என்னே இந்த நிறுவனத்தின் பரந்த மனது!' என நினைத்தேன். ஆனால், கொஞ்சம் யோசித்தபின்தான் தெரிந்தது, 'இவர்களின் அடுத்த வலை ஆப்பிரிக்காவுக்கு என்று!' 'வெள்ளைநிறம்தான் அழகு' என்ற மாயையை இவர்களே உருவாக்கி, அதை மற்றவர்களையும் நம்ப வைக்கிறார்கள். வெள்ளைநிறத்தின்மேல் உள்ள மோகம் நமக்கு முகலாயர்களின் காலத்திலிருந்தே இருக்கின்றது.ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் நம் நாட்டை ஆண்ட பலரில் இவர்களும் ஒருவர். இவர்களின் நிறம் வெள்ளை-சிவப்பு. தொடர்ந்து வந்த போர்த்துகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர்களும் வெள்ளையாக இருந்ததால், இவர்களைப் பார்த்துப் பழகிய மூளை தானாகவே, 'வெள்ளை என்றால் ஆளும் நிறம்! கறுப்பு அல்லது பிரவுன் என்றால் ஆளப்படும் நிறம்!' என நினைத்துக்கொண்டது. 'வெள்ளை நிறம்தான் அழகு!' என்பது விளம்பரங்கள் வழியாகவும், திரைப்படங்கள் வழியாகவும் நம்மேல் திணிக்கப்பட்டு, சாப்பாட்டில் வெள்ளை, பார்க்கும் பெண்ணில் வெள்ளை என எல்லாவற்றிலும் நாம் வெள்ளையை விரும்பத் தொடங்கிவிட்டோம்.

3. 'ஆறே வாரங்களில் சிகப்பழகு!' என நம்ம ஊர் ஃபேர் அன் லவ்லி சொல்லிக்கொண்டிருந்தது. நானும் சிகப்பாகணும் என்ற நினைப்பில் இதைக் கொஞ்ச நாள் மாஞ்சி மாஞ்சி பூசிக்கொண்டிருந்தேன். ஆண்களுக்கான சிறப்பு பேக் ஒன்றும் இருக்கிறது. ஆனால் இந்த க்ரீமின் பெயரே ஒரு அபத்தத்தைக் கொண்டிருக்கிறது என்று கடந்த வாரம்தான் உணர்ந்தேன். கடந்த வாரம் நம் சென்னை இளவல்கள் சிலர் இணைந்து உருவாக்கிய 'ப்ளாக் அன் லவ்லி' என்னும் ஹாஷ்டேக் டுவிட்டரில் வைரல் ஆனது. இந்தப் பெயரில் குறும்படம் ஒன்றும் வந்தது. இந்தப் பெண்கள் தங்கள் இயல்பான நிறமே தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும், எந்தவொரு (ஏமாற்று) நிறுவனத்தின் பொருளும் தங்களுக்குத் தேவையில்லை என்றும் அடித்துச் சொல்கின்றனர்.

ஏன் இப்படி க்ரீம் பூசிக்கொண்டிருக்கிறீர்கள்? - எனக் கேட்கிறீர்களா?

எஸ்தர் (கி) 2:3 ஒப்பனைப் பொருட்கள் பற்றித்தான் பேசுகின்றது.

ஆஸ்தின் அரசி 'சாப்பிட வர' மறுத்துவிட்டதால், அரசன் வேறு ஒரு அரசியை நியமிக்க முடிவு செய்துவிடுகின்றான். 'எப்படி புதிய அரசியை தேர்வு செய்வது?' என்று குழம்பிக் கொண்டிருந்த மன்னனுக்கு ஆலோசனை சொல்கிறது அமைச்சர் பட்டாளம்.

'அரசே! எல்லா இளம்பெண்களையும் வைத்து ஒரு இண்டர்வியு வைத்துவிடுங்களேன்!' என்ற யோசனை சொல்லப்படுகிறது.

