Sunday, February 27, 2022

அன்பொழுக நோக்கி

இன்றைய (28 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 10:17-27)

அன்பொழுக நோக்கி

இயேசு எருசலேம் செல்லும் வழியில் இருக்கின்றார். நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள, தான் என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வியுடன் இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். கட்டளைகளை இளமைப் பருவம் முதல் கடைப்பிடிக்கின்ற அந்த இளவலிடம், அவருக்கு உள்ளதையெல்லாம் விற்குமாறு பணிக்கிறார்.

இங்கே இயேசுவின் சொற்களை விட அவருடைய ஒரு செயல் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. தன்னிடம் வந்த அந்த இளவலை அன்பொழுக நோக்குகிறார் இயேசு.

அன்பொழுக நோக்கிய இயேசுவை விட்டு முகவாட்டத்தோடு திரும்புகிறார் இளவல்.

இளவலின் செயலை தானே முன்னறிந்ததால் என்னவோ இயேசு அவரை அன்பொழுக நோக்குகின்றார். 

இளவல் முகவாட்டத்தோடு செல்லக் காரணம் என்ன? தன் பற்றுகளை விடுக்க அவரால் இயலவில்லை.

பற்றில்லாத இயேசுவின் பாதங்களைப் பற்றிக்கொள்வதற்குப் பதிலாக, தன் பற்றுகளையே பற்றிக்கொள்ள விரும்பினார் அந்த இளவல்.

பற்றுகளை விட நம் மனம் துணிவதில்லை. ஏனெனில், பற்றுகள் நம்மை அறியாமலேயே நம்மோடு ஒரு பிணைப்பை உருவாக்கிக்கொள்கின்றன. பற்றுகளை விடுத்தல் நம் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது.

'மனிதரால் இது இயலாது. கடவுளால் எல்லாம் இயலும்' என்கிறார் இயேசு.


Saturday, February 26, 2022

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆண்டின் பொதுக்காலம் 8ஆம் ஞாயிறு

I. சீராக்கின் ஞானம் 27:4-7 II. 1 கொரிந்தியர் 15:54-56 III. லூக்கா 6:39-45

நற்கனிகள் அறிதலும் தருதலும்

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற ஆடம்பரப் பயணிகள் கப்பல் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். 'கடவுளால் கூட இக்கப்பலைக் கவிழ்க்க முடியாது' என்று விளம்பரம் செய்யப்பட்டு, 1912ல் தன் முதல் சேவையைத் துவக்கியது இக்கப்பல். உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலும் இதுவே. இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நியுயார்க் நகர் நோக்கிச் சென்ற இக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் இரவு வட அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதி, மோதிய 3 மணி நேரங்களில் முழுவதுமாகக் கடலில் மூழ்கியது. கப்பலின் கேப்டன் எவ்வளவோ முயன்றும் கப்பலைப் பனிப்பாறையின்மேல் மோதவிடாமல் தடுக்க முடியவில்லை என்பதுதான் சோகம். கடலில் தெரிந்த பனிப்பாறை கடலுக்கு மேல் நீட்டிக்கொண்டிருந்த அளவை மட்டும் வைத்து பனிப்பாறையின் கனத்தை குறைவாக மதிப்பிட்டதால்தான் இந்த ஆபத்து நேரிட்டது. வெறும் 5 சதவிகத பனிப்பாறை மட்டுமே கடலின் மேற்புரத்தில் தெரிய, மீதி 95 சதவிகிதம் கடலுக்கு அடியில் மூழ்கி மிதந்துகொண்டிருக்கும். வெளியில் தெரியும் சிறு பகுதியை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பனிப்பாறையின் அளவை ஊகிப்பது தவறு. அதே வேளையில், பனிப்பாறையின் இருப்பை இந்த நுனிப்பகுதி காட்டுகிறது என்பதை அறியாமல் அதன் இருப்பைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறு.

இன்னொரு உருவகம். நம் தோட்டத்தில் இருக்கின்ற ஒரு மாமரம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாம்பழங்கள் பழுத்துத் தொங்குகின்றன என வைத்துக்கொள்வோம். மாம்பழம் என்ற கனியை மரத்தின் மற்ற பகுதிகளான கிளை, தண்டு, வேர் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கனியின் அமைப்பும் அளவும் மிகவும் சிறியது. ஆனால், அச்சிறிய கனியைக் கொண்டே நாம் அந்த மரத்தின் இயல்பைச் சொல்லிவிடலாம். அது இனிமையான கனி கொடுக்கும் மரமா அல்லது புளிக்கும் கனி கொடுக்கும் மரமா என்பதை நாம் சொல்வதற்கு அதன் கனியை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம். யாரும் மரத்தின் இலை அல்லது தண்டைச் சாப்பிட்டுவிட்டு மரத்தை ஆய்வு செய்வதில்லை. கனி என்ற மரத்தின் சிறிய நீட்சி ஒட்டுமொத்த மரத்தின் இயல்பைச் சுட்டிக்காட்டுகிறது.

பனிப்பாறையின் நுனி மற்றும் மரத்தின் கனி இவை இரண்டிற்கும் இன்றைய இறைவாக்கு வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு? வெறும் நுனியைக் கண்டு மொத்தத்தையும் அளந்துவிடாதே என எச்சரிக்கிறது இன்றைய முதல் வாசகம். வெறும் கனியைக் கண்டு ஒரு மரத்தின் இயல்பை அளவிடு என அறிவுறுத்துகிறது இன்றைய நற்செய்தி வாசகம். மறைந்திருக்கும் நல் இயல்பு வெளியில் தெரியும் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல இயல்பிலிருந்தே நல்ல சொற்களும், நற்செயல்களும் வெளிவர முடியும். எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 27:4-7) இஸ்ரயேலின் பிந்தைய ஞானத் தொகுப்பான சீராக்கின் ஞானத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஞானம் என்பது கடவுளின் கட்டளைகளுக்கும், நியமங்களுக்கும் கீழ்ப்படிவதன் கொடை எனப் பொதுவாக அறியப்பட்டாலும், ஞானம் மனித வாழ்வின் அன்றாட அறநெறி மற்றும் வாழ்வியல் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகவே அமைகிறது. உருவகங்கள், பழமொழிகள் என காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத மதிப்பீடுகளுக்கு மக்களை அழைத்துச் சென்றனர் ஞானியர். இவ்வகையில் ஏறக்குறைய கி.மு. 200ல் யேசு பென் எலயேசர் பென் சீராக் (காண். சீஞா 50:27) என்பவரால் எழுதப்பட்ட சீராக்கின் ஞானநூல் பல ஞானக் கோர்வைகளைப் பல்வேறு தலைப்புக்களில் தாங்கி நிற்கிறது. இஸ்ரயேல் மக்களின் சட்டநூல்கள் என்றழைக்கப்படுகின்ற முதல் ஐந்நூல்களில் உள்ள கருத்துக்களை எடுத்து அக்கருத்துக்களை அன்றாட வாழ்வில் செயல்முறைப்படுத்தும் வழிமுறைகளைத் தருகிறார் ஆசிரியர். 

அவ்வகையில் ஒரு மனிதரின் மறைந்திருக்கும் குணம் அல்லது இயல்பு எப்படி வெளிப்படும் என்பதை இரண்டு பழமொழிகள் வழியாக விளக்குகிறார் ஆசிரியர். முதல் பழமொழி: 'சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது. அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்து விடுகின்றது.' அதாவது, சலிக்கின்ற போது சல்லடையில் மேலே தங்குகின்ற உமி, அந்த அரிசியில் இவ்வளவு மாசு இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. உமி குறைவாக இருந்தால் அரிசி கலப்படமற்றது என அறிகிறோம். அதுபோல, ஒரு மனிதர் பேசும்போது அவரிடம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அவரிடமிருந்து வெளியே வரும் வார்த்தைகள் காட்டிவிடுகின்றன. ஆக, பேச்சும் மாசுள்ளதாக இருக்கலாம். பேசுபவரின் உள்ளமும் மாசுள்ளதாக இருக்கலாம். எனவே, வார்த்தைகளைப் பற்றிய அக்கறையும், வார்த்தை வெளிவரும் உள்ளம் பற்றிய அக்கறையும் அவசியம். இரண்டாவது பழமொழி: 'குயவரின் கலன்களை சூளை பரிசோதிக்கிறது. மனிதரை உரையாடல் பரிசோதிக்கிறது.' மண்பானை செய்கின்ற குயவன் எப்படிப்பட்ட மண்ணைப் பயன்படுத்தினான், எப்படிப் பிசைந்தான், எவ்வளவு நீர் ஊற்றினான், எப்படி சக்கரத்தில் சுற்றினான் என்னும் அவனுடைய கைப்பக்குவத்தை நெருப்பு பரிசோதிக்கும். அதுபோல, மனிதர் எப்படிப்பட்டவர்; என்பதை அவருடைய உரையாடலை வைத்து மற்றவர்கள் பரிசோதிப்பர். நெருப்பில் இடும் போது கீறல் விடாத பானை நல்ல பானை என அறியப்படுவது போல, ஒரு மனிதர் நல்லவர் என்பதை அவருடைய உரையாடல் வழியாக நாம் கண்டுகொள்கிறோம். தொடர்ந்து, 'ஒருவர் பேசுவதற்கு முன்பே அவரைப் புகழாதே. பேச்சைக் கொண்டே அவரை அறிந்துகொள்ளலாம்' என எச்சரிக்கிறார் ஆசிரியர். ஒருவருடைய உரையாடலைக் கேட்குமுன்பே, அவனுடைய வெளி அலங்காரத்தை வைத்து அவரைப் புகழ வேண்டாம் என்றும், பார்ப்பதற்கு பகட்டாக இருக்கும் அவர் பேசுவது மடமையாக இருக்கலாம் என்பதும் இதன் பொருள்.

ஆக, ஒருவரின் நாணயம், நற்குணம், நல்மதிப்பீடு ஆகியவை வெளிப்புற அடையாளங்களால் அறிந்துகொள்ளப்பட முடியாதவை. மாறாக, அவர் பேசும் சொற்கள் அவருடைய மூளையின், உள்ளத்தின் நீட்சியாக இருக்க, அவற்றை வைத்து நாம் அவரின் நாணயத்தையும், நற்குணத்தையும், நல்மதிப்பீட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:54-58) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் வாதம் நிறைவுக்கு வருகிறது. எசா 25:8 மற்றும் ஆமோ 13:14 என்னும் இறைவாக்குகளின் பின்புலத்தில், 'சாவு முற்றிலும் ஒழிந்தது. வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?' என்று அக்களிக்கிறார் பவுல். பவுலின் பார்வையில் கிறிஸ்துவின் உயிர்ப்பு இறந்தோர் அனைவருக்கும் கிடைத்த கொடை. ஏனெனில், கிறிஸ்துவில் இறந்தோர் அனைவரும் கிறிஸ்துவில் உயிர்ப்பர். கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இறவாமையைப் பெற்றுத் தருகிறது. தொடர்ந்து பவுல், 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி' என்கிறார். 

இதன் பின்புலத்தில் உயிர்ப்பு பற்றிய உரையை நிறைவு செய்கிற பவுல், நிறைவாக கொரிந்து நகரச் சபைக்கு அறிவுரையும் வழங்குகின்றார்: 'உறுதியோடு இருங்கள். நிலையாய் இருங்கள். ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.' நாம் இறந்தவுடன்தான் எல்லாம் ஒன்றிமில்லாமல் போய்விடுகிறதே. அப்புறம் எதற்கு உழைக்க வேண்டும்? எனச் சிலர் கேள்வி எழுப்பியதன் பின்புலத்தில், 'நீங்கள் உழைப்பது வீண்போகாது' என்கிறார் பவுல். ஆக, இவ்வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் உயிர்ப்பின் கனிகளாகக் கனிகின்றன. இச்செயல்களை நிறுத்தும்போது நாம் கனிகளையும் நிறுத்துவிட வாய்ப்புண்டு. கனிகளைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

ஆக, இவ்வுலக வாழ்வு என்பது ஒரு மரம் போன்றது என்றால், அம்மரத்திற்காக நாம் செய்யும் உழைப்பு மறு உலகில் கனியாக நீளும். அக்கனிகள் இனிமையாக இருக்க வேண்டுமென்றால், நான் என் வாழ்க்கை என்ற மரத்தின் இயல்பை இனிமையானதாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நான் உழைக்க வேண்டும். என் நம்பிக்கையில் உறுதியாகவும் நிலைத்தும் இருத்தல் வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:39-45) ஒருவரின் நாணயம், நற்குணம், மற்றும் நன்மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அது எப்படி கனியாக சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை மூன்று உருவகங்கள் வழியாகப் பதிவு செய்கிறது. முதலில், 'பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்டுவது' - இது முதலில் சீடர்களுக்கான போதனையாக இருக்கிறது. இயேசுவின் சீடர்கள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்கு முன்பாக, தாங்கள் முதலில் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியம். தங்களிலேயே நற்செயல் அல்லது நற்சொல் இல்லாத ஒருவர் அவற்றை மற்றவருக்குக் கொடுக்க முடியாது. இரண்டாவதாக, 'ஒருவர் தன் கண்ணில் இருக்கும் கட்டையைப் பார்க்காமல் மற்றவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கக் கைநீட்டுவது.' இதுவும், சீடர்கள் மத்தியில் இருந்த ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் தன் குறையைக் கண்டுகொள்ளாமல் அடுத்தவரின் குறையைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இயேசு இந்த வெளிவேடத்தைக் கண்டித்து, தன் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார். இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். மேலும், தன் கண்ணையே ஒரு கட்டை மறைப்பதால் அடுத்தவருக்கு உதவி செய்வது தொந்தரவிலும் முடியலாம். மூன்றாவதாக, 'கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை. நல்ல கனி தரும் கெட்ட மரமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்.' ஒருவர் நீண்ட காலம் நடிக்கவும், ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், அவரின் செயல்களே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் என எச்சரிக்கிறார் இயேசு. பொய்மை நீண்ட காலத்திற்கு உண்மை என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வலம் வர முடியாது. மேலும், 'உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்' என்று சொல்வதன் வழியாக ஒருவரை அவருடைய சொல் காட்டிக்கொடுத்துவிடும் என்கிறார் இயேசு.

இயேசுவின் இம்மூன்று உருவகங்களுமே சீடத்துவத்தை மையமாக வைத்திருக்கின்றன. இயேசுவின் சீடர் முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், வெளிவேடமின்றி தன்னையே ஆய்வு செய்து பார்க்க வேண்டும், அடுத்தவருக்கு வழி காட்டுவதற்கு முன் தன்னையும், தன் வழியையும் அறிந்திருக்க வேண்டும், தன் வாழ்வில் உள்ள இரட்டைத்தன்மை அகற்ற வேண்டும்.

ஆக, ஒருவரின் உள்ளியல்பு அவரின் வழிகாட்டுதல், குற்றங்கடிதல், மற்றும் உரையாடுதல் ஆகியவற்றில் வெளிப்பட்டுவிடும் என்பதால் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்வாறாக, எளிய பழமொழிகள் மற்றும் உருவகங்கள் வழியாக சீராக்கும் இயேசுவும், 'ஒரு மனிதரின் உண்மையான குணம் அல்லது இயல்பும் அவருடைய உள்ளத்தின் பண்பாடும் அவரின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது' என்றும், பவுல், 'நல்ல செயல்கள் வழியாக உயிர்ப்பின் நற்கனிகளை அனுபவிக்க முடியம்' என்றும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

நாணயத்தின், நற்குணத்தின் நற்கனிகள் தருவது எப்படி?