இந்தப் பெண்கள் எப்படி இருக்க வேண்டுமாம்?

'இளமையும், அழகும், கன்னித்தன்மையும்' கொண்டிருக்க வேண்டும் (2:3)

இந்தப் பெண்களைத் தெரிவு செய்யும் பணி அரசு அண்ணகர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. தெளிவாகத்தான் இருக்கிறான் அரசன். ஆண்களிடம் ஒப்படைத்தால் எசகுபிசகாகிவிடும் என்று திருநங்கைகளிடம் ஒப்படைக்கின்றான் பணியை.

இந்த அண்ணகர்கள் என்ன செய்ய வேண்டுமாம்?

'இண்டர்வியூவிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு ஒப்பனைப் பொருட்களையும், மற்றும் தேவையான அனைத்தையும் கொடுக்க வேண்டுமாம்!' (2:3)

இந்த ஆலோசனை மன்னருக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

இந்த இண்டர்வியூவிற்கு வரும் ஓர் இளவல்தான் நம் எஸ்தர்.

தேடல் தொடரும்.


Tuesday, March 15, 2016

எஸ்தர் (கிரேக்கம்)

ஏற்றம் இருந்தால் இறக்கமும், இறக்கம் இருந்தால் ஏற்றமும் நிச்சயம்!

இந்த ஒற்றை வாக்கியத்தில் அடக்கிவிடலாம் எஸ்தர் நூலை.

பாபிலோனியர்களின் ஆட்சியில் இறங்கிக் கிடந்த யூதர்கள் பாரசீகர்கள் ஆட்சியில் ஏற்றம் பெறுகின்றனர்.

சாதாரண நிலையில் இருந்த எஸ்தர் அரசி என்னும் நிலைக்கு ஏற்றம் பெறுகிறார். தான் பெற்ற ஏற்றத்தைக் கொண்டு தன் ஒட்டுமொத்த இனத்தையும் ஏற்றிவிடுகின்றார்.

உயிரியல் அடிப்படையில் ஆண் என்பவர் எக்ஸ்-ஒய் க்ரோமசோம், பெண் என்பவர் எக்ஸ்-எக்ஸ் க்ரோமசோம்.

இது மட்டும்தான் உயிரியில் வேறுபாடு. மற்ற எல்லா வேறுபாடுகளும் காலப்போக்கில் நாமே உருவாக்கிக் கொண்டவைதாம்.

சமூகத்தில் ஆண் மேலோங்கி உயர்ந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டுமே பொய்கள்.

அ. ஆண்களின் உடலியில் பெண்களின் உடலியலை விட திடமானது. ஆனால் நோயிலிருந்து, சோர்விலுருந்து, வலியிலிருந்து தங்களையே காத்துக்கொள்ளும் திறன் பெண்ணுக்குத்தான் அதிகம். உதாரணத்திற்கு, பெண்ணின் பிரசவ வலிபோல வெர்ச்சுவாக ஆண்களுக்கு வலி ஏற்படுத்தப்பட்டதில் 16 பேரில் ஓர் ஆண் மட்டும்தான் முழு வலிiயையும் தாங்கினார் என்றும், மற்ற 15பேர் பாதியிலேயே மெஷினை ஆஃப் பண்ணிவிட்டார்கள் என்றும் சொல்கிறது இங்கிலாந்தின் ஆய்வு. மேலும், பரிணாம வளர்ச்சியில் உடல் வலிமை சார்ந்த செயல்களை ஆண்கள் செய்தனர், வலிமை தேவையற்ற செயல்களை பெண்கள் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், உடல் வலிமையே தேவையில்லாத குருத்துவம், சட்டம், ஆட்சியுரிமை என்ற வேலைகளை மட்டும் ஏன் ஆண்கள் தங்களுக்கென மட்டும் வைத்துக்கொண்டார்கள்.

ஆ. குழந்தைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடக்க காலத்தில் கடினமாக இருந்தது. இதற்கு ஆண்களின் துணையை நாடினர் பெண்கள். காலப்போக்கில் இதே சார்பு நிலையாக உருவாகிவிட்டது. ஆனால் இந்தக் கருத்தும் ஏற்புடையது அல்ல.

எஸ்தர் நூலின் முதல் பிரிவிலேயே ஆண்-பெண் சமத்துவம் பற்றிய கேள்வி வருகின்றது.

அர்த்தக்சஸ்தா என்ற ஒரு அரசன். அவன் தன் அரசியாகத் தேர்ந்து கொண்டவளின் பெயர் ஆஸ்தின்.

(நிறைய பெண்கள் அரசனின் நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பர். அவர்களில் ஒருத்தியை மட்டும் அவன் 'அரசி' என்ற நிலைக்கு உயர்த்திக்கொள்ளலாம். இந்த 'அரசி' என்னும் பட்டம் நிலையானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் அரசன் அதை வேறொருவருக்கு கொடுக்க முடியும்.)

'வா!' என்றால் 'வரணும்!', 'போ!' என்றால் 'போகணும்!' என தன் இளவல்களை வைத்திருக்கிறான் இந்த அரசன்.

ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறான். விருந்துக்கு தன் அரசியும் வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறான். அழைப்பு மற்றவர்கள் வழியாக விடப்படுகிறது. அதாவது, அரசனும், அரசியும் வேறு வேறு இடங்களில் வசிக்கின்றனர்.

'நீ என்னடா கூப்பிடுறது!' 'நான் என்னடா வர்றது!' என நினைக்கின்ற ஆஸ்தின் வர மறுக்கிறாள்.

அரசியின் இந்த மறுப்பு, அரசனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆண் இனத்தையே அதிர்ச்சியடையச் செய்கிறது.

'இன்று அரசன் கூப்பிட்டு அரசி வரவில்லையென்றால், நாளை நான் கூப்பிட்டால் என் மனைவி வரமாட்டாளே!' என்று அடுப்பெரிப்பவன் முதல், ஆடுமேய்ப்பவன் வரை புலம்பத் தொடங்குகின்றனர்.

நிலைமை எந்த அளவிற்கு மோசமாகிறது என்றால், அரசன் அவசரமாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவருகிறான்:

'கணவர்கள் எல்லாரும் அவரவர் வீட்டில் மதிக்கப்பட வேண்டும்!' (எஸ்தர் 1:22)

தேடல் தொடரும்.


Monday, March 14, 2016

சோளக்காட்டு பொம்மை

பாரூக்கு நூலில் வரும் எரேமியாவின் மடல் (6:1-72) கொண்டிருக்கும் சில கலர்ஃபுல்லான பகுதிகளை இன்று காண்போம்.

1. 'பெண்கள் தங்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக் கொண்டு, சாலையோரங்களில் அமர்ந்து, சாம்பிராணிக்கு மாறாக உமியை எரித்துக்கொண்டிருப்பார்கள். வழிப்போக்கர் ஒருவர் அவர்களுள் ஒருத்தியை அழைத்துக்கொண்டுபோய் அவளைப் புணர்ந்தால் அவள் தன் அருகே இருப்பவளை ஏளனம் செய்கிறாள். இவள் தன்னைப் போல் அழகு உள்ளவளாக மதிக்கப்படவில்லை என்றும், இவளது இடுப்பில் கட்டப்பட்ட கயிறு இன்னும் அறுபடவில்லை என்றும் எள்ளி நகையாடுகிறாள்.' (6:42-43)

பாபிலோனிய நாட்டில் விளங்கிய ஒரு வகை தேவதாசி முறையை (cult or temple prostitution) இந்த வசனங்கள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. பண்டைக்கால சமயங்களில், 'ஆலய விலைமகள்' என்பது 'ஆலய குரு'வைப் போல முக்கியமான வேலை. பாலியல் என்பது ஆன்மீகமாக பார்க்கப்பட்டது. இந்த விலைமகள்களோடு உறவு கொள்வதன் வழியாக கடவுளைத் திருப்திப்படுத்த முடியும் எனவும் நம்பினர் அக்காலத்து மக்கள். 'ஆலய விலைமகன்கள்' இருந்ததற்கான குறிப்பும் அக்காடிய சமய இலக்கியங்களில் இருக்கின்றன.