1. நல்ல உளப்பாங்கு கொண்டிருத்தல்

ஆங்கிலத்தில், 'ஆட்டிட்யூட்' என்று சொல்கிறோம். இன்று, ஒருவரின் நேர்காணலில் அவரின் சொற்கள் மற்றும் செயல்களைவிட, இந்த 'ஆட்டிட்யூட்' தான் அதிகாக ஆய்வு செய்யப்படுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் நான்கு வகை உளப்பாங்கை எடுத்துக்காட்டி, முதல் மூன்று வகை உளப்பாங்கை விட்டுவிடவும், நான்காவதைப் பற்றிக்கொள்ளவும் அழைக்கிறது. (அ) கெட்ட கனி தரும் மரம் - 'கெட்ட கனியால் யாருக்கும் பலன் இல்லை. கெட்ட கனிகள் விஷமாக மற்றவர்களைக் கொல்லும் ஆற்றல் பெற்றவை' – இம்மரம் இயல்பிலேயே கெடுதல் செய்வதாக இருக்கிறது. இவ்வகை மரம் தீங்கையே உருவாக்குவதால், காலப்போக்கில் அதே தீங்கினால் தானும் அழிந்துவிடும். (ஆ) முட்செடிகள். முட்செடிகள் முள்கனிகளைத்தான் கொடுக்குமே தவிர அத்திப்பழங்களைக் கொடுக்காது. முட்செடிகள் போன்றவை அடுத்த மரங்களின் தண்ணீர் மற்றும் உரத்தை எடுத்துக்கொண்டாலும் இவை தங்கள் இயல்பிலேயே தொடர்ந்து இருப்பவை. இவை, என்னதான் பசுமையாக, செழுமையாக இருந்தாலும் இவற்றின் அருகில் யார் சென்றாலும் இவை அவர்களைக் காயப்படுத்திவிடுகின்றன. (இ) முட்புதர் – திராட்சைக் கனியை நாம் முட்புதரிலிருந்து பெற முடியாது. திராட்சை உயரமான பந்தலில் வளரக் கூடியது. ஆனால், முட்புதரோ தரையோடு தரையாக மண்டிக் கிடந்து, விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவிடும். புதருக்குள் மறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்கள் தங்கள் எண்ணங்களை மிகவும் தாழ்வான எண்ணங்களாக வைத்துக்கொண்டு விஷம் தங்கும் இடமாக மாறிவிடுவர். மற்றும் (ஈ) நல்ல கருவூலம் - ஒவ்வொரு வீட்டின் பாதுகாப்பான இடம் கருவூலம். இங்கே மிகவும் மேன்மையானவற்றிற்கு மட்டுமே இடமுண்டு. நல்லவரின் உள்ளம் நல்ல கருவூலமாக இருக்கும். இதிலிருந்து வெளிப்படுபவை மதிப்பு மிக்கவையாகவும், மற்றவர்களுக்குப் பயன் தருவனவாகவும் இருக்கும். ஆக, என் உளப்பாங்கு நல்ல கருவூலமாக இருத்தல் வேண்டும்.

2. இனிய வார்த்தைகளைப் பேசுதல்

பேச்சு ஒரு கொடை. அதே வேளையில் அது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு. நம் வார்த்தைகளே நம் உலகத்தை உருவாக்குகின்றன. நம் பேச்சு நம்மைப் பல்லக்கிலும் ஏற்றும், பாழுங்கிணற்றிலும் தள்ளும். இன்று நாம் அரசியல் மற்றும் ஊடகங்களில் கேட்கின்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகளே. அவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. அவ்வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதில்லை. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பல வார்த்தைகள் வதந்திகளாகவும், பொய்களாகவும் இருக்கின்றன. இவற்றால் வீணான அச்சமும் குழப்பமும் உருவாகிறது. ஆனால், இவற்றிற்கு மாறாக நம் வார்த்தைகள் அடுத்தவரின் மேல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளாக இருத்தல் வேண்டும். ஆக, பொறுப்புணர்வோடு நாம் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

3. உன் வார்த்தையே நீ

'உன் உள்ளத்தின் நிறைவே உன் பேச்சும்' என்று இயேசுவும் சொல்கின்றார். நம்மிடம் உள்ள நாணயம் மற்றும் நன்மதிப்பீட்டின் நீட்சியாக நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். எனக்கு நான் கொடுக்கும் வாக்குறுதிகள் மற்றும் அடுத்தவருக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளில் நான் உண்மையோடு இருக்க வேண்டும். ஆகையால்தான், ஒளவையார், 'கற்பு என்பது சொல் திறம்பாமை' என்கிறார். சொல்லும், செயலும், என் இயல்பும் ஒன்றாக இருத்தலே கற்பு, தூய்மை. என் வார்த்தைகளே நானே நம்பவில்லை என்னும் நிலை வரும்போது, அடுத்தவர்கள் என் வார்த்தைகளை எப்படி நம்புவார்கள்?

வார்த்தையும் வாழ்வும், கனியும் மரமும், இயல்பும் வெளிப்பாடும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதை அறிந்து செயல்படும் 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்' (திபா 92:12,14).

Friday, February 25, 2022

அக மதிப்பு

இன்றைய (26 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 10:13-16)

அக மதிப்பு

கலிலேயக் கடற்கரை ஓரத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி விட்டு வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த பேதுரு மற்றும் அந்திரேயாவை அழைக்கின்ற இயேசு, 'உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்!' என்கிறார். மீன் பிடிப்பது என்பது அவர்களுடைய முகமதிப்பு. மனிதர்களைப் பிடிப்பது என்பது அவர்களுடைய அகமதிப்பு. 

கண்ணுக்குப் பார்த்தவுடன் தெரிவது முகமதிப்பு. கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது அகமதிப்பு. அகமதிப்பைக் காண நம்பிக்கைப் பார்வை தேவை.

மனிதர்களின் முக மதிப்பு இடத்திற்கு இடம், ஆளுக்கு ஆள், நாளுக்கு நாள் மாறுபடும். எப்படி?

எடுத்துக்காட்டாக, என் இல்லத்தில் ஓட்டுநராக வேலை செய்கிறவரின் முக மதிப்பு 'ஓட்டுநர்' என்பது. ஆனால், அவருடைய இல்லத்தில் அவருடைய முக மதிப்பு 'தந்தை' அல்லது 'மகன்' அல்லது 'கணவர்' என்பது. இதைத் தாண்டி அவர் தன்னிலேயே மேற்காணும் அடையாளங்களைக் கடந்த ஓர் அகமதிப்பைக் கொண்டிருக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவருகின்றனர். சீடர்கள் அவர்களை அதட்டுகின்றனர். 12 வயது நிரம்பாத குழந்தைகளை பெரும்பாலும் அஃறினையில்தான் அழைக்கின்றது கிரேக்க மொழி. நம் தமிழ் மொழியிலும் இதைக் காண்கிறோம். 'பாப்பா என்ன படிக்குது?' 'தம்பி எங்க இருக்கு?' என்று நாமும் குழந்தைகளை அஃறினையில்தான் பேசுகின்றோம். மேலும், 12 வயது நிரம்பினால்தான் தோரா என்னும் சட்ட நூல்களைப் படிக்க முடியும் என்பதால், குழந்தைகள் ஆன்மிக அளவிலும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையினராகவே கருதப்பட்டனர். 

கிரேக்க மொழியும், யூத சமயமும் குழந்தைகளின் முக மதிப்பைக் கண்டன. சீடர்களும் இதன் பின்புலத்திலேயே அவர்கள் தங்கள் போதகரிடம் வருவதைத் தடை செய்கின்றனர்.

ஆனால், இயேசு இக்குழந்தைகளின் அகமதிப்பைக் காண்கின்றார். 'இறையாட்சி இத்தகையோரதே!' என அவர்களை இறையாட்சியின் முதல்நிலை உறுப்பினர்களாக மாற்றுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யாக் 5:13-20), யாக்கோபு தன் திருமுகத்தை ஏறக்குறைய நிறைவு செய்யும் பகுதியில், தன் குழுமத்திற்கு இறுதி அறிவுரை வழங்குகின்றார். உண்மையை விட்டு விலகிச் செல்லும் ஒரு நபரை மனந்திரும்பச் செய்தல் என்பது அந்த நபரை மனந்திருப்புதலுக்குச் சமம் என்கிறார் யாக்கோபு. 

உண்மையை விட்டு விலகிச் செல்பவரின்மேல் பொறுப்புணர்வும், அவருடைய தவற்றைச் சுட்டிக்காட்டும் துணிவும் கொண்ட ஒருவர்தான் அவரை மனம்திரும்பச் செய்ய முடியும். பல நேரங்களில் நாம் பொறுப்புணர்வைத் தட்டிக் கழிக்கின்றோம். அல்லது அவரோடு சமரசம் செய்துகொள்கின்றோம்.

சீடர்கள் குழந்தைகளைப் பார்க்கின்ற பார்வையை இயேசு மாற்றுவதன் வழியாக அவர்களை மனந்திருப்புகின்றார்.

இன்றைய நற்செய்தி நமக்கு இரு பாடங்களைக் கற்றுத் தருகின்றது:

ஒன்று, நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது அவருடைய முக மதிப்பை மட்டும் காண்கின்றேனா? அல்லது அதையும் தாண்டி அவருடைய அக மதிப்பை நோக்கிச் செல்கின்றேனா?

இரண்டு, என் அகமதிப்பை நான் கண்டுகொள்கின்றேனா? என் அக மதிப்பு உயர்ந்து இருக்கும்போது என் வாழ்க்கை நிலையும் உயர்கின்றது. வெளி அடையாளங்களைக் கடக்கும்போதுதான் நான் என் அகமதிப்பைக் கண்டுகொள்ள முடியும்.


Thursday, February 24, 2022

கடின உள்ளம்

இன்றைய (25 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 10:1-12)

கடின உள்ளம்

முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், ஆண்டவராகிய கடவுள் பத்துக் கொள்ளை நோய்களை அனுப்பும் நிகழ்வில், ஒவ்வொரு முறையும் பாரவோனின் உள்ளம் கடினமாவதை வாசிக்கின்றோம். செங்கடலைக் கடந்து இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் பயணம் செய்யும்போது ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா எனச் சோதித்தறியும் நிகழ்வில், 'உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்' என எச்சரிக்கின்றார் மோசே.

கடின உள்ளம் தன்மையம் கொண்டதாக மாறுகிறது. கடின உள்ளம் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.

மணமுறிவு பற்றிய கேள்வி இயேசுவிடம் எழுப்பப்படுகின்றது. மணமுறிவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லும் இயேசு மணவுறவின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குச் சொல்கின்றார். மண உறவில் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், மணமுறிவுக்கான காரணத்தைத் தேடும் போது அவர்கள் தன்மையம் கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர்.

இதையே இயேசு, 'கடின உள்ளம்' என்று சுட்டிக்காட்டுகின்றார்.

உறவுக்காக படைக்கப்பட்ட மனிதர்கள், முறிவைத் தேடும்போதெல்லாம் தன்னலம் நோக்கியே நகர்கிறார்கள்.


Wednesday, February 23, 2022

தூய்மையாக்கப்படுவர்

இன்றைய (24 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 9:41-50)

தூய்மையாக்கப்படுவர்

'பலிப் பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவது போல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்' என்று சொல்கின்ற இயேசு, தொடர்ந்து, உப்பு தன் தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்றும், சீடர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அமைதியில் வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார்.

பலிப் பொருள் தூய்மையாக்கப்படுவதன் பின்புலத்தில் தன் சீடர்கள் ஆன்மிகப் புதுப்பித்தல் பெற அவர்களை அழைக்கின்றார்.

சீடர்கள் மூன்று வழிகளில் தூய்மையாக்கப்படுகிறார்கள்:

ஒன்று, இரக்கச் செயல்கள் வழியாக. அதாவது, ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பதன் வழியாக.

இரண்டு, மற்றவர்களுக்கு இடறலாக இல்லாதிருப்பதன் வழியாக. மற்றவர்களின் பாவச் செயல்களுக்குத் தாங்கள் காரணமாக இல்லாதிருப்பதன் வழியாக. குறிப்பாக வலுவற்றவர்கள் மற்றும் நொறுங்குநிலையில் உள்ளவர்களைப் பாவத்தில் தள்ளாதிருப்பதன் வழியாக.

மூன்று, பாவத்திற்குக் காரணமான உடலுறுப்புகளை உடனடியாக நீக்குவதன் வழியாக. அதாவது, பாவச் செயல்களை உடனடியாக நிறுத்திக் கொள்வதன் வழியாக.

நெருப்பில் எறியப்படும் பொன் தன் அழுக்குகளை எல்லாம் இழந்து ஒளிர்கிறது.

தன்னையே நெருப்பின் வெப்பத்திற்கு ஆட்படுத்தும்போதுதான் அது தூய்மை பெறுகிறது.

இன்று நாம் தூய்மை அடைய வேண்டிய பகுதி எது? நெருப்பில் இட வேண்டிய பகுதி?

முதல் வாசகத்தில், செல்வத்தின் நிலையாமை பற்றித் தன் குழுமத்திற்கு எழுதுகின்ற யாக்கோபு, அநீதியான செல்வம் சேர்த்தலைக் கண்டிப்பதோடு, இவ்வகையான செல்வம் நெருப்பு போல அழித்துவிடும் என்று எச்சரிக்கின்றார்.


Tuesday, February 22, 2022

நம்மைச் சாராதவர்

இன்றைய (23 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 9:38-40)

நம்மைச் சாராதவர்

'மற்றவர்களை விட நாம் ஏதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள்' என்ற மாயை பல நேரங்களில் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. 'எப்படி எல்லாம் நான் மற்றவர்களை விட உயர்ந்தவர்' என்று என் மனம் என் விருப்பம் இல்லாமலேயே எண்ணிக் கொண்டிருக்கிறது. என்னை விட இன்னொருவர் உயர்ந்தவராகத் தெரிந்தால், உடனே அவரை என் குழுவுக்குள் இழுத்து, 'நாம் வேறு - அவர்கள் வேறு' என்னும் வேறுபாட்டை உருவாக்கிக் கொள்கின்றோம்.

இயேசுவின் திருத்தூதர்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. தாங்கள் பெற்ற ஆற்றல், தாங்கள் செய்த அரும் செயல்கள், தங்களோடு இருந்த இயேசு என தங்களுக்கென்று ஒரு குழு மனநிலையை உருவாக்கிக் கொண்டு மற்றவர்கள் தங்களைச் சாராதவர் என்று அடையாளப்படுத்தினர். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடம் தங்களைச் சாராத ஒருவர் பேய் ஓட்டுவதைக் கண்டு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்ததைச் சொல்கின்றார். ஆனால், இயேசு குழு மனநிலையைச் சார்ந்திருப்பதைத் தாண்டி அந்த மனிதரின் நம்பிக்கையைப் பாராட்டுகின்றார்.

நம் வாழ்விலும், கிறிஸ்தவர்கள் என்ற குழுவுக்குள் இருப்பதால் மற்றவர்கள் நம்மைச் சாராதவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், மற்றவர்கள் தங்கள் நம்பிக்கையால் நம்மை விட உயர்ந்து கொண்டிருப்பார்கள்.

இரண்டு விடயங்கள் முக்கியமானவை:

ஒன்று, ஆன்மிகம் என்பது குழு சார்ந்தது அல்ல. மாறாக, நம் தனிநபர் நம்பிக்கை அனுபவம் சார்ந்தது.