'இடுப்பில் கயிறு' - இது ஓர் அடையாளம். அதாவது ஒரு பெண் மற்றொரு ஆணுடன் உறவு கொண்டவுடன் அந்தக் கயிறு அறுக்கப்பட்டுவிடும்.

'சாம்பிராணிக்கு மாறாக உமியை எரிப்பார்கள்' - தான் ஒரு விலைமகள் என்பதை உணர்த்துவதற்கான சங்கேத மொழியாக இது இருக்கலாம்.

உறவு கொண்டுவிட்டு திரும்பும் ஒருத்தி, மற்றவளைப் பார்த்து, 'நீ அந்த விஷயத்துக்கு தகுதியவற்றவள்' அல்லது 'நான் உன்னைவிட அழகுவாய்ந்தவள்' என்று எண்ணிக்கொள்வாளாம்!

எரேமியா இதன் வழியாக சொல்ல வருவது என்ன? அதாவது, தாங்கள் வெட்கத்துக்குரிய செயலைச் செய்கிறோம் என்றாலும், அந்த வெட்கத்திலும் பெருமை கொள்கிறார்களாம் பாபிலோனியர்கள்.

2. 'மரத்தால் செய்யப்பட்டு, பொன், வெள்ளியால் வேயப்பட்ட சிலைகளால் கள்வரிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் தங்களையே காத்துக் கொள்ள இயலாது. அவற்றின் பொன்னையும் வெள்ளியையும் அவை அணிந்திருக்கும் உடைகளையும் வலியோர் கவர்ந்து செல்லும்போது அவற்றால் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாது!' (6:57)

இந்தக் கருத்து பாபிலோனிய தெய்வங்களுக்கு மட்டுமல்ல, நம் தெய்வங்களுக்கும், புனிதர்களுக்கும் கூட பொருந்தும். நான் மதுரை ஞானஒளிவுபுரம் ஆயத்த பாசறையில் பயின்றுகொண்டிருந்த போது, அங்கிருந்த ஆலயத்தின் நற்கருணைப் பேழை உடைக்கப்பட்டு நற்கருணை வெளியே கொட்டப்பட்டிருந்தது. (இம்மாதிரி நிகழ்வு இங்கே இரண்டு, மூன்று முறை நடந்திருக்கின்றது.) காவலர்கள் ஒருபுறம் கைரேகைகளைத் தேடிக்கொண்டிருந்தனர். அந்நேரம் இருந்த பேராயர் அங்கு வந்து 'பரிகாரத் திருப்பலி' நடத்தினார். 'நற்கருணையில் இருக்கும் இயேசு ஏன் அவரையே காப்பாற்றிக்கொள்ளவில்லை?' என்று நான் என் குருமட அதிபரிடம் கேட்டுவிட, நான் அதன்பின் கொஞ்ச நாட்கள் 'நாத்திகனாகவே' பார்க்கப்பட்டேன். நாம் தெருக்களில் வைத்திருக்கும் நம் புனிதர்களின் சுரூபங்கள் உடைக்கப்படும்போது, மாதா சுரூபத்தின் கிரீடம், அணிகலன் திருடப்படும்போதும் நம்மிடம் எழும் கேள்வியும் இதுதான். (இவை வெறும் அடையாளமே தவிர அவை உண்மையான மாதாவோ, அந்தோணியாரோ அல்ல எனலாம் நாம்! அவைகள் வெறும் அடையாளம் என்றால் அவைகள் தாக்கப்படும்போது நம் கவலைப்படவும் தேவையில்லையே!)