இரண்டு, அடுத்தவரிடமிருந்து நான் எப்படி வேறுபட்டவர் என்று நினைப்பது நமக்குள் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வைத் தருகிறது. இதைத் தவிர்த்தல் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் குழுமத்திற்கு இரு விடயங்களை நினைவூட்டுகிறார் யாக்கோபு: ஒன்று, கடவுளின் திருவுளத்தை மனத்தில் இருத்திச் செயல்படுங்கள். இரண்டு, நன்மை செய்வதற்கு அறிந்திருந்தும் நன்மை செய்யாமல் இருப்பது தீமை.


Monday, February 21, 2022

பேதுருவின் தலைமைப்பீடம்

இன்றைய (22022022) திருநாள்

பேதுருவின் தலைமைப்பீடம்

'வாழ்க்கையில ஏதாச்சும் செய்யணும், ஆனா நேரமும் காலமும் அமைவதில்லை' என்று புலம்புபவர்களுக்கு இன்றைய நாள் ஒரு குட் நியூஸ். 22022022 என்னும் இந்த தேதியின் எண்களை மேலே கீழே, இட வலம், வலமிடம் என எப்படி வாசித்தாலும் தேதியின் எண்கள் மாறுவதில்லை. எண்ணியல் சோதிடம் (நியூமெரலாஜி)-படி '3', '6', மற்றும் '9' என்னும் எண்களில் பிறந்தவர்கள் இன்று எதைச் செய்தாலும் வெற்றி பெறுவார்கள். (அப்படி எதையாச்சும் சொல்லி வைப்போம்!)

இன்று நம் தாய்த் திருஅவை பேதுருவின் தலைமைப்பீடத்தைக் கொண்டாடி மகிழ்கின்றது. நான்காம் நூற்றாண்டு முதல் உரோமையின் பாரம்பரிய வழக்கப்படி இத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. 'உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மேல் நான் திருச்சபையைக் கட்டுவேன்' என்னும் இயேசுவின் வார்த்தைளைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இத்திருநாள். திருஅவை என்னும் மந்தையை நம் ஆண்டவராகிய இயேசு திருத்தந்தையின் பொறுப்பில் விட்டுச் சென்றார் என்றும், நம் திருத்தந்தை உறவு ஒன்றிப்பின் அடையாளமாகத் திகழ்கிறார் என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இத்திருவிழா நமக்குத் தரும் பாடங்கள் எவை?

அ. தனிநபர் நம்பிக்கை அறிக்கை

'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்னும் இயேசுவின் கேள்விக்கு, 'நீர் மெசியா' எனப் பதில் தருகின்றார் பேதுரு. இது பேதுருவின் உள்ளுணர்வு அல்லது தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. இன்று சற்று நேரம் அமர்ந்து, 'இயேசுவைப் பற்றி நான் அப்படிக் கேள்விப்படுகிறேன், இப்படிக் கேள்விப்படுகிறேன். மறையுரையில் இப்படிப் பேசுகிறார்கள். நூல்கள் இப்படி முன்மொழிகின்றன. ஆனால், அவர் எனக்கு யார்? திடீரென்று நான் இயேசுவை நேருக்கு நேராகச் சந்திக்க நேர்ந்தால் எந்த அடைமொழியால் நான் அழைப்பேன்?' என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்கலாம். நம் உள்ளுணர்வு அல்லது தனிப்பட்ட அனுபவத்தின் பின்புலத்தில் இயேசுவுக்கென்று ஒரு தலைப்பை இட்டு மகிழலாம் நாம்!

ஆ. வலுவின்மையின் கொண்டாட்டம்

பேதுருவின் பெயர் பாறை என இருந்தாலும், அவர் என்னவோ பல நிலைகளில் உறுதியற்றே இருந்தார். இயேசு தன் பாடுகளை முதன்முறை அறிவித்தபோது, சிலுவை வேண்டாம் என இயேசுவைக் கடிந்துகொள்கின்றார். பாடுகள் நிகழ்வில் இயேசுவை மறுதலிக்கின்றார். பாறை போல உறுதியாக இருக்க வேண்டிய பேதுரு, களிமண் போல நெகிழ்வுத்தன்மை கொண்டிருந்தார். ஆனால், அந்த நெகிழ்வுத் தன்மையை உறுதியாக்கும் பொறியாளர் இயேசுவே. ஆக, நம் வலுவின்மைகளையும் உறுதியாக்க வல்லவர் இயேசு. நாம் செய்ய வேண்டியதெல்லாம் பேதுரு செய்தது போல, 'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!' (காண். யோவா 27:17) என்று அவரிடம் சரணாகதி அடைவதுதான்.

இ. ஒருமைப்பாட்டின் கொண்டாட்டம்

புனே பாப்பிறைக் குருமடத்தில் என் ஆன்மிகத் தந்தை என்னிடம், 'நீ எப்போதும் இந்த நான்கு பிரமாணிக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்!' என்று சொல்வார்: 'உன்மேல் பிரமாணிக்கம் (faithfulness to self), கடவுள்மேல் பிரமாணிக்கம் (faithfulness to God), இறையழைத்தல்மேல் பிரமாணிக்கம் (faithfulness to vocation), திருஅவைமேல் பிரமாணிக்கம் (faithfulness to church).' திருஅவை என்பது சிறிய அளவில் நாம் சார்ந்திருக்கின்ற மறைமாவட்டத்தையும், அகல்விரிவெளி அளவில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவையையும் குறிக்கிறது. திருஅவையிடம் நாம் நிறையக் குறைகள் கண்டாலும், அவள் நம் தாய். தாயிடம் குறையிருக்கிறது என்பதற்காக இன்னொரு தாயை நாம் உரிமையாக்கிக் கொள்ள இயலுமா? திருஅவையின்மேல் நமக்குள்ள கடமைகைளை நினைவுகூரவும், திருஅவையை இன்னும் அதிகம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவும் இந்த நாள் நம்மைத் தூண்டுவதாக!

இன்றைய நாளில் நம் அகில உலகத் திருஅவையின் தலைவர் மதிப்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகவும், நம் தலத் திருஅவையின் தலைவராகத் திகழ்கின்ற, நிர்வாகிகள், ஆயர்கள், மற்றும் பேராயர்களுக்காகவும் சிறப்பாக மன்றாடுவோம்.


Saturday, February 19, 2022

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

ஆண்டின் பொதுக்காலம் 7ஆம் ஞாயிறு

I. 1 சாமுவேல் 26:2,7-9,12-13,22-23 II. 1 கொரிந்தியர் 15:45-49 III. லூக்கா 6:27-38

கொஞ்சம் எக்ஸ்ட்ரா

டெட் பேச்சுகளின் இந்தியப் பேச்சாளர்கள் வரிசையில் ஜோசப் அன்னம்குட்டி ஜோஸ் என்ற பாலக்காட்டு இளைஞர் ஒருவர், 'எக்ஸ்ட்ரா ஐ, எக்ஸ்ட்ரா இயர், எக்ஸ்ட்ரா ஹார்ட்' என்னும் தலைப்பில் பேசுகிறார். இவர் பண்பலை ஒன்றின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார். மூன்று கதைகள் சொல்லி தன் உரையை நிகழ்த்துகிறார். அதில் முதல் கதை அவருடைய கல்லூரிப் பருவம் பற்றியது. எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த அவர் முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தவறி விடுகிறார். அவரால் அத்தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆசிரியர்கள் கடிந்துகொள்கிறார்கள். நண்பர்கள் அவரை ஒதுக்குகிறார்கள். மாலையில் வீட்டிற்கு வந்த அவர் தன் பெற்றோரை அழைத்து தான் தேர்வில் தவறியதைச் சொல்கிறார். அப்பாவும், அம்மாவும் அவரை ஒன்றும் சொல்லவில்லை. அப்பா அவரை அழைத்து, 'வா வெளியே போய்விட்டு வருவோம்' என்று தோளில் கைபோட்டு இவரை அழைத்துச் செல்கிறார். ஊருக்கு வெளியே இருக்கின்ற ஒரு சிறிய சாலையோர ஓட்டலுக்குச் செல்கிறார்கள். அப்பா, 'இரண்டு டீ, ஒரு மசால் தோசை' என்று ஆர்டர் செய்துவிட்டு அமர்கிறார். இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னை அப்பா தவறாகப் புரிந்துகொண்டாரோ என்றுகூட நினைக்கிறார். அவர்கள் ஆர்டர் செய்தவை வருகின்றன. மசால் தோசையை இவர் பக்கம் நகர்த்தி வைக்கும் அப்பா, 'ஜோஸ், சாப்பிடு! தோல்வி எப்போதும் முடிவல்ல' என்று டீயைக் குடிக்க ஆரம்பிக்கிறார். இவருக்கு கண்ணீர் பொங்கி வழிகிறது. இதுவரைத் தன் தோல்விக்காக அழாதவர் இப்போது தன் தந்தையின் பரிவின்முன் அழுகிறார். நாள்கள் நகர்கின்றன. இவர் அத்தேர்வை எழுதி வெற்றி பெறுகின்றார். அத்தேர்வின்போது இவருடைய அடுத்த பேட்ச் மாணவர்களின் நட்பும் கிடைக்கிறது. ஆக, கல்லூரி செயலராகவும் தெரிவுசெய்யப்படுகின்றார். 'என் அப்பா அன்று என்னை ஒரு எக்ஸ்ட்ரா கண் கொண்டு பார்த்ததால், எக்ஸ்டரா காது கொடுத்து நான் பேசியதைக் கேட்டதால், எக்ஸ்ட்ரா இதயம் கொண்டு என் தோல்வியை ஏற்றுக்கொண்டதால் என்னால் சாதிக்க முடிந்தது' என உரையின் முதல் பகுதியை நிறைவு செய்கிறார் ஜோஸ்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா, அல்லது இன்னும் கொஞ்சம் - இதுதான் இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வழங்கும் செய்தியாக இருக்கிறது. நாம் காலையில் கண் விழித்தவுடன் தேடும் பற்பசை தொடங்கி, நாள் முழுவதும் பயன்படுத்தும் அலைபேசி, இணையதள சேவை எனத் தொடர்ந்து, இரவில் தூங்குவதற்கு முன் ஏற்றும் குட்நைட் லிக்விட் வரை, எல்லாவற்றிலும், 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' என்று இன்றைய வியாபார உலகம் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த 'எக்ஸ்ட்ராக்கள்' எல்லாம் நம் மேல் சுமத்தப்பட்டவை. இவை நமக்கு வழங்கப்படும் இலவசங்கள் அல்ல. இவற்றிற்கான பணமும் நம்மிடமிருந்து வசூலிக்கப்பட்டுவிடுகிறது. மேலும், இவைகள் ஒவ்வொன்றும் நிபந்தனைக்கு உட்பட்டவை. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை அழைப்பது வியாபார நோக்கமற்ற, நிபந்தனைகளற்ற 'கொஞ்சம் எக்ஸ்டராவிற்கு.'

எப்படி?

இன்றைய முதல் வாசகம் (காண். 1 சாமு 26:2,7-9,12-13,22-23) தன் கைக்குக் கிடைத்த சவுலைக் கொல்லாமல் விடும் தாவீதின் பெருந்தன்மையையும், அவர் அருள்பொழிவு செய்யப்பட்ட சவுலின்மேல் வைத்திருந்த மதிப்பையும் எடுத்துரைக்கிறது. சவுல் இஸ்ரயேலின் முதல் அரசர். சிதறுண்டு கிடந்த இஸ்ரயேலின் பன்னிரு குலங்களை ஒன்றாகச் சேர்த்து, அன்றைய புதிய மற்றும் ஆற்றல்மிக்க எதிரியான பெலிஸ்தியரை வெல்வது சவுலின் முதன்மையான பணியாக இருந்தது. பெலிஸ்தியருக்கு எதிரான போரில் தொடக்கத்தில் இவர் வெற்றி பெற்றாலும், காலப்போக்கில் இறைவாக்கினர் சாமுவேலோடு நடந்த உரசல்களாலும், தனக்கென்றும் தன் மாட்சிக்கென்றும் அரசாட்சியைப் பயன்படுத்தியதாலும் கடவுளின் அதிருப்திக்கு ஆளாகின்றார் சவுல். சவுல் அரசாட்சியில் இருக்கும்போதே தாவீது அரசராக அருள்பொழிவு பெறுகின்றார். கோலியாத்தை வென்றதில் தொடங்கி தாவீதின் ஆற்றல் மற்றும் போரிடும் திறன் மற்றவர்களால் அதிகம் பேசப்படுகிறது. இது சவுலின் பொறாமையைத் தூண்டி எழுப்புகிறது. தன் அரச இருக்கை தன்னிடமிருந்து பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தாவீதை பல நேரங்களில் பல இடங்களில் கொல்ல முயல்கிறார் சவுல். ஒரு கட்டத்தில் சவுலிடமிருந்து தப்பி பாலைநிலத்தில் தஞ்சம் புகுகிறார் தாவீது. தாவீதை இவ்வாறு விரட்டிக்கொண்டே செல்லும் சவுல் ஒரு கட்டத்தில் தாவீதின் கைகளில் விழுகின்றார். இந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகம் வர்ணிக்கிறது. சவுல் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அவரோடு இருந்த படைவீரர்களும் தூங்குகின்றனர். பயணக் களைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் என்பதால் மிகவும் அயர்ந்து தூங்குகிறார்கள். சவுலின் தலைமாட்டில் ஈட்டி இருக்கிறது. மேலும், தாவீதோடு உடன் வந்த அபிசாய் தானே சவுலைக் கொன்று தாவீதிடம் 'வெரி குட்' வாங்க முன் வருகின்றார். ஆக, தனக்கு முன் தூங்கிக் கொண்டிருக்கும் எதிரி, கையின் அருகில் ஈட்டி, தனக்குப் பதிலாகக் குத்தக் காத்திருக்கும் அபிசாய் என மூன்று வாய்ப்புக்கள் இருந்தும், 'அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?' என்று சொல்லிச் சவுலைக் கொல்லாமல் விடுகின்றார் தாவீது. மேலும், தான் அந்த இடத்திற்கு வந்து, சவுலுக்குத் தீங்கிழைக்க வாய்ப்பு கிடைத்தும், தான் தீங்கு செய்யாமல் விட்டதன் அடையாளமாக, 'தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்க் குவளையையும்' எடுத்துக்கொண்டு போகிறார் தாவீது. காலையில் துயில் எழும்பியதும் சவுல் தேடியவை இவைகளாகத்தான் இருந்திருக்கும். மேலும், மறுநாள், 'அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்தும் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்கவில்லை' என்று உரக்கக் கூறுகிறார் தாவீது.

ஆக, தனக்கு இன்னா செய்த சவுலை ஒறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், அதைக் கடவுளே அனுமதித்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய மறுப்பதன் வழியாக, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' இதயம் கொண்டவராக நமக்கு முன்வைக்கப்படுகிறார் தாவீது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:45-49) இறந்தவர் உயிர்பெற்றெழுதல் பற்றிய போதனையின் தொடர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர் உயிர்ப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு விளக்குகின்ற பவுல், 'ஆதாம்' 'கிறிஸ்து' என்ற இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி, 'மனித' மற்றும் 'ஆவிக்குரிய' இயல்புகளின் குணநலன்களை முன்வைக்கின்றார். இங்கே, ஆதாம் உயிர் பெற்றவர் என்றும், கிறிஸ்து உயிர் தருபவர் என்றும் பவுல் எழுதுகின்றார். ஆதாம் உயிர் பெற்றார். ஆனால், அவருடைய மனித இயல்பில் அவர் இருந்ததால் அவரால் மீண்டும் உயிர் தர முடியவில்லை. ஏனெனில், மனித இயல்பு அழிவுக்குரியது. அது வரையறைக்குட்பட்டது. ஆனால், கிறிஸ்து அப்படி அன்று. அவர் தான் மனுவுரு ஏற்றபோது உயிர் பெற்றவராக இருந்தாலும், தன் உயிர்ப்பின் வழியாக அவர் உயிர்தருபவராக மாறுகின்றார். ஏனெனில், அவருடைய இயல்பு ஆவிக்குரியது. அது வரையறைகள் அற்றது. 

ஆக, ஒருவர் தன் ஆதாம் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார் என்றும், ஒருவர் கிறிஸ்து இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் உயிர்தரும் இயல்பையும் பெற்று கிறிஸ்துவோடு உயிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்துகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 6:27-38) கடந்த வார சமவெளிப்பொழிவின் தொடர்ச்சியாக இருக்கிறது. சாதாரண மனித மூளைக்கு மிக அசாதாரணமாகவும், கடினமாகவும் தோன்றும் சிலவற்றைப் பின்பற்றுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் கட்டளை இரண்டு நிலைகளில் இருக்கிறது: (அ) 'பகைவரிடம் அன்பு, சபிப்பவருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி, கேட்பவருக்குக் கொடுத்தல், பொருள்களை எடுத்துக்கொள்வோரிடமிருந்து திருப்பிக் கேட்காமல் இருத்தல்,' (ஆ) 'பிறருக்கு தீர்ப்பளிக்க வேண்டாம். மன்னியுங்கள். கொடுங்கள்.' ஒருவர் இந்த இரண்டு கட்டளைகளையும் பின்பற்ற வேண்டுமானால், அவர் தன்னுடைய தனிப்பட்ட அறநெறிக்கொள்கையையும், தான் மனித உறவுகளைப் பற்றி வைத்திருக்கின்ற எண்ணங்களையும் மறுஆய்வு செய்ய வேண்டும். இயேசுவின் புதிய கொள்கைத்திரட்டைப் பின்பற்ற அவரே மூன்று உந்துப்புள்ளிகளையும் தருகின்றார்: (அ) 'பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' - ஆண்டான், அடிமை, இருப்பவன், இல்லாதவன், மேலிருப்பவன், கீழிருப்பவன், முதலாளி, வேலைக்காரன் என எல்லாருக்கும் பொருந்தும் இவ்விதி ஒருவரின் தனிமனித மாண்பை மையப்படுத்துவதாக இருக்கிறது. (ஆ) 'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்' - கடவுளைப் போல இருத்தலை ஒரு ஐடியலாக முன்வைக்கிறார் இயேசு. ஆக, ஒருவரின் மனித இயல்பைச் சற்றே உயர்த்துகின்றார். (இ) 'நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்' - ஆக, நான் செய்வது எனக்கே திரும்பக் கிடைக்கும் என்ற ஆர்வம் அல்லது அச்சத்தினால் செய்ய அழைக்கிறார் இயேசு.

ஆக, மேற்காணும் இரண்டு கட்டளைகள் மற்றும் மூன்று உந்துபுள்ளிகளின் நோக்கம் ஒன்றுதான்: 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாழ்வது.' இப்படி வாழ்பவர்கள் 'உன்னத கடவுளின் மக்கள் எனப்படுவார்கள்' என்ற புதிய பெயரையும் இயேசு தருகின்றார். ஆக, எல்லாரும் செய்வதைப் போலச் செய்யாமல், கொஞ்சம் அதிகமாக செய்யச் சொல்கிறார் இயேசு.

நம் வாழ்வில் 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம்' கொண்டு எப்படி வாழ்வது?

1. பிறரின் நல்வாழ்வு என் இலக்காக வேண்டும்

கொஞ்சம் எக்ஸ்ட்ரா கண், காது, இதயம் கொண்டு வாழ்வதன் இலக்கு தன்னுடைய நல்வாழ்வு அன்று. மாறாக, எனக்கு அடுத்திருப்பவரின் நல்வாழ்வு. அடுத்தவரின் நல்வாழ்வை இலக்காக வைப்பது என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை இழக்கத் துணிவது. தூங்கி எழும் சவுல் தன்னை மீண்டும் துரத்துவார், தன் உயிரைப் பறிக்கத் தேடுவார் எனத் தெரிந்தும், தன் பாதுகாப்பின்மையிலும் சவுலின் பாதுகாப்பை முதன்மைப்படுத்துகின்றார். சவுலின் உயிரைக் கொல்லாது விடுகின்றார். தன் இறப்பின் வழியாகத்தான் மானுடம் மீட்புப் பெற முடியும் என்று இயேசு மானுட நல்வாழ்வை இலக்காகக் கொண்டிருந்ததால்தான் அவரால் தன்னுடைய இன்னுயிரை இழக்க முடிகிறது. இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என எல்லாவற்றையும் செய்ய முடிகிறது. இயேசுவின் சீடர்களும், அவருடைய இரண்டு கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் நோக்கம் தங்கள் நல்வாழ்வு அல்ல, மாறாக, பிறரின் நல்வாழ்வே. ஏனெனில், இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அவர்கள் நிறைய துன்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும். மற்றவர்கள் தங்களைக் காயப்படுத்துவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். 

2. வலியை வலிந்து ஏற்றல் வேண்டல்

'தெ ஸெல்ஃபிஷ் ஜீன்' என்ற நூலின் ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ், மனித உடலின் ஜீன்கள் இயல்பாகவே தன்னலம் நோக்கம் கொண்டவை என்கிறார். இவை எந்த நேரத்திலும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். மேலும், எந்த ஆபத்து நேரத்திலும் இவை தங்களைத் தற்காத்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும் என்கிறார். ஏனெனில், ஜீன்கள் இயல்பாகவே வலியை ஏற்கத் தயங்குபவை. இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் காணும் தாவீது, இயேசு, இயேசுவின் சீடர்கள் இந்த இயல்புக்கு எதிராகச் செல்கிறார்கள். வலியைத் தாங்களாகவே ஏற்கிறார்கள். இன்றைய நம் உலகம் வலிகள் இல்லாமல் வழிகளைக் கற்றுக்கொடுக்க நினைக்கிறது. ஆனால், வலிகளை வலிந்து ஏற்பதில் வழிகள் தென்படுவதோடல்லாமல், வலிகளும் மறைந்துவிடும் எனக் கற்பிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

3. என் அளவை எது? என்ற தெளிவும் உறுதியும் வேண்டும்

வாழ்க்கை ஒரே அளவையால் எல்லாருக்கும் அளப்பதில்லை. மேலும், நான் பிறருக்கு அளக்கும் அளவையைப் போல அவரும் எனக்கு அளப்பதில்லை. நான் நன்றாகக் கூலி கொடுக்கும் வீட்டுத் தலைவியாக இருக்க, என் வீட்டில் வேலை செய்பவர் அதற்கேற்ற வேலை செய்வதில்லை. ஆசிரியரின் உழைப்பு என்ற அளவைக்கு ஏற்ப மாணவர்கள் உழைப்பதில்லை. நான் நல்லது செய்ய அதுவே எனக்குத் தீங்காகவும் முடியலாம். இம்மாதிரி நேரங்களில் எல்லாம், அளவைகளை மாற்றிக்கொள்ளும் சோதனை வரும். அச்சோதனையிலிருந்து விடுபட வேண்டும். தாவீதுக்கு சோதனை அபிசாய் வடிவிலும், மேலும் தன்னுடைய சிந்தனையாலும் வருகிறது. 'கடவுளே இதை அனுமதித்தார்' என்று தனக்குத் தானே நியாயம் சொல்லி சவுலை அவர் கொன்றிருக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் தன் தகைமை, தாராள உள்ளம் என்னும் அளவையை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. இதுதான் கன்சிஸ்டன்ஸி - மாறாத்தன்மை. ஆகையால்தான், இயேசுவும் 'தந்தை போல இரக்கம் கொள்ளுங்கள்' என்கிறார். கடவுள் தன் அளவையை ஆள்பார்த்து மாற்றுவதில்லை. எல்லார்க்கும் பெய்யும் மழையாக அவர் இருக்கிறார். 'என் அளவையை மாற்றிக்கொள்ள' என் ஆதாம் இயல்பு என்னைத் தூண்டும்போது, உடனடியாக மாறாத கிறிஸ்து இயல்பை அணிந்துகொள்ள வேண்டும்.

இறுதியாக, இன்று சரிக்குச் சரி, தவறுக்குத் தவறு, அல்லது சரிக்கும் தவறு, என்ற குறுகிய மனநலப் போக்கே நம் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வின் மகிழ்வைக் குலைக்கிறது. யாரும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒன்றையே செய்யத் தயங்கும் இன்று, 'கொஞ்சம் எக்ஸ்ட்ரா' சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், இயேசுவின் மாற்றுக்கலாச்சாரம் எப்போதும் சாத்தியமே. இன்றைய பதிலுரைப் பாடலில் நாம் வாசிப்பது போல (திபா 103), ஆண்டவர் 'எனக்கு பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டியிருக்கிறார்' என்றால், நானும் அவருடைய மகனாக, மகளாக, கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு, இரக்கம் என வாழ்ந்தால் எத்துணை நலம்! 


Friday, February 18, 2022

நாவடக்கம்

இன்றைய (19 பிப்ரவரி 2022) முதல் வாசகம் (யாக் 3:1-10)

நாவடக்கம்

தன் குழுமத்தில் பலரும் போதகர்களாக விரும்புவதைக் காண்கின்ற திருத்தூதர் யாக்கோபு, அதற்கான அறிவுரைப் பகுதியில் நாவடக்கம் பற்றிப் பேசுகின்றார்.

'காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம். அடக்கியும் உள்ளனர். ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை' என்கிறார் யாக்கோபு.

நாவடக்கம் என்பதை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்:

ஒன்று, உண்மையானவற்றையும், மேன்மையானவற்றையும் உரைப்பது

நாவடக்கம் என்பது ஊமை போல இருக்கின்ற நிலை அல்ல. மாறாக, உண்மையானவற்றை உரைக்க உரைப்பதே நாவின் பணி. பொய்யுரைப்பது குறையும்போது இயல்பாகவே நாவடக்கம் வந்துவிடுகிறது.

இரண்டு, கெட்ட வார்த்தைகளையும், கடுஞ்சொற்களையும் தவிர்ப்பது

ஆண்டவரைப் புகழ்கின்ற நாவைக் கொண்டே அடுத்தவரையும் பழித்துரைப்பது சரியா? என்னும் கேள்வியை எழுப்புகின்ற யாக்கோபு, கடுஞ்சொற்கள் தவிர்க்க நம்மை அழைக்கின்றார்.

மூன்று, அமைதி அல்லது மௌனம் காப்பது

நாவடக்கத்திற்கான மிகவும் எளிய வழி இது. ஆனால், அமைதி காத்தல் நமக்குப் பல நேரங்களில் கடினமாக இருக்கிறது. ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் நாம் எதையாவது பேசிக்கொண்டே இருக்கின்றோம். நம் சொற்கள் கூடக் கூட நம் மடமையும் கூடுகிறது. நிறைவான, சரியான சொற்களைத் தேவையான நேரங்களில் மட்டுமே பயன்படுத்துவது நலம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் திருத்தூதர்கள் மூவர்முன் தோற்றம் மாறுகின்றார். இயேசுவைப் பற்றிய புதிய புரிதலை அவர்கள் பெறுகின்றனர். மலையில் கேட்கின்ற குரலொலி, 'இவருக்குச் செவிசாயுங்கள்' என நம்மை அழைக்கிறது.

அவருக்குச் செவிசாய்த்தல் ஆழ்ந்த அமைதியில்தான் நடந்தேறுகிறது.


Thursday, February 17, 2022

பின்பற்ற விரும்பும் எவரும்

இன்றைய (18 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:34-9:1)

பின்பற்ற விரும்பும் எவரும்

இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு நற்செய்தி நூல்களில் இரு நிலைகளில் வழங்கப்படுகிறது: (அ) சிலரை இயேசு தாமே விரும்பி அழைக்கின்றார். (ஆ) தன்னை எல்லாரும் பின்பற்றலாம் என்ற திறந்த அழைப்பை விடுக்கின்றார். 

தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் ... எனத் தொடர்கின்ற இயேசு அதற்கான செக்லிஸ்டை முன்மொழிகின்றார்: ஒன்று, தன்னலம் துறக்க வேண்டும், தம் சிலுவையைத் தூக்க வேண்டும். செக்லிஸ்ட் சிறியதாக இருந்தாலும் பொறுப்பு என்னவோ அதிகமாகவே இருக்கிறது. 

ஒரு நிறுவனம் தனக்கான பணியாளர்களைத் தெரிவு செய்யும்போது நிறைய ஈர்ப்புகளை முன்வைக்கும். சம்பளம், வெகுமதி, விடுமுறை நாள்கள், கணினி, செயல்திறன்பேசி என நிறையவற்றை முன்மொழிந்து, பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்வர். ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்த ஈர்ப்புகளையும் முன்மொழியவில்லை.

தன்னலம் துறத்தல் என்றால் என்ன?

நம் உடல் இயல்பாகவே தன்னலத்திற்குப் பழக்கப்பட்டது. ஆபத்துக்காலத்தில் நம் உடல் தன்னைத் தற்காத்துக் கொள்ளவே விரும்புகிறது. உடலின் செயல்பாடுகள் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக, நான் ஒரு குச்சியை எடுத்து உங்கள் கண்ணருகில் வேகமாகக் கொண்டு வந்தால் கண் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இந்த அனிச்சை செயல் வழியாக உடல் தன் உறுப்புகளைத் தற்காத்துக்கொள்கிறது. முற்றும் துறந்த முனிவரின் கண்முன் குச்சியை நீட்டினாலும் அவருடைய கண்ணும் மூடிக்கொள்ளவே செய்யும். ஆக, உடல்சார் தன்னலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலையில் எழுந்தவுடன் கழிவு அகற்றுதல், நண்பகலில் பசித்தல், இரவில் தூங்குதல் என்பதன் வழியாக உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. இந்தச் சுழற்சியிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.இதை யாரும் துறக்க முடியாது.

அறிவுசார் அல்லது மனம்சார் தன்னலம் என்பதையே துறக்க வேண்டும். அதாவது, 'எல்லாரும் என்னை நோக்கி,' 'எல்லாரும் எனக்காக', 'எல்லாம் எனக்காக' என்னும் ஆசையில் தோன்றும் தன்னலம் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய தன்னலம் நம்மைச் சிறைப்பிடிக்கிறது. 

தன் சிலுவை சுமத்தல்

இது செக்லிஸ்டின் இரண்டாவது பண்பு. சிலுவை சுமத்தல் என்பது துன்பம் ஏற்றல். தன்னலம் இயல்பாகவே துன்பம் ஒதுக்குகிறது. தன்னலம் துறக்கும்போது நாம் இயல்பாகவே துன்பம் ஏற்கத் தொடங்குகிறோம். ஏனெனில், தன்னலத்தை விடுப்பதே பெரிய துன்பம்.