மனிதர்கள்முன் கடவுளர்கள் சில நேரங்களில் வலுவிழந்துதான் போய்விடுகிறார்கள்.

நான் சுரூபங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என நினைக்க வேண்டாம். என் மேசையிலும் சுரூபங்கள் இருக்கின்றன.

(சில கோயில்களில் பல வருடங்களாக உள்ள சுரூபங்கள், அற்புதமான சுரூபங்கள், தீயிலிருந்து தப்பிய சுரூபங்கள், மாதாவும், இயேசுவும் தாங்களே தலையைச் சாய்த்து தங்கள் கிரீடத்தை தேவையிலிருப்பவர்களுக்கு கொடுத்த சுரூபங்கள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கி நிறைய அற்புதங்கள் செய்த சுரூபங்கள் என்ற லிஸ்டும் இருக்கிறது! அதைப்பற்றியெல்லாம் நாம் பேசக்கூடாது.)

3. 'வெள்ளரித் தோட்டத்தில் வைக்கப்படும் பொம்மை காவல்புரிவதில்லை' (6:69)
சோளக்காட்டு பொம்மை பார்த்திருப்போம். அவைகள் யாருக்கு பயத்தைத் தருகின்றன? பறவைகளுக்கு. அதாவது, காற்றில் ஆடும் பொம்மை மனித உருவ அசைவைக் காட்டுவதுபோல இருக்க, அதைக் கண்டு பறவைகள் பயப்படுகின்றன. ஆக, பயம் என்ற ஒன்று இருக்கும்வரைதான் சோளக்காட்டு பொம்மையின் பயன் இருக்கிறது. பறவைகள் பயப்பட மறுத்துவிட்டால் பொம்மைகளால் பயன் இல்லை. மேலும் இந்த பொம்மைகளுக்கு மனிதர்கள் பயப்படுவதில்லை. அவைகளைக் கண்டு நாம் ஓடுவதில்லை. இந்த பொம்மைகள் எந்த வேலையையும் செய்வதில்லை.

இதை அப்படியே நம் கடவுளர்களுக்குப் பொருத்திப் பார்ப்போம். அவைகள் வெறும் பொம்மைகள். அவைகள் ஒரு வேலையும் செய்வதில்லை. அவைகளைப் பார்த்துப் பயப்படும் பறவைகள் நாம். அந்த பொம்மைகள் அசைவதை நாமாக கடவுள் என்று கற்பனை செய்து பார்த்துக்கொண்டு, அவைகளுக்குப் பயப்படுகிறோம். அவைகள் மனம் கோணாமல் நாம் நடந்து கொள்கிறோம். அவைகளைத் திருப்திப்படுத்துகிறோம். அவைகள் சந்தோஷமாக இருந்தால், நமக்கும் சந்தோஷம் கிடைக்கும் என்றும், அவைள் கோபப்பட்டால் நமக்கும் கஷ்டம் வரும் என்றும் நினைக்கிறோம்.

எரேமியாவின் மடல் பாபிலோனிய கடவுளர்களை மட்டம் தட்டினாலும், நம் கடவுளர்களையும், ஏன் கடவுளின் இருப்பையே மறு ஆய்வு செய்து பார்க்கவும் நம்மைத் தூண்டுகிறது.

கடவுள் இருக்கிறாரா? அல்லது இல்லையா?

'இல்லை என்று சொல்வதை விட, இருக்கிறார் என்றே சொல்வோம்.
ஏனெனில் நாம் இறந்து, அவர் இல்லை என்று தெரிந்தால் நமக்கு இழப்பு ஒன்றும் இல்லை...
ஆனால், அவர் இருந்தாரென்றால் இழப்பு நமக்கு அதிகமாக இருக்கும்!'

இதை நான் சொல்லல...விஞ்ஞானி ப்ளெய்ஸ் பாஸ்கல் சொல்றார்.