அய்ன் ரேன்ட் அவர்கள் எழுதிய, 'தெ வெர்ச்யூ ஆஃப் செல்பிஷ்னெஸ்' தத்துவஇயல் நூல், 'தன்னலத்தை' ஒரு முதன்மையான மதிப்பீடாக முன்வைக்கின்றது. நாம் செய்யும் பெரிய பிறர்நலப் பணியில்கூட தன்னலமே ஒழிந்திருக்கிறது. தாயின் அன்பு, குழந்தையின் அன்பு போன்ற சிலவற்றை நாம் இந்த லிஸ்டில் இருந்து அகற்றலாம். 

என் மனச்சுதந்திரம் அல்லது கட்டின்மை எப்போதும் முதன்மையான தெரிவாக இருக்க வேண்டும்.

முதல் வாசகத்தில், புனித யாக்கோபு, தன் குழுமத்தில் உள்ளவர்களிடம் நம்பிக்கையும் செயலும் இணைந்து செல்ல வேண்டும் எனக் கற்பிக்கின்றார். நம்பிக்கை செயல்களில் கனியும்போது தன்னலம் மறைகிறது.

Wednesday, February 16, 2022

கையிருப்பு அறிதல்

இன்றைய (17 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:27-33)

கையிருப்பு அறிதல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த விடுமுறைக் காலத்தில் இராஜபாளையத்தில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் ஒரு வாரம் வேலை பார்த்தேன். அந்த வாரம் மாதத்தின் இறுதி வாரம் என்பதால், 'கையிருப்பு எடுத்தல் அல்லது அறிதல்' (டேக்கிங் ஸ்டாக்) முதன்மையான வேலையாக இருந்தது. காலை முதல் மாலை வரை ஒவ்வொரு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மருந்துகளை எடுத்து அவற்றின் எண்ணிக்கையைக் குறிக்க வேண்டும். இப்போதுள்ள கணினி மென்பொருள்கள் அன்று இல்லை. கையிருப்பு அறிதலுக்கு முதன்மையானது கையில் இருப்பதை அறிதல். அதாவது, நான் கையில் எடுக்கும் பொருள் என்ன என்ற தெளிதல் வேண்டும். அந்தத் தெளிதல் இருந்தால்தான் அது மாத்திரை வகையா, ஊசி வகையா, களிம்பு வகையா என்று நான் பிரிக்க முடியும். அடுத்ததாக, கையிருப்பு அறிதலின் முக்கியமான நோக்கம் நம்மையே அடுத்த மாதத்திற்குத் தயாரிப்பது. எதை வாங்க வேண்டும், எதை நிறுத்த வேண்டும், எந்தப் பொருளுக்குத் தேவை இருக்கிறது, காலாவதியான பொருளை எப்படி நீக்குவது என்பதை அறிவதற்கு கையிருப்பு அறிதல் மிகவும் பயன்படுகின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், சீடர்கள் தங்கள் கையில் இருப்பவர் யார் என்று அறிகின்றனர். 'நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என இயேசு கேட்க, பேதுரு, 'நீர் மெசியா' என்று பதிலிறுக்கின்றார். சீடர்கள் புரிந்தும் புரியாமலும் இருக்க, பேதுரு இயேசுவைப் பற்றி அறிந்தவராக நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். பேதுருவின் அறிக்கையைப் பாராட்டுகின்றார் இயேசு.

தொடர்ந்து இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி முதன்முறையாக முன்னறிவிக்கின்றார். அதாவது, தன் கையிருப்பை அறிந்தவராக இருக்கின்றார் இயேசு. துன்பங்கள் பற்றிய கையிருப்பு செய்கின்றார் இயேசு. 

பேதுருவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கையில் இருந்த மெசியாவைப் பார்த்த பேதுரு, மெசியாவின் கையிலிருந்த துன்பங்களைக் காண மறக்கின்றார்.

நம் வாழ்வு அடுத்தடுத்த துன்பங்களாகத்தான் கடந்து போகிறது. துன்பங்களே நம் வாழ்வின் வேகத்தைக் கூட்டுகின்றன. துன்பங்களே நம் வாழ்வின் மகிழ்ச்சிகளைக் கொண்டாட வைக்கின்றன.

துன்பங்களைப் பற்றிய நம் பார்வை எப்படி இருக்கிறது?

முதல் வாசகத்தில், யாக்கோபுவின் குழுமத்தில் உள்ள பிரச்சினை ஒன்றைக் காண்கின்றோம். ஏழையர் ஒதுக்கப்படுகின்றனர். செல்வந்தர்கள் மதிக்கப்படுகின்றனர். 

மனிதர்கள் மற்றவர்களின் கையில் உள்ள இருப்பான செல்வத்தைக் கொண்டு மதிப்பிடுகின்றனர். ஆனால், கடவுளோ, மனிதர்களின் உள்ளத்தில் உள்ள நம்பிக்கை என்னும் கையிருப்பைக் கொண்டு அவர்களை மதிப்பிடுகின்றார்.

மற்றவர்களைப் பற்றிய என் மதிப்பீடு எதைப் பொருத்து இருக்கின்றது?


Tuesday, February 15, 2022

ஏதாவது தெரிகிறதா?

இன்றைய (16 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:22-26)

ஏதாவது தெரிகிறதா?

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி, 'சங்கடமான பகுதிகளில்' (எம்ப்பேரஸ்மென்ட் டெக்ஸ்ட்ஸ்). சங்கடமான பகுதிகள் அனைத்தும் உண்மையான பகுதிகள் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. அப்படி என்ன சங்கடம்? பார்வையற்ற நபருக்கு இயேசு பார்வை தருகின்றார். ஆனால், இரண்டாவது தடவை இயேசு அந்த நபரைத் தொடும்போதுதான் அவர் பார்வை பெறுகின்றார். அப்படி என்றால், இயேசுவின் முதல் தொடுதலுக்கு ஆற்றல் இல்லையா? என்ற கேள்வி நம் உள்ளத்தில் எழுவதால், இது சங்கடமான பகுதியாகக் கருதப்படுகிறது.

இந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள இப்பாடத்தின் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். மாற்கு நற்செய்தியில் பார்வையற்றவர்கள் பார்வை பெறும் நிகழ்வு இரு இடங்களில் உள்ளது. முதலில், பெயரில்லாத ஒருவர் பார்வை பெறுகின்றார் (மாற் 8:22-26). இரண்டாவதாக, பர்த்திமேயு பார்வை பெறுகிறார் (மாற் 10:46-52). இரு நிகழ்வுகளுமே 'வழிப் பகுதி' என்றழைக்கப்படுகின்ற மாற் 8:22 - மாற் 10:52 என்னும் பகுதிக்குள் உள்ளன. இயேசு எருசலேம் நோக்கிய வழியில் செல்கின்றார். இந்த நிகழ்வின் தொடக்கத்திலும் இறுதியிலும் பார்வையற்ற நபர்கள் பார்வை பெறுகின்றனர். இயேசு தன் எருசலேம் பயணத்தின் போது தன் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு பற்றி மூன்று முறை முன்னுரைக்கின்றார். மூன்று முறையும் சீடர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். முதல் முறை பேதுரு இயேசுவுக்குக் குறுக்கே நிற்கின்றார். இரண்டாம் முறை, தங்களுக்குள் யார் பெரியவர்? என்னும் வாக்குவாதம் சீடர்களிடையே எழுகிறது. மூன்றாம் முறை, யாக்கோபும் யோவானும் இயேசுவுக்கு அருகே அமர விரும்புகின்றனர். ஆக, இயேசுவை அவருக்கு அருகிலிருந்த சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் குறித்துக்காட்டும் உருவகங்களாகவே இருக்கின்றனர் இரு பார்வையற்ற நபர்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழங்கப்பட்டுள்ள நிகழ்வில், 'ஏதாவது தெரிகிறதா?' என்று இயேசு பார்வையற்ற நபரிடம் கேட்கின்றார். 'மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள். ஆனால், நடக்கிறார்கள்' என்கிறார் பார்வையற்ற நபர்.

மாற்கு நற்செய்தியாளரின் இலக்கியத் திறம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மனித உள்ளத்தில் இருக்கின்ற ஆன்மிக இருளை, கடவுளைக் கண்டுகொள்ள இயலாத நிலையை இதைவிட வேறு எப்படியும் எழுதிவிட இயலாது. 

பார்வையற்ற நபர் பார்க்கிறார். ஆனால், அவருக்குத் தோன்றுவது வேறு மாதிரியாக இருக்கிறது. இயேசுவின் சீடர்களே இங்கே 'நடக்கும் மரங்கள் போல' இருக்கிறார்கள். ஏனெனில், இயேசு அந்த நபரைக் குணப்படுத்தும் நிகழ்வு ஊருக்கு வெளியே நடக்கிறது. நிகழ்வில் இயேசுவும் சீடர்களும் அந்த நபரும் மட்டுமே இருக்கின்றனர். ஆக, கண்கள் திறக்கப்பட்ட அவர் முதலில் சீடர்களைத்தான் பார்க்கின்றார். 

இயேசுவை ஆண்டவர் என்று கண்டுகொள்ளாத நபர்கள், அவர்மேல் நம்பிக்கை அறிக்கை செய்யாத நபர்கள் அனைவரும் நடக்கின்ற மரங்கள் என்பதை தன் குழுமத்தாருக்கு மிக அழகாக விளக்குகின்றார் மாற்கு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். யாக் 1:19-27), 'இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்' எனத் தன் குழுமத்திற்கு அறிவுறுத்துகின்றார் யாக்கோபு.

பாதி வழி வந்து மீதி வழி வர இயலாதவர்கள் நடமாடும் மரங்கள்போல இருக்கின்றது.

இயேசு அந்த நபரை மீண்டும் தொட்டு அவருக்குப் பார்வை அளிக்கின்றார்.

நம்மால் இயேசுவைக் காண இயலாதபோது, அல்லது அவரை முழுமையாகக் காண இயலாதபோது அவரின் தொடுதல் தேவைப்படுகின்றது.

அவர் தொட்டாலன்றி நாம் அவரைக் காண இயலாது.

அவரின் தொடுதல் நம் ஆன்மிக இருள் அகற்றுவதாக!


Monday, February 14, 2022

உங்களுக்குப் புரியவில்லையா?

இன்றைய (15 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:14-21)

உங்களுக்குப் புரியவில்லையா?

இயேசுவின் சீடர்களின் கவனச் சிதறலைச் சுட்டிக்காட்டுகிறது இன்றைய நற்செய்திப் பகுதி. தேவையான அப்பங்களை அவர்கள் எடுத்துச் செல்ல மறக்கின்றனர். இந்த நேரத்தில் இயேசு அவர்களிடம் பரிசேயரது புளிப்பு மாவு பற்றி - உருவகமாக, அவர்களுடைய வெளிவேடம், இரட்டைத்தன்மை, வன்மம் பற்றி - கவனமாக இருக்குமாறு இயேசு அவர்களை எச்சரிக்கின்றார். ஆனால், அவர்களுடைய எண்ணமெல்லாம் வீட்டில் விட்டு வந்த அப்பத்தின் மேலேயே இருக்கிறது.

அப்பம் அளிக்கும் கடவுள் தன் அருகில் இருப்பதை மறந்துவிட்டு, தாங்கள் விட்டு வந்த அப்பத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் சீடர்கள். பாவம்! பரிதாபத்துக்குரியவர்கள்.

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பலுகச் செய்தவர், ஏழு அப்பங்களை நான்காயிரம் பேருக்கு உண்ணக் கொடுத்தவர், ஒன்றுமில்லாத நிலையிலும் தங்களுக்கு உணவளிக்க வல்லவர் என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். அல்லது அப்பங்கள் இருந்தால்தான் தங்கள் தலைவரால் பலுகச் செய்ய முடியும் என நினைத்தார்களோ என்னவோ!

இயேசுவின் செயல்களைக் கண்டும் அவரை இன்னார் என்று அறிந்துகொள்ள இயலவில்லை சீடர்களால்.

இந்த அறியாமைக்குக் காரணம் என்ன?

(அ) கடின உள்ளம்

மாற்கு நற்செய்தியின் இறுதியில் சீடர்களின் கடின உள்ளத்தைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. கடின உள்ளம் எதையும் எளிதாக நம்பிவிடாது. 

(ஆ) முற்சார்பு எண்ணம்

இயேசுவின் எளிய பின்புலம், அல்லது அவர் என்றும் தங்களோடு இருப்பதால் எழுந்த நெருக்கம் ஆகியவை முற்சார்பு எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம்.
(இ) தன்மையச் சிந்தனை

எந்நேரமும் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களை நினைக்கவே மாட்டார்கள். அந்த நிலையில், இவர்கள் தங்கள் வேலை, தங்கள் அப்பத்துண்டுகள், தங்கள் உணவுப் பை என்று கவனமாக இருந்ததால் இயேசுவின்மேல் தங்கள் உள்ளத்தைப் பதிய வைக்க அவர்களால் இயலவில்லை.

கடவுளின் உடனிருப்பை நாம் இன்று எப்படி உணர்கிறோம்? அவரைப் பற்றிய என் புரிதல் என்ன?

முதல் வாசகத்தில் (யாக் 1:12-18), சோதனைகள் பற்றித் தன் குழுமத்திற்கு எழுதுகின்ற யாக்கோபு, நம் சொந்த நாட்டத்தினாலேயே நாம் சோதிக்கப்படுகிறோம் என்கிறார். தீய நாட்டம் மயக்கத்தையும், மயக்கம் பாவத்தையும் உருவாக்குகிறது.

மேலும், கடவுள் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல என்று அறிவுறுத்துகின்றார்.

சீடர்களின் எண்ணங்கள் நிழல் போல மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுவா? அதுவா? என்னும் அங்கலாய்ப்பில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் நிற்கின்றனர்.

Sunday, February 13, 2022

நங்கூரப் புள்ளிகள்


ஆண்டின் பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு

I. எரேமியா 17:5-8 II. 1 கொரிந்தியர் 15:12,16-20 III. லூக்கா 6:17,20-26

நங்கூரப் புள்ளிகள்

என்.எல்.பி என்று சொல்லப்படும் நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் என்னும் உளவியல் பகுப்பாய்வில் பேசப்படும் சில கருத்துருக்களில் ஒன்று, 'நங்கூரமிடுவது' ('ஆங்க்கரிங்'). அதாவது, எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொள்ள வேண்டும் என வைத்துக்கொள்வோம். பத்தாயிரம் பேர் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் நான் பேச வேண்டும். எனக்குக் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் பயமில்லாமல் பேசிய ஒரு நிகழ்வை என் மனத்தில் ஓடவிட்டு, அந்த எண்ண ஓட்டங்களை ஒரு மோதிரம், பேனா, சட்டை என ஏதாவது ஒன்றோடு இணைத்துவிட வேண்டும். இப்போது இக்கூட்டத்தின் முன் பேசுவதற்குமுன் நான் அந்த மோதிரத்தை அணிந்தாலோ, அந்தப் பேனாவைச் சட்டையில் வைத்திருந்தாலோ, அல்லது அந்தச் சட்டையை அணிந்தாலோ என் மனம் நேர்முகமான உணர்வுகளில் இருந்து ஆற்றல் பெற்று பயம் என்னும் எதிர்மறை உணர்வை அழித்துவிடும். இப்படியாக நேர்முகமான உணர்வின்மேல் உள்ளத்தைப் பதிய வைப்பதுதான் நங்கூரமிடுவது.