நிறைவுற்றது பாரூக்கு.


Sunday, March 13, 2016

பாரூக்கு

இறைவாக்கினர் எரேமியாவின் செயலர் பாரூக்கு. முதல் ஏற்பாட்டு கால அரசர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதுக்கெல்லாம் எங்க டைம் இருக்கு பாஸ்? நாமதான் படிக்கணுமான என்ன? படிச்ச ஒரு ஆளை வேலைக்கு வச்சிகிட்டா போகுது! அந்த அடிப்படையில் எரேமியாவின் உடனிருந்தவர்தான் பாரூக்கு.

பாரூக்கு நூல் இரண்டு நீண்ட மடல்களைக் கொண்டிருக்கிறது. இதில் 'எரேமியாவின் மடல்' என வழங்கப்படும் இரண்டாம் மடலை நாம் பார்ப்போம்.

72 வசனங்கள் கொண்டிருக்கும் இந்த மடல் யூதாவின் மக்களுக்கு எரேமியா எழுதுவது. பாபிலோனிய மன்னனால் நாடுகடத்தப்படுத்துவதற்கு முன்பே, நாடுகடத்திப்படும் செல்லும் நாட்டில் அவர்கள் சந்திக்கவிருக்கும் சிலைகள் குறித்து எச்சரிக்கை செய்கின்றார்.

மடல் முழுவதும் அடிமைத்தனத்தின் வேறு எந்தக்கூறு பற்றியும் இல்லை.

யூதாவின் மக்கள் தங்கள் கடவுளான யாவே இறைவனை விடுத்து வேறு ஒரு இறைவனை மனதாலும் நினைத்துவிடக்கூடாது என மெனக்கெடுகின்றார் எரேமியா.

கண்ணீரும், செந்நீரும் நிறைந்திருக்கும் அடிமைத்தனத்தின் நேரத்தில் உடல்நலம் பற்றியோ, உள்ள நலம் பற்றியோ, அங்குள்ள மக்கள் பற்றியோ அவர்களுக்கு அறிவுறுத்தாமல் இறைவனைப் பற்றி எழுதக் காரணம் என்ன? நம் வாழ்வில் இழப்பு நேரங்களில் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாம் இறைநம்பிக்கை அழிந்துவிட அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் புதியவைகள் கண்களுக்கு கவர்ச்சியாய் இருக்கக் கூடியவை. 'இந்தக் கடவுளைவிட அந்தக் கடவுள் நல்லா இருக்கிறாரே!' என்று அடுத்த கடவுளின்பின் செல்லும் வாய்ப்பு அதிகம். ஆகவேதான், எந்த நிலையிலும் தங்கள் இறைவனை விட்டுவிடக்கூடாது என்கிறார் எரேமியா.

எரேமியாவின் மடலில் வரும் கடவுளர்களின் வர்ணனை நம்ம ஊரில் நாம் பார்க்கும் கருப்பசாமி, அம்மன் கோவில்களை நினைவூட்டுகின்றன:

'அவற்றுக்கு முன்னும் பின்னும் மக்கள் திரளாகச் சென்று...'

'தங்கள் வலக்கையில் கத்தியும் கோடரியும் வைத்துள்ளன...'

'அர்ச்சகர்கள் கோவில் கதவுகளைத் தாழிட்டுப் பாதுகாக்கிறார்கள்...'

'கோவிலில் எழும் புகையினால் அவற்றின் முகங்கள் கறுத்துவிடுகின்றன. அவற்றின் உடல்மீதும் தலைமீதும் வெளவால்களும் குருவிகளும் மற்ற பறவைகளும் உட்காருகின்றன...'

'காலில்லாத இத்தெய்வச் சிலைகளை மனிதர் தோளில் சுமந்து செல்கின்றனர்...'