'நங்கூரம்' - இது ஒரு கப்பல் அல்லது கடல்தொழில் சொல்லாடல். நகர்கின்ற கப்பலை அல்லது பெரிய படகை நிலைநிறுத்தப் பயன்படுவது நங்கூரம். நங்கூரமிட்ட கப்பலை பெரும் புயலும் நகர்த்த முடியாது. எல்லா இடத்திலும் நங்கூரம் இறக்கிவிட முடியாது. சகதி அல்லது சேறு, பாறை அல்லது கடல் மலைப்பாங்கான பகுதிகளில் நங்கூரம் பதியாது. ஆக, சரியான நங்கூரப் புள்ளிகளைக் கண்டுபிடித்தால்தான் கப்பலை நிலைநிறுத்த முடியும். 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்முடைய நங்கூரப் புள்ளிகள் எவை என ஆராய்ந்து பார்க்க அழைக்கின்றன. என் நம்பிக்கையை, என் நங்கூரத்தை இன்று நான் எதன்மேல் வைக்கிறேனோ அப்போதுதான் நான் வளர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 17:5-8) எரேமியா, 'மனிதர்மேல் நம்பிக்கை,' 'ஆண்டவர்மேல் நம்பிக்கை' என நம்பிக்கையை இரண்டாகப் பிரித்து, மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும், ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் உருவகமாகப் பதிவு செய்கின்றார். எரேமியாவின் இந்த இறைவாக்கு நிகழ்வு யூதா அரசன் யோயாக்கினின் காலத்தில் (காண். 2 அர 23:36-37) நடக்கிறது. பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கின் பாபிலோனியாவிடம் உடனடியாகச் சரணடைந்து தன் நாட்டை அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுகிறார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து, தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்க்கின்ற யோயாக்கின் பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் மிக வேகமாக எழுந்து இக்கிளர்ச்சியை அடக்கி, கிமு 597ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். உடனடியாக எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவ பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கின் கொல்லப்படுகிறார். எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்: 'மனிதரில் (எகிப்தியரில்) நம்பிக்கை வைப்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்), வலுவற்ற மனிதரில் (எகிப்தியர்) தம் வலிமையைக் காண்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்) சபிக்கப்படுவர்.' யோயாக்கின் எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்ற தன் நங்கூரத்தை மனிதர்கள்மேல் பதித்தார். 'ஆண்டவரின் மேல் பதிக்கத் தவறிவிட்டார்.' மனிதர்கள்மேல் வைக்கின்ற நம்பிக்கை உடனடித் தீர்வைத் தரலாம். ஆனால், நிரந்தரத் தீர்வு ஆண்டவரிடமே உள்ளது. இப்படியாக, அரசர்களுக்கும், அரச அலுவலர்களுக்கும் இறைவாக்குரைக்கின்ற எரேமியா, தொடர்ந்து, அவர்கள் தங்கள் சக மனிதர்கள்மேலும், தங்கள் சிலைவழிபாட்டின்மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். ஆண்டவரின்மேல் வைக்கும் நம்பிக்கை உடனடியாக பலன் தராததுபோலத் தோன்றினாலும் அது நீண்ட காலப் பலனை நிச்சயம் தரும். ஏனெனில், மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை 'பாலைவனப் புதர்ச்செடி போன்றது.' பாலைவனத்தில் செடிகள் வேகமாக முளைக்கும். ஆனால், நிலத்தில் நீர் இல்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் மிக வேகமாகக் காய்ந்துபோய்விடும். புதர்கள் பார்ப்பதற்கு நிறைய இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவை தன்னிலே வலுவற்றவை. அதுபோலவே, மனிதர்களும். எண்ணிக்கையில் நிறைய என்றிருந்தாலும் அவர்கள் தங்களிலேயே வலுவற்றவர்கள். ஆனால், நீர் அருகில் நடப்பட்ட மரம் முளைக்க நாள்கள் ஆகலாம். ஏன் மாதங்கள்கூட ஆகலாம். ஆனால், அந்த மறைவான நாட்களில் அவ்விதையானது நீரோடை நோக்கி கீழாக வளர்கிறது. பின் வேகமாக மேலே வளர ஆரம்பிக்கும். அதன் நங்கூரம் தண்ணீரில் பதிந்திருப்பதால் வெப்பமிகு காலத்திலும் அதற்கு அச்சமில்லை. அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆக, எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நங்கூரத்தைப் பதிய வைக்காமல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நங்கூரப் புள்ளியாக்க வேண்டுமென்று இறைவாக்குரைக்கின்றார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:12,16-20) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் விளக்கவுரையாகத் தொடர்கிறது. கொரிந்து நகர நம்பிக்கையாளர்கள் இறந்தோர் உயிர்ப்பை மறுத்தனர். ஏனெனில், அவர்கள் நடுவில் நிலவிய கிரேக்க தத்துவச் சிந்தனை அதற்கு இடையூறாக இருந்தது. தத்துவச் சிந்தனையைப் பொருத்தவரையில் மனித ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உடல் தனக்கென்று ஆசைகளையும், உணர்வுகளையும் வைத்திருப்பதால் அது அழிவுக்குரியதாகவும், தாழ்வானதாகவும், வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆக, ஆன்மா உடலிலிருந்து பெறும் விடுதலைக்காகவே காத்திருக்கிறது. இப்படி இருக்க, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உடல் இல்லாத வாழ்வையே' அவர்கள் விரும்பினர். இந்தப் பின்புலத்தில் பவுல் மிகவும் பொறுமையோடும், சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும் விளக்குகின்றார். ஆக, அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அவர்களை அழைக்கின்றார் புனித பவுல்.

ஆக, அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவருக்குத் தந்த அழியாத உடலின்மேல் - நாம் பெறப்போகும் அந்த உடலின் மேல் - நம்பிக்கையைப் பதிய வைக்க அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவில் (காண். மத் 5:3-10) 'எட்டுப் பேறுகளை' பதிவு செய்கின்றார் மத்தேயு. ஆனால், இயேசுவைச் சமவெளியில் நிற்கச் செய்யும் லூக்கா, அவரின் போதனைகளை, 'நான்கு பேறுகள்,' 'நான்கு சாபங்கள்' என வடிவமைக்கின்றார். இரக்கமே உருவான இயேசு, பகைவரையும் அன்பு செய்யச் சொல்லும் இயேசு மற்றவர்களைச் சபிக்கலாமா? செல்வமும், உணவும், சிரிப்பும், புகழ்ச்சியும் கொண்டிருப்பது தவறா? இவற்றை அல்லது இவற்றைப் பெற்றிருப்பவர்களை இயேசு ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகள் நம்மில் எழலாம். இயேசு. 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' ஆகியவற்றைச் சபித்து, 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' ஆகியவற்றை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' போன்ற நான்கு வாழ்வியல் எதார்த்தங்களில் நம் மனம் நம்மேலும், நம் சக மனிதர்கள்மேலும், அவர்களின் அங்கீகாரத்தின் மேலும் தங்கி, நம் நம்பிக்கையைப் பதித்துவிடும் என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில்தாம் நம் மனம் இயல்பாக ஆண்டவரை நோக்கி எழும்பும் எனவும் சொல்லி, முன்னதை விடுத்துப் பின்னதைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார். 

ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இவ்வாறாக, மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை சிறிது காலமே பலன்தர, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை நீண்ட நாள்கள் கனிதர நமக்கு வலுவூட்டும் என்று எரேமியாவும், அழியும் உடல்மேல் வைக்கும் நம்பிக்கையை விட கிறிஸ்துவின் அழியாத உடலின்மேல் வைக்கும் நம்பிக்கையை நமக்கு உயிர்ப்பைத் தரும் என்று பவுலும், 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' என்பவை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதன் கனிகளாக இருந்தாலும் அவற்றால் நீடிய பயன் இல்லை என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்றவை ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவருக்கு இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று இயேசுவும் நமக்குச் சொல்கின்றனர். இவர்கள் மூவரின் வார்த்தைகளும் ஒன்றுதான்: 'மனிதர் என்னும் நங்கூரப் புள்ளி வலுவற்றது.கடவுள் என்னும் நங்கூரப் புள்ளி வலுவானது. வலுவற்றதை விடுத்து வலுவானதை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.'

மனிதர் என்னும் நங்கூரப் புள்ளியை விட்டு, கடவுள் என்னும் நங்கூரப் புள்ளியை பற்றிக்கொள்வது மூன்று நிலைகளில் இது சாத்தியமாகும்.

1. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக விரிப்பது

தன் கப்பலையும் தன் இருப்பையும் மட்டும் பார்க்கின்ற மாலுமி நங்கூரத்தைத் தனக்குக் கீழ் இருக்கும் சேறு அல்லது பாறையின் மேல் இடுவார். ஆனால், கடல் மொத்தத்தையும் பார்க்கின்ற மாலுமி தன் கப்பலை நகர்த்திச் சென்று சேறு அல்லது பாறை இல்லாத இடத்தில் போடுவார். குறுகிய பார்வை கொண்டிருப்பதால் நம் வேலை எளிதாக முடிவதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக வருவது எல்லாம் இனிமையாக நீடித்து இருப்பதில்லை. யோயாக்கின் அரசன் தன் நாட்டின் உடனடி பாதுகாப்பைத்தான் பார்த்தாரே தவிர, ஒட்டுமொத்த அரசியல் சூழ்ச்சியை அல்லது ஆண்டவரின் உடனிருப்பை விரித்துப் பார்க்கவில்லை. கொரிந்தியர்கள் தாங்கள் பெற்றிருக்கும் இந்த உடலைப் பார்த்தார்களே தவிர, இதற்கு மேலும் அல்லது இதைவிடவும் அழியாத உடல் இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி கொண்டிருப்போரும் தங்களின் இப்போதைய இருப்பில் மகிழ்ந்தார்களே அன்றி, வாழ்வின் மறுபக்கத்தை அவர்கள் நீட்டிப்பார்க்கத் தவறிவிட்டனர். ஆக, யார் ஒருவர் இருப்பதிலிருந்து இல்லாதது வரை அகலமாகத் தன் கண்களை விரிக்கிறாரோ அவர்தான் தன் நங்கூரப் புள்ளியைச் சரியான இடத்தில் போட முடியும். எடுத்துக்காட்டாக, வால்ட் டிஸ்னி. தன் அறைக்குள் நுழைந்த எலிகளைக் கேலிச்சித்திரமாக வரைவதோடு நின்றிருந்தால் அவர் ஒரு கார்ட்டூன் வரைபவராகவே இருந்திருப்பார். ஆனால், 'மிக்கி மவுஸ்' என்ற ஒன்றை எடுத்து குழந்தைகள் பொழுதுபோக்கு என்று மாற்றியதால்தான் அவரால் டிஸ்னி உலகம் பற்றி யோசிக்க முடிந்தது. இயேசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் உருவில் பெரிய திருச்சபைத் தலைவர்களைப் பார்த்தார். ஆக, வாழ்வைப் பெரிதாக, முழுமையாக விரித்துப்பார்க்கும்போது நம் நங்கூரப் புள்ளியை நிலையானவற்றில் நாம் பதிக்க முடியும்.

2. உடனடி இன்பங்கள் தவிர்ப்பது

யோயாக்கின், கொரிந்து நகர மக்கள், மற்றும் செல்வர், உணவருந்தி இன்புற்றிருப்போர், சிரிப்போர், புகழ்ச்சியை இரசிப்போர் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் முடிவுகள் பற்றியே கருத்தாய் இருந்தனர். இன்றைய உலகம் நமக்கு நிறைய உடனடி நங்கூரப் புள்ளிகளைத் தருகிறது. சமூக தொடர்பு செயலிகளும், விளம்பரங்களும் அவற்றை நோக்கி நம்;மை இழுக்கின்றன: களிப்பு, பொழுதுபோக்கு, அழகு, பணம், அறிமுகம், வெற்றி, வேலை என நிறைய நங்கூரப் புள்ளிகள் நம்மை அழைக்கின்றன. இவை எல்லாம் இன்பம் தருபவையே. ஆனால், எவ்வளவு வேகமாக இவை இன்பத்தைத் தருகின்றனவோ, அவ்வளவிற்கு வேகமாக இன்பத்தை இழக்கவும் செய்கின்றன. மேலும், இவை ஒருவரைத் தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகின்றன.

3. கவனச் சிதறல்கள் குறைப்பது

'இரு மானைத் துரத்துபவர் ஒரு மானையும் பிடியார்' என்பதுபோல, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நங்கூரம் போட நினைப்பவர் ஓரிடத்திலும் போட மாட்டார். ஆக, எது சரியானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ததில் முழுமையாக ஆற்றலைச் செலுத்தும் மனப்பக்குவமும், மனவுறுதியும் பெற வேண்டும். 'அது நன்றாக இருக்குமே, இது நன்றாக இருக்குமே' என்று வண்ணத்துப் பூச்சி போல பறந்துகொண்டிருந்தாலும், 'அவரைப் போல நான் இருப்பேன். இவரைப் போல நான் செய்வேன்' என்று ஒப்பீடுகள் செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நிலையானதில் நங்கூரம் பதிக்க முடியாது. யோயாக்கினுக்கு எகிப்து ஒரு கவனச் சிதறலாகவும், கொரிந்தியருக்கு தங்களின் கிரேக்க தத்துவ சிந்தனை ஒரு கவனச் சிதறலாகவும், இயேசுவின் சமகாலத்து எதிராளிகளுக்கு தங்களின் செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி ஆகியவை கவனச் சிதறல்களாகவும் இருந்தன. இன்று நம்முடைய கவனச் சிதறல் எது?

இறுதியாக, கொஞ்சம் நிமிர்ந்து, கண்களையும் இதயத்தையும் திறந்து வைத்து அகலமாகப் பார்த்தால், பார்வை தெளிவாகும். என் நங்கூரப் புள்ளியை - அதாவது, நம்பிக்கை மையத்தை - சரியாகத் தெரிவு செய்து, அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, பொறுமையாகக் காத்திருந்தால் நானும் நிலைத்துக் கனிகொடுப்பேன்.

இதுவே, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 1) திருப்பாடல் ஆசிரியரின் இறைவேண்டலாக, ஏக்கமாக, எதிர்நோக்காக இருக்கிறது: 'ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர் (நங்கூரம் பதிப்பவர்) நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருப்பார். பருவகாலத்தில் கனிதருவார். தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்!'

Friday, February 11, 2022

நேர்முகப் பரிவு

இன்றைய (12 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 8:1-10)

நேர்முகப் பரிவு

ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு இயேசு பகிர்ந்து கொடுக்கும் நிகழ்வை மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இதையொத்த நிகழ்வில் இயேசு மக்கள் கூட்டத்தின்மேல் பரிவு கொள்வதைப் போல இங்கேயும் பரிவு கொள்கின்றார். இயேசுவின் பரிவு நேர்முகப் பரிவாக, அதாவது, தன் பரிவின் வழியாக அவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் பரிவாக இருப்பதைப் பார்க்கின்றோம். 

இயேசுவின் நேர்முகமான பரிவு அவருடைய சொற்களில் மிக அழகாக வெளிப்படுகின்றது: (அ) 'மூன்று நாள்களாக இவர்கள் என்னோடு இருக்கிறார்கள்,' (ஆ) 'உண்பதற்கு இவர்களிடம் எதுவும் இல்லை,' (இ) 'பட்டினியாக அனுப்பிவிட்டால் நெடும் வழியில் அவர்கள் தளர்ச்சி அடைவர்.'

அவர்களின் தேவை உணவு என்பதை அறிகின்ற இயேசு அதை அவர்களுக்குத் தரும் முயற்சியில் இறங்குகின்றார். சீடர்கள் தாங்கள் இருக்குமிடம் பாலைநிலம் என்று சொல்லிக் கேள்வி எழுப்புகின்றனர். 