மற்ற கடவுளர்கள் மனிதர்களின் கைவேலைப்பாடுகள் எனவும், அவர்களால் தங்களையே காத்துக்கொள்ள முடியாதபோது மற்றவர்களை எப்படி காத்துக்கொள்ள முடியும் என்றும் கேள்வி கேட்கின்றார் எரேமியா.

ஆனால் எரேமியாவின் இந்த சொற்களை வைத்து அவர் முன்வைக்கும் யாவே இறைவனும்கூட பொய் என்று சொல்லிவிடலாம்.

உதாரணத்திற்கு, 'பாபிலோனிய கடவுளர்களின் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை, கடவுளர்கள் உண்பதில்லை. மாறாக அர்ச்சகர்களே உண்கின்றனர்' என்கிறார் எரேமியா. யாவே இறைவனுக்குப் படைக்கப்பட்டவற்றiயும் அவர் உண்பதில்லையே. அவரின் குருக்கள்தாமே உண்கின்றனர்.

கடவுளர்கள் எப்படி உருவாகிறார்கள்?

ஒரு சிற்பியின் கூடாரத்தில் நிறைய கற்கள் கிடக்கின்றன. சில கற்களை அவன் கடவுளர்களாக, சில கற்களை மண்டபச் சிலைகளாக, சில கற்களை வாசற்படிகளாக உருவாக்குகின்றான். வாசற்படியும் கல்தான். அம்மன் சிலையும் கல்தான். ஆனால் வாசற்படியின்மேல் ஏறி நிற்கும் நாம், அம்மன் சிலையைக் கண்டால் மட்டும் ஏன் விழுந்து கும்பிடுகின்றோம்?

ஒரு டெய்லரின் வீட்டில் நிறைய துணிகள் கிடக்கின்றன. சிலவற்றை அவன் ஆடைகளாகத் தைக்கிறான். சில துணிகளை அவன் கால்மிதியாகத் தைக்கிறான். மற்றும் சில துணிகளை தேசியக் கொடிகளாக தைக்கிறான். கால்மிதியின்மேல் ஏறி நிற்கும் நாம், தேசியக்கொடிக்கு மட்டும் ஏன் சல்யூட் அடிக்கின்றோம்?

சிம்பிளான கான்செப்ட்தான்.

ஒரு பொருள் ஒட்டு மொத்த சமூகம் ஒன்று கூடி உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டுவிட்டால் அது அந்த உயர்ந்த இடத்திலேயே நிலைத்து நிற்கும்.

இன்றுமுதல் அது புதிய அர்த்தம் பெற்றுவிடுகிறது. நேற்று வரை சிற்பியின் கூடாரத்தில் கிடந்த அம்மன் சிலை என்னும் கல் இன்று காலை நடந்த பிரதிஷ்டை சடங்கினால் ஆலயத்தின் கருவறைக்குள் வைக்கப்பட்டுவிட்டால் அது கடவுளாகிவிடுகிறது. 'அது என் கல்,' 'அந்த அம்மன் நான் செய்தது' என சிற்பி அதன் அருகில் செல்ல முடியாது. சிலை கடவுளாகிவிட்டது.

ஆக, சிலைகள் கடவுளர்கள் ஆவது மனித சமூகத்தின் ஒட்டுமொத்த கற்பனையில்தான்.

இந்த கற்பனை அடுத்தடுத்த தலைமுறைக்கு அப்படியே உட்புகுத்தப்படுகிறது. இந்தக் கற்பனை அழிந்துவிட்டால் கடவுளும் அழிந்துவிடுவார்.

நாம் அனைவரும் பங்கெடுக்கும் இந்த கற்பனை ஒரு மாய வலை. இந்த வலையிலிருந்து நாம் தப்ப முடியாது. ஒரு கடவுள் இல்லையென்றால், நான் கண்டிப்பாக அடுத்த கடவுள் இருக்கிறார் என்ற வலைக்குள் விழுந்துதான் ஆகவேண்டும்.

தேடல் தொடரும்.