பரிவு என்பது வெறும் உணர்வு அல்ல. மாறாக, ஒரு செயல்.

எதிர்மறையான பரிவு என்பது என்ன?

புழு வண்ணத்துப் பூச்சியாக உருவெடுக்கும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம். வண்ணத்துப் பூச்சியாக மாறுவதற்கு கூட்டுப்புழு நிறைய வலியை ஏற்க வேண்டும். 'ஐயோ! அதற்கு வலிக்குமே!' என நான் நினைத்து அதன்மேல் பரிவு கொண்டு அதை விடுவிக்க நினைத்தால், அது வண்ணத்து பூச்சியாக மாறுவதை நான் தடை செய்வதோடு, அதைக் கொன்றும் விடுவேன். இது எதிர்மறையான பரிவு.

புற்றுநோய்க் கட்டியுடன் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்கின்றார் என வைத்துக்கொள்வோம். அதை உடனடியாக நீக்கினால் நபருக்கு வலிக்கும் என்று நினைக்கின்றார் மருத்துவர். இதை அவர் பரிவு என்றும் கூறுகின்றார். இப்படிப்பட்ட பரிவு நோயுற்றவரை அழித்துவிடும்.

இத்தகைய எதிர்மறையான பரிவை இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கின்றோம்.

சாலமோனின் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் இரண்டாக உடைகிறது. வடக்கே 'இஸ்ரயேல்', தெற்கே 'யூதா' என்று இரு அரசுகள் உருவாகின்றன. இதுவரை எருசலேம் ஆலயம் மட்டுமே அனைவருக்குமான பொதுவான இறைவேண்டலின் இடமாக இருந்தது. வடக்கில் உள்ள தன் மக்கள் தெற்கில் உள்ள எருசலேமுக்குப் போக விரும்பாத எரோபவாம் அரசர் மக்களைப் பார்த்து, 'நீங்கள் எருசலேமுக்குப் போய் வருவது பெருந்தொல்லை அல்லவா!' என்று அவர்கள்மேல் எதிர்மறையான பரிவு கொண்டு, அவர்களுக்கென கன்றுக்குட்டி ஒன்றை நிறுவி அவர்களுடைய மனத்தைத் திருப்புகிறார். மேலும் பல தொழுகை மேடுகளைக் கட்டி, யாரெல்லாம் விரும்பினார்களோ அவர்களை எல்லாம் திருப்பணியாளர்களாக ஏற்படுத்துகின்றார்.

மக்களைச் சிலைவழிபாட்டுக்கு ஆளாக்கியதோடு, தான் இப்படிச் செய்வதால் அவர்கள்மேல் பரிவு கொண்டதாக நினைக்கின்றார்.

இது எதிர்மறையான பரிவு.

இயேசுவின் நேர்முகப் பரிவு மக்களின் பசி போக்குகிறது.

எரோபவாமின் எதிர்மறைப் பகிர்வு மக்களின் வாழ்வுக்கு அழிவைக் கொணர்கிறது.

Thursday, February 10, 2022

புனித லூர்தன்னை

இன்றைய (11 பிப்ரவரி 2022) திருநாள்

புனித லூர்தன்னை

1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் உள்ள மெசபியல் குகையில் காட்சி தந்த அன்னை கன்னி மரியாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் இந்நாளை உலக நோயுற்றோர் நாள் எனக் கொண்டாடப் பணித்தார். 30வது உலக நோயுற்றோர் நாளுக்காக நம் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்' (லூக் 6:36) என்பதே இந்த ஆண்டுக்கான மையச் செய்தியாக இருக்கிறது. 

(அ) தந்தையைப் போல இரக்கம் உள்ளவர்களாக

நாம் முதலில் கடவுளை நோக்கி நம் கண்களை உயர்த்த வேண்டும். ஏனெனில், அவரே இரக்கம் நிறைந்தவர் (காண். எபே 2:4). தன் குழந்தைகள் அனைவர்மேலும் - அவர்கள் அவரை விட்டு விலகிச் சென்றாலும் - அவர் தன் கண்களைப் பதிய வைக்கின்றார். இரக்கம் என்பதே கடவுளின் மேன்மையான பெயர். இது வெறும் உணர்வு அல்ல. மாறாக, திடமும் கனிவும் நிறைந்த செயல். தந்தைக்குரிய திடமும் தாய்க்குரிய கனிவும் அவரிடம் உண்டு. தூய ஆவியாரில் நமக்குப் புத்துயிர் அளிக்க அவர் விழைகின்றார்.

(ஆ) இயேசு, தந்தையின் இரக்கம்

தந்தையின் இரக்கம் இயேசுவின் வழியாக வெளிப்பட்டது. நொறுங்குநிலையிலும் வலுவற்ற நிலையிலும் உறுதியற்ற நிலையிலும் - குறிப்பாக நோயுற்ற நிலையில் - நம் உள்ளம் இறைவனை நோக்கி எழும்புகிறது. ஆறுதல் என்னும் தைலம் தேய்க்கவும், எதிர்நோக்கு என்னும் திராட்சை இரசத்தைக் காயங்களில் ஊற்றவும் இயேசு நமக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

(இ) கிறிஸ்துவின் துன்புறும் சதையைத் தொட

கிறிஸ்துவின் துன்புறும் சதையை அனைத்து மனிதர்களிலும் தொடுகின்ற நலப்பணியாளர்களை இன்று நாம் நினைவுகூரல் வேண்டும். நோய்கள் அல்ல, நோயுற்ற மாந்தர்களே முதன்மையானவர்கள். எந்நிலையிலும் அவர்களுடைய மாண்பு போற்றப்பட வேண்டும்.

(ஈ) நலமையங்களே இரக்கத்தின் இல்லங்கள்

அனைத்து நலமையங்களிலும் இறைவனின் இரக்கம் நிழலாடுகின்றது. நலமையங்களுக்கு நாம் செல்லும்போதெல்லாம் இந்த உணர்வு நம்மில் இருக்க வேண்டும்.

(உ) மேய்ப்புப் பணி இரக்கம்: உடனிருப்பும் அருகாமையும்

நலமற்றோர் அனைவரோடும் நாம் உடனிருக்க முயற்சி செய்தல் வேண்டும். நலப்பணியாளர்கள் மட்டுமன்றி அனைவருக்கும் இந்தப் பொறுப்புணர்வு உண்டு.

நம் அன்னையை நலம் தரும் அன்னை என்று கொண்டாடும் இவ்வேளையில் நம் ஒவ்வொருவரின் உடல், உள்ள, ஆன்ம நலன்களுக்காக அவரின் பரிந்துரையை நாடுவோம். நலத்தின் முழுமையாக, இறையருளின் நிறைவாக விளங்கிய அன்னை நம்மோடு என்றும் உடனிருப்பாராக!


Wednesday, February 9, 2022

மனிதருக்கு உள்ளேயிருந்து

இன்றைய (9 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 7:14-23)

மனிதருக்கு உள்ளேயிருந்து

'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (திபா 4:23). 

தூய்மை-தீட்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட யூத மரபில், வெளியிலிருந்து வருபவை தீட்டு அல்ல என்பதைத் தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, உள்ளத்திலிருந்து எழுபவற்றைக் குறித்துக் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கின்றார் இயேசு.

யூதர்கள் தங்களுக்கு வெளியே உள்ள அனைத்தையும் தூய்மை-தீட்டு என்று பிரித்துப் பார்த்தனர். வெளியில் தீட்டு எனத் தெரிபவற்றை ஒதுக்கிவிட்டு தங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினர். ஆனால், தங்கள் உள்ளத்தில் பேண வேண்டிய தூய்மையை மறந்தனர். அதை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு.

நம் உள்ளத்தில் இருப்பவற்றைக் குறித்துக் கவனமாயிருத்தல் நலம்!

Sunday, February 6, 2022

தொட்ட அனைவரும்

இன்றைய (7 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 6:53-56)

தொட்ட அனைவரும்

மாற்கு நற்செய்தியாளருக்கு மிகவும் பிடித்த சொல் 'உடனே' என்பது. இச்சொல்லை '42' முறை பயன்படுத்துகின்றார். 'வேகம்,' 'எதிர்பார்ப்பு,' 'குறுக்கீடு,' 'பரபரப்பு' என பல எண்ணங்களை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது இச்சொல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கெனசரேத்துப் பகுதியில் பலருக்கு நலம் தருகின்றார். 'அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுகொண்டு, ஓடிச்சென்று நலம்குன்றியவர்களை அவரிடம் அழைத்து வருகின்றனர்.' இயேசுவின் ஆடையையாகிலும் தொட விரும்புகின்றனர். தொட்ட அனைவரும் நலம் பெறுகின்றனர்.

என் அருள்பணி நிலைக்கு இந்நிகழ்வு மூன்று சவால்களை முன்வைக்கின்றது:

(அ) இன்னார் என்னும் நான்

பல இடங்களுக்கு மறையுரை மற்றும் கருத்தமர்வுகளுக்குச் செல்லும்போது, அழைத்தவர்கள் என்னை அறிமுகம் செய்யும் நிகழ்வு எனக்கு மிகவும் நெருடலாக இருக்கும். 'இவர்தான் இன்னார்' என்பதை நாம் பல நிலைகளில் அறிமுகம் செய்கின்றோம். பெயர், பணி, இருப்பிடம், படிப்பு, அறிமுகமான நபர்கள், எழுதிய நூல்கள் அல்லது கட்டுரைகள் ஆகியவை நம்மை இன்னார் என்று காட்டும் என நினைக்கின்றோம். ஆனால், இயேசுவுக்கு இப்படிப்பட்ட எந்த அறிமுகம் தேவையில்லை. அவரைக் கண்டவுடன், மக்கள் இயேசுவை இன்னாரென்று கண்டுணர்கின்றனர். இன்று என்னை என் மக்களுக்கு அறிமுகப்படுத்துவது எது? 

(ஆ) தொடுமாறு அனுமதித்தல்

படகைவிட்டு இறங்கியதைத் தவிர வேறெதுவும் இயேசு செய்யவில்லை. எச்சொல்லும் பேசவில்லை. அனைவரும் வந்து அவர்மேல் விழுகின்றனர். அவரைத் தொட முயற்சி செய்கின்றனர். நலம் பெறுகின்றனர். இயேசு தன்னை மற்றவர்கள் தொடுமாறு அனுமதிக்கின்றார். குருமாணவராகப் பயிற்சியிலிருக்கும்போது கற்பிக்கப்படுகின்ற ஒன்று 'நோலி மே டான்ஜ்ஜரே' ('என்னைத் தொடாதே!') என்னும் விதிமுறை. அதாவது, ஒருவர் மற்றவருக்கு இடையேயுள்ள தனியுரிமையை மதிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறை. இது எங்களில் எந்த அளவுக்குப் பதிந்துவிடுகிறது என்றால், எங்களை அறியாமலேயே நாங்கள் அனைவரையும் விட்டு விலகி விடுகின்றோம். மக்களுடைய எந்தக் கவலையும் எங்களைப் பாதிப்பதில்லை. யாரும், எதுவும் எங்களைத் தொடுவதில்லை. இன்னொரு பக்கம், யாரும் எதுவும் எங்களைத் தொட முடியாது அல்லது தொடக்கூடாது என்று எங்களுக்கு நாங்களே பாதுகாப்பு அரண்களை உருவாக்குகிறோம். அல்லது பதவிகளில் அமர்கிறோம். மற்றவர்கள் என்னைத் தொட வேண்டும் என்றால் நான் அழுக்காவதற்குத் தயாராக இருக்க வேண்டும். எனக்கு அருகில் அவர்கள் வந்தால் என் அழுக்கும் குறையும் தெரிந்துவிடுமோ என்ற பயம் விட வேண்டும். நானும் மற்றவர்களைப் போல, மற்றவர்களில் ஒருவன் என்பதை உணர வேண்டும்.

(இ) நோக்கம் நிறைவேறுதல்

மக்கள் இயேசுவிடம் நலம்தேடி வருகின்றனர். நலம் பெற்றுத் திரும்புகின்றனர். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறுகிறது. அருள்பணியாளரைத் தேடி வருகிறவர்கள் தங்கள் ஆன்மிகப் பசி நீங்கவும், ஆறுதல் பெறவும், ஆற்றுப்படுத்தப்படவும் வருகின்றனர். இப்படி வருகிறவர்களின் நோக்கத்தை நான் நிறைவேற்றுகிறேனா? இறைவார்த்தை கேட்க வந்தவர்கள் இறைவார்த்தை கேட்டுத் திரும்புகிறார்களா, அல்லது நான் சொல்லும் ஜோக்குகளைக் கேட்டுத் திரும்புகிறார்களா? ஆற்றுப்படுத்தப்படுமாறு வந்தவர்கள் ஆறுதல் பெற்றுச் செல்கிறார்களா, அல்லது அங்கலாய்ப்புடன் செல்கிறார்களா? என் இருத்தல் மற்றும் பணியின் நோக்கத்தை நான் ஒவ்வொரு நொடியும் நிறைவேற்றுதல் அவசியம்.

நிற்க.

இயேசுவைத் தேடி வந்த மக்களின் ஆர்வம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. 

'இயேசுவே, உன்னைக் காண நான் பசித்திருந்தேன்!' என்பது அவர்களின் உள்ளத்து வார்த்தைகளாகவும், வாழ்வியல் செயல்பாடாகவும் இருந்தன. 

இறைவனை நோக்கிய என் தேடலின் வேகம் எப்படி உள்ளது?

இன்றைய முதல் வாசகத்தில் (1 அர 8), சாலமோன் அரசர் கட்டிய ஆலயத்திற்குள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பேழை கொண்டுவரப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி ஆலயத்தை நிரப்புகின்றது. குருக்கள்கூட நின்று திருப்பணி செய்ய இயலாத அளவுக்கு மாட்சி நிறைந்ததாகப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

'குருக்கள் நீதியை ஆடையென அணிவார்களாக!' என்று பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர் (132).

நான் எப்போதும் நீதியை ஆடையென அணிந்தால், என்னை முழுவதும் ஆண்டவரின் மாட்சி நிறைத்தால், என் தேடல் இறையாக இருந்தால் எத்துணை நலம்!


Saturday, February 5, 2022

குறையே ... இறையால் ... நிறையாய்!

ஆண்டின் பொதுக்காலம் 5ஆம் ஞாயிறு

எசாயா 6:1-2அ, 3-8               1 கொரிந்தியர் 15:1-11           லூக்கா 5:1-11

குறையே ... இறையால் ... நிறையாய்!

மத்திய அமெரிக்காவின் மறைந்து போன மாயன் நாகரீக மக்களில் நடுவில் புழங்கிய கதை இது (மெல் கிப்சன் அவர்கள் இயக்கிய 'அப்போகாலிப்டோ' என்ற திரைப்படத்தில் (2006) இக்கதை ஷாமான் ஒருவரால் சொல்லப்படுவதாக அமைந்திருக்கும்): மனிதன் ஒருநாள் காட்டில் சோகமாக அமர்ந்திருந்தான். காட்டு விலங்குகள் அவனைச் சுற்றி வந்து அவனிடம், 'நீ சோகமாக இருப்பதை எங்களால் சகிக்க முடியவில்லை. என்ன வேண்டுமானாலும் கேள். நாங்கள் உனக்குத் தருகிறோம்' என்றன. மனிதன், 'எனக்கு நல்ல கண்பார்வை வேண்டும்' என்றான். கழுகு, 'என் பார்வையை உனக்குத் தருகிறேன்' என்றது. 'யாரும் எதிர்க்கமுடியாத வலிமை வேண்டும்' என்றான். ஜகுவார், 'நான் தருகிறேன்' என்றது. 'பாதாளங்களின் இரகசியத்தை அறிய வேண்டும்' என்றான். பாம்பு, 'அதை நான் உனக்குக் காட்டுகிறேன்' என்றது. எல்லா விலங்குகளும் தன் ஆற்றலை இப்படியாக மனிதனுக்குத் தந்தன. எல்லா ஆற்றல்களையும் பெற்ற மனிதன் எழுந்து புறப்பட்டான். அப்போது மான் மற்ற விலங்குகளைப் பார்த்து, 'மனிதன் இப்போது எல்லாவற்றையும் பெற்று விட்டான். இனி அவனிடம் சோகம், வருத்தம் இருக்காது' என்றது. அதற்கு ஆந்தை மறுமொழியாக, 'இல்லை, மனிதனின் மனத்தில் ஒரு துவாரத்தை, வெற்றிடத்தை நான் பார்த்தேன். அது ஒரு தணிக்க முடியாத பசி. அது அவனுக்கு சோகத்தைத் தரும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அவன் எல்லாவற்றையும் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டேயிருப்பான். ஒருநாள் இந்த பூமி சொல்லும்: 'இதற்கு மேல் நீ எடுத்துக்கொள்ள என்னிடம் ஒன்றுமேயில்லை'.

மனித உள்ளத்தில் இருக்கும் இக்குறை அல்லது வெற்றிடத்தைத் தானாகவே மனிதர்கள் அறிந்துகொள்வார்களா? அவர்கள் அக்குறைகளை அறிந்துகொண்டவுடன் அக்குறைகள் எப்படி நிறைவு செய்யப்படும்? குறையுள்ள மனிதர்கள் மற்றவர்களின் குறைகளை நிறைவாக்க முடியாத நிலையில், மனிதர்கள் விரும்பும் நிறைவைத் தருபவர் யார்? என்ற கேள்விகளுக்கு விடையாக இருக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

'மனிதர்கள் எல்லாமே குறையுள்ளவர்கள்' என்று நாம் சொல்லும்போது, அது சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக, அறநெறி, உடல்நலம் என பல தளங்களைச் சுட்டிக்காட்டினாலும், நம்மை முன்னேறாமல் தடுத்து, சில நேரங்களில் நம்மைப் பின்னிழுக்கின்ற குறைகள் பெரும்பாலும் நம் உள்ளம் சார்ந்தவையே. இவற்றிலிருந்து நாம் விடுபட நாம் இறைவனோடு கைகோர்த்தால் மட்டுமே முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 6:1-8) எசாயா இறைவாக்கினரின் அழைப்பு நிகழ்வை வாசிக்கின்றோம். எசாயா அழைப்பு நிகழ்வு, மோசே, கிதியோன், எரேமியா ஆகியோரின் அழைப்பு நிகழ்வுகளை ஒத்திராமல், எசேக்கியேல் இறைவாக்கினரின் (1-3) அழைப்பு நிகழ்வையே ஒத்திருக்கிறது. ஏனெனில் இந்த இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி வருகிறது. இந்த நிகழ்வு கடவுளின் அரசவையில் நடப்பதுபோல எழுதப்பட்டுள்ளது. உசியா அரசர் மறைந்த ஏறக்குறைய கி.மு. 742ஆம் ஆண்டில் இந்நிகழ்வு நடக்கிறது. இப்படி வரலாற்று பின்புலம் காட்டப்படுவது எதற்காக என்றால், இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வு என்ற உண்மைநிலையைக் காட்டுவதற்கே. ஆண்டவர் அரியணையில் அமர்ந்திருக்கிறார். அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பியிருக்கின்றது. செராபின்கள் அரியணையைச் சுற்றி இருக்கின்றன. 'செராபின்' என்றால் எபிரேயத்தில் 'எரிந்து கொண்டிருப்பது' அல்லது 'எரிபவை' என்பது பொருள். இந்த செராபின்கள் வெறும் அழகுப் பதுமைகள் அல்ல. மாறாக, அவை 'படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர்' என்று பாடிக்கொண்டிருக்கின்றனர். இறைவனின் பிரசன்னத்தையும், அவரைப் பற்றிச் செராபின்கள் பாடுகின்ற குரலொளியையும் கேட்கின்ற எசாயா. சட்டென தன் நிலையை உணர்கின்றார். 'நான் அழிந்தேன்!' என கத்துகின்றார். தூய்மையின் முன் தன் தூய்மையின்மையை உணர்கின்றார். எசாயா செய்த பாவம் அல்லது அவர் கொண்டிருந்த குற்றவுணர்வு என்னவென்று குறிப்பிடப்படவில்லை. உடனே நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து வரும் செராபின் ஒருவர் எசாயாவின் உதடுகளை தூய்மைப்படுத்துகின்றார். குற்றப்பழியும், பாவமும் அகற்றப்படுகின்றது. இவ்வளவு நேரம் நடந்தவையெல்லாம் வெறும் காட்சியாக இருக்கின்றது. இப்போது யாவே இறைவனே பேசுகின்றார். 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?' எனக் கேட்கிறார். தூய உதடுகளைப் பெற்ற எசாயாவும், 'இதோ, நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்' என்கிறார்.

ஆக, தன்னுடைய தூய்மையின்மையை இறைவனின் தூய்மையோடு ஒப்பிட்ட எசாயா இறைவாக்கினரின் வெட்கம் என்ற குறையை, இறைவன் நெருப்புத் துண்டால் தூய்மைப்படுத்தி அவரை நிறைவாக்குகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 15:1-11) பவுல் கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய இன்னொரு பிரச்சினை பற்றி எழுதுகின்றார்: 'இறந்தவர் உயிர்ப்பு.' கொரிந்து நகரம் கிரேக்கச் சிந்தனையில் மூழ்கியிருந்தது. கிரேக்க சிந்தனை உடலை ஆன்மாவின் சிறை என்று கருதியதால், உடலை வெறுத்தது. நிலைவாழ்வு என்பது ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலை என்றே கிரேக்கர்கள் நினைத்தார்கள். ஆனால், பவுலோ, உயிர்ப்பு என்பதே நிலைவாழ்வு என்றும், உயிர்ப்பின்போது நம் உடலும் மாற்றம் பெறும் எனவும் எழுதுகின்றார். கிறிஸ்து உயிர்பெற்றெழுந்ததை சான்றாக வைத்து, இறந்தவர்கள் உயிர்பெற்றெழுவார்கள் என்று கொரிந்து நகர திருஅவைக்கு பவுல் தரும் இறையியல் விளக்கம் தருகின்றார்.'கிறிஸ்து நம் பாவங்களுக்காக...இறந்தார்...அடக்கம் செய்யப்பட்டார்...உயிருடன் எழுப்பப்பட்டார்' - தொடக்கத் திருஅவையில் துலங்கிய முதல் நம்பிக்கை அறிக்கை இதுவே. இதைப்போன்ற அறிக்கைகளை நாம் பிலி 2:1-13 மற்றும் கலா 3-அலும் வாசிக்கின்றோம். இந்த நம்பிக்கையின் நீட்சியாக உயிர்த்த இயேசு கேபா, யாக்கோபு என்று பலருக்குத் தோன்றியபின், இறுதியாக, 'காலம் தப்பிப் பிறந்த குழந்தையைப் போன்ற' தனக்கும் தோன்றியதாகப் பெருமை கொள்கின்றார் பவுல். இவர் இப்படிப் பெருமை பாராட்டும் நேரத்தில் இவருடைய உள்ளத்தில் உடனடியாக இவருடைய பழைய வாழ்க்கை பற்றிய நினைவு தோன்றுகிறது. தன் இறந்த காலத்தில் தான் செய்த 'கடவுளின் திருச்சபையைத் துன்புறத்திய செயல்' அவரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகின்றது. ஆனால், 'கடவுளின் அருளால்' நான் திருத்தூதர் நிலையில் இருக்கின்றேன் எனக் கடவுளின் அருள் தன் குற்ற உணர்வைக் களைந்ததையும் நினைவுகூருகிறார் பவுல்.

ஆக, தன்னிடம் இருந்த குற்ற உணர்வு என்னும் குறையை கடவுளின் அருளாலும், அந்த அருள் உந்தித் தள்ளிய உழைப்பாலும் நிறைவாக்குகிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 5:1-11), 'இயேசு முதல் சீடரை அழைக்கும் நிகழ்வை' லூக்கா நற்செய்தியாளரின் கண்கள் வழியாகப் பார்க்கின்றோம். இது நடக்குமிடம் கெனசரேத்து ஏரிக்கரை அல்லது கலிலேயாக்கடல் பகுதி. முதல் சீடர்களை அழைத்தல் என தலைப்பு இடப்பட்டிருந்தாலும், பேதுரு மட்டுமே இங்கே முதன்மைப்படுத்தப்படுகின்றார். அவரின் சகோதரர் அந்திரேயாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், செபதேயுவின் மக்களான யாக்கோபு மற்றும் யோவானின் பெயரும் வலிந்து திணிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், இந்த நிகழ்விற்கு எப்படி பெயரிடுவது? போதனை (5:1-3), அறிகுறி (5:4-10அ), அழைப்பு (5:10ஆ-11) என மூன்று இலக்கியக் கூறுகள் ஒரே இடத்தில் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் 'தச்சனுக்கு தெரியுமா தண்ணீரின் ஓட்டம்?' என முதலில் சந்தேகிக்கின்ற பேதுரு, 'இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை' என்று தயங்குகின்றார். பின் அவரே, 'உம் சொற்படியே வலைகளைப் போடுகிறேன்' என வலைகளைப் போட மிகுதியான மீன்பாடு கிடைக்கின்றது. தான் கொண்ட 'சந்தேகத்திற்காக' மனம் வருந்தும் பேதுரு, 'ஆண்டவரே, நான் பாவி. என்னைவிட்டு அகலும்!' என மன்றாடுகின்றார். ஆனால், 'அஞ்சாதே' என அவரின் பயம் அகற்றும் இயேசு, 'நீ இது முதல் மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்' என்ற புதிய பணியைக் கொடுக்கின்றார். 

ஆக, 'சந்தேகம்' என்ற பேதுருவின் குறையை இயேசு, 'அஞ்சாதே!' என்று தேற்றி நிறைவு செய்கின்றார்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எசாயாவின் 'வெட்கம்' என்ற குறையை 'உதடுகளைத் தூய்மைப்படுத்தி' நிறைவு செய்கிறார் கடவுள். இரண்டாம் வாசகத்தில், பவுலின் 'குற்றவுணர்வு' என்ற குறையை 'திருத்தூதர் நிலை' என்ற நிலைக்கு அருளால் உயர்த்தி நிறைவு செய்கிறார் கடவுள். நற்செய்தி வாசகத்தில், பேதுருவின் 'சந்தேகம்' அல்லது 'ஐயம்' என்ற குறையை 'அஞ்சாதே' என்று நீக்கி, அவரை நிறைவுள்ளவராக்குகின்றார் இயேசு.

ஆக, குறையுள்ள ஒன்று நிறைவுள்ள இறைவனின் தொடுதலால் நிறைவுள்ளதாகின்றது. குறையை நிறைவாக்குவது இறையே என்பதும் புலனாகிறது. இன்று நாம் நம்மிடம் உள்ள குறைகளை எப்படி இனங்கண்டு, அவற்றை இறைவனின் துணையால் நிறைவு செய்வது?

1. நம் கொடைகளைக் கொண்டாடுவது

எசாயா என்னதான் தன்னைக் கடவுளின் தூய்மையோடு ஒப்பிட்டு, தன்னையே, 'தூய்மையற்றவன்' எனக் கருதினாலும், அவர் கடவுளைக் காட்சியாகக் காணும் பேறு பெறுகின்றார். தன்னுடைய சம காலத்தில் யாருக்கும் காட்சி அளிக்காத கடவுளைக் காட்சியில் கண்டவராகின்றார் எசாயா. பவுல், கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தியவர் ஆனாலும், கடவுளின் அருள் அவரைச் சூழ்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட நிலையில், தான் பெற்ற அருளை வீணாக்காமல் மிகுதியாகப் பாடுபட்டு உழைக்கிறார் பவுல். பேதுரு, தன் வெறுமை நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டுகொள்கின்றார். 'கடவுளின் காட்சி,' 'கடவுளின் அருள்,' 'மீன்பாடு' என தாங்கள் பெற்ற கொடைகளை முதலில் நினைவுகூறுகின்றனர் எசாயாவும், பவுலும், பேதுருவும். ஆக, நம் குறைகளைக் காண்பதற்கு முன் முதலில் நம்மைச் சுற்றியுள்ள நிறைகளைக் கணக்கில் எடுக்க வேண்டும்.

2. பழையதை விடு, புதியதை அணி

'நமக்காக யார் போவார்?' எனக் கடவுள் கேட்டவுடன், 'இதோ நானிருக்கிறேன், எனை அனுப்பும்' என முன் வருகிறார் எசாயா. 'ஐயோ, என் இறந்தகாலம் மிகவும் மோசமானதே!' என தற்பழி எண்ணம் கொண்டிராமல், 'நான் வருகிறேன்' என திருத்தூதுப்பணிக்கு முன்வருகின்றார் பவுல். 'ஆண்டவரே, பாவி என்னைவிட்டு அகலும்' என்று இயேசுவைத் தன்னிடமிருந்து அகற்றியவர், 'மனிதர்களைப் பிடிப்பவராக' முன்வருகிறார் பேதுரு. ஆக, நம் குறைகளைக் கண்டவுடன் அவற்றை நாம் பற்றிக்கொண்டிருக்காமல், பழையனவற்றை விட்டுவிட்டு, புதியனவற்றை அணிந்துகொள்ள முன்வருதல் வேண்டும். 

3. வலுவின்மையில் வல்லமை செயலாற்ற அனுமதிப்பது

இறையை நாம் அனுமதிக்காவிடில் அவர் நம் குறையை நிறைவாக்க மாட்டார். 'நான் வருகிறேன்' என்ற முன்னெடுப்பும், 'என் படகில் ஏறிக்கொள்ளும்' என்ற தாராள உள்ளமும் நாம் அவருக்குக் காட்ட வேண்டும். எசாயா, பவுல், பேதுருவிடம் முறையே விளங்கிய வெட்கம், குற்றவுணர்வு, மற்றும் ஐயம் என்னும் உணர்வுகள் நம்மைக் கட்டிப் போடுகின்றன. நான் என்னிடம் பொய் சொல்லும்போது வெட்கமும், மற்றவரிடம் பொய் சொல்லும்போது குற்றவுணர்வும், இறைவனிடம் பொய் சொல்லும்போது சந்தேகமும் வலுக்கிறது. இறைவன் என்னும் உண்மை இப்பொய்மைகளை அகற்றிவிட அவரை நான் அருகில் அனுமதிக்கிறேனா? அல்லது அவர் அருகில் நான் செல்கிறேனா?

இறுதியாக, என் உள்ளத்தில் உள்ள வெற்றிடமும் துவாரமும் என் ஆற்றல் இழப்புக்குக் காரணமாக இருந்தாலும், என் ஆற்றல்களை நான் கொண்டாடத் தொடங்கும்போது, என் அருகில் வருகின்ற அவர் தன் நிறைவால் என் குறையை நிறைவாக்குவார். 'நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோகும்!'

குறைகள் நிறையப்பெற்ற ஒருவர் திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து (காண். திபா 138), 'ஆண்டவரே, என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்' என்று பாடுவார்